
Post No. 10,136
Date uploaded in London – 26 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 61
பிரின்ஸிபால் சாரநாதனின் கட்டுரைகள்!
ச.நாகராஜன்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்களில் இது வரை 60 நூல்களைப் பார்த்து விட்டோம். சில வானொலி உரைகள், சில கட்டுரைகளும் அதன் அருமை கருதி இந்தப் பகுதியில் வெளியிடப்பட்டது.
சேக்கிழார் அடிப்பொடி என்.ராமச்சந்திரன் எழுதிய ‘வழி வழி பாரதி’ என்ற நூலைப் பற்றி 60வது அத்தியாயத்தில் பார்த்தோம். 28-8-2019 (கட்டுரை எண் 6944).
ஒரு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பாரதியார் பற்றிய நூல்கள் மற்றும் அரிய கட்டுரைகளைப் பற்றி இந்தப் பகுதியில் பார்க்கப் போகிறோம்.
புகழ் பெற்ற கல்வியாளரும் தேசபக்தருமான பிரின்ஸிபால் சாரநாதன் அவர்களைப் பற்றி சோ.அழகப்ப செட்டியார் எழுதிய கட்டுரையை திரு ஏ.கே.செட்டியார் தனது குமரி மலர் மாத இதழில் (மலர் 39 இதழ் 8) வெளியிட்டிருந்தார். அதில் திருச்சி தேசீயக் கல்லூரியில் பல்லாண்டுகள் முதல்வராக இருந்து பல்லாயிரக்கணக்கான பண்புடைய மாணவர்களை உருவாக்கிய அவரைப் பற்றிய செய்திகள் பலவற்றைச் சுவைபட அழகப்ப செட்டியார் தந்துள்ளார். 1942இல் ஆங்கிலேயர் ஆட்சி மஹாத்மா காந்திஜியைச் சிறையில் வைத்தது. நாடே கொதித்தெழுந்தது. அப்போது திருச்சி தேசீயக் கல்லூரியில், மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.காவல் துறையினர் பல கல்லூரிகளில் அமைதி நிலவ உதவி புரிந்தனர். ஆனால் சாரநாதனோ காவல் துறையை உள்ளே புக அனுமதிக்கவில்லை. மாணவர்களிடம் அவர் அமைதியாகக் கலைந்து செல்லுங்கள் என்று கூறி விட்டார். மாணவர்களும் கலைந்து சென்றனர்.
அவர் பாரதியாரைப் பற்றி எழுதிய இரு கட்டுரைகள் 1949ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவரது நினைவு மலரில் வெளியிடப்பட்டது. முதலாவது கட்டுரை சீனி.விசுவநாதன் முதலியோர் தொகுத்த மணிமாலை என்ற நூலில் வெளி வந்துள்ளது. பாரதி திருநாள் என்ற இரண்டாவது கட்டுரையை 1964ஆம் ஆண்டில் பிரதி எடுக்கச் செய்து, அதனைப் பாரதி நூற்றாண்டில் வெளியிடுவதற்காக பாரதி அன்பர் ரா.அ.பத்மநாபன் திரு ஏ.கே.செட்டியாருக்கு அனுப்ப, இரு கட்டுரைகளையும் அவர் 1982 நவம்பர் குமரி மலர் இதழில் வெளியிட்டார்.
அதில் வரும் சில பகுதிகளை இங்கு காண்போம்.
*
பிரின்ஸிபால் சாரநாதனின் சொற்கள் அப்படியே இங்கு தரப்படுகிறது.
சுப்பிரமணிய பாரதி
“சுப்பிரமணிய பாரதியின் இன்ப மொழியே தமிழருக்கு வருங்காலத்தில் ‘செல்வத்தில் செல்வமாக’ இருக்கும். அதுவே, அவர் பாடிய வண்ணம், ‘வானமளந்த தனைத்து மளந்திடும் வன்மொழி’, ‘ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசை’ கொண்டு வாழ்வதாகும்.”
“தமிழ் இலக்கியத்திற்கு பாரதியின் கவிதையினால் கிடைத்த நற்பயன் யாது? தமிழ் நாட்டுக் கவிகளுக்குள் பாரதியின் சிறப்பு என்ன? பாரதியிடமிருந்து பாரெங்கும் வீசும் சாத்திரத்தின் மணம் யாது என்று கேட்டால், ஒரு வார்த்தையில் பதில் கூறலாம். “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” என்று பாரதி இளங்கோவைப் புகழ்ந்தார். இன்ப மொழியிலும், மன ஈரத்திலும், மானிடர் வாழ்க்கையில் தான் வைத்த வாஞ்சையிலும், காதலிலும், சாதலிலும், நடுநிலை பேணுதலிலும், பாரதியும் இளங்கோவும் ஒருவர்க்கொருவர் நிகராவார்கள். இதைக் “கண்ணன் பாட்டில்” பார்க்கலாம்.
