ஆக்ஸிஜன் அதிகமாக உள்ள காற்றை சுவாசிப்போம்! (Post No.10,102)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,102

Date uploaded in London – 17 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹெல்த்கேர் செப்டம்பர் 2021 இதழில் வெளியான கட்டுரை:

ஆக்ஸிஜன் அதிகமாக உள்ள காற்றை சுவாசிப்போம்!

ச.நாகராஜன்

      இது கொரானாக் காலம்! பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த விஷயங்கள் உயிர் காக்கும் விஷயங்கள்! ஆகவே அனைவருக்கும் இதைக் கொண்டு செல்ல வேண்டும்.

உற்றார், உறவினர், நண்பர்கள், ஏனையோர் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சமூக இடைவெளி, கைகளைச் சுத்தம் செய்தல், முக கவசம் அணிதல், வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் கை, கால்களைச் சுத்தம் செய்தல், வீட்டிற்குள் வரும் பொருள்களைச் சற்று வெயில் பட வைத்திருந்து பின்னர் உபயோகப்படுத்தல், கண்டிப்பாக இரண்டு கொரானா தடுப்பூசி போட்டுக் கொள்ளல் ஆகியவை பற்றி ஏராளமான செய்திகளைக் கேட்டு அவற்றை நடைமுறைப் படுத்தி வருகிறோம்.

நல்லது. ஆக்ஸிஜன் இல்லாமல் சுவாசம் திணற, ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை பற்றி நாடெங்கும் பேச்சாக இருக்கிறது.

ஆகவே ஆக்ஸிஜன் சுவாசம் பற்றிச் சிறிது தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாக இருக்கிறது. இந்த ஆக்ஸிஜன் சுவாசம் என்பது மூளை ஆற்றலை வலுப்படுத்தவும், படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் கூட உகந்த ஒன்று என்பதால் இது காலம் காலமாக அறிவியல் அறிஞர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் இதை ‘க்ரியேடிவ் ப்ரெத்’ (Creative Breath) என்கிறோம்.

      சுவாசத்தை ஒழுங்கு படுத்தினால் அது மனதைச் சாந்தப் படுத்துகிறது. தெளிவான மனமே படைப்பாற்றலுக்கான அடிப்படைத் தளம். பிரச்சினைகளைத் தீர்க்கவும் தெளிவான மனம் வேண்டும். இதற்கான பல வழிகளில் முக்கியமான வழி ஆக்ஸிஜனை அதிகப்படுத்தும் சுவாச முறை.

அறிவியல் நோக்கில் மூளையில் உள்ள ஆக்ஸிஜன் அளவு (Levels of Oxygen in the brain) நியூரோ டிரான்ஸ்மிட்டரான செரோடோனின் அளவுடன் (tied to the levels of the neurotransmitter Serotonin) இணைக்கப்படுகிறது.

      இந்த செரோடோனின் அளவை சுவாசத்தைக் கட்டுப்படுத்துவன் மூலம் ஒழுங்கு படுத்தலாம். அதிக அளவில் செரோடோனின் மூளையில் இருந்தால் எரிச்சல், மன அழுத்தம், மன இறுக்கம் உள்ளிட்டவற்றிற்கு நாம் உள்ளாவோம். ஆகவே இந்த செரோடோனின் அளவைக் குறைத்தால் மிகப் பெரிய அளவில் ஓய்வு கிடைக்கும். மூளையின் உள்ளுணர்வு ஆற்றல் கூடும்.நேரிலாச் செயல்கள் அதிக இசைவாகப் பாயும். (Nonlinear activities to flow more smoothly).

யோகா மூலம் பிராணாயாமம் செய்யும் போது ஏற்படும் நன்மைகளைப் பற்றி நன்கு அறிவோம். ஆகவே அது பற்றி மீண்டும் இங்கு குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

      செரோடோனின் அளவில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய, நாம் சுவாசிக்கும் காற்றின் மின் தரத்தைப் (Electrical Quality of the air we breath) பற்றி இங்கு பார்ப்போம்.

காற்றில் உள்ள பாஸிடிவ் அல்லது நெகடிவ் ஐயான்கள் (Positive or negative Ions in the air) தான் காற்றின் மின் தரத்தை அளக்க உதவுகிறது. நெகடிவ் ஐயான்ஸ் என்பது இடம் பெயர்ந்த எலக்ட்ரான்கள் ஆகும். அது அருகிலுள்ள மூலக்கூறுகளுடன் (molecules)  தங்களை இணைத்துக் கொள்பவை. இவை நெகடிவாக சார்ஜ் செய்யப்படுகிறது. இந்த நெகடிவ் தன்மை தான் நம்மை வெகுவாகப் பாதிக்கிறது.

        ஒரு நீர்வீழ்ச்சி அருகே – குற்றால நீர்வீழ்ச்சி என்று எடுத்துக் கொள்வோமே – நீங்கள் நின்று கொண்டிருந்தால், பச்சைப் பசுமையான காட்சிகள் இருக்க ஒரு உள்ளக் கிளர்ச்சி ஊட்டப்பட்ட உணர்வை அடைகிறீர்கள். இங்கு நெகடிவ் ஐயான் உள்ள காற்றின் விளைவுகளை நீங்கள் உணர்கிறீர்கள். சாதாரணமான நாம் வசிக்கும் ஊர்களில் சுத்தக் காற்று உள்ள இடங்களில் ஒரு  கியூபிக் செண்டிமீட்டருக்கு 2000 முதல் 4000 வரை நெகடிவ் ஐயான்கள் உள்ளன.

இதே நெகடிவ் ஐயான்கள் அருமையான நீர்வீழ்ச்சியின் அருகில் ஒரு கியூபிக் செண்டிமீட்டருக்கு ஒரு லட்சம் நெகடிவ் ஐயான்கள் என்ற அளவுக்கு உயர்கிறது. நல்ல தரமான ஒரு நெடுஞ்சாலையில் இது ஒரு கியூபிக் செண்டிமீட்டருக்கு 100 என்ற அளவில் இருக்கிறது.

     நெகடிவ் ஐயான்களை அதிகப்படுத்துவதானது மூளையில் உள்ள ஆல்பா மூளை அலைகளை அதிகப்படுத்தி மூளை வளத்தைக் (amplitude) கூட்டுகிறது.

இது வேறு விதமான உணர்வை உள்ளத்தில் ஏற்படுத்துகிறது.  இந்த ஆல்பா அலைகள் பல்வேறு மூளைப் பகுதிகளுக்கும் பாய்வதன் மூலமாக தெளிவான மன நிலை ஏற்படுகிறது. நல்ல கவனக் குவிப்பு ஏற்படுகிறது. மொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

     ஆகவே கொரானா காலத்தில் மரம் அடர்ந்த வனப் பகுதி, நல்ல பூங்காக்கள், கடற்கரை, நீர்வீழ்ச்சி உள்ள இடங்களில் சென்று ஆக்ஸிஜனை அதிகம் பெறலாம், ஆனால் லாக் டவுன் என்று இருக்கும் போது வீட்டிலேயே மூன்று விதமான பயிற்சிகளை ஆக்ஸிஜன் அளவைக் கூட்ட நாம் பயன்படுத்தலாம்.

  1. ஆழ்ந்து சுவாசத்தை உள்ளிழுத்துப் பின்னர் விடுவது. மூச்சை சில விநாடிகள் நிறுத்துவது மூளையை ஆக்ஸிஜன் மயமாக்குகிறது. தெளிவான மனத்தைத் தருகிறது. ஆல்பா மூளை அலைகளைப் பரவச் செய்கிறது.
  • இரண்டாவது பழைய கால நாசித் துவார யோகா முறையைப் பயன்படுத்துவது. இதை யோகா மாஸ்டரின் மூலமாக நன்கு கற்ற பின்னரே செய்ய வேண்டும். சூரிய நாடி, சந்திர நாடி (இடை, பிங்கலை பற்றி நன்கு அறிவோம்) ஆகிய இரு நாடிகளில் மாறி மாறி சுவாசத்தைச் செலுத்தலே இந்த வழி. இந்த வழியை தினமும் 10 நிமிடங்கள் மட்டும் செய்து வந்தால் அது அதிகப் பயனைத் தரும்.
  • அடுத்த வழி முடிந்த வரை சுவாசத்தை நிறுத்திப் பின்னர் விடுவது. இதை ஏராளமான கண்டுபிடிப்புகளைச் செய்த ஜப்பானிய அறிவியல் அறிஞரான யோஷிரோ நகாமட்ஸ் (Yoshiro Nakamats) பரிந்துரைக்கிறார்; ஏராளமான தனது கண்டுபிடிப்புகளுக்குக் காரணம் தான் நீச்சலின் போது நீரில் அமிழ்ந்து இருந்து மூச்சை நிறுத்திக் கொள்வது தான் என்பது அவரே கூறியுள்ள காரணம்.

ஆக்ஸிஜன் அளவைத் தெரிந்து கொள்ள ஆக்ஸி மீட்டரை வாங்கி வீட்டிலுள்ளோர் அனைவருக்கும் தேவைப்பட்டபோது பார்க்கலாம்.98, 99 என்ற அளவு வந்தால் சரி. ஆனால் 88 என்ற அளவு வந்தால் அது அபாயத்தின் அறிகுறி.85 என்று மீட்டர் அளவைக் காட்டினால் உடனடியாக மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டும். 80 என்று அளவு வந்தால் உடலின் முக்கிய அங்கங்கள் அபாயத்தில் இருக்கின்றன என்று அர்த்தம். இந்த Blood Oxygen level chartஐ ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு வீட்டில் வைத்துக் கொள்வது அவசியம். (ஆக்ஸி மீட்டரின் விலை ஆன் லைன் மூலமாகப் பெற சுமார் ரூ 899/)

ஆக்ஸிஜன் அளவை வீட்டில் அதிகரிக்க ஒரு சுலபமான வழி ஜன்னல் கதவுகளைத் திறந்து வைப்பது தான். ஜன்னல் அடைக்கப்பட்டால் காற்றோட்டம் இன்றி சுவாசக் கோளாறுகள் ஏற்படுவது நிச்சயமாகி விடும். காற்றோட்டமே இல்லாத வீடு என்றால் ஒரு ventஐ நிறுவலாம்.

       மரங்கள் ஆக்ஸிஜனை நல்ல பெரிய அளவில் தருகின்றன. சுற்றுப்புறச் சூழல் மாசுகளை அகற்றுகின்றன. ஆகவே மரம் உள்ள வீடுகள் ஆக்ஸிஜனை அதிக அளவில் காற்றில் தருகின்றன. அமெரிக்க ஆய்வு ஒன்று, ஒவ்வொரு மரமும் 30000 டாலர் அதாவது சுமார் 2100000 ரூபாய் மதிப்புள்ள ஆக்ஸிஜனை உருவாக்குகிறது என்று கூறுகிறது.

வீட்டிற்குள் ஆக்ஸிஜன் அளவைக் கூட்ட இன்னொரு சுலபமான வழி அதற்கென உள்ள செடிகளை வளர்ப்பது தான். 1800 சதுர அடி உள்ள ஒரு வீட்டில் 14 முதல் 17 செடிகளை வைத்தால் அதன் பலன் அபாரமாக இருக்கும். என்ன செடிகளை வைப்பது? மணி ப்ளாண்ட் (Money Plant), சைனீஸ் எவர்க்ரீன்ஸ் (Chinese Evergreens) உள்ளிட்ட பல செடி வகைகளைச் சொல்லலாம். சந்தையில் சுலபமாகக் கிடைப்பவை இவை.

   இதையெல்லாம் மீறி 6 லிட்டர் ஆக்ஸிஜன் கேன் இப்போது சந்தையில்  விற்பனைக்கு வந்து விட்டது. (விலை சுமார் ரூ 455/).

தண்ணீர் கேனைப் பார்த்து விட்டோம், இதோ ஆக்ஸிஜன் கேனையும் பார்க்கப் போகிறோம். காலம் கலி காலம், இல்லை இல்லை, கொரானா காலம் அல்லவா!

மொத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகி வருவது வரவேற்க வேண்டிய ஒன்று தான்!

ஹெல்த்கேர் செப்டம்பர் 2021 இதழில் வெளியான கட்டுரை:

ஹெல்த்கேர் மருத்துவ மாத இதழ் வருட சந்தா ரூ 120/

திருநெல்வேலியிலிருந்து வெளி வருகிறது.

ஆசிரியர் R.C.ராஜா தொலைபேசி எண் 98431 57363

மின்னஞ்சல் முகவரி : editor@tamilhealthcare.com 10, Vaiyapurai nagar, Tirunelveli Town 627006 Tamilnadu, India

கொரானா காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!

***

TAGS-   ஆக்ஸிஜன், மரங்கள், சுவாசிப்போம்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: