
WRITTEN BY B.KANNAN, DELHI
Post No. 10,046
Date uploaded in London – 2 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மல்லிநாத சூரி–புகழ்பெற்ற சம்ஸ்க்ருத உரையாசிரியர் -1 by B.Kannan, Delhi
அன்பார்ந்த ஞானமயம் தமிழ் நெஞ்சங்களுக்கு தில்லியிலிருந்து கண்ணன் அநேக நமஸ்காரம்.
இன்றைக்கு நாம் பார்க்கப் போவது புகழ் பெற்றச் சம்ஸ்க்ருத உரையாசிரியர் (Literary Commentator) மல்லிநாத சூரி பற்றித் தான்…..
தமிழகத்தில் படித்தவர்களுக்கு ஒரு விஷயம் நினைவிருக்கலாம். பாடப் புத்தகம் கையில் இருக்கிறதோ, இல்லையோ பள்ளி, கல்லூரி மாணவர்கள் நிச்சயம் உரை நூல் (GUIDE) வைத்திருப்பது வழக்கம்–தமிழுக்குக் கோனார், ஆங்கிலத்துக்குப் பரசு ராமன் சாரின் மினர்வா, பானர்ஜியின் தலையணை போலிருக்கும் நோட்ஸ், சம்ஸ்க்ருதத்துக்கு சங்கரராம சாஸ்திரியாரின் குறிப்புரைப் புத்தகம் என்று நான் வைத்திருந்தது இன்னும் ஞாபகமிருக்கிறது. சம்ஸ்க்ருதக் காவியங்களை நன்றாகப் படித்து, அதில் பொதிந்துள்ள ஆழ்ந்தக் கருத்துக்களைப் புரிந்துகொள்ள வேண்டு மானால் மல்லிநாத சூரியின் வியாக்கியானங்களின் துணை அவசியம் வேண்டியி ருக்கும், திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரை போல. ஐந்து மகாகாவியங்களுக்கு அவர் எழுதிய விரிவுரைகள் மிகவும் புகழ்ப் பெற்றவை. காளிதாசனைக் கவிகுலகுரு என்றழைத்தால் மல்லிநாதா வியாகரணச் சக்கரவர்த்தி எனக் குறிப்பிடப் படுகிறார்.
அவர் ராசகோண்டா ராஜா சிங்கபூபாலா, விஜயநகரப் பேரரசின் அரசன் முதலாம் தேவராயன் காலத்தில்,(1350-1450 பொ.ஆ) வாழ்ந்ததாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. தற்போதைய தெலங்கானா மாநிலம், மேதக் ஜில்லா, கோல்சாரம் ( கொலிசேலமா, கொலிசேலா ) கிராமத்தில் ஒரு செல்வச் செழிப்பானக் குடும் பத்தில் பிறந்து வளர்ந்தவர். காகதீயர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தபின் அங்கிருந்த அறிஞர்கள் பலரும் ராசகோண்டாவுக்குப் புலம் பெயர்ந்தனர். இளம் வயதில் படிப்பில் சோடை போனவர், பின்னர் பாட்டனார் சதாவதானி மல்லிநாத சூரியின் மேற்பார்வையில் கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்கினார். ஏதும் முன்னேற் பாடின்றி உடனடியாகப் பாடல் இயற்றுவதில் புலமைப் பெற்றார். பல சாஸ்திரங்கள், வியாகர்ண மீமாம்சா, நியாயா ஆகியவற்றையும் கற்றுத் தேர்ந்தார், பாஷ்யம்
எழுதுவதைத் தவிர, ரகுவீர சரிதம், வைஸ்யவம்ச சுதாகரா மற்றும் உதர காவியம் ஆகியக் கவிதை நூல்களையும் எழுதியுள்ளார்.
