

Post No. 10,095
Date uploaded in London – 15 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 13-9-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம்.
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

நாம ஏவ சித்தாந்தா – நாமமே சித்தாந்தம் என்ற நாம மகிமை சித்தாந்தத்தை வலியுறுத்தி ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள், ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள், திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் உள்ளிட்ட பல மகான்கள், அந்த சித்தாந்தத்தைப் பரப்பிய காலம் நாம சங்கீர்த்தனத்தின் பொற்காலம்.
இந்தப் பொற்காலத்தில் அவதரித்தவர் ஸ்ரீ நாராயண தீர்த்தர்.
காஷ்மீரிலிருந்து கன்யா குமரி வரை அனைவரும் இசைத்து ஆனந்தப்படும் கிருஷ்ண லீலா தரங்கிணி நூலை இயற்றியவர் ஸ்ரீ நாராயண தீர்த்தரே. இந்த நூலை, அனைவரும் பரவசப்படும் விதமாக நாட்டியமாக வடித்து நூற்றுக் கணக்கான நடனக் கலைஞர்கள் நாட்டியம் ஆடி அனைவரையும் பக்திப் பரவசப்படுத்துகின்றனர். அதே போல நூற்றுக் கணக்கான இசை மேதைகளும் தங்கள் குரல் வளத்தால் கிருஷ்ண லீலைகளை செவி குளிரப் பாடுகின்றனர்.
தெலுங்கு பிராமண வகுப்பைச் சேர்ந்த தல்ல வஜ்ஜல என்ற குடும்பம் ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் பானக நரசிம்மர் உறைந்து அருள் பாலிக்கும் மங்களகிரியின் அருகில் அமைந்துள்ள காஜா என்ற கிராமத்தில் வசித்து வந்தது. அங்கு நீலகண்ட சாஸ்திரி, பார்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாக அவதரித்தார் ஸ்ரீ நாராயண தீர்த்தர். இவர் பிறந்த ஆண்டு 1665. ஜீவ சமாதி எய்திய ஆண்டு 1745.
இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் கோவிந்த சாஸ்திரி. இவர் இளம் வயதிலேயே ஸ்ரீ கிருஷ்ணர் மீது எல்லையற்ற பக்தி கொண்டிருந்தார். சம்ஸ்கிருதத்தில் வல்லமை பெற்ற இவருக்கு இசை கை வந்த கலையாயிற்று, சாஸ்திரங்களிம் மிகுந்த தேர்ச்சி பெற்றார். அந்தக் கால நடைமுறைப்படி இவருக்கு இளம் வயதிலேயே திருமணமும் நடை பெற்றது.

ஒரு சமயம் தனது மாமனார் வீட்டிற்குச் செல்வதற்காகப் புறப்பட்ட இவர் கிருஷ்ணா நதியைத் தாண்ட வேண்டியிருந்தது. அப்போது ஆற்றின் வெள்ளப் பெருக்குச் சுழலில் மாட்டிக் கொண்டார். வெள்ளத்தில் மூழ்கி உயிர் போய் விடும் என்ற தருணத்தில் இவர் ஆபத் சந்யாசம் மேற்கொண்டார். அந்த மந்திரங்களைச் சொல்லி சந்யாசம் மேற்கொள்ளவே, வெள்ளச் சுழலிலிருந்து மீண்டார், சந்யாசி ஆனார். தனது மனைவியை அவர் பார்த்த போது, அவரது தெய்வீக முகத்தைக் கண்டு மனைவி நடந்ததை உணர்ந்து கொண்டார். தெய்வீக லீலையை உணர்ந்து கொண்ட குடும்பத்தினர் அவரது சந்யாச தர்மத்தை ஏற்றுக் கொண்டனர். தீர்த்தர், இந்திர சரஸ்வதி, பூரி ஆகிய பெயர்களை சந்யாச நாமத்தில் கொண்டவர்கள் அத்வைத சம்பிரதாயத்தைப் பின்பற்றும் ஆசாரியர்கள் ஆவர். காசிக்கு யாத்திரை மேற்கொண்ட கோவிந்தர், அங்கு சிவராமாநந்த தீர்த்தர் என்பவரைக் குருவாகக் கொண்டார். அவர் முறையாக அவருக்கு சந்யாச ஆஸ்ரம தீக்ஷையைச் செய்து வைக்க அவர் நாராயண தீர்த்தர் என்ற நாமத்தை மேற்கொண்டார். அந்தப் பெயராலேயே உலகெங்கும் அறியப்பட்டார்.
ஒரு சமயம் அவருக்குத் தீராத வயிற்று வலி ஏற்பட்டது. அவரது கனவிலே வெங்கடேசப் பெருமாள் அவரது குரு வடிவில் தோன்றி அவரை பூபதிராஜபுரம் என்ற ஊருக்குச் செல்லுமாறும் அங்கு வயிற்றுவலி தீர்ந்து விடும் என்று கூறி அருள் பாலித்தார். கால்நடையாக யாத்திரையை மேற்கொண்ட அவர் திருவையாறு வந்து பஞ்சநதேஸ்வரரையும் தர்மஸம்வர்த்தனியையும் தரிசித்தார். அங்கு ஒரு வில்வ விருக்ஷத்தின் கீழ் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் நடு காவேரியை அடைந்தார். அங்கு வலி இன்னும் தீவிரமானது. அவரது கனவில் மீண்டும் தோன்றிய வெங்கடேச பெருமாள் அவரிடம், காலையில் அவர் பார்க்கும் முதல் பொருளைப் பின் தொடர்ந்து செல்லுமாறு கூறி அருள் பாலித்தார். காலையில் விழித்த நாராயணதீர்த்தர் கண்களில் ஒரு பன்றி தென்பட்டது. அவர் பன்றியைப் பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தார். பன்றியானது வேகமாக ஓட ஆரம்பித்தது. அது நேராக பூபதிராஜபுரத்தை அடைந்து அங்குள்ள வெங்கடேசர் ஆலயத்தினுள் புகுந்தது, மறைந்தது. வராக அவதாரம் எடுத்த மஹாவிஷ்ணுவே தன்னை ஆட்கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்த நாராயண தீர்த்தர், விழிகளில் நீர் பெருக தியானத்தில் அமர்ந்தார். நெடுநாள் அவரை வாட்டிய வயிற்றுவலி ஒரு கணத்தில் அங்கே தீர்ந்தது. அவரது தியானத்தில் கிருஷ்ண தரிசனமும் ஏராளமான திவ்ய காட்சிகளும் தென்படலாயின. பூபதிராஜபுரம் இப்படி பன்றி என்ற வராகத்தின் வருகையால் வரகூர் என்ற பெயரைப் பெற்றது.
அவர் கண்ட தெய்வீகக் காட்சிகள் மளமளவென்று அவரது நா வழியாக பொங்கிப் பிரவாகமெடுத்து வரலாயின. கிருஷ்ணலீலா தரங்கிணி என்ற அபூர்வ நூல் பிறந்தது. இந்த நூல் ஒரு இசை நூலாகவும் நாட்டியத்திற்கு ஏற்புடையதான ஒரு நாட்டிய நூலாகவும் அமைந்தது. இதை நாராயண தீர்த்தர் தாமே வடிவமைத்து அங்கு அரங்கேற்றியதாக வரலாறு கூறுகிறது. ஒவ்வொரு கீதத்தையும் வெங்கடேசருக்கு அர்ப்பணிக்க அவர் தலை அசைத்து அதை அங்கீகரிக்கவே அனைவரும் பெரு மகிழ்ச்சிக்குள்ளாயினர். இன்னொரு கூற்றின் படி ஆஞ்சநேயர் எவற்றை எல்லாம் அங்கீகரித்தாரோ அவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அவரே நிராகரித்து விட்டதாகவும் ஒரு செய்தி உண்டு.
கிருஷ்ண லீலா தரங்கிணி ஆன்மீகக் கருத்துகளைத் தன்னுள் கொண்ட ஒரு அற்புதமான காவியமாகும். உபநிடதக் கருத்துக்களை ஆங்காங்கே அவர் பதித்துள்ளார். தனது குருவின் பெயரான சிவானந்த தீர்த்தரை அவர் எட்டாவது தரங்கத்தில் அமையும் தேவதேவம் என்ற கீர்த்தனையின் இறுதியில் குறிப்பிடுகிறார். வழக்கமாக கடைசி சரணங்களில் தனது முத்திரையை சிவராம தீர்த்தர் என்றும் நாராயண தீர்த்தர் என்றும் வரநாராயண தீர்த்தர் என்றும் தீரநாராயண தீர்த்தர் என்றும் அவர் பதித்துள்ளார்.

