
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 10,031
Date uploaded in London – 30 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்ட் 29 ஆம் தேதி ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXXX

மக்களை முட்டாளாக்க அரசு முயற்சிக்கிறது; கிருஷ்ணபிரேமி சுவாமிகள் காட்டம்
மக்கள் அனைவரையும் நாத்திகர்களாக மாற்ற நினைத்த அரசு, மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது என கிருஷ்ணபிரேமி சுவாமிகள் பேசினார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற அரசின் திட்டம் குறித்து அவர் பேசியதாவது: கோயில் நடைமுறைகளை மாற்றுவதற்காகவே அரசு திட்டமிட்டுள்ளது. மூலவரை யார் தொட்டால் என்ன என்பது வீம்பா பக்தியா. மூலவரை தொடுவதற்கென்றே சிலர் உள்ளனர். மற்றவர்கள் தொட முடியாது. கடவுளை பாடிய ஆழ்வார்கள் கூட மூலவரை தொட்டதில்லை. ராமானுஜர் கூட தொட்டதில்லை. அரசர்கள், பீடாதிபதிகள் கூட மூலவர்களை தொட்டதில்லை.
அன்று மட்டும் அல்ல இன்றும் அதுவே நடைமுறை. வானமாமலை, அகோபிலம் ஜீயர்கள் மூலவர்களை தொட்டு அபிஷேகம் செய்கிறார்களா.. சங்கராச்சாரியார்கள் சிவன் சன்னதிக்குள் சென்று அபிஷேகம் செய்கிறார்களா… இல்லையே… இவை அனைத்துமே ஏற்கனவே நியமிக்கப்பட்ட சம்பிரதாயங்களின் படிதான் நடக்கிறது.
மக்களை நாத்திகர்களாக்கும் திட்டத்தில் இருக்கும் அரசு இவ்வாறு செய்து மக்களை பேதப்படுத்துகிறது. மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது. உங்களுக்கு அரசு தானாக கிடைக்கவில்லை. பெருமாள் தான் கொடுத்தார். என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்க வேண்டாம். மக்களிடம் கேட்டுப்பாருங்கள். கடவுள் இல்லை என்பவர் எத்தனை பேர். தற்போதுள்ள வழக்கத்தை மாற்றக்கூடாது என்றுதான் பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர்.
கோயிலுக்கு உள்ள சட்டத்தை உங்கள் இஷ்டப்படி மாற்றக்கூடாது. எங்களை மிரட்டுவது என்பது உங்களுக்கு கரும்பு தின்பது போல. இதை சமாளிக்கும் மனப்பான்மை எங்களுக்கு உண்டு. ராமானுஜர் காலம் தொட்டு எவ்வளோ பிரச்னைகளை சமாளித்துள்ளோம். சர்வேஸ்வரன் எதையும் திருத்துவான்… இதையும் திருத்துவான்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
XXXXX

கோவில் புறம்போக்கு நிலம்: வேறு எதற்கும் அரசு பயன்படுத்தவோ மாற்றவோ கூடாது
சென்னை,–‘கோவில் நலன்களுக்கு அல்லாமல், கோவில் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலத்தை, வேறு எதற்கும் அரசு பயன்படுத்தவோ, மாற்றவோ கூடாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, வைப்பாமலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் பரம்பரை அறங்காவலரான நந்தகுமார் தாக்கல் செய்த மனு:கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை கமிஷனரிடம் இருந்து, ஆட்சேபனையில்லா சான்றிதழ் பெறாமல், கோவில் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களை வகைப்படுத்தவோ, மற்றவர்களுக்கு பட்டா வழங்கவோ முடியாது.
இத்தகைய புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு இருந்தால், வருவாய் துறையின் ஒத்துழைப்பின்றி நேரடியாகவே அகற்ற முடியும்.இந்நிலையில், கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை கமிஷனரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லாமல், அது போன்ற புறம்போக்கு நிலத்தில், 81 பேருக்கு, 2012 நவம்பரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்தும், அதை புறக்கணித்து விட்டு பட்டா வழங்கி உள்ளனர்.எனவே, எதிர்காலத்தில் எங்களிடம் தடையில்லா சான்றிதழ் பெறாமல், கோவில் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலத்தில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கூடாது என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு:’அரசு நிலத்தில் தான் பட்டா வழங்கப்பட்டுள்ளது; பங்குனி உத்திரம் மற்றும் தேர் திருவிழா நடத்த, அங்கு நிலம் இருக்கிறது’ என, திருச்செங்கோடு தாசில்தார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.குறிப்பிட்ட ‘சர்வே’ எண்ணில் உள்ள நிலம், கோவில் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தப்பட்டிருப்பது, பதிவேட்டில் தெளிவாகிறது. அதனால், கோவில் வசம் உள்ள இந்த நிலத்துக்கான அனைத்து உரிமைகளும் அறநிலையத் துறைக்கு உள்ளது.
எனவே, கோவில் நலன் தவிர, வேறு எந்த காரணங்களுக்காகவும், இந்த நிலத்தை அரசு பயன்படுத்தவோ, மாற்றவோ, கட்டுமானங்கள் மேற்கொள்ளவோ கூடாது.அறநிலையத்துறை சட்டம் மற்றும் வருவாய் நிலை விதியின்படி, கோவில் புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தியதை பயன்படுத்த, அறநிலையத்துறை கமிஷனரின் அனுமதியை மாவட்ட நிர்வாகம் பெற்றிருக்க வேண்டும் என, மனுதாரரின் வழக்கறிஞர் சரியாக சுட்டிக் காட்டியுள்ளார். எனவே, மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Xxxxxxx
திருப்பதியில் பசுமை லட்டு பைகள் விற்பனை துவக்கம்

திருப்பதி பாலாஜி வெங்கடாசலபதி கோவிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்ட போதிலும் லட்டு பிரசாதம் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் கவர்கள் 50 மைக்ரானுக்கு மேல் இருந்ததால் தேவஸ்தானம் அதை பயன்படுத்தி வந்தது.
மேலும் அதற்கு மாற்றாக பல்வேறு காகிதப் பைகள், சணல் பைகள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்தது. லட்டு பிரசாதத்தின் தரத்தை அப்படியே பாதுகாக்க தேவஸ்தானம் எளிதில் மக்கி உரமாகக்கூடிய காய்கறி கழிவுகளில் இருந்தும் பூக்கள் மற்றும் காய்கறிகளின் விதைகளுடன் பைகளை தயாரித்து அளிக்க முடிவு செய்தது.
இந்நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி. ஆர்.டி.ஓ ஐதராபாத்தில் உள்ள சோதனை கூடத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான பொருட்களைக் கண்டறிந்து அதை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவன தயாரிப்பான எளிதில் மக்கும் தன்மை வாய்ந்த மற்றும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய லட்டு கவர்களை தயாரித்துள்ளது.
அதன் விற்பனை திருமலையில் நேற்று தொடங்கப்பட்டது. இதை டி.ஆர்.டி.ஓவின் தலைவர் சதீஷ் ரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இவற்றை கால்நடைகள் உட்கொண்டாலும் அதனால் அவற்றிற்கு பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை. பல மாத பரிசோதனைக்கு பிறகு இந்த பையன்களின் தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
XXXXX

மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதி பதவியேற்பு
மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதியாக ஹரஹர ஞானசம்பந்த தேசிய பராமச்சாரிய சுவாமிகள் ஆக., 23ல் பொறுப்பேற்றார்.
மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதர், 77 உடல்நலக் குறைவால் ஆக., 12ல் காலமானார். 2019 ஜூன் 6ல், ஹரஹர ஞானசம்பந்த தேசிய பராமச்சாரிய சுவாமிகள், இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டிருந்தார்.இவர் நேற்று, மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார். முன்னதாக, அருணகிரிநாதர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பூஜைகள் செய்தார்.
பின் மடத்திற்கு வந்தவருக்கு தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள், பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். இணை கமிஷனர்மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் செல்லதுரை தலைமையில், ஆதீனங்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
புதிய ஆதீனம், மீனாட்சி கோவிலில் விடுபட்ட உஷகால கட்டளை நிறைவேற்றுதல், மடத்தில் அன்னதானம் வழங்குதல், மடத்திற்கு சொந்தமான நான்கு கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துதல் உட்பட ஆறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட ஹிந்து அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாலை மீனாட்சி கோவிலில் ஆதீனம் வழிபட்டார். பின், சித்திரை வீதிகளில் ஊர்வலமாக சென்றார்.
XXXX
மரத்தாலான ராமர் கோவில் மாதிரி; வி.ஹெச்.பி., வழங்கல்

அயோத்தியில், ராமர்கோவில் கட்டுவதற்கு நன்கொடை அளித்த ஆண்டாள் பக்தர்கள் பேரவைக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், விஸ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் சம்பத்ராய், மரத்தாலான ராமர் கோவில் மாதிரி கட்டடத்தை நினைவு பரிசாக வழங்கினார்.
அயோத்தி ராமர்கோவில் கட்டுவதற்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில், 50 ஆயிரம் பேர் இணைந்து, 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினர். சென்னையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயோத்தி ராமர் கோவில் கட்டும் கமிட்டியின் பொதுச்செயலரும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவருமான சம்பத்ராய், ஆக.,23 காலை சென்னை முகலிவாக்கத்தில் உள்ள ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைவர் சொக்கலிங்கம் இல்லத்திற்கு வந்தார்.
அங்கு பக்தர்கள் பேரவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மரத்தினால் செய்யப்பட்ட ராமர் கோவில் மாதிரி கட்டடத்தை சம்பக்ராய், நினைவு பரிசாக வழங்கினார்.
பக்தர்கள் அனைவருக்கும் கேரளா புகழ் பலாப்பழம் பாயாயசத்துடன் பல்வேறு பதார்த்தங்களுடன் கொண்ட சிற்றுண்டி வழங்கப்பட்டது.
XXXX

மைசூரு தசரா விழா; ஊர்வலத்தில் பங்கேற்க 14 யானைகள் தேர்வு
மைசூருவில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப்புகழ் பெற்ற இந்த மைசூரு தசரா விழா மைசூருவை ஆண்ட பண்டைய மன்னர்கள் காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. மைசூரு தசரா விழா சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மைசூரு தசரா விழாவில் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து மன்னர் தனியார் தர்பார் நடத்துவதும், 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க அதை யானைகள் புடைசூழ ஒரு யானை சுமந்து வரும் ஜம்பு சவாரி ஊர்வலமும் மிகவும் பிரசித்திபெற்ற நிகழ்வுகளாகும்.
அவற்றைக்காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டு மைசூரு தசரா விழா விஜயதசமியையொட்டி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் விஜயதசமியையொட்டி வருகிற அக்டோபர் மாதம் தசரா விழா நடைபெற இருக்கிறது.
14 யானைகள் தேர்வு
இந்த நிலையில் யானை சவாரி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக மத்திக்கோடு, தொடஹரவே, ஆனேகோடு, துபாரே ஆகிய 4 யானைகள் முகாம்களில் இருந்து 14 யானைகளை வனத்துறையினர் தேர்வு செய்துள்ளனர். தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானையும், அதற்கு மாற்றாக பீமா யானையும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த ஆண்டும் ஊர்வலம் அரண்மனை வளாகத்திலேயே நடத்தி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
XXXX
நாளை ஜன்மாஷ்டமி தினம்; நேயர்கள் அனைவர்க்கும் ஜன்மாஷ்டமி வாழ்த்துக்கள்

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN
நன்றி, வணக்கம்
tags –Tamilhindunews2982021