
Post No. 10,075
Date uploaded in London – 10 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
10-9-2021 – விநாயகர் சதுர்த்தி. முன்னவனை வணங்குவோம். அவனைப் பற்றிய ஒரு துதி மாலைத் தொகுப்பு இது. சென்ற ஆண்டு விநாயக சதுர்த்தி அன்று வெளியான கட்டுரை விநாயகர் தமிழ் மாலை! – 1 (1-10)
கட்டுரை எண் 8551 வெளியான தேதி :22-8-2020 (விநாயக சதுர்த்தி தினம்)
விநாயகர் தமிழ் மாலை! – 2 (11- 20)
ச.நாகராஜன்
விநாயகர் துதி இல்லாத நூல்களே இல்லை. ஒவ்வொரு துதியிலும் விநாயகர் தரும் பலன்களைப் பார்த்து பிரமிக்கலாம். விநாயகரைத் துதிப்போர்க்கு ஒரு நாளும் துன்பமில்லை; இன்பமே எந்நாளும்! இந்தக் கட்டுரையில் பத்துப் பாடல்களைக் காணலாம்.
11-13
கந்த புராணத்தில் வரும் மூன்று பாடல்கள் :-
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ய்பதம் போற்றுவாம்
உச்சியின் மகுடம் மின்ன ஒளிர்தர நுதலின் ஓடை
வச்சிர மருப்பின் ஒற்றை மணிகொள்கிம் புரிவ யங்க
மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகங்கொண் டுற்ற
கச்சியின் விகட சக்ரக் கணபதிக் கன்பு செய்வாம்
மண்ணுள கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுற
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்
14, 15
திருவிளையாடற் புராணச் செய்யுள்கள் இவை:-
சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர
முத்தியான முதலைத் துதிசெயச்
சுத்தியாகிய சொற்பொருள் நல்குவ
சித்தி யானைதன் செய்ய பொற்பாதமே
உள்ளமெனுங் கூடத்தில் லூக்கமெனுந்
தறிநிறுவி யுறுதி யாகத்
தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி
யிடைபடுத்தித் தறுகட் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்
களித்துண்டு கருணை யென்னும்
வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை
நினைதுவரு வினைகள் தீர்ப்பாம்
16,17
விருத்தாசலப் புராணச் செய்யுள்கள் இவை:-
திருவுங் கல்வியுஞ் சீருந் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவ மாய்நம துள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்
ஒருமலையாற் புரமலையு மொருமைந்தன் றிருமைந்தன்
இருமலையுந் தும்மலையு மெதிர்மலையும் வினைமலையும்
பொருமலையும் விம்மலையும் பொம்மலையும் புடைத்தருவிக்
கருமலையும் பெருமலையிற் கைம்மலையைக் கைதொழுவாம்
18,19
காஞ்சிப் புராணத்தில் வரும் செய்யுள்கள் இவை:-
பண்ணியமும் வெண்கோடும் பாசாங் குசப்படையும்
நண்ணிய செங் கைத்தலத்து நாதா! ஒரு கோட்டுத்
தண்ணிய வெண்பிறைத் தாழ்சடையாய்! மெய்யடியார்
எண்ணிய எண்ணியாங் கீந்தருளும் வள்ளலே!
விழிமலர்ப் பூ சனையுஞற்றித் திருநெடுமால்
பெறுமாழி மீள வாங்கி
வழியொழுகாச் சலந்தரன் மெய்க் குருதிபடி
முடைநாற் றமாறு மாற்றால்
பொழிமத நீர் விரையேற்றி விகடநடப்
பூசைகொண்டு புதிதா நல்கிப்
பழிதபுதன் றாதையினும் புகழ்படைத்த
மதமாவைப் பணிதல் செய்வாம்
20
கோயிற் புராணத்தில் வரும் செய்யுள் இது:-
தன்னோங்கு மலரடியும் தளிரோங்கு சாகைகளும்
மின்னோங்கு முகக்கொம்பும் விரவியகண் மலர்களுமாய்
மன்னோங்க நடமாடு மன்றோங்கு மதிற்குடபாற்
பொன்னோங்கன் முன்னோங்கும் பொற்பமர் கற்பகம் போற்றி!
***
INDEX
விநாயகர் துதிகள் 10 பாடல்கள், கந்த புராணம், திருவிளையாடல் புராணம், விருத்தாசலப் புராணம், காஞ்சிப் புராணம், கோயிற் புராணம் செய்யுள்கள்,
விநாயகரைத் துதித்தால் கிடைக்கும் அரும் பயன்கள்!

tags- விநாயகர் துதிகள்,திகட சக்கரச்