ஒரு சமயம் விஜயநகர வைசியர் குலத்தவருக்கும், காஞ்சியிலிருந்து வந்த வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்டத் தகறாரைத் தீர்த்து வைக்க, மன்னன் இரண்டாம் தேவராயரின் கட்டளையின் பேரில்முயற்சித்து சுமுகமான முடிவை எட்டினார். தெலுங்கு -சம்ஸ்க்ருத மொழி கலந்து அவரால் இயற்றப்பட்ட கவிதை நூல் “வைஸ்யவம்ச சுதாகரா” இதனை விவரித்து, அக்குலத்தவரின் அருமைப், பெருமைகளைச் சொல்கிறது. மன்னன் சிங்கபூபாலன் அவருக்கு மகாமகோபாத்யாய விருது அளித்துக் கௌரவப்படுத்தியுள்ளான். தொடர்ந்து, மல்லிநாதாவின் மகன் குமாரசுவாமின் மகோபாத்யாய பட்டமும் பெற்றுள்ளார். பல தருணங்களில் அவரது விவரணம் மற்ற உரையாசிரியர்களான ஶ்ரீவல்லபாசாரியார், நாராயணப் பண்டிதர் ஆகியோரின் எண்ண ஓட்டத்திலிருந்து மாறுபட்டே இருந்துள்ளது.
இப்போது சில உதாரணங்களைப் பார்க்கலாம்…..
வாக்கியங்களில் பொருளுக்கேற்ப சொற்களிடையே உள்ள தொடர்பு-, இலக்கணப் பகுப்பாய்வு, அவற்றுக்கான அறநூல் சான்றுகள் மற்றும் தன் சீரானச் சிந்தனையால் காவியத்தில் பொதிந்துள்ள அர்த்தத்தைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துவிடு கிறார். தன் விரிவுரையின் வாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாகவும்,கவியின் கற் பனைவளத்தைச் சிலாகிக்கும் விதமாகவும் பல்வேறு இதிகாச, புராணச் சம்பவங் களை எடுத்துக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதோ ரகுவம்சத்தில் ஒரு காட்சி…..
அரசன் திலீபன் தன் மகனுக்கு “வேகமாகச் செல்பவன்” எனப் பொருள்படும்படி ‘ரகு’ என்று பெயரிடுகிறான். இதன் மூலவேர்ச் சொல் ‘லகு’ (‘செல்பவன்’ =லங்கதே கச்சதி லகுகு) என்பதாகும். பதஞ்சலியாரின் மகாபாஷ்யத்தைச் சுட்டிக் காட்டி மல்லிநாதா, வார்த்திகா எனும் இலக்கணத் துணை விதிப்படி உயிர்மெய்யெழுத்து ‘ல’, “ர’ என உருமாறிவிடுகிறது (வலா=வரா, மூ, ப்லா=மூரா அலம்=அரம், லகு=ரகு) என்று வியாக்கியானம் செய்கிறார். அதாவது லகு என்பதே ரகு என்றாகிவிட்டது!
சிசுபாலவதம் 19-வது அத்.27-ம் செய்யுளைக் குறிப்பிடுகையில் மல்லிநாதா,”கவிமாகா மிகவும் சிக்கலானதும், அழகுற வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்டுதுமான மாலை மாற்று அணியைக் கையாண்டிருக்கிறார். இலக்கணச் சுத்தியை விரும்பும் அவர் இக்கட்டமைப்பைச் “ஸர்வதோபத்ரா” என அழைத்து வியப்புறுகிறார். அதாவது, வலம்-இடம், இடம்-வலம், மேலிருந்துக் கீழ், கீழிருந்து மேல் என்று எப்படிப் படித்தாலும் செய்யுள் வரிகள் மாறவே மாறாது! நாரிகேலபல சம்மிதம் வாச பாரவே:– பார்ப்பதற்கு கடினமான மட்டைத் தேங்காய் தான்; அதனுள்ளே இருப்பதோ சுவையான இளநீர் மற்றும் தித்திக்கும் வழுக்கையும் தானே! என்கிறார் மல்லி. இதோ அந்தச் செய்யுள்:
सकारनानारकास- ஸகாரநா நாரகாஸ
कायसाददसायका । காயஸாத தஸாயகா
रसाहवा वाहसार- ரஸாஹவா வாஹஸார
नादवाददवादना ॥ நாதவாத தவாதநா (19-27) இதன் பொருள்:
போரில் வெற்றிப் பெற்ற சேனாவீரர்கள் எதிரிகளைச் சிறைப் பிடித்து, அவர்களது கொட்டம் மற்றும் அடையாளங்களை அடக்கி ஆளுகின்றனர். இவற்றினூடே எழும் யானையின் பிளிறல்,குதிரையின் கனைப்புச் சத்தங்கள் இன்னிசைக் கருவிகளி லிருந்து எழும் இனிய நாதத்தைக் கேட்டு மனமகிழ்ந்து ‘ஆஹா’ காரமிடுவது போல் இருந்ததாம்!
