
Post No. 10,083
Date uploaded in London – 12 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாரெங்கும் பாரதியின் சிந்தனை! ஞான மயம் சார்பில் பாரதி நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி சிறப்புற நடத்தப்பட்ட போது 11-9-2021 சனிக் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பான ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை மூன்று பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)
பார் போற்றும் மகாகவி பாரதியார்! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். பாரதி நினைவு நூற்றாண்டு தினமானது இதோ இப்போது இன்று உலகளாவிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது.

எது கவிதை? இதற்கான இலக்கணத்தை நூற்றுக் கணக்கான அறிஞர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிக்ள் சொல்லி விட்டனர்.
இவர்கள் சொன்ன இலக்கணத்தின் படி இது தான் கவிதை என்பதோடு இதற்கு அப்பாலும் கவிதை இருக்கிறது என்பது தான் உண்மை!
எதார்த்தத்தைச் சொல்வது கவிதை என்பது ஒரு கட்சி; கற்பனையை அழகுறச் சொல்வது கவிதை என்பது இன்னொரு கட்சி.
எதார்த்தம் தான் கவிதை என்றால்.
“பாக்காவது கமுகம் பழம் பருப்பாவது துவரை
மேற்காவது கிழக்கே நின்று பார்த்தால் அது தெரியும்
நாற்காதமும் முக்காதமும் நடந்தால் அது எழு காதம்
ராக்கா உண்மை சொன்னேன் இனி ரட்சிப்பயோ அல்லது பட்சிப்பயோ”
என்ற இதுவும் கவிதை தானே என்கிறார் பேராசிரியர் முத்துசிவன் தனது அசோகவனம் என்ற புத்தகத்தில் கவிதை என்ற கட்டுரையில்.
வெறும் யதார்த்தம் மட்டும் கவிதை ஆகாது.
இது போலவே வெறும் கற்பனை மட்டும் கவிதை ஆகாது.
நிலவு போன்ற முகம், வீனஸ் போன்ற தேவதை என்று சொல்லிக் கொண்டே போவது மட்டும் கவிதை அல்ல.
பின்னர் கவிதை என்பது தான் என்ன?
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கூறுகிறார்:-
உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்துரைப்பது கவிதை
கவிதைக்கான அழகான இலக்கணம் தான் இது!
ஆனால் கம்பனோ கவிதையில் ஒளி வேண்டும் என்கிறான்.
கோதாவரி ஆற்றின் பிரவாகத்தைப் பார்த்த அவனுக்கு அதை கவிதையுடன் ஒப்பிடத் தோன்றுகிறது.
புவியினுக்கு அணியாய், ஆன்ற பொருள் தந்து, புலத்திற் றாகி, அவி அகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி, சவியுறத் தெளிந்து, தண்ணென் ஒழுக்கமும் தழுவிச் சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.”
புவியினுக்கு அணியாய் அமைவது சான்றோரின் கவி. அது ஆன்ற பொருளைத் தரும்.
தேவர் தம் உணவுக்கொத்த சுவைப் புலங்களில் படிந்ததாக இருக்கும்
அவியகத் துறைகள் தாங்கி இருக்கும், அதில் ஒளி இருக்கும் (சவி – ஒளி)
தண்ணென குளிர்ந்த ஒழுக்கம் நிரம்பி இருக்கும்.
(கோதாவரியைப் போல) அகன்ற பிரவாகம் போலப் பெருக்கெடுத்து ஓடி இன்பம் தரும் இது கம்பனின் வாக்கு.
வெய்யோனொளி தன் மேனியின் விரிஜோதியின் மறையப் பொய்யோவெனும் இடையாளுடன் இளையானொடும் போனான் மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்.
ஆஹா, இது அல்லவா கவிதை! இதை இயற்றியவன் கவிச் சக்கரவர்த்தி அல்லவா! ஆம் கம்பன் இயற்றியது தான் இது. இது தான் கவிதை!
இந்த இலக்கணத்திற்கெல்லாம் உட்பட்டு இதற்கு அப்பாலும் சென்று கவிதை படைத்த ஒரு அற்புதக் கவிஞன் தான் மகாகவி பாரதி!
காலத்தை வென்ற கவி மஹாகவி பாரதி தனக்குத் தொழிலே கவிதை தான் என்கிறான்!
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்
இது தான் பாரதியின் தொழில்.
கம்பன் இசைத்த கவியெலாம் நான் என்பது தான் ‘கவிதைத் தொழில் மன்னனின்’ – நம் பாரதியின் – சுய சரிதைச் சுருக்கம்!
காலத்திற்குத் தக்கபடி பாழும் கலியில் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் அனைவரையும் மேலேற்றி, குருடரை எல்லாம் குருடு நீக்கி விழி கொடுத்துப் பதவி பெற வைப்பது கவிதை என்கிறான் அவன்.
கவிதையே தொழிலாகக் கொண்ட கவிஞன் கவிதா சக்தி பற்றி தரும் விளக்கம் இது தான்:-
உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப் போற் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்
இந்த கவிதா வரிகளில் கம்பனின் சவி என்னும் ஒளியை பாரதி முன் நிறுத்துகிறான். வாக்கினிலே ஒளி வந்து வெள்ளம் போல கலையும் கவிதையும் பெருகுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் விழி பெற்று உன்னதமான நிலையை எய்துவர். அமிழ்தம் நிகர் தமிழின் சுவை கண்டார் தேவர் ஆகிடுவர்.
என்ன அழகிய வார்த்தைகள்! கவிதையின் மகத்தான் சக்தியை பளீரென்று சொல்கிறார் பாரதியார்.
இது தான் கவிதை! இதைத் தாண்டியும் இருப்பது கவிதை!
எது ஆன்மாவை உயரத்தில் ஏற்றுகிறதோ அது கவிதை! எது ஆன்மாவைப் போல அழியாமல் இருக்கிறதோ அது கவிதை! எது இறைவனின் விளக்க முடியா விந்தையை விளக்க முயன்று ஒளிர்கிறதோ அது கவிதை!
இது தான் கவிதையா! இது கவிதை; இதற்கு அப்பாலும் உள்ள விளக்கத்தைக் கொண்டிருப்பதும் கவிதை! விண்டுரைக்க முடியா விந்தையே கவிதை!
ஆனால் இந்தக் கவிதைக்கான இலக்கணத்தை அனுபவிக்க ஒரு எளிய வழி உண்டு.
அது பாரதியாரின் கவிதைகளைப் படிப்பது தான்; அனுபவிப்பது தான்; உணர்வது தான். அப்போது தேனின் சுவை என்ன என்பதை சொற்களால் விளக்க முயன்று தோற்றுப் போன ஒருவன் ஒரு துளி தேனை அருந்தியவுடன் விளக்கமே தேவையில்லை என்று சொல்வது போல பாரதியின் கவிதைகளைப் படித்து அனுபவிப்பவன் கவிதா இலக்கணத்தை நன்கு அறிந்து கொள்வான்.
****
சரி, ஒரு கவிஞன் அப்படி என்ன தான் செய்து விட முடியும்.? குடந்தை வேலன் என்னும் ஒரு கவிஞர் விடை தருகிறார். யார் இந்தக் குடந்தை வேலன் என்பதை இன்று வரை அறிய முயன்று வருகிறேன். தெரியவில்லை. இவர் பாடிய கவிதைச் சித்தன் கும்மாளத்தில் சில பகுதிகள் இதோ:
கவிதைச் சித்தன் கும்மாளம்!
எழுதியவர் குடந்தை வேலன்
கல்லொடு கல்லினைத் தட்டிக் களைத்திடுங்
கற்றறி மூடர்களே – ஒரு
சொல்லொடு சொல்லினைத் தட்டி நெருப்பொடு
சூளை கிளப்பிடுவோம்
ஆனையைப் பானையில் மூடி வைப்போமந்த
அண்டப் பெருவெளியும் – மிகக்
கூனிக் குறுகியெம் சொல்லெனும் மாயக்
குடுக்கையில் நின்றாடும்
வெண்ணெயை வைத்திட்டு நெய்க்கு அலைந்திடு
வீணர்களே வாரும் – இந்த
மண்ணில் இருக்குது விண்ணுலகம் எங்கள்
மந்திரத்தில் பாரும்
வானத்தில் வில்லை வளைத்திடுவோம் அந்த
மண்ணைச் சுருட்டிடுவோம் பர
மோனத்தை ஞானத்தளையில் பிடித்தே
மூப்பில் ஆழ்த்திடுவோம்
வேதக்குயவன் வனைந்திட்ட மட்குடம்
வீழ்ந்தே உடைந்ததடா –யாம்
நாதக்குழம்பில் புனைந்திட்ட சொற்கடம்
ஞானம் முழங்குதடா
(சொற்கடம் என்பதை சொற்கள் தம் எனப் பிரிக்க வேண்டும்)
என்ன ஒரு அருமையான கவிதை! இது தான் கவிதை செய்யும் ஜாலம்! இந்த ஜாலத்தைத் தான் மஹாகவி பன்முகப் பரிமாணத்துடன் தன் கவிதைகள் மூலம் செய்தார் என்று சுருங்கச் சொல்லி விடலாம்!
* தொடரும்

tags பார் ,மகாகவி, பாரதியார்,