கணபதி துதியைத் தொடர்ந்து தேவகி-வசுதேவர் கல்யாணத்தில் ஆரம்பித்து க்ருஷ்ணர் ருக்மிணியை மணம் முடிப்பது வரை இந்த காவியத்தில் பல காட்சிகளை நாம் காணலாம். சம்ஸ்கிருதத்தில் உயரிய பாண்டித்தியம் கொண்டிருப்பதால் அவரது இந்த காவியத்தில் காவிய ரஸனையைக் காணலாம். சிலேடை உள்ளிட்ட பல அணிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
ஜய ஜய ஸ்வாமிம் ஜய ஜய என்று கம்பீரமாக ஆரம்பிக்கிறது இந்த நூல்.
கிருஷ்ண லீலை என்னும் அலைகள் என்பதே கிருஷ்ண லீலா தரங்கிணி என்பதற்கான பொருளாகும். ஸ்ரீமத் பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தின் சுருக்கமே இது. அதில் ஒன்று முதல் 58ஆம் அத்தியாயம் முடிய உள்ள பகுதிகளை இதில் காணலாம். இதில் வசனமும் உண்டு, கவிதையும் உண்டு, நாடகமும் உண்டு. ஆக இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றையும் தரும் அபூர்வ நூல் இது. இதில் அமைந்துள்ள ஜதிகளும் சொல்கட்டுகளும், இவரே அதில் லயித்து ஆடிப்பாடி நடித்ததை அடிப்படையாகக் கொண்டு இருப்பதைச் சுட்டிக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஜெயதேவர் இயற்றிய கீதகோவிந்தத்தின் பால் பெரிதும் ஈடுபாடு கொண்டவர் நாராயணதீர்த்தர். கீத கோவிந்தத்தில் 12 சர்க்கங்கள் அமைந்துள்ளது போலவே கிருஷ்ணலீலா தரங்கிணியிலும் 12 தரங்கங்கள் அமைந்துள்ளன. யக்ஷகான அடிப்படையில் அமைந்துள்ள இந்த காவிய நூலானது 145 கீர்த்தனைகளையும், 267 செய்யுள்களையும் 30 கத்யங்கள் – அதாவது வசன பகுதிகளையும், 30 தருக்களையும் அதாவது விவரண கீதங்களையும் கொண்டுள்ளது. குறைந்தபக்ஷம் 41 ராகங்களை இதில் காணலாம். த்ரிபுட, ஆதி, ரூபக, சாபு, சம்பா, மத்ய, விளம்ப, ஏகா, அட உள்ளிட்ட தாளங்களை நாராயண தீர்த்தர் பயன்படுத்தினார். சம்ஸ்க்ருத யாப்பிலக்கணத்தில் வல்லுநர் என்பதால் அரிய விருத்த வகைகளான அனுஷ்டுப், ஆர்யா, இந்த்ரவஜ்ரா, புஜங்கப்ரயாதம், சார்தூலவிக்ரிதம், வசந்த திலகா, ப்ரித்வி உள்ளிட்ட பல சந்த வகைகளை – விருத்த வகைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். இந்த சந்த வகை பற்றி யூடியூபில் டிகாராம் கௌசிக் உள்ளிட்ட அறிஞர்கள் விளக்கியுள்ளதைப் பார்த்து மகிழலாம். https://m.youtube.com/watch?v=FTJ617guES4
கடினமான பதங்களைப் பயன்படுத்துவதை தீர்த்தர் தவிர்த்தார். அவருடைய கத்யங்கள் மிக அழகானவை.
கிருஷ்ணலீலா தரங்கிணி மட்டுமல்லாமல் பாரிஜாத அபஹர்ணம், ஹரிபக்தி சுண்டர்னவம் உள்ளிட்ட பதினைந்து நூல்களையும் அவர் படைத்துள்ளார்.
நெடுங்காலம் வரகூரில் இருந்த நாராயண தீர்த்தர் பின்னர் திருப்பூந்துருத்தியை அடைந்தார். அங்கு ஒரு மாமரத்தின் அடியில் அமர்ந்து மாசி மாத சுக்ல பக்ஷ அஷ்டமி திதியில், கார்த்திகை நக்ஷத்திரத்தில் ஜீவ சமாதி எய்தினார்.
நாராயணதீர்த்தரால் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் உள்ளிட்ட மகான்கள் உத்வேகம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது. வரகூரில் இன்றளவும் ஜன்மாஷ்டமி அன்று கிருஷ்ணலீலாதரங்கிணியில் உள்ள கீர்த்தனைகள் இசைக்கப்படுகின்றன. அதே போல அவர் ஜீவ சமாதி எய்திய திருப்பூந்துருத்தியில் தியாகராஜ ஆராதனை போலவே அவரது ஆராதனையும் வெகு விமரிசையாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அவரது கிருஷ்ணலீலாதரங்கிணியை இணையதளத்திலிருந்து சம்ஸ்கிருதம், தெலுங்கு ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தரவிரக்கம் – டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
பஜனை சம்பிரதாயத்தில் ஈடுபாடு கொண்டோர் யூடியூபில் கிருஷ்ண லீலா தரங்கிணியின் ஆனந்த அலைகளைச் செவி மடுத்து இன்புறலாம்.
அவரது க்ஷேமம் குரு கோபால என்ற கீதத்தின் வரிகளை மட்டும் இங்கு பார்ப்போம்:

Raga: Mohanam
Tala:
Triputi
Pallavi (refrain):
क्षेमं कुरु गोपाल संततं मम க்ஷேமம் குரு கோபால சந்ததம் மம
क्षेमं कुरु गोपाल|| க்ஷேமம் குரு கோபால |
Anupallavi
कामं तवपाद-कमल भ्रमरी भवतु காமம் தவபாத-கமல ப்ரமரி பவது
श्रीमन् मम मानसं मधुसूदन (क्षेमं….) ஸ்ரீமன் மம மானஸம் மதுசூதன |
Charanam
अक्षीणकरुणानिधे आनन्दघन प्रक्षीण-दोषवारिधे அக்ஷீணகருணாநிதே ஆனந்ததன ப்ரக்ஷீன-தோஷ வாரிதே
शिक्षितासुरगण रक्षितनिजजन சிக்ஷிதாசுரகண ரக்ஷிதநிஜஜன
कुक्षिस्थितानेक-कोटि-लोक-पालन (क्षेमं….) குக்ஷிஸ்திதானேக கோடி லோக பாலன
प्रह्लाद-भय-विदूर परमयोगि-पावन भुवनाधार ப்ரஹ்லாத பய விதூர பரமயோகி-பாவன புவனாதார
मोहरहित-बोध-मौनि-मानस-हंस மோஹரஹித – போத-மௌனி மானஸ ஹம்ஸ
सारस जित-वैरि-संघात महोदार சாரஸ ஜித வைரி சந்தாத மஹோதர
(क्षेमं….)
अजित-विजय-गोपाल अनन्तलील रञ्जित-पदकमल அஜித விஜய கோபால அனந்தலீல ரஞ்சித பதகமல
विजय-द्वारकापुरी-विमल कमला-लोल விஜய த்வாரகாபுரி விமல கமலா லோல
निजनारायणतीर्थ निर्मलानन्द-बाल (क्षेमं….) நிஜநாராயணதீர்த நிர்மலானனந்த பால (க்ஷேமம்)
நாம சங்கீர்த்தனத்தின் மஹிமையை உணர்த்தி கிருஷ்ண லீலைகளை கிருஷ்ணலீலா தரங்கிணியாக வடித்துத் தந்த நாராயணதீர்த்தரின் பெருமை சூரிய சந்திரர் உள்ளவரை நிலைத்திருக்கும். அவர் காவியம் கிருஷ்ணரின் புகழ் உள்ளவரை ஊழி ஊழி காலம் நிலைத்திருக்கும். நன்றி, வணக்கம்.
*** Tags- நாராயண தீர்த்தர் , க்ஷேமம் குரு கோபால, கிருஷ்ணலீலா தரங்கிணி