“பாயுமொளி நீயெனக்கு – பார்க்கும் விழி நானுனக்கு
தோயுமது நீயெனக்கு – தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை”
என்று தொடங்கும் ‘கண்ணம்மா – என் காதலி’ என்ற பாட்டு முழுவதையும் படித்து இன்புறுங்கள்”
“பாரதியின் கவிதையை நாம் – தாயுமானவ சுவாமிகள் கடவுளைப் பாடியவாறு –
“பாடுகின்ற பனுவலோர்கள்
தேடுகின்ற செல்வமே
நாடுகின்ற ஞானமன்றில்
ஆடுகின்ற வழகனே”
என்றே கொண்டாடுவோம். “ஆடுகின்ற அழகனே” என்பது சுப்பிரமணிய பாரதியின் ஆண்மையும் அழகும் வாய்ந்த ஆத்மாவுக்குப் பொருத்தமாகும்”.
*
அடுத்து பிரின்ஸிபால் சாரநாதன் எழுதிய் இன்னொரு கட்டுரை ‘பாரதி திருநாள்’ என்பதாகும். 1941இல் எழுதப்பட்டது இது.
அந்தக் கட்டுரையின் சில பகுதிகளை அவர் சொற்களில் அப்படியே காண்போம்:-
“கவியானவன் அழகுத் தெய்வத்தைப் பேணி, நல்லது பேசி, மக்களை இன்புறச் செய்யும் வேலையிலேயே அமர்ந்திருப்பானென்று நினைப்பது தவறு. பழைய இத்தாலியக் கவி டாந்தேயைப் பற்றி பிரௌனிங் என்ற ஆங்கிலக் கவி என்ன சொல்லுகிறார்?
“Dante, who loved well because he hated,
Hated wickedness that hinders Loving”
“அன்பைத் தடுக்கும் கொடிய வெறுப்பையே வெறுத்து, அன்பையே வளர்த்தான் கவி டாந்தே” என்று கூறியிருக்கிறார். இந்த வாக்கியம் நம் பாரதியாருக்கு மிகப் பொருத்தமாயுள்ளது.
“எல்லாமாகிக் கலந்து நிறைந்த பின்
ஏழைமையுண்டோடா – மனமே
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்கமுண்டோ?”
என்று உரக்கக் கூவுகிறார் பாரதியார். இப்பொழுதும், இந்நெருக்கடியிலும், நம் தேசத்தில் ஒரு சிறிதும் தேச மக்களுக்குள் புத்தி மயக்கம் போகவில்லையே? பாரதியார் இன்று உயிருடனிருந்தால் பழைய மாதிரியே வருந்திக் கிடப்பாரே?
இதை நாம் மாற்ற வேண்டாமா?
“சொல்லொன்று வேண்டும் தேவசக்திகளை
நம்முள்ளே நிலைபெறச் செய்யும்
சொல் வேண்டும்”
என்று கூறி பாரதியார் “சொல்” என்று ஓர் கவி பாடினார். அதன் கடைசி வரிகள் இவை.
“வலிமை வலிமை யென்று பாடுவோம் – என்றும்
வாழுஞ் சுடர்க் குலத்தை நாடுவோம்
கலியைப் பிளந்திடக் கை யோங்கினோம் – நெஞ்சிற்
கவலை யிருளனைத்தும் நீங்கினோம்
அமிழ்தம் அமிழ்தம் என்று கூவுவோம் – நித்தம்
அனலைப் பணிந்து மலர் தூவுவோம்
தமிழிற் பழமறையைப் பாடுவோம் – என்றுந்
தலைமை, பெருமை, புகழ் கூடுவோம்”
*
மிக அருமையான இரு கட்டுரைகளை சாரநாதன் அவர்களின் நினைவு மலர் தாங்கி வந்தது. ஷேக்ஸ்பியர் இலக்கியத்தில் இணையற்ற மேதை எனப் போற்றப்பட்டவர் சாரநாதன். கவிதையை ரசிக்கும் பாங்கு படைத்தவர். அவர் பாரதியைப் பற்றி 1941இல் கணித்த கணிப்புகளை இந்த இரு கட்டுரைகளில் காண்கிறோம்.
பாரதி இலக்கியத்தில் முக்கியமானவை இவ்விரு கட்டுரைகள். பாரதி அன்பர்கள் படிக்க வேண்டியவை இவை.
***