சிலசமயம் நம்மை மாற்றி யோசிக்கவும் வைத்து விடுகிறார். இதோ பட்டிகாவியத்தில் ஒரு ஸ்லோகம்—
दीपतुल्य: प्रबन्धोज्यम् सब्दलक्षणचक्षुषाम् |
हस्तामर्ष इवान्धानां भवेत् व्याकर्णाद्रुते ||
தீபதுல்ய: பிரபந்தோஜ்யம் சப்தலக்ஷண சக்ஷுஷாம்|
ஹஸ்தாமர்ஷ இவாந்தானாம் பவேத் வ்யாகர்ணாத்துதே||
இந்த வீரகாவியம் நாம் கையில் வைத்திருக்கும் தீபம் போன்றது. அதன் ஒளியால் இலக்கணப் பிரயோகங்களை விளக்கும் இந்நூலை நன்றாகப் படித்துத் தெளிவு பெறலாம். இங்கு ‘हस्तामर्ष’ என்ற வார்த்தைக்குப் பதில், மல்லிநாதா ‘हस्तादर्श’ என்ற சொல்லை உபயோகிக்கிறார், உபமான, உபமேயத்துக்கு மேலும் மெருகூட்ட”பார்வை இழந்தவன் கையில் ஏந்தியிருக்கும் விளக்கினால் என்ன பயன்? என அப்பதத்தை வேறு கோணத்தில் எடுத்து வைக்கிறார்.
மேகதூதத்திலிருந்து மேகத்தின் ஒரு விள்ளல்:
मन्दं मन्दं नुदति पवनस्चानुकूलो यथा त्वां
वामस्चायं नदति मधुरम् चातकस्ते सगन्ध:|
गर्भादान क्षणपरिचयान्नूनमाबद्धमाला:
सेविष्यन्ते नयनसुभगं खे भवन्तं बलाका:|| (1-9)
மந்தம் மந்தம் நுததி பவனஸ்சானுகூலோ யதா த்வாம்
வாமஸ்சாயம் நததி மதுரம் சாதக ஸ்தே சகந்த:|
கர்பாதான ஷணபரிசயாந்நூநம் ஆபத்தமாலா:
ஸேவிஷ்யந்தே நயநசுபகம் கே பவந்தம் பலாகா:||
கார்மேகக் கூட்டம் மழைக் காலத்துக்குக் கட்டியம் கூறும் அறிகுறி. பெண் நாரைகள் தங்கள் துணையை நாடும் நேரம். ஆண் நாரை அதைப் பார்த்ததும் வந்துவிடுமே! ஆகவே மேகத்துக்கு நன்றி சொல்கிறதாம்,
‘பலாகா: என்றச் சொல் சிலேடையாகச் சொல்லப்பட்டுள்ளதாக மல்லிநாதா குறிப்பிடுகிறார்- பலாகங்கனா நயனசுபகம் என்கிறார் ஆடவரை மயக்கும் மேனாமினுக்கிகளின் கவர்ச்சிப் பார்வையைப் போல் பெட்டை நாரைகள், காற்றினால் தள்ளப்படும் மேகத்தைப் பார்த்துத் தங்கள் பிரகாசமிக்கக்
கண்களைச் சிமிட்டி, நமுட்டுச் சிரிப்புச் சிந்தியதாம் என்றுக் கூடுதலாக அர்த்தம் சொல்லி விவரிப்பது முறுவலிக்க வைக்கிறது.

To be continued ……………………………………………………………..
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
tags- மல்லிநாத சூரி, சம்ஸ்க்ருத உரையாசிரியர்