
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 10,144
Date uploaded in London – – 27 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 26-9-2021 அன்று ஒளிபரப்பான உரை!
திருவானைக்கா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயம்!
வானைக் காவில் வெண்மதி மல்கு புல்கு வார்சடைத்
தேனைக் காவில் இன்மொழித் தேவி பாகம் ஆயினான்
ஆனைக் காவில் அண்ணலை அபயம் ஆக வாழ்பவர் ஏனைக் காவல் வேண்டுவார் ஏதும் இல்லையே!
திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது பஞ்ச பூத ஸ்தலங்களில் அப்புலிங்க ஸ்தலமாக விளங்கும் திருவானைக்கா ஆகும். இது திருச்சி நகரிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தலமாகும்.
மூலவர் திரு நாமம் : ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
அம்பிகையின் திரு நாமம் : அகிலாண்டேஸ்வரி, வடிவுடைய மங்கை
ஸ்தல விருக்ஷம் : வெண் நாவல் விருக்ஷம்
தீர்த்தம் :பிரம புட்கரிணி, இந்திர தீர்த்தம்
தலப் பெயர்கள் : ஞானபூமி, அமுதீச்சரம்
பெயருக்கேற்ப இத்தலத்தில் கோவிலின் மூல ஸ்தானத்தில் எப்போதும் ஜலம் இருக்கும். சுவாமி சந்நிதி சிறியது. திருச்சாலகம் என்ற பெயரை உடையது. காவிரியின் மட்டமும் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்ட மட்டமும் ஒரே அளவு என்பதால் காவிரியில் நீர் பெருகும் போது லிங்கம் நீரில் அமிழ்ந்து விடும்.

மிகப் பழம் பெரும் தலமான இதைப் பற்றிய பழம் பெரும் வரலாறு ஒன்று உண்டு. இந்தத் தலத்தில் ஒரு யானையும் ஒரு சிலந்தியும் இங்குள்ள ஸ்வயம்பு லிங்கத்தை பூஜை செய்து கொண்டு வந்தன. வெயில் படாமல் இருப்பதற்காக சிலந்தி லிங்கத்தின் மேலாக கூடு கட்டும். யானை தினமும் காவேரியில் ஸ்நானம் செய்து விட்டு தனது துதிக்கையில் காவேரி தீர்த்தத்தை ஏந்தி வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்யும். இதனால் சிலந்தி கட்டிய கூடு கலைந்து விடும். சிலந்தி ஒரு நாள் இதைக் கவனித்துக் கடும் கோபம் கொண்டது. யானையின் துதிக்கையில் அது நுழைந்து கடிக்க ஆரம்பித்தது. யானை வலி பொறுக்காமல் புரண்டு மரணம் அடைந்தது. சிலந்தியும் மாய்ந்தது. இச்சிலந்தியே மறு ஜன்மத்தில் கோட்செங்கச் சோழனாகப் பிறந்தது. கோட்செங்கச் சோழன் யானை உள்ளே வர முடியாதபடி 54 மாடக் கோவில்களைக் கட்டுவித்தான்.
இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. இங்கு தவம் புரிந்து வந்த ஜம்பு மஹரிஷியின் தலையில் நாகமரம் ஒன்று உருவாயிற்று. அவர் தவம் செய்து வந்த இடத்தில் லிங்கம் இருந்ததால், இதற்கு ஜம்புகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்தத் தலமும் ஜம்புகேஸ்வரம் என்ற பெயரைப் பெற்றது.
இந்தக் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் உண்டு. அம்பாள் கோவில் இரு பிரகாரங்களுடன் விளங்குகிறது. அம்பாள் இன்றும் கன்னிப் பெண்ணாகவே தவம் செய்வதாக ஐதீகம். இப்படி தேவியானவள் ஈஸ்வரனைப் பூஜிப்பதைக் குறிக்கும் வண்ணம் ஒவ்வொரு நாளும் ஒரு சிவாச்சார்யர் மதிய பூஜையின் போது புடவை அணிந்து ஈஸ்வரனைப் பூஜிப்பது இன்றளவும் நடந்து வருகிறது.
முதல் பிரகாரத்தில் சந்திரன், சூரியன்,ஸரஸ்வதி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோ இருக்கின்றனர்.
இங்கு அம்பாள் உக்கிரத்துடன் இருந்து வந்தாள். இந்தத் தலத்திற்கு வந்த ஆதி சங்கரர் அம்பாளின் உக்கிரத்தைத் தணிக்க வேண்டி அம்பாளுக்கு ஸ்ரீசக்ர தாடங்கத்தைச் சாற்றினார். சந்நிதிக்கு எதிரில் பிள்ளையான விநாயகரை அம்பிகையின் உக்கிரம் தணிகிறபடி பிரதிஷ்டை செய்ததோடு பின்பக்கத்தில் வள்ளி, தேவஸேனா சமேத சுப்ரமண்யரையும் பிரதிஷ்டை செய்தார். அம்பாளைக் கருணை நிரம்பியவளாகச் செய்தார். 3 அங்குல குறுக்களவுள்ள தாடங்கத்தின் பிரகாசத்தை 25 அடி தூரத்திலிருந்தும் பார்த்து மகிழ முடிகிறது.


