
WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,121
Date uploaded in London – 22 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 20-9-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.
ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்! – 2
திருவண்ணாமலையில் அவர் நிரந்தரமாக ஓரிடத்திலும் வசிக்கவில்லை. இங்கும் அங்கும் திரிவார். எங்கு உணவு கிடைக்கிறதோ எது கிடைக்கிறதோ அதை உண்ணுவார். இரவில் உறங்குவதுமில்லை.
ஸ்வாமிஜியின் உறவினரான சூரிய நாராயண சாஸ்திரி என்பவர் அவரைத் தேடி வந்த போது கோவிலுக்கு அருகே உள்ள ரதத்தின் அருகில் ஏழு கழுதைகளின் அருகில் அவர் இருந்தார். ஒவ்வொன்றையும் அவர் தொட்டு தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். இதைக் கண்டு திடுக்கிட்ட சாஸ்திரியார் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்ட போது அவர்கள் ஏழு ரிஷிகள் என்றார். அகஸ்தியர், வசிஷ்டர் என ஏழு பெயரையும் வரிசையாகக் கூறினார். அந்த ரிஷிகளை அவர் வலம் வந்து வணங்கினார். இது தான் திருவண்ணாமலையில் அவரைப் பற்றி நடந்த முதல் சம்பவம்.
திருவண்ணாமலை மக்கள் அவரைச் சரியாகப் புரிந்து கொண்டனர். அவர் ஒரு பெரும் மகான் என்பதை அவர்கள் உணர்ந்ததோடு தங்கள் ஊரில் அருணாசலேஸ்வரர், ரமண மஹரிஷி, சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆக மூவர் இருப்பதாகப் பெருமையுடன் சொல்ல ஆரம்பித்தனர். ரமணரும் வேடிக்கையாக திருவண்ணாமலையில் மூன்று பைத்தியங்கள் இருப்பதாகவும் அவர்கள் ரமணர், சேஷாத்ரி, அருணாசலேஸ்வரர் என்றும் கூற்வது வழக்கம்.
சேஷாத்ரி ஸ்வாமிகள் சில சமயம் முன்னால் நடப்பார்; உடனே பின்னால் நடப்பார். அங்குள்ள உணவு விடுதிகள் அல்லது துணிக்கடை அல்லது இனிப்புகள் விற்கும் கடை உள்ளே சென்று சில பொருள்களை எடுத்து அங்கும் இங்கும் வீசுவார். கல்லா பெட்டியில் உட்கார்ந்து நாணயங்களை தொடர் வரிசையாக வைப்பார். இப்படி அவர் செய்தால் அந்தக் கடைக்காரர்களுக்கு மஹா சந்தோஷம் ஏற்படும். அன்றிலிருந்து அவர்கள் வாழ்வில் ஒரு அமோகமான நல்ல திருப்பம் ஏற்படும்.
பொதுவாக பெரும் சித்தர்கள், யோகிகள், மகான்கள் யாரையும் அண்டி உணவை இரந்து யாசிப்பதில்லை. இதை அற்புதமாக ஒரு பாடல் கூறுகிறது இப்படி:
பாத்திரத்தின் மிக்க பாத்திர மெய்ஞ்ஞானி
படர்ந்திரவான் அவன் இருக்கும் பாங்கர் அண்மி
ஈந்திடுக: அவன் ஒன்றும் வேண்டானேனும்
ஈகுநர்க்குப் பயன் கருதி ஏற்றுக் கொள்வான்.
‘மெய்ஞ்ஞானிக்கு ஒன்றும் தேவை இல்லை. அவன் இரந்து யாசிக்க மாட்டான். ஆனால் ஒருவர் கொடுத்தால் அதை அவன் ஏற்றுக் கொள்வான் ; ஏனெனில் அப்படிக் கொடுத்தவர்க்கு ஏற்படும் பயனைக் கருதி’ என்பது இதன் பொருள்.
ஒருமுறை, தான் தொலைத்து விட்ட பத்தாயிரம் ரூபாய் பணத்தை ஸ்வாமியின் அருளால் பெற்ற ஒருவர் அவருக்கு, அழகிய மெத்தை தலையணைகளைத் தந்தார். அதை ஸ்வாமிகளும் ஏற்றார். சில சமயம் அதில் வந்து உட்காருவார். கம்பத்து இளையனார் கோவிலில் இருந்த அந்த படுக்கை மீது அனைத்தையும் அவர் வைப்பார். அதை யாரும் மடிப்பதே இல்லை. நாளடைவில் அதில் அழுக்கும் சேர்ந்தது. ஊரிலுள்ள மக்கள் இளையனாரை தரிசித்த பின்னர் அந்தப் படுக்கை அருகில் வந்து அதற்கும் நமஸ்காரம் செய்வர். அந்தப் படுக்கையில் அப்பி இருக்கும் எதையேனும் எடுத்து நோயாளிகளுக்கு நோயாளிகளின் உறவினர் கொடுப்பது வழக்கம்; உடனே நோய் தீர்வதும் வழக்கமானது. 1921 முதல் 1928 வரை இந்தப் படுக்கை அதே இடத்தில் இருந்தது.
ரமண மஹரிஷியுடனான அவரது பழக்கம் அலாதியான ஒன்று.ஏராளமான சம்பவங்கள் பக்தர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சிலவற்றைப் பார்க்கலாம். முதன் முதலில் பாதாள லிங்க அறையில் ரமணரைப் பார்த்து சேஷாத்ரி ஸ்வாமிகள் அவரை ஒரு பெரும் மகான் என்று அறிந்து கொண்டார். ரமண மஹரிஷியை அவர் பலமுறை சந்திப்பது வழக்கமானது.
1925 ஜனவரியில் ரமண மஹரிஷிக்கு பக்தர்கள் ஒரு சோபாவை காணிக்கையாக்கினர். அதில் அவர் அமர வேண்டும் என்ற வேண்டுகோளையும் பக்தர்கள் விடுத்தனர். பகவான், ‘எனக்குத் தான் இது என்று எனக்குத் தெரியாதா? நான் என்ன சேஷாத்ரி போல உடலை மறந்தவனா?’ என்றார்.
சேஷாத்ரி எப்படிப்பட்ட மகான் என்பதை அவர் உலகிற்குப் பல முறை இப்படி உணர்த்தியுள்ளார்.
லக்ஷ்மி அம்மாள் என்ற ஒரு பக்தைக்கு ரமணரை தரிசிக்க வேண்டுமென்று ஆசை.ஐந்து, ஆறு நாட்கள் கழிந்தன. சேஷாத்ரி ஸ்வாமிகளை அவருக்குத் தெரியாது. அவர் சேஷாத்ரி ஸ்வாமிகள் அருகில் நின்று கொண்டு ரமண மஹரிஷியை தியானம் செய்து கொண்டிருந்தார். அப்போது சேஷாத்ரி ஸ்வாமிகள் அவரை நோக்கி, “அங்கே இருந்தால் என்ன, இங்கே இருந்தால் என்ன. இரண்டும் ஒண்ணு தான்” என்று கூறினார். இதன் மூலம் இருவரும் ஒருவரே என்பதை அவர் உணர்த்தினார்.
முத்தியாலு செட்டியார் என்பவர் ஸ்வாமிஜியின் பரம பக்தர். அவரது மளிகைக் கடையிலிருந்து ஒரு நெய் டின்னை எடுத்து அப்படியே கொட்டினார் ஸ்வாமிகள். அன்று தனக்கு வரவே வராது என்று செட்டியார் நினைத்த வர வேண்டிய பாக்கி பணம் 750ரூபாய் வந்தது. இன்னொரு முறை அவரது துணிக்கடையிலிருந்து ஜரிகை போடப்பட்ட துணியை எடுத்து அதை நூறு துண்டுகளாகக் கிழித்தார் ஸ்வாமிகள். அதை எச்சம்மாள் என்ற பக்தையின் எருமைக் கன்றின் கொம்பு, வால், கால் ஆகிய இடங்களில் கட்டினார். அன்றே செட்டியாருக்கு 2000 ரூபாய் லாபம் கிடைத்தது.
இப்படி நூற்றுக் கணக்கில் ஏராளமான சம்பவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

***
to be continued…………………………………….
tags- சேஷாத்ரி ஸ்வாமிகள் – 2,