
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 10,111
Date uploaded in London – 19 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை செப்டம்பர் 19-ம் தேதி 2021
ஆம் ஆண்டு
தொகுத்து வழங்குபவர் LONDON SWAMINATHAN

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது LONDON SWAMINATHAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXXX
ராமர் கோவிலுக்கு 115 நாடுகளில் இருந்து புனித நீர்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்த 115 நாடுகளில் ஓடும் நதி மற்றும் கடல் நீர் வரவழைக்கப்பட்டுள்ளன. ”உலகமே ஒரு குடும்பம் என்பதை உணர்த்தும் வகையில் இது அமைந்து உள்ளது,” என, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
அயோத்தியில் ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டும் பணி வேகமாக நடக்கிறது. இந்தக் கோவிலின் கட்டுமானப் பணியில் பயன்படுத்துவதற்காக 115 நாடுகளில் ஓடும் நதி மற்றும் கடல் நீர் வரவழைக்கப்பட்டுள்ளது. டில்லியைச் சேர்ந்த முன்னாள் பா.ஜ., – எம்.எல்.ஏ.,வான விஜய் ஜாலி நடத்தும் டில்லி கல்வி வட்டம் என்ற அரசு சாரா அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
சிறிய குடுவைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்த நீர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் டில்லியில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பின் பொதுச் செயலர் சம்பக் ராய் மற்றும் பல நாடுகளின் துாதர்களும் பங்கேற்றனர்.
அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:’ உலகமே ஒரு குடும்பம் என்பதை நம் நாடு மிகவும் உறுதியாக பின்பற்றி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த புதுமையான யோசனையை செயல்படுத்தியுள்ளதற்கு பாராட்டுகள். கோவில் கட்டுமானம் முடிவதற்குள் உலகில் மீதமுள்ள 77 நாடுகளில் இருந்தும் நீரை கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.
பட்டாபிஷேகம் நடந்தபோது உலகின் பல கடல்களில் இருந்து நீர் வரவழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் பிறந்த இடத்தில் அமைய உள்ள கோவிலில் உலகெங்கிலும் இருந்து நீர் வரவழைக்கப்பட்டுள்ளது,” என, சம்பக் ராய் தனது உரையில் கூறினார்

XXXXX
கோயில் நிலத்தை அபகரித்தவர்கள் மீது குண்டர் சட்டம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
நிர்வாக குறைபாடுகளுக்காக மயிலாப்பூர் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம் கோவிலின் 5 அறங்காவலர்களை தற்காலிக பதவிநீக்கம் செய்து அறநிலையத்துறை கடந்த மாதம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, தற்காலிகமாக பதவிநீக்கம் செய்யப்பட்ட அறங்காவலர்களில் ஒருவரான ஆடிட்டர் ஸ்ரீதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அறநிலையத்துறையால் அறங்காவலர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றக் குறிப்பாணை செல்லும். அதேநேரம் மனுதாரருக்கு எதிரான தற்காலிக பதவிநீக்க உத்தரவு மட்டும் ரத்து செய்யப்படுகிறது. மற்ற 4 பேருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பதவிநீக்க உத்தரவுக்கு ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு இடைக்கால தடை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்மையான விசாரணை
இந்நிலையில் அறங்காவலர்களுக்கு எதிராக அறநிலையத்துறை தனது சட்டப்படி விசாரணையை தொடரலாம். அதற்கு ஏதுவாக இணை ஆணையர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். விசாரணை நேர்மையாக, நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து ஆவணங்களையும் அறநிலையத்துறை அதிகாரிகள் பெறலாம்.
இந்த விசாரணையை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக கோவில் அறங்காவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதேசமயம், கோவில் நிலத்தை யாரேனும் சட்டவிரோதமாக அபகரித்து இருந்தால் அவர்கள் தாமாக முன்வந்து அந்த நிலங்களை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிகைகளில் அறநிலையத்துறை விளம்பரம் வெளியிட வேண்டும்.
குண்டர் சட்டம்
மேலும் கோவில் நிலங்களை அபகரிப்பவர்கள், அபகரித்தவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தைப் பயன்படுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிலம், சொத்து, நகைகளை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க அறநிலையத்துறை சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும். அந்த சிறப்பு பிரிவின் தொலைபேசி, செல்பேசி எண்களை அனைத்து கோவில்கள் மற்றும் அறநிலையத்துறை அலுவலகங்களில் பக்தர்களுக்கு தெரியும் விதமாக எழுதி வைத்து விளம்பரப்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

XXXXXX
திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி, பழனி தண்டாயுதபாணி கோயிலை தொடர்ந்து சமயபுரம், திருத்தணி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். ஒவ்வொரு கோயிலிலும் நாள் ஒன்றுக்கு 7500 என மூன்று வேளைக்கு 22,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும், கோயில்களில் பக்தர்களுக்காக ‘அன்னதான திட்டம்’ கடந்த 2002 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
xxxxx
திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்களாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் நியமனம்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு தலைவராக சுப்பாரெட்டி கடந்த ஆகஸ்டு மாதம் நியமிக்கப்பட்டார். அத்துடன் 21 புதிய உறுப்பினர்கள் மற்றும் 3 அலுவல் சார் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத்தலைவர் என்.சீனிவாசன், தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் என்.கண்ணைய்யா மற்றும் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ உத்தரவை ஆந்திர மாநில அரசின் வருவாய் மற்றும் அறநிலையத்துறை வெளியிட்டு உள்ளது.
xxxx
தமிழகத்திலேயே மிக உயரமானது: 37 அடி ஆஞ்சநேயர் சிலை ஸ்ரீரங்கத்தில் நிறுவப்படுகிறது

தமிழகத்தில் சென்னை நங்கநல்லூரில் 33 அடி உயரத்திலும், நாமக்கல்லில் 18 அடி உயரத்திலும் ஆஞ்சநேயர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. தற்போது அதைவிட உயரமாக 37 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரை பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதுகுறித்து ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் வாசுதேவன் கூறியதாவது:-
ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் முதலில் 33 அடி உயர ஆஞ்சநேயர் சிலைதான் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இதற்காக நாமக்கல் பகுதியில் உள்ள குவாரியில் கல் தேடியபோது, 105 டன் எடையுள்ள 40 அடி உயரத்தில் ஒரே கல் கிடைத்தவுடன் 37 அடி உயர சிலை அமைப்பது என முடிவெடுத்தோம். பின்னர் அந்த கல்லில் ஆஞ்சநேயர் சிலை கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் வடிவமைக்கப்பட்ட இந்த 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை ராட்சத லாரி மூலம் சாலை வழியாக ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள கொள்ளிடக்கரைக்கு கொண்டு வரப்பட்டது. ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான பணிகள் இந்த ஆண்டு மார்கழி மாதத்தில் வரும் அனுமன் ஜெயந்திக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ஆஞ்சநேயர் சிலையுடன், இங்கு சிறிய அளவில் கோவிலும் அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.
Xxxx
சீதையாக நடிக்கும் கங்கனா ரணாவத்

ராமாயணத்தை தழுவி ஏற்கனவே பல படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் வந்துள்ளன. தற்போது மீண்டும் அதிக பொருட்செலவில் ராமாயணம் கதை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படமாக உள்ளது.
இதில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமான நடிகையை தேர்வு செய்யும் பணி நடந்தது. பிரபல இந்தி நடிகை கரீனா கபூரை அணுகி பேச்சுவார்த்தை நடத்தினர். சீதையாக நடிக்க கரீனா கபூர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியானது. சீதை வேடத்துக்கு அதிக சம்பளம் கேட்டு மத நம்பிக்கையை கரீனா கொச்சைப்படுத்தி விட்டதாக அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின.
தற்போது சீதை வேடத்துக்கு கங்கனா ரணாவத்தை தேர்வு செய்துள்ளனர். இது குறித்து கங்கனா கூறும்போது, “திறமையான கலைஞர்களை கொண்ட குழுவினருடன் இணைந்து சீதை, ராமரின் ஆசீர்வாதங்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெய் ஶ்ரீராம்” என்று கூறியுள்ளார்.
xxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் LONDON SWAMINATHAN

நன்றி, வணக்கம்
tags – உலக, இந்து சமய, செய்தி மடல், 19-9-2021,