

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 10,113
Date uploaded in London – – 20 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 19-9-2021 அன்று ஒளிபரப்பான உரை!
ஸ்ரீ தத்தாத்ரேயர் ஆலயம், கங்காபூர்!
ஜடாதரம் பாண்டுரங்கம் சூல ஹஸ்தம் க்ருபாநிதிம் | ஸர்வ ரோக ஹரம் தேவம் தத்தாத்ரேயமஹம் பஜே ||
ஸ்ரீ நாரத மஹரிஷிக்கு நமஸ்காரம்!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது கர்நாடக மாநிலத்தில் அப்ஸல்பூர் தாலுகாவில், உள்ள கங்காபூரில், பீமா நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ தத்தாத்ரேயர் ஆலயம், ஆகும்.
இது சென்னை-மும்பை ரயில் மார்க்கத்தில் ஷோலாபூர் நிலையத்திற்கு அடுத்திருக்கிறது. இங்கு தான் பீமாநதியும் அமர்ஜா நதியும் சங்கமம் ஆகின்றன. கங்காபூரில் தான் தத்தாத்ரேயர் பெரும் ஞானநிலையை அடையப் பெற்றதாகக் கூறப்படுகிறது, இங்குள்ள தத்தாத்ரேயர் ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஊரின் நடுவே கோவில் உள்ளது. தத்தாத்ரேயரின் இரண்டாவது அவதாரமாகக் கருதப்படும், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி தத்தா ஸ்வாமிகளின் ஆசிரமும் இங்கு உள்ளது.
சித்த சுவாதீனம் இல்லாதவர்களும், மன நோய்கள் கொண்டவர்களும், பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களும் இங்கு வந்து தத்தாத்ரேயரை தரிசித்தால் அவர்களது நோய்கள் தீர்ந்து ஆரோக்கிய நிலையை அடைவர் என்பது பக்தர்களின் அனுபவம். இரு புறமும் கடைகள் அமைந்திருக்க, கற்தளம் அமைந்துள்ள அகன்ற சாலை கோவிலுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. 40 அடி உயரமுள்ள அழகிய கோபுரம் சிற்ப வேலைப்பாடுடன் அமைந்துள்ளது. அதன் முன்னர் வழிபடுவதற்கான ஒரு மண்டபம் உள்ளது. நடுப்பகலில் ஆரத்தியும், சந்தியாகால பூஜையும் ஆரத்தியும் உண்டு. உடல்நலம் இல்லாதவர்கள் சந்நிதியின் முன் உட்கார வைக்கப்படுவர். அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால் ஆடுவர், பாடுவர், ஓடுவர், குட்டிக்கரணம் அடிப்பர், கூச்சலிடுவர், கும்மாளம் போடுவர். ஆனால் யாரும் அவர்களைத் தடுப்பதில்லை. மணி அடித்து ஆரத்தி காண்பிக்கப்படும். அவர்கள் அமைதியாக இருப்பர். ஸ்ரீ ஸ்வாமிகளின் படத்திற்கு முன்னர் அவர் அணிந்திருந்த பாதுகைகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் அதை வணங்கி வழிபடுகின்றனர்.
கங்காபூரைப் பற்றிய மிகப் பழம் பெரும் பெருமை கொண்ட புராண வரலாறு ஒன்று உண்டு. திரேதா யுகத்தின் ஆரம்பத்தில் மிகுந்த தவ வலிமை கொண்ட மஹரிஷி அத்திரி முனிவருக்கு தர்மபத்தினியாக கற்புக்கரசியான அனுசுயா தேவி அமைந்து இல்லற தர்மம் வழுவாது சிறப்புற வாழ்ந்து வந்தாள். வந்த விருந்தினர் யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்று உபசரித்து உணவு அளிப்பாள். இது அவளது விரதம்.
ஒரு சமயம் முப்பெரும் தேவியரும் தாங்களே கற்பில் சிறந்தவர்கள் என்று கர்வம் கொண்டனர். அந்த கர்வத்தைப் போக்கவும், அனுசுயாவின் பெருமையை உலகம் அறியச் செய்யவும், அவளை சோதிப்பது போல பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் மூர்த்திகளும் சாதுக்களாக வேடம் பூண்டு அவளது இல்லத்திற்கு வந்தனர். வந்த சாதுக்களைக் கண்டு மன மகிழ்ச்சி கொண்டு அவர்களை வரவேற்ற அனுசுயா அவர்களுக்கு உணவு தயாரிக்க ஆயத்தமானாள். அவர்களோ அவளைத் தடுத்து, எங்களுக்கு வேண்டியதைத் தர முடியுமா என்று கேட்டனர். தருகிறேன் என்றாள் அனுசுயா தேவி. தாய் தன் குழந்தைக்குக் கொடுக்கும் பால் மட்டுமே எங்களுக்கு வேண்டும், வேறொன்றும் வேண்டாம் என்றனர்
மூன்று மூர்த்திகளும். ஒரு க்ஷணத்தில் வந்தது யார் என்பதைப் புரிந்து கொண்டாள் தேவி. உடனே தன் கற்பின் தவ வலிமையால் அந்த மூவரையும் பிறந்த குழந்தைகளாக்கினாள். பாலைச் சுரக்கச் செய்து அவர்களுக்குக் கொடுத்தாள். மாலையில் வீடு திரும்பிய அத்திரி முனிவர் நடந்ததை அறிந்தார். இவர்கள் யார் தெரியுமா என்று கேட்டார். ‘தெரியும், ஸ்வாமி’ என்று பதில் அளித்தார் அனுசுயா. அத்திரி அந்த மூன்று குழந்தைகளையும் ஒரு சேர அணைக்க அவர்கள், ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகள் கொண்ட ஒரு குழந்தையாக மாறினர். ஆறு கரங்களில் பிரம்மாவைக் குறிக்கும் கமண்டலம்-ஜபமாலை ஆகியவற்றை இரு கரங்களிலும், சிவபிரானைக் குறிக்கும் திரிசூலம்- உடுக்கை ஆகியவற்றை இரு கரங்களிலும், விஷ்ணுவைக் குறிக்கும் சங்கு-சக்கரம் ஆகியவற்றை இரு கரங்களிலும் அவர் கொண்டுள்ளார்.
அந்தக் குழந்தைக்கு தத்தாத்ரேயர் எனப் பெயர் இடப்பட்டது. தங்கள் பதிகளைக் காணோமே என்று கலவரப்பட்ட முப்பெரும் தேவியரும் நடந்ததை அறிந்து அத்திரி மஹரிஷியின் ஆசிரமத்திற்கு ஓடோடி வந்தனர். தங்கள் கர்வம் நீங்கப் பெற்று நடந்ததை மறந்து தங்கள் கணவன்மாரைத் திருப்பிக் கொடுத்து அருள் பாலிக்குமாறு முனிவரை வேண்டினர். முனிவரும் அந்த மூன்று குழந்தைகளை மூன்று மூர்த்திகளாக ஆக்கி தேவியரிடம் திருப்பித் தந்ததோடு குழந்தை இல்லாத எங்களுக்கு இந்தக் குழந்தை இங்கேயே இருக்கட்டும் என்று கூற மும்மூர்த்திகளின் சொரூபமான தத்தாத்ரேயர் அங்கேயே வளரலானார். மிகப் பெரும் தவ சிரேஷ்டரான தத்தாத்ரேயர் பாரதமெங்கும் யாத்திரை செய்தார். பல இடங்களிலும் தத்தாத்ரேயர் ஆஸ்ரமம் உள்ளது. சுசீந்திரம், கர்நாடகாவில் உள்ள கங்காபுரம் உள்ளிட்ட தலங்களைக் குறிப்பாகச் சொல்லலாம். தத்தாத்ரேயரின் அருகில் இருப்பவை நான்கு நாய்கள். அவை நான்கு வேதங்களைக் குறிக்கும். அவர் பின்புறம் இருக்கும் பசு, பூமி ஆகியன படைப்புத் தொழிலைக் குறிக்கும்.
தத்தாத்ரேயர் சிரஞ்சீவிகளுள் ஒருவர். ஆகவே அவர் எப்போதும் பாரதத்தில் இருப்பதாக பக்தர்கள் உணர்ந்து அவரைப் போற்றி வணங்குகின்றனர்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் மஹரிஷி தத்தாத்ரேயர் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
ஸ்ரீ நாரத மஹரிஷியின் அருள் வாக்கு இது:
ஸத்ருநாசகரம் ஸ்தோத்ரம் ஞானவிஞ்ஞான தாயகம் |
சர்வ பாபம் சமம் யாதி தத்தாத்ரேய நமோஸ்துதே ||
நன்றி வணக்கம்!
***
தத்தாத்ரேய ஸ்தோத்ரம் : https://m.youtube.com/watch?v=Pb8vqMYjc0g என்ற தொடுப்பில் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு மகிழலாம்.
tags- தத்தாத்ரேயர், கங்காபூர்