இங்கு பிரம்மாவுக்குக் காட்சி தந்த தர்மபுரி நாயகி ஸமேத சங்கரேஸ்வரர் ஆலயம் ஸ்வாமி கோவிலின் முதல் பிரகாரத்தில் இருக்கிறது.இங்கு வில்வ மரத்தையும் காணலாம். இரண்டாம் பிரகாரத்தில் ஸ்ரீராமரால் கட்டப்பட்ட பெரிய மண்டபமும் வல்லப கணபதி கோவிலும் உள்ளன. மூன்றாம் பிரகாரத்தில் சனீஸ்வரர், தண்டாயுதபாணி, இந்திரனால் பூஜிக்கப்பட்ட விசாலாக்ஷி ஸமேத விஸ்வேஸ்வரர் உள்ளிட்ட பல மூர்த்திகள் உள்ள சிறு கோவில்களும் உள்ளன. நான்காம் பிரகாரத்தின் எட்டுத் திக்குகளிலும் எட்டு பிள்ளையார் கோவில்களும் நான்கு பக்கங்களில் அக்ரகாரங்களும் உள்ளன.
ஈஸ்வரனான சம்புநாதர் சித்தர் வடிவம் கொண்டு வேலைக்குத் தக்கபடி பொன்னாகும் வண்ணம் வேலையாட்களுக்குக் கூலியாக விபூதி கொடுக்கப்பட்டு பெரிய கோபுரமும் பிரகாரமும் நிர்மாணிக்கப்பட்டதாம். ஆகவே இந்த பிரகாரத்தை விபூதி பிரகாரம் என்பார்கள். மதில் திருநீறிட்டான் மதில் என்று அழைக்கப்படுகிறது. எவர் ஒருவர் இரு தினம் இங்கு பிரதக்ஷிணம் செய்து ஸ்வாமி தரிசனம் செய்கிறாரோ அவருக்கு அனைத்து காரியங்களும் ஜயமாகும், அவருக்கு மறு ஜென்மம் கிடையாது, இது சத்யம் என்று புராணம் கூறுகிறது. கோவிலுக்கு மேற்கில் வீரகண்டேஸ்வரர் ஆலயமும் ராம தீர்த்தமும் உள்ளன.

இந்தத் தலத்திற்கு 1923ஆம் ஆண்டு, ருத்ரோத்காரி வருடம் சித்திரை மாதத்தில் விஜயம் செய்த காஞ்சி மஹா பெரியவாள் தாடங்கங்களை விதிப்படி ஜீரணோத்தாரணம் செய்து அம்பாளுக்கு அணிவித்தார். இதே கோவிலின் வடபுறத்தில் வெகு காலமாக புதர்களினால் மூடப்பட்டு மறைந்திருந்த பஞ்சமுகேஸ்வரர் ஆலயத்தையும் அவரே ஜீரணோத்தாரணம் செய்தார். கோவிலில் 1943ஆம் ஆண்டு ஜூன் மாதம் கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது.
இத்தலத்தில் திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்களையும் திருநாவுக்கரசர் மூன்று பதிகங்களையும் சுந்தரர் ஒரு பதிகத்தையும் அருளியுள்ளனர். அருணகிரிநாதர் 14 திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியுள்ளார்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அகிலாண்டேஸ்வரியும் ஜம்புகேஸ்வரரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
திருநாவுக்கரசரின் அருள் வாக்கு இது:
துன்பம் இன்றித் துயர் இன்றி என்றும் நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே

நன்றி வணக்கம்!
***
tags- திருவானைக்கா, அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர், ஆலயம்,