அழியாத மா கவிதை -3, ரிக் வேதத்தில் அற்புதக் கவிதை -3 (Post No.10,130)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,130

Date uploaded in London – 24 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

விசுவாமித்திர முனிவர் நதிகளுடன் உரையாடல்

ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்திலுள்ள 33-வது துதியின் 13 மந்திரங்களில் கடந்த இரண்டு நாட்களில் எட்டு மந்திரங்களில் கண்ட அற்புத விஷயங்களைப் பார்த்தோம். இதோ கடைசி 5 மந்திரங்களின் சாரம்:

3-33-9

விசுவாமித்திரர் நதிகளிடம் சொல்கிறார் :

சகோதரிகளான நதிகளே !

உங்களைப் போற்றிப் பாடும் என் துதியை அன்போடு செவி மடுப்பீர்களாகுக !

நான் தொலை தூரத்திலிருந்து வண்டியோடு வந்திருக்கிறேன். நீங்கள் தாழ்ந்து ஓடுங்கள் ; நான் உங்களைக் கடந்து செல்ல உதவுங்கள் ; நீங்கள் என் வண்டிச் சக்கரத்தின் அச்சுக்கும் கீழே இருக்குமாறு செல்லுங்கள் .

எனது வியாக்கியானம்

சோமம் என்னும் அற்புதக் குளிகையைப் பறிப்பதற்காக முனிவர் மேற்கிலுள்ள மலைகளை நோக்கிச் செல்கிறார் . இதை சாயனர், யாஸ்கர் போன்றோர் எழுதி இருப்பதை கிரிப்பித் Ralph T H Griffith என்பவர் மறைத்ததை நேற்று கண்டோம். இப்போது அந்த நதிகளை சகோதரிகளே! என்று விளிக்கிறார் . உலகில் நதிகளை இன்றுவரை தாயாகவும் சகோதரியாகவும் போற்றி வணங் கும் ஒரே சமுதாயம் இந்துதான். விசுவாமித்திரரே மூன்றாவது மந்திரத்தில் நதியைத்  ‘தாய்’ என்று அழைக்கிறார் . நான் வண்டியில் வந்திருக்கிறேன் என்பது குறிப்பிடத் தக்கது. அந்தக் காலத்தில் தொலை தூரத்தைக் கடக்கும் அருமையான சாலை  வசதிகள் இருந்தன . சக்கரத்தின் பயன்பாடு ரிக் வேதத்தில் இருப்பது போல உலகில் வேறு எந்த பழைய இலக்கியத்திலும் இல்லை . தேரின் உறுப்புகள், பகுதிகள் பற்றி 60 சொற்கள் வேத கால இலக்கியத்தில் உள்ளன.

வாழ்க்கை என்னும் வண்டி, சுகமாகப் பயணம் செய்ய வேண்டுமானால், இரண்டு சக்கரங்களும் வலுவாக, சம நிலையில் இருக்க வேண்டும். இந்த இரண்டு சக்கர உவமையும் அதை இணைக்கும் கட்டையையும் ரிக் வேதப் புலவர்கள் உவமையாகப் பயன்படுத்துகின்றனர். அதைத் திருவள்ளுவரும் சொல்கிறார். வள்ளுவர் பயன்படுத்தும் ‘அச்சு’ Axis என்பதே ரிக் வேத சம்ஸ்கிருதத் சொல்!

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து – திருக்குறள் 667

XXX

3-33-10

புலவனே !/ கவிஞனே

தேரோடும் வண்டியோடும் தொலைவிலிருந்து வந்திருக்கிறாய் என்று நீ சொன்னது எங்கள் காதில் விழுந்தது. நாங்கள் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டும் தாயைப் போலும், காதலைனக் கட்டித் தழுவும் இளம் பெண்னைப் போலவும் தாழ்ந்து பணிவோம்; உன்னை வணங் குவோம்

எனது வியாக்கியானம்:

என்ன அற்புதமான பணிவு; என்ன அற்புதமான உவமைகள்!

விசுவாமித்திரன், நதிகளை சகோதரி என்றான். நதிகள் உடனே தாய் போலவும் அன்புள்ள காதலி போலவும் பணிவோம் என்கின்றன. இந்த தாய் உவமை, மற்றும் தாயின் முந்தானையில் டி ஒளியும் குழந்தையின் உவமை, காதலன்-காதலி கட்டித் தழுவும் உவமை, கணவன்- மனைவி இன்பம் துய்க்கும் செக்சி sexy உவமை ஆகி யன ரிக் வேதம் முழுதும் விரவிக் கிடக்கின்றன. இன்பமயமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் வேதகால இந்துக்கள். ‘உலகு இன்பக் கேணி என்று நல் பல் வேதம் உரைத்த’ –என்பது பாரதியாரின் வாக்கு. மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்; வைகலும் எண்ணில் யாதும் குறையிலை என்ற ஞான சம்பந்தரின் வாக்கினை வேத காலத்திற்குச் சூட்டலாம்.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

XXX

3-33-11

விசுவாமித்திரனின் பதில்:

நதிகளே ! நீங்கள் என்னைக் கடக்கச் செய்தீர்கள்; அதுபோல பரத குல மக்களும், வீரர்களும்  கடந்து செல்லுவார்கள் . பின்னர் இந்திரனால் நிரப்பப்படும் நீங்கள் பிரவாகம் எடுத்து ஓடுங்கள் ; முன் போலவே பெருகுக ; வந்தனத்துக்குரிய நான் உங்கள் நல்லதரவை நாடுகிறேன்

எனது வியாக்கியானம்

நதிகள் போன்ற இயற்கைக் சக்திகள் அனைத்தும் விசுவாமித்திரன் போன்ற தவ வலிமை உடையோருக்குக் கீழ்ப்படியும். ஆதி சங்கரர் கோதாவரி வெள்ளத்ததைக் கட்டுப்படுத்தினார் . வாசுதேவனுக்கு கிருஷ்ணன் என்னும் குழந்தையை எடுத்துச் செல்வதற்காக யமுனை நதி வழிவிட்டது . இதை பைபிள்கார்களும் காப்பி அடித்து மோசஸுக்கு செங்கடல் வழிவிட்டதாக எழுதிவைத்துள்ளனர். ஆகையால் இதை தண்ணீர் அற்புதங்களில் சேர்க்க Water Miracles வேண்டும். அப்படி அற்புத விஷயமாக இல்லாவிடில் இது ரிக் வேதத்தில் இடம்பெறாது..

வண்ணகத்துக்குரிய , வந்தனத்துக்குரிய என்ற சொற்கள் சாதாரண ஆள் இல்லை என்பதைக் காட்டுகிறது; இந்த சொற்களை நதிகளின் பால் ஏற்றினாலும் அவைகளை இந்துக்கள் வணங்கியதை அறிவோம்.

XXX

3-33-12

பரதர்கள் பசுக்களை நாடி நதிகளைக் கடந்து சென்றார்கள் . புலவனுக்கு நதியின் நல்லாதரவு  கிடைத்தது . உங்கள் அலைகளோடு ஓடுங்கள் ;செல்வத்தைப் பொழியுங்கள்; உணவை அளியுங்கள் வளம் பெருக்குங்கள்; வேகமாக ஓடுங்கள் .

எனது வியாக்கியானம்

விசுவாமித்திரன் பல தேர்களுடனும் பெரும் படையுடனும் வந்திருப்பது தெரிகிறது. ‘பசுக்களை’ நாடி என்று சாயனர் உரையில் சேர்க்கிறார் ; பசு என்பதற்குப் பல பொருள் உண்டு. ஒரு வேளை இங்கே சோமம் என்னும் மூலிகையைக் குறிக்கலாம். ஏனெனில் சாயனரே ,நிறைய  செல்வத்துடன் இரண்டு நதிகள் கூடும் இடத்திற்கு முனிவர் வந்ததாகச் சொல்கிறார்.

ராமாயண, புராணக் கதைகளின் பின்னணியில் பார்க்கும்போது அவர் கிழக்கிலுள்ள சரயூ (அயோத்தி மாநகரம்) நதி பகுதியில் இருந்து மேற்கு நோக்கிச் சென்றதாகவே பொருந்தும். காரணத்தையும் சாயனரே சொல்லிவிட்டார். சோம மூலிகையை பறிப்பதற்காக என்று.

XXX

3-3-13

நதிகளே , உங்களுடைய அலைகள் நுகத்தின் கயிற்றுக்குக் கீழே பாய்க ; கட்டுக்களைப் பற்றாதீர்கள்.. பாவமற்றவர்களும் , துன்பம் அளிக்காதவர்களும் , தடைப்படாதவர்களுமான இரு நதிகளும் — நாங்கள் கடந்து செல்லும் வரை — பெருகாமல் இருப்பார்களாகுக.

எனது வியாக்கியானம்

கடைசி மந்திரம் வேறு சந்தத்தில் (meter)  அமைந்துள்ளதால் இதை பிற்சேர்க்கை என்று கிரிப்பித் அடிக்குறிப்பு கூறுகிறது. இந்தப் பிரச்சனை தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியங்கள் நெடுகிலும் உண்டு. எங்காவது ஒரு யாப்பு இலக்கண வேறுபாடு இருந்தால் அதைச் சந்தேகிப்பதுண்டு. அப்படியே பார்த்தாலும் இந்த துதியின் / சூக்தத்தின் பொருள் மாறுபடாது .

மேலும், இந்தக் கடைசி மந்திரம் ‘கூறியது கூறல்’ என்ற இலக்கண குற்றத்துக்கு கீழே வருகிறது. அதாவது சொன்ன விஷயத்தையே  மீண்டும் சொன்னதாகிறது.

ஹொரேஸ் Horace என்ற கவிஞரும் இப்படிச் சொல்லி இருப்பதாக அடிக்குறிப்பு கூறும்.

வில்ஸன் (Prof. Wilson) என்ற மொழிபெயர்ப்பாளர் சாயனரைப் பின்பற்றி பின் வருமாறு மொழி பெயர்க்கிறார்

“உங்களுடைய பிரவாகம் நுகத்துக்கும் கீழே பாயட்டும். இரண்டு நதிகளும் துரதிருஷ்டம், குற்றச் சாட்டுகள்  மற்றும் குறைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கட்டும் . தற்போது அதிகம் பாயாமல் இருக்கட்டும்”.

இங்கே நதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்குவது போலும் வாசகங்கள் அமைந்திருக்கின்றன.

நதிகளைப் பற்றி இப்படி எவரும் பாடியதும் இல்லை. அவைகளை உயிருள்ள ஒரு ஜீவனாக மாற்றி எவரும் பேச வைத்ததும் இல்லை.

வாழ்க விசுவாமித்திர முனிவன் ! வளர்க புனித நதிகள்!!

–SUBHAM–

tags -அழியாத மா கவிதை -3,  விசுவாமித்திர முனிவர், நதிகளுடன் உரையாடல்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: