
Post No. 10,040
Date uploaded in London – 1 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 30-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)
மத்வாசாரியர்! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.

அனைவருக்கும் ஜன்மாஷ்டமி நல் வாழ்த்துக்கள். உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணரையே இஷ்ட தெய்வமாகக் கொண்டு அவரை அங்கு ஸ்தாபித்து வழிபட்டு, அனைவரும் வழிபட வகை செய்த ஸ்ரீ மத்வாசாரியர் திருவடி போற்றுவோம்.
ஹிந்து தர்மத்தில் ஆசார்ய தேவோ பவ என்று ஸ்மிருதியில் கூறப்பட்டிருக்கிறது. அத்வைதத்தை ஸ்தாபிக்க ஆதி சங்கரர் அவதரித்தார். அதே போல த்வைதத்தை ஸ்தாபிக்க ஸ்ரீ மத்வாசாரியர் அவதரித்தார். பாரதத்தில் தென் கன்னட தேசத்தில் உடுப்பி தலத்திற்கு அருகில் உள்ள பாஜக க்ஷேத்ரத்தில் கி.பி.1199ஆம் ஆண்டு மத்வாசாரியர் அவதரித்தார். த்ரேதா யுகத்தில் ஆஞ்சநேயராகவும் துவாபர யுகத்தில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமராகவும் அவதரித்த இவர் கலியுகத்தில் மத்வராக அவதரித்துள்ளார். இந்த மூன்றுமே வாயு தேவனின் அவதாரங்களே!
இவர் ஸ்வஸ்தி ஸ்ரீ விளம்ம்பி வருடம் ஆடி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்று அந்தண குலத்தில் மத்யகேஹர் – வேதவதி ஆகிய தம்பதியருக்கு திருக்குமாரராக அவதரித்தார். இவருக்கு பெற்றோர் வாசுதேவன் என்று பெயர் சூட்டினர்.
இவர் தெய்வீகக் குழந்தை என்பதை நிர்ணயம் செய்யும் விதத்தில் இவரது குழந்தைப் பருவத்திலேயே சில திவ்ய லீலைகள் ஏற்பட்டன. இவர் சுமார் இரண்டு வயதுக் குழந்தையாக இருக்கும் போது இவரது தாயார் ஏதோ வேலையாக வெளியில் சென்றிருந்தார். அந்தச் சமயம் குழந்தை அழ ஆரம்பித்தது. இவரது தமக்கை அடுப்பில் ஒரு அண்டாவில் வேக வைத்துக் கொண்டிருந்த முப்பது படி கொள்ளிலிருந்து ஒரு சிறிது எடுத்து இவரது வாயில் ஊட்டி விட்டுச் சென்றாள். சிறிது நேரத்தில் அவள் திரும்பி வந்து பார்க்கும் போது குழந்தை 30 படி கொள்ளையும் தின்றிருந்தது. இது கண்டு அனைவரும் வியந்தனர்.
இன்னொரு சமயம் சிறுவராக இவர் இருந்த போது வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது தந்தை ஒரு வியாபாரியிடம் எருதுக்காக வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்டு அந்த வியாபாரி அங்கு வந்தார். தான் கொடுத்த பணத்தை தனது தந்தையாரிடம் அவர் வலியுறுத்திக் கேட்பதைப் பார்த்த வாசுதேவன் தனது புளியங்கொட்டைகளில் சிலவற்றைத் அவரிடம் தந்து இன்று முதல் உங்களுக்குச் செல்வம் பெருகும் என்றார். அதே போலவே அந்த வியாபாரிக்குச் செல்வம் அன்றிலிருந்து கொழிக்க ஆரம்பித்தது. பின்னர் ஒரு நாள், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க அவரது தந்தை சென்ற போது அந்த வியாபாரி தனது செல்வ நிலையைக் காண்பித்து பணத்தை வாங்க மறுத்து விட்டார். இப்படிப் பல லீலைகள் தொடர்ந்து நடந்தன.
மகனுக்கு உபநயன வயது வரவே தந்தையார் உபநயனத்தைச் செய்வித்து ஆசாரியர் ஒருவரிடம் அவரை ஒப்படைத்தார். ஒரு நாள் குருதேவர் சொல்லி வந்ததை இவர் கவனிக்காமல் இருந்ததைக் கவனித்த அவர், “நான் சொன்னதைச் சொல்” என்றார். வாசுதேவரோ குரு சொன்ன வேத வாக்கியங்களை அப்படியே திருப்பிச் சொன்னார்.
ஒரு சமயம் பெரிய பாம்பு ஒன்று அவரைக் கடித்து விட்டது. அந்தப் பாம்பின் தலையை தன் கால் கட்டை விரலாலேயே நசுக்கி விட்டு எதுவும் நடக்காதது போல அவர் இருந்தார்.

அவரது நண்பரான சக மாணவன் ஒருவனுக்குத் தீராத தலைவலி ஏற்பட அவன் துடித்தான். உடனே அவர் அவன் காதில் ஊதினார். உடனடியாகத் தலைவலி நின்று விட்டது. கல்வி கற்கும் நாட்களில் அவர் செய்த சாகஸங்கள் பல. ஓடுவது, குதிப்பது, மல்யுத்தம் செய்வது உள்ளிட்டவற்றில் அவர் அசாத்திய திறமையைக் காட்டியதால் அவரை பீமன் என அனைவரும் அழைக்கலாயினர்.
காலப்போக்கில் ஒரு நாள் அச்யுதப்பிரக்ஷர் என்னும் ஒரு துறவி அவர் இருந்த இடத்திற்கு வந்தார். அவரை தரிசித்த வாசுதேவர் தனது தந்தையாரிடம் இவரிடம் நான் முறைப்படி சந்யாச தீக்ஷை பெற விரும்புகிறேன் என்றார்.
இதனால் அதிர்ச்சியுற்ற மத்யகேஹர், “நாங்கள் இறந்தால் எங்கள் அந்திமக் கிரியைகளை யார் செய்வார், உன் முடிவை மாற்றிக் கொள்” என்றார்.
உடனே வாசுதேவர், “தந்தையே! இன்றையிலிருந்து 314நாட்கள் கழித்து உங்களுக்கு சிம்ம லக்னத்தில் ஒரு மகன் பிறப்பான். அவன் உங்களை நன்கு ரக்ஷிப்பான். அவன் பிறக்கும் வரை நான் துறவறம் ஏற்கவில்லை” என்றார்.
அதன்படியே 315ஆம் நாளில் மத்யகேஹரின் மனைவிக்கு சிம்ம லக்னத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
வேத அத்யயனம் முடிந்த பின்னர் தர்க்கம் வியாகாரணம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்றார் வாசுதேவர். உலக வாழ்க்கையில் சற்றும் பற்றில்லாத நிலையில் உடுப்பி தலத்தில் ஸ்ரீ அனந்தேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் உள்ள மடத்தில் ஸ்ரீ அச்யுதப்பிரக்ஷர் இருப்பதை அறிந்தார் அவர். அவரை அணுகி தனக்கு சந்யாச தீக்ஷை அளிக்குமாறு வேண்டினார். அவரும் இவரது ஆர்வத்தையும் தகுதியையும் பார்த்து அவருக்கு அதிக நிர்பந்தம் இல்லாத துறவற தீக்ஷையைக் கொடுத்து ‘பூர்ண ப்ரஜ்ஞர்’ என்னும் சந்யாச நாமத்தை அளித்தார். அன்று முதல் அவர் பூர்ண ப்ரஜ்ஞர் என அழைக்கப்படலானார்.
துறவறம் ஏற்ற 41ஆம் நாள் கங்கா ஸ்நானம் செய்வதாக அவர் சங்கல்பம் செய்தார். ஆனால் வெகு தொலைவில் உள்ள கங்கா நதிக்கு எப்படிச் செல்வது என்று யோசித்த அவர் ஸ்ரீ அனந்தேஸ்வரரைப் பிரார்த்தித்தார். உடனே கங்கா நதி உடுப்பியில் உள்ள குளத்தில் பிரவேசித்தது. அதில் ஸ்நானம் செய்து தன் சங்கல்பத்தை நிறைவேற்றினார் பூர்ண ப்ரஜ்ஞர். அன்று முதல் அந்தத் தடாகம் ‘மத்வஸரோவரம்’ என்று பெயர் பெற்று புண்ய தீர்த்தமானது.
அச்யுதப்பிரக்ஷர் அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்த அத்வைத கோட்பாடுகளையே தம் சீடர்களுக்குப் போதித்து வந்தார். குருநாதர் கூறியவற்றை நன்கு கிரஹித்த பூர்ண ப்ரஜ்ஞர் அவ்வப்பொழுது தன் சூக்ஷ்ம புத்தியைக் காண்பிக்கவே வியந்து போன குருநாதர் அவர் மீது விசேஷ அன்பு பாராட்டியதோடு அவருக்கு பரமஹம்ஸ பத தீக்ஷையை அளித்தார். ஆனந்த தீர்த்தர் என்ற நாமத்தையும் சூட்டினார்.

** தொடரும்
tags- மத்வாசாரியர்! – 1