ருக்மிணீ விஜயம் மகா காவியம்-1 (Post No.10035)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 10,035

Date uploaded in London – 31 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ருக்மிணீஷ விஜய– ஆறாம் மகா காவியம்                                                                                                                              B.Kannan,Delhi

அன்பார்ந்த ஞானமயம் / தமிழ் முழக்கம் தமிழ் நெஞ்சங்களுக்கு தில்லியிலிருந்து கண்ணன் வணக்கம்.

இன்றைக்கு நாம் கேட்கப் போவது பிரபல கவி மாகா, மற்றும் மகான் ஶ்ரீவாதிராஜர் பற்றியது தான்….     

தென் கர்நாடக மாநிலம், கும்பாஸி ஜில்லா அருகே ஹூவினகரே என்னும் அழகிய கிராமம் உள்ளது.  இந்த கிராமத்தில் வசித்து வந்த ஸ்ரீ ராமாச்சார்யர் (தேவபட்டா) – ஸ்ரீமதி ஸரஸ்வதி(கௌரி) எனும் துளுவக்குலப் பிராமணத் தம்பதிகளுக்கு வெகு நாட்களாகப் புத்திரப் பாக்கியம் இல்லாமல் இருந்தது. உடுப்பி ஸோதே மடத்தின் 19-வது மடாதிபதியாக விளங்கிய ஶ்ரீவாகீஸ தீர்த்தரின் அருளால் அவர்களுக்கு இரண் டாவது மகனாக ஸ்ரீ வாதிராஜர், மாக மாத, சுத்த த்வாதஸி அன்று (1480 ) சுபநாளில் அவதரித்தார். இவருடைய பூர்வாஸ்ரமப் பெயர் ஸ்ரீ பூவராஹன். குரு வாகீஸதீர்த்த ருக்குக் கொடுத்த வாக்குப்படி,8 வயதானவுடன் அவரை மடத்தில் சேர்த்து விட்டனர். அங்கு,ஶ்ரீவாதிராஜ தீர்த்தர் என்றச் சன்னியாச நாமத்துடன் துறவியாக நியமிக்கப் பட்டு, ஶ்ரீவித்யநிதி தீர்த்தரின் பராமரிப்பில் வைக்கப்பட்டார். பின்னர் குருவின் நேரடி பார்வையில் கல்விகற்றுப் புலமைப் பெற்றார்.பெயருக்கு ஏற்ப வாதத்தில் எதிரிகளை வென்று அவர்களின் கர்வம், அகங்காரத்தை அடக்குபவராக விளங்கினார்.                                                                                                                                                                                                     

வாதிராஜ தீர்த்தர் ஓரு துவைதத் தத்துவஞானியும், கவிஞரும் ஆன்மீகவாதியு மாவார். இவரது காலத்தில் ஒரு பன்மொழிப் புலமைக் கொண்டவரான இவர்,

மத்துவ இறையியல் மற்றும் தத்துவங்கள் குறித்துப் பல படைப்புகளை எழுதினார். கூடுதலாக, இவர் ஏராளமான கவிதைகளையும் இயற்றினார். சோதே மடத்தின் தலைவராக,(வடகன்னட) உடுப்பியில் உள்ள கோயில் வளாகத்தைப் புதுப்பித்து, பரியாய வழிபாட்டு முறையை நிறுவினார். மத்துவரின் படைப்புகளில் உத்வேகம் கொண்டு கன்னடத்திற்கு மொழிபெயர்த்ததன் மூலம் அக்கால கன்னட இலக்கியங் களை வளப்படுத்தியப் பெருமையும் இவருக்கு உண்டு]. மேலும், ஹரிதாச பக்தி இயக்கத்திற்கும் பங்களிப்பு செய்தார். இவரது படைப்புகள் அவற்றின் கவிதை செழிப்பு, கூர்மையான அறிவு மற்றும் நகைச்சுவை ஆகியவற்றால் வகைப்படுத்தப் படுகின்றன

ஒரு சிறந்த எழுத்தாளரான இவர், அறுபதுக்கும் மேற்பட்ட படைப்புகளுக்குப் பெருமைச் சேர்த்துள்ளார். குறுகிய பாடல்கள் மற்றும் காவியக் கவிதைகள் முதல் துவைதத் தத்துவங்களிலுள்ளச் சிக்கல்களைப் பற்றியச் சுருக்கமான அறிவார்ந்தப் படைப்புகள் வரை இவரது சாயல் வேறுபட்டது. அயவதானா என்ற பெயரில் பல கவிதைகளை எழுதினார். யுக்திமாலிகா எனற படைப்பு இவரது மகத்தானப் பணியா கப் பரவலாகக் கருதப்படுகிறது. இவர் பல காவியக் காப்பியங்களையும் இயற்றினார்.

அவற்றில் குறிப்பிடத்தக்கது !9  காண்டங்கள் அடங்கிய ருக்மிணீஷ விஜயநூலாகும்.                                                                                                                                                                                             ஆஷாட சுக்ல தசமியிலிருந்து, கார்த்திகைச் சுக்ல பௌர்ணமி வரையிலான நான்கு மாதகாலம் சாதுர்மாஸ்யப் புண்ணியக் காலம் எனப்படும். இது  மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு மிகவும் உகந்ததாகும். துறவிகள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்தவாறு, வேறு எங்கும் விஜய யாத்திரை மேற்கொள்ளாமல், அன்றாடப் பூஜை, புனஸ்காரங்களை நடத்துவர். அப்படியொரு சந்தர்ப்பத்தில் மகான் ஶ்ரீவாதிராஜ தீர்த்தர் வாழ்வில் நடந்த ஓர் அற்புத நிகழ்வைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம். இது அவரது வாழ்க்கைச் சரிதத்தைக் கூறும் ஶ்ரீராமசந்திராச்சாரியார் இயற்றிய “ஶ்ரீவாதிராஜ குருவர சரிதாம்ருதா” என்ற நூலில் (அத்தி.3, சுலோகம் 4–10) விவரிக்கப்படுகிறது. இவர் சார்வரி ஆண்டு பங்குனி மாதம் (1600) பகுள த்ருதியை அன்று பக்தர்கள் வேதகோஷம் முழங்க, ஜீவத்துடன் பிருந்தாவனப் பிரவேசம் அடைந்தார்.

ஒருசமயம் மகான் புண்ணியபுரி என்றழைக்கப்படும் புனே நகரில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் சம்ஸ்க்ருதப் பண்டிதர்களின் வித்வத் சபை கூடி, எந்த மகாகாவியத்தை மிகச் சிறந்தப் படைப்பாகக் கருதலாம் என்பதைத் தீர்மானிக்க விவாதத்தில் ஆழ்ந்திருந்தது.முடிவில் அனைவரது ஒப்புத லுக்கு இணங்க கவி மாகாவின் “சிசுபால வதம்” அதற்கு ஏற்றது எனத் தேர்ந் தெடுத்தது. .

இதில் மாத்வர்களுக்குச் சற்றும் இணக்கமில்லை. மாகா என்னத்தான் விஷ்ணுவைப் போற்றியிருந்தாலும், கிருஷ்ணரைத் தாழ்த்தி, வில்லன் சிசுபாலனை உயர்த்திப் புகழ்ந்திருந்ததை ஏற்க மனமில்லை. மகான் ஶ்ரீவாதிராஜருக்கும் இதே மனநிலை தான். அன்றைக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன் மாகாவால் இயற்றப்பட்டக் காவியத்துக்குச் சவால் விடவேண்டும் என்றால், அதைவிட மேண்மையான ஒரு காப்பியத்தை இயற்ற வேண்டும் என எண்ணம் கொண்டார். உடுப்பி மடத்தில் அதே பின்புலனை வைத்துத் தான் எழுதியக் காவியத்தின் கையெழுத்துப் பிரதி மற்றும் மேல் விவரங்களை வைத்திருப்பதால், அவற்றைக் கொண்டு வந்துச்  சமர்ப்பிக்க மூன்றுவாரக் கால அவகாசம் தேவை, அதையும் பரிசீலித்து விட்டு ஒரு முடிவுக்கு வரலாம் அதுவரைப் பொறுத்திருக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டார்…அவர்களும் சம்மதித்தனர்.

கவி மாகாவைப் பற்றி அறிந்துகொள்ளுவது இப்போது அவசியமாகிறது. 

மாகா பொ.ஆ.பின் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஶ்ரீமலாநகர் எனும் தற்போது ராஜஸ்தானிலுள்ள பின்மல் ஊரில்,செல்வந்தர் தத்தகா சர்வாச்சார்யாருக்கு மகனாகப் பிறந்தார். தனது தந்தை. பாட்டனார் சுப்ரபதிகா போன்று இவரும் பின்னாளில் வடமொழியில் பாண்டித்யம் பெற்று, அந்நாட்டு அரசன் வரமலதாவின் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தார். அவர் பல நூல்களை எழுதியதாகச் சொல்லப் பட்டாலும் அவையெல்லாம் வெளியுலகத்துக்கு வரவேயில்லை, ஒரேயொரு காவியத்தைத் தவிர. உலகெங்கும் பேசும்பொருளாக விளங்கும் சிசுபாலவதம் தான் அது! ஐந்துமகா காவியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ( ரகுவம்சம், குமார சம்பவம், கிராட்டார்ஜுனீயம், சிசுபாலவதம், நைஷதீய சரிதம்)

இந்நூலைப் பற்றியப் பல சொலவடை அறிஞர்களிடையேப் புழக்கத்தில் உள்ளன. தருமி புலவர் தன்னை வம்புக்கிழுத்த நக்கீரரிடம் சொல்வது போல், “பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் (மாகா) இருக்கிறார்கள், அதில் குற்றம்,குறை கண்டுப் பிடித்து பேர் வாங்கும் புலவர்களும் (மல்லிநாதர்) இருக்கிறார்கள். ஆம், மல்லிநாத சூரியின் விமர்சனம், விளக்கவுரை அல்லது வியாக்கியானம் இல்லாமல் சிசுபால வதம் போன்ற காவியங்களைப் புரிந்துக் கொள்ள இயலாது! மல்லிநாதரே சொல்கிறார், “”माघे मेघे वयम् गत:”–மாக காவியம், மேகதூதம் நூல்களைப் படித்துப் புரிந்துக் கொள்வதிலேயே காலம் ஓடிவிடுகிறதே!” என்று வியக்கிறார்.    

எப்போதுவரை கவி மாகா இலக்கியத் தொடுவானில் எழும்பவில்லையோ, அதுவரைதான் பாரவியின் கவியாற்றல் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்பது மற்றொரு பழமொழி!

उपमा कालिदासस्य भारवेरर्थगौरवम् , दण्डिनः पदलालित्यं माघे सन्ति त्रयो गुणाः

உபமானத்துக்கு காளிதாஸன், பொறுள்செறிவுக்குப் பாரவி, வார்த்தை ஜாலங்களுக்கு தண்டின், இவையெல்லாவற்றையும் கொண்டவர் கவி மாகா என்பது பிறிதொன்று.

ஒரு மகா காவியத்துக்குரிய லட்சணங்களாக அந்த வித்வத் சபை எதிர்பார்த்தது: கதையின் கரு இந்திய இதிகாசத்திலிருந்தோ, வரலாற்று நிகழ்ச்சியை ஒட்டியோ இருக்க வேண்டும்

அர்த்த, காமம்,தர்மம், மோட்சம் ஆகியவற்றைச் சொல்வதாக இருக்க வேண்டும்

அதில், நகரம், கடல்,மலை, சூரிய-சந்திர உதய வர்ணனை, ஜலக்ரீடை, உல்லாச கேளிக்கை, காதலர் பிரிவு வேதனை, திருமண நிகழ்ச்சி, குழந்தை பிறப்பு, ராஜ சபை, படை அணிவகுப்பு,போர்க்களம், வெற்றி வாகைச் சூடுதல் ஆகியவை இடம் பெற வேண்டும். இவற்றை மாகா உபயோகித்திருந்தாலும், அவற்றைக் வெளிக்காட்டத் தனக்கென்று ஒரு தனி வழியைப் பின்பற்றிக் கொண்டார்.

“முதல் 9 சர்கங்களிலேயே சொல்லகராதில் உள்ள எல்லா எழுத்துக்களையும் உபயோகித்து விட்டதால் பின்னால் வரும் அத்தியாயங்களில் வேறு எந்தப் புதுச் சொற்களையும் சேர்க்க முடியாமல் போனதாம்!” என்ற சொலவடையும் ஒன்றுண்டு.

தனது வீரரஸக் காவியத்துக்கானக் கதைக் கருவை, மகாபாரதம் சபாபர்வத்தில் (அத்.33-45) கூறப்பட்டுள்ளச் சம்பவங்களையே நிலைக்களனாக எடுத்துக் கொண்டுள் ளார். பாகவதத்தில் இதுவே 10-வது ஸ்காந்தம்அத்.74-ல் வருகிறது. அக்காலக் கட்டத்தில் ஆண்களும், மகளிரும் உபயோகித்த ஆடை, ஆபரணங்களை விவரிக் கிறார்–பரிதானா, அம்சுகா, வஸனா, வஸ்த்ரா, அம்பரா,உத்தரீயம் என்றும், மளிர் அணியை, நீவீ, வஸனா, அம்சுகா, கௌஷேயா, அதிவாசா, நிதாம்பர வஸ்த்ரா, இடையில் அணியும் கபந்தா(ஓட்டியாணம்) என்று. ரைய்வதகா (கிர்நார்) மலையின் ஒரு பக்கம்நிலவு உதிப்பதையும், மறுபக்கம் சூரியன் மறைவதையும் பார்க்கும்போது, அது ஒரு பெரிய யானையின் முதுகின் இருபுறமும் தொங்கி ஆடி அசையும் இரண்டு மணிகள் போல் காட்சியளிக்கிறதாம்!(4-20) இந்த உருவகம் பிரபலமடைந்து, “கண்டாமாகா”–மணிமாகா– என்றப் புனைப் பெயரால் அவர் அறியப்படலானார். கவி தண்டின் காவ்யாதர்சாவில் விவரிக்கும் அனைத்துச் சொல்லணிகளையும் திறம்படக் கையாண்டு மற்றப் புலவர்களைத் திணற வைத்துள்ளார்.

அவருடைய எழுத்துக்களில்,ஜோதிடம்,அரசியல், வேத கோஷம், வான சாஸ்திரம், யானை,குதிரை சாஸ்திரம் பற்றியச் செய்திகள்,சங்கீதம், தத்துவம் ஆகிய விஷயங் களைக் காணலாம். அவர் ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம்  என்றால் மிகையல்ல.

இப்படிப்பட்ட ஓர் அசகாயச் சூரரின் காவியத்தைத் தான் ஶ்ரீவாதிராஜர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எதிர்ப்புகளைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டு வெற்றிகரமாக

மீண்டு வருவதில் தான் ஒரு கவிஞனின் படைப்புத் திறன் மேன்மை அடங்கியிருக்கிறது. அதுமாதிரி சிசுபாலவதம் மகா காவியத்துக்குச் சவால் விட ஶ்ரீவாதிராஜர் போன்ற மகான் வரவேண்டியிருந்தது. உடுப்பியிலிருந்துப் பிரதியை எடுத்து வர வேண்டும் என்றுச் சொன்னதெல்லாம் ஒரு சாக்குப் போக்கே! அந்தக் கால இடை வெளியில் ஒரு சாதனை நிகழ்த்தத் தயாராகி விட்டார். 

To be continued…………………………………………………..

tags- ருக்மிணீஷ விஜயம் ,  கவி மாகா, ,வாதிராஜ தீர்த்தர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: