
WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,124
Date uploaded in London – 23 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 20-9-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை you tube யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.
ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்! – 3
ஒருமுறை பகவான் ரமணர் திருப்புகழ் ஸ்வாமி என்ற முருகபக்தரை கீழே போகுமாறு உத்தரவிட்டார். எதற்கு இப்படி ஒரு உத்தரவு என்று கலங்கிய அவர் மலையிலிருந்து கீழே வந்த போது அவரை சேஷாத்ரி ஸ்வாமிகள் சந்தித்து தன் அருளை அவர் மீது பொழிந்தார். “ திருப்புகழ் தான் உனது மந்திரம். அதை விடாதே” என்று கூறிய அவர் வள்ளிமலைக்குப் போகுமாறும் திருப்புகழ் சாமியிடம் கூறினார். அந்த முருக பக்தர் தான் வள்ளிமலை ஸ்வாமிகள் என்று உலகினரால் பின்னால் அறியப்பட்டவர். ஏராளமான பக்தர்களுக்கு அவர்களது எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்னாலேயே தெரிவிப்பார் ஸ்வாமிகள். அந்த சம்பவங்கள் நடக்கும் போது அவர்கள் ஸ்வாமிகளின் ஞானதிருஷ்டியைப் பற்றிக் கூறி மகிழ்வர்.
ஸ்வாமிகளுக்கு சூக்ஷ்ம திருஷ்டியும் உண்டு. ஒரு நாள் திருவண்ணாமலையில் காலை ஆறு மணிக்கு வானத்தைப் பார்த்து ஸ்வாமிகள், “அதோ விட்டோபா ஸ்வாமிகள் போகிறார், ஆஹா, ஆஹா” என்றார். திருவண்ணாமலையிலிருந்து பத்து மைல் தொலைவில் இருந்த போளூரில் இருந்து வந்தார் விட்டோபா ஸ்வாமிகள். அன்று பின்னால் திருவண்ணாமலைக்கு வந்த தந்தி அவரது மறைவைத் தெரிவித்தது.
ஸ்வாமிகளுக்கு பல சித்திகள் உண்டு. அவற்றில் முக்கியமானது காய வியூஹம் என்பது. அதாவது ஒரே சமயத்தில் பல உடல்களுடன் பல இடங்களில் காட்சி தருவது. T.K. சுந்தரேச ஐயர், சாமா ராவ், வெங்கடராம ஐயர் உள்ளிட்ட பலர் ஒரு நாள் மாலை 4.45 என்று ஒரு நேரத்தைத் தீர்மானித்துக் கொண்டனர். அதே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்த அவர்கள் ஸ்வாமிகளைத் தரிசித்தனர்.
ஸ்வாமிகள் அம்பிகையின் உருவம் என பக்தர்கள் மதித்து அதை அப்படியே அனுபவத்திலும் கண்டனர். ஒரு முறை அம்பிகையின் தேர், தேரோட்ட தினத்தன்று நகரவே இல்லை. திடீரென்று அங்கு தோன்றிய ஸ்வாமிகள் தேர் சக்கரத்தை இரண்டு மூன்று இடங்களில் தொட்டு விட்டு கயிறைப் பிடித்தார். பக்தர்களும் கயிறைப் பிடித்து இழுக்கவே நகராத தேர் நகர்ந்தது. பக்தர்கள் தேவியே தன் தேரை ஓடச் செய்தாள் என்று கூறி மகிழ்ந்தனர்.
ஸ்வாமிகள் அவ்வப்பொழுது தகுதி வாய்ந்த பக்குவ நிலையில் உள்ள பக்தர்களுக்குத் தகுந்த உபதேசங்களைக் கூறி அருள்வது வழக்கம். ராம ராம மஹாபாஹோ என்று ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தில் வரும் இதைச் சொன்னால் ஒருவனுக்கு மோக்ஷம் கிட்டும் என்பது ஸ்வாமிகளின் அருள்வாக்கு. சுந்தர காண்டத்தைப் படித்தால் ஞானம் பெறலாம் என்பது அவர் அருள் வாக்கு. ராம நாமத்தை ஒருவன் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும், அருணாசல என்று சொல்லிக் கொண்டே இருந்தால் மோக்ஷம் கிட்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான உபதேச உரைகளை அவர் அருளியிருக்கிறார்.
இப்படி நாற்பது ஆண்டுகள் திருவண்ணாமலையிலேயே இருந்து ஆயிரக்கணக்கானோருக்கு அருள் பாலித்து வந்த ஸ்வாமிகள் தனது உடலை உகுக்க திருவுளம் கொண்டார். 1928ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஒரு நாள் ஸ்வாமிகள் சுப்பலக்ஷ்மியம்மாள் என்ற பக்தையிடம் தன் இறுதி வரப் போவதை சூசகமாகத் தெரிவித்தார். ஒரு நாள் ஜுரத்தால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 40 நாட்கள் எந்த வித ஆகாரமும் எடுக்காமல் இருந்தார். 4-1-1929 அன்று மார்கழி மாதம் 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று, ஸ்வாமிகள் பிறந்த போது கிரகங்கள் எந்த நிலையில் இருந்தனவோ அதே நிலையில் இருந்த சமயம், ஸ்வாமிகள் விதேக கைவல்யம் அடைந்தார்; உடலை உகுத்தார். அவரது உடல் தக்க முறையில் சமாதியில் வைக்கப்படும் போது ரமண மஹரிஷி அந்த இடத்திற்கு வந்தார். அவர் சமாதி ரமணாசிரமம் இருக்கும் அதே செங்கம் சாலையில் ரமணாசிரமத்திற்கு மிக அருகில் உள்ளது.
பக்தர்கள் இன்றும் ஸ்வாமிகளின் அதிஷ்டானத்திற்கு வருகை புரிந்து அவர் அருளைப் பெற்று வருகின்றனர்.
ஸ்வாமிகளின் திவ்ய சரிதத்தை குழுமணி ஸ்ரீ நாராயண சாஸ்திரிகள் விரிவாக அழகுற எழுதியுள்ளார். இதன் ஆங்கில மொழியாக்கத்தை ஸ்ரீ S.A. சுப்ரமணியன் செய்துள்ளார். இது பாரதீய வித்யா பவன் வெளியீடாக வந்துள்ளது. இந்த சரிதத்தில் 314 பேர்கள் தங்கள் அனுபவங்களையும் ஸ்வாமிகள் பற்றிய தகவல்களையும் தந்துள்ளனர்.
திருவண்ணாமலை கண்ட மகான்களில் மிகவும் அபூர்வமான சித்தராக விளங்கிய ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் சரிதத்தை ஆங்கிலத்தில் படிக்க அந்த நூலை அன்பர்கள் இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் பாதகமலங்களுக்கு
நமஸ்காரம்.நன்றி
வணக்கம்!
Miracles of Sri Seshadri Swamikal | Tamil and Vedas
https://tamilandvedas.com › 2014/06/20 › miracles-of-s…
20 Jun 2014 — Ramana is known to all spiritual aspirants around the world. But Seshadri Swami is not known to many outside Tamil Nadu. His life was full of …
TAGS — சேஷாத்ரி ஸ்வாமிகள் –3

—SUBHAM —-