மனத்தினுள் கறுப்பு வைத்துப் புகுந்தனன் முத்தநாதன் (Post. 10099)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,099

Date uploaded in London – 16 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மனத்தினுள் கறுப்பு வைத்துப் புகுந்தனன் முத்தநாதன்!

ச.நாகராஜன்

அற்புதமான நாயன்மார்களின் வரலாற்றை அரும் சொற்களால் தமிழ்ப் பாக்களாகப் புனைந்தவர் சேக்கிழார். அதில் மெய்ப்பொருள் நாயனார் புராணம் தமிழகத்தின் இன்றைய அவல நிலையை விளக்குகிறது.

தொண்டை நாட்டுக்கும் சோழநாட்டுக்கும் நடுவில் உள்ள நடு நாட்டை ஆண்டு வந்தார் மெய்ப்பொருளார்.

எப்படி ஆண்டு வந்தார்?

“வேத நன்னெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு

காதலால் ஈசர்க்கு அன்பர் கருந்தறிந்தே ஏவல் செய்வார்.”

வேத நெறி வழுவாமல் ஆகமங்கள் பால் பெரும் பற்றுக் கொண்டு சிவனடியார்களைப் போற்றி அவர்கள் இட்ட வேலைகளைச் செய்து திருக்கோவலூரைத் தலை நகராகக் கொண்டு அறம் பிறழாது ஆண்டு வந்தார் அவர்.

“மங்கையைப் பாகமாக வைத்தவர் மன்னுங் கோயில்

எங்கணும் பூசை நீடி ஏழிசைப் பாடலாடல்

பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து வாழ்வார்

தங்கள் நாயகருக் கன்பர் தாளலால் சார்பொன்றில்லார்”

உமையம்மையை தன் உடலில் ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமானின் திருக்கோயில் அனைத்திலும் நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு ஆகிய அனைத்தையும் குறைவின்றி அவர் நடத்தி வந்தார்.

மெய்ப்பொருளாரை வெல்லக் கருதிய பகைவன் ஒருவனால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

என்ன செய்தான் அவன்? நேருக்கு நேர் நின்று வெல்ல முடியாத அவன் அவரது கோயில் பற்றையும் சிவப் பற்றையும் ஆகம விதிகளின் மீது அவர் கொண்ட பக்தியையும் கண்டான்; சதித் திட்டம் தீட்டினான்.பின்னர் என்ன நடந்தது?

சேக்கிழார் அற்புதமாகக் கூறுகிறார் இப்படி:-

“மெய்யெலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக்

கையினில் படைகரந்த புத்தகக் கவளி ஏந்தி

மைபொதி விளக்கே யென்ன மனத்தினுட் கறுப்பு வைத்துப்

பொய்த்தவ வேடங் கொண்டு புகுந்தனன் முத்த நாதன்”

அற்புதமாக விவரிக்கிறார் இப்படி சேக்கிழார் பெருமான்! வஞ்சகனான அவன் மனத்தினுள் கறுப்பு வைத்துப் புகுந்தனன். அவன் பெயர் முத்த நாதன்.

தத்தன் என்ற அரசனின் மெய்க்காவலனையும் சிவனடியார் என்ற பொய்வேடத்தால் தள்ளி விட்டு அரசனின் அந்தரங்கப் படுக்கை அறைக்குள் நுழைந்தான் அந்த கபட வேஷதாரி.

படுக்கையில் மன்றலங் குழல் மென் சாயல் மாதேவியான அரசியைக் கண்ட பின்னும் முத்தநாதன் வெளியே போகவில்லை.

அரசனும் எழுந்தான். அவனிடம் ஆகப் பெரிய பொய் ஒன்றைச் சொன்னான் முத்தநாதன். உலகில் வேறெங்குமே இல்லாத ஆகமம் என்னிடம் இருக்கிறது என்றான்.

ஆகமம் வழுவாது அறநெறியுடன் கோவில் பூஜைகளை நடத்தும் மெய்ப்பொருளார் மிகவும் மகிழ்ந்து அவனை தவிசின் மேல் – அதாவது மிகப்பெரிய ஆசனத்தில் – அமர்த்தி அருள் செய்க என்றார்.

