
Post No. 10,080
Date uploaded in London – 11 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புற்று நோயைக் கண்டுபிடிக்க உதவும் உலோகம் ரூபீடியம்

இதுவரை இந்த ‘பிளாக்’கில் 37 மூலகங்களின் (Element தனிமம்) கதைகளைக் கேட்டீர்கள். இன்று 38ஆவது தனிமத்தின் கதையைக் காண்போம்.
ருபீடியம் RUBIDIUM ஒரு உலோகம். இது பொட்டாசியம் போல கார வகையைச் (ALKALI METAL) சேர்ந்த உலோகம்.
இது பற்றிய சுவையான விஷயங்கள் : இது மூளையில் (Brain Tumours) ஏற்படும் கட்டி மற்றும் புற்று நோயைக் கண்டுபிடிக்க உதவுகிறது. நேரத்தைத் துல்லியமாகக் காட்டும் அணுசக்திக் கடிகாரங்களிலும் (Atomic clocks) பயன்படுகிறது. நாம் காணும் வாண வேடிக்கைகளில் ஊதா நிற ஒளி (purple) உண்டாக்குவதும் ருபீடிய உப்புகள தான் !
. லத்தீன் மொழியில் ருபிடியஸ் என்றால் ஆழ்ந்த சிவப்பு வர்ணம் என்று பொருள். இதனால்தான் மாணிக்கக் கற்களையும் ஆங்கிலத்தில் ரூபி Ruby என்று அழைக்கிறோம். சரியான உச்சரிப்பு ரூபிடியம்.
இந்த உலோகத்தை வெட்ட வெளியிலோ தண்ணீரிலோ வைத்திருக்க முடியாது. ஏனெனில் அது தீப்பிடித்து எரிந்துவிடும் அல்லது தண்ணீரில் அதிவேகமாகச் செயல்பட்டு தீயை உண்டாக்கும். ஆகையால் இதை எண்ணைக்கு அடியில் வைத்திருப்பார்கள்
மற்றோர் சிறப்பு என்னவென்றால் ரூபீடிய -வெள்ளி அயோடைட் என்னும் உப்பு மின்சாரத்தை எளிதில் கடத்தும்.
நாம் சாப்பிடும் உணவில் சோயா மொச்சை, ஆப்பிள், தேநீர், காப்பி ஆகியவற்றில் குறிப்பிடத் தக்க அளவுக்கு ருபிடியம் இருக்கிறது ஆயினும் இதற்கு உடலில் வேலை எதுவும் இல்லை.
***
மருத்துவத்தில்
பொட்டாசியம் போலவே இதையும் நமது உடல் எளிதில் கிரகித்து விடுகிறது. இது சிறிது கதிரியக்கம் உடையது . இதனால் இதை உடலில் செலுத்தினால் அது எங்கே செல்கிறது என்று அறியலாம். குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்கள் இதை வலிந்து இழுக்கின்றன.
இதை வைத்து அங்கே புற்றுநோயோ வேறு வகை கட்டியோ இருக்கிறதா என்று அறியமுடியும் . ஆயினும் இந்த உலோகத்தின் உப்புகள் விஷத் தன்மை உடையவை.
பெர்லின் அகாடமியில் ஜெர்மன் விஞ்ஞானியான ராபர்ட் வில்லியம் புன்சென் மற்றும் குஸ்தாவ் ராபர்ட் கிச்சாப் ஆகிய இருவரும் இதன் கண்டுபிடிப்பை 1861-ல் அறிவித்தனர்.
டயாலிசிஸ்(Dialysis) சிகிச்சைக்கு செல்லுவோர் மனத் தொய்வை அடைகின்றனர். அவர்களுக்கு மனக்கவலை நீங்க ருபிடிய மருந்துகள் உதவுகின்றன.
ருபிடியம் பூமியின் மேற்பரப்பில் மற்ற பொருள்களுடன் கலந்து இருக்கிறது; இதற்கு அதிக உபயோகம் இல்லாததாலும் உற்பத்திக்கு அதிக செலவு பிடிப்பதாலும் ஆராய்ச்சிக்குத் தேவையான அளவுக்கே இது உற்பத்தி ஆகிறது

கண்ணாடித் தொழிலிலும் , வெப்ப சக்தியை மின்சார சக்தியாக மாற்றும் சாதனங்களிலும் பயன்தருகிறது. ருபிடியம்- ஸ்ட்ரான்ஷியம் கலப்பு தாது இருக்கும் பாறைகளின் வயதைக் (Dating the rocks) கண்டு பிடிப்பது எளிதாகிறது. ஆகையால் அந்த விஷயத்திலும் இது நமக்கு உதவுகிறது. போட்டோ செல்களிலும், விண்கலத்தைக் கொண்டு செல்லும் ராக்கெட் என்ஜின்களிலும் இதை பயன்படுத்துகிறார்கள்.

இதன் ரசாயனக் குறியீடு Rb
அணு எண் -37
உருகு நிலை – 39 டிகிரி சி
கொதி நிலை – 688 டிகிரி சி
இது ஒரு மென்மையான, வெள்ளை நிற உலோகம். குறைந்த வெப்ப நிலையில் கூட ஆக்சிஜனுடன் கலந்து எரியத் தொடங்கிவிடும்; ஆகையால் எண்ணை அல்லது கிரீசுக்குள் வைத்திருப்பார்கள். ருபிடியம்- 85, ருபிடியம் -87 என்று இரண்டு ஐசடோப்புகள் உண்டு. இவற்றில் இரண்டாவது ஐசடோப் கதிரியக்கம் கொண்டது .


–subham–
tags- புற்றுநோய் ,உலோகம், ரூபீடியம், rubidium