அந்த நயவஞ்ககப் பாவி புத்தகத்தை எடுத்துத் திறப்பது போல அதன் உள்ளிருந்த வாளை எடுத்து மெய்ப்பொருளார் மீது தான் செய்ய நினைத்த வேலையைச் செய்து முடித்தான்.

அந்த நயவஞ்சக வேலையைக் கூட அருளாளர் சேக்கிழார் பிரானால் கூற முடியவில்லை. “தான் முன் நினைந்த அப்பரிசே செய்ய” என்கிறார்.

மன்னன் வீழ்ந்தான். நயவஞ்சக முத்தநாதனை ஒரு நொடிப்பொழுதில் புரிந்து கொண்ட தத்தன் ஓடி வர அவனை  மெய்ப்பொருளார் தடுக்கிறார்.”அவன் சிவ வேடம் பூண்டதால் அவனை ஒன்றும் செய்யாதே; அவனைப் பத்திரமாக வெளியே கொண்டு விடு” என்றார்.

அரச ஆணை! தத்தன் அப்படியே செய்தான்.

பொய்த்தவ வேடம் கொண்டு புகுந்த முத்தநாதன் தப்பித்தான் அரசனிடமிருந்து.

தெய்வத்திடமிருந்து அவன் தப்ப முடியுமா?

24 பாடல்களில் மெய்ப்பொருள் நாயனார் புராணத்தை வார்த்தை வார்த்தையாக அனுபவித்து பக்தியுடன் அனைவரும் படிக்க வேண்டும்.

இன்று கோவிலில் பொய்த்தவ வேடம் கொண்டு நுழைந்திருக்கும்,  இன்னும் புக நினைக்கும், முத்தநாதன்களை எளிதில் அடையாளம் காணலாம்.

தத்தனாக உள்ளே பாய்ந்து முத்தநாதன்களை மொத்தமாக மொத்தி அனுப்ப முயலலாம்.

கோவில்களையே கொள்ளையிடத் துடிக்கும் இந்த முத்தநாதன்களை மெய்ப்பொருளார் இன்று இருந்தால் மன்னிக்கவே மாட்டார் இல்லையா?

முத்தநாதன்களை இனம் காண வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்!

சிலை திருட்டு, கோவில் நகைத் திருட்டு என்று இன்ன பிற கொள்ளைகளைச் செய்யும் திருடர்களை சிறந்த காவல்துறையான தமிழகக் காவல் துறையிடம் இனம் காட்ட வேண்டுவதும் நம் கடமை; அதே போல சிவ வேடம் தரித்து புதிய ஆகமம் இருப்பதாகக் கூறி உள்ளே வரும் முத்தநாதன்களையும் போலீஸிடம் தான் சொல்ல வேண்டும்!

பக்தர்கள் செய்வார்களா?

***

INDEX

சேக்கிழார் பெருமான், மெய்ப்பொருள் நாயனார் புராணம், ஆகமம் பால் மதிப்புக் கொண்ட அரசனை முத்தநாதன் பொய் வேடம் பூண்டு ஏமாற்றுதல், புதிய ஆகமம் இருப்பதாகக் கூறு கொலை செய்யல், ஆலயம் பாதுகாக்க சிலைத் திருட்டுக்காரர்களை போலீஸிடம் சொல்ல வேண்டும்.

முக்கியக் குறிப்பு:-பகுத்தறிவுகளுக்கு ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். மெய்ப்பொருள் நாயனாரும் பிராமணர் இல்லை; இச்சரிதத்தை அழகுத் தமிழில் சொல்லும் சேக்கிழார் பிரானும் பிராமணர் இல்லை! எதையும் தவறாகத் திசை திருப்பும் பல தமிழக ஊடகங்களுக்காகத் தான் இந்த குறிப்பு

EARLIER POST ON MEYPPORUL NAYANAR

பயங்கரவாதிகள் பற்றி வள்ளுவன், சேக்கிழார் (Post …

https://tamilandvedas.com › பயங்…

13 Dec 2018 — மெய்ப்பொருள் நாயனார் சரிதம் மிகவும் உருக்கமானது. … கொண்டிருந்ததால், அவர் பெயரே மெய்ப் பொருள் நாயனார் என்று ஆயிற்று.

–SUBHAM–

tags – மனத்தினுள் கறுப்பு, முத்தநாதன், சேக்கிழார் , மெய்ப்பொருள் நாயனார்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: