
Post No. 10,142
Date uploaded in London – 27 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 62 (பகுதி 1)
புதுவையில் மகாகவி பாரதி : முனைவர் R.கோபாலன் சாஸ்திரி
பாரதியாரின் வாழ்க்கையில் அவரது புதுவை வாழ்க்கை மிக மிக முக்கியமானது. சுவாரசியமானது. ஏராளமான சம்பவங்களைக் கொண்டது. அவரது கவித்திறனின் ஏற்றத்தைக் காண்பித்த நாட்களைக் கொண்டது.
இதை மிக சுவைபட எழுதியுள்ளார் திரு R.கோபாலன் சாஸ்திரி.
தயக்கமில்லாமல் சொல்லி விடலாம் அனைத்து பாரதி அன்பர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது என்று. பாரதி நூலகத்தை வீட்டில் கொண்டிருப்போருக்கு இது ஒரு அருமையான நூல்.
கோபாலன் சாஸ்திரி 1930ஆம் ஆண்டு பிறந்தார். 1997ஆம் ஆண்டு ஜூலை மாதம் மறைந்தார். அவர் மறைந்த 24 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது அருமை மனைவியார் ராதாலக்ஷ்மி கோபாலன் சாஸ்திரி அரும் முயற்சி எடுத்து இதை வெளியிட்டிருக்கிறார். கணவனுக்கு ஆற்ற வேண்டிய பணியை இதை வெளியிட்டுச் செய்ததோடு, தமிழுக்கும் அரும் சேவை செய்துள்ளார். அவருக்கு நமது பாராட்டுகள். பாரதி அன்பர்களும் நூலைப் படித்தவுடன் பாராட்டி விடுவார்கள்.
246 பக்கங்களைக் கொண்டுள்ள இந்த நூல், ‘நாட்டில் விழிப்புணர்ச்சி’, ‘தண்டகவனம்’, ‘திடங்கொண்டு தேம்பலின்றி’, ‘சுதேசிகள்’, ‘சுவைபுதிது பொருள் புதிது வளம் புதிது’, ‘நீச பாரதம் போய் மகா பாரதம் பிறக்க’, ‘தத்துவமும் உரைநடைத் திறனும்’, ‘பாரதியில் முருகுணர்ச்சி’ ஆகிய எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
மிக அரிய விஷயங்கள் நுட்பமாகக் கூறப்பட்டுள்ளதால் படிக்க எடுத்தவர்கள் நூலை முடிக்காமல் கீழே வைக்க மாட்டார்கள்
முதல் அத்தியாயம் ‘நாட்டில் விழிப்புணர்ச்சி’
இந்த அத்தியாயத்தில் 1905ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் வாரத்தில் காசியில் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பாரதியார், திரும்பு முன்னர் கல்கத்தா சென்று சகோதரி நிவேதிதா தேவியைச் சந்தித்ததை விரிவாகக் காணலாம். பாரதியும் அவரது நண்பர்களும் டம்டம் என்ற இடத்தில் ஆனந்த மோகன் போஸ் பங்களாவில் தங்கினார்கள். நிவேதிதை ஆனந்த மோகன் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு அவர் அனைவரையும் சந்தித்தார். கூட்டம் முடியும் தருவாயில் பாரதியார் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சில பாட்டுக்களைப் பாடினார். நிவேதிதா முகத்தில் ஒரே களிப்பு. மகிழ்ச்சியுடன் பாரதியார் கையைப் பிடித்திழுத்து வீட்டிற்கு வெளியே தோட்டத்திற்கு அவரை அழைத்துச் சென்றார். அங்கு ஒரு ஆலமரத்தடியின் கீழ் நின்று அதோ பார் பாரதமாதா என்று அவர் சுட்டிக் காட்ட அந்த திக்கை நோக்கி பாரதியார் பார்த்தார். என்ன ஆச்சரியம்! பாரத மாதாவின் ஸ்வரூபம் ஆகாயத்தை அளாவி நிற்பதைக் கண்டார் பாரதியார். ஒரு ஆலிலையைப் பறித்து நிவேதிதா தேவி ஆசி கூறி அதை பிரசாதமாக பாரதியாருக்கு அளித்தார்.
இரண்டாம் அத்தியாயம் – ‘தண்டக வனம்’
பாரதியாரின் இந்தியா பத்திரிகை சென்னையில் நடந்து வந்த, அந்தக் காலத்தைப் பற்றி நூலாசிரியர் விரிவாக விளக்குகிறார். 21-8-1908 அன்று ஒரு போலீஸ்காரன் ‘இந்தியா பத்திரிகாசிரியர் யார்?’ என்று கேட்க பாரதியார் நிலைமையைப் புரிந்து கொண்டு, “நான் இல்லை” என்று சொல்லி விட்டு மாடிப்படியில் கீழே இறங்கிப் போய் விடுகிறார். உண்மையில் இந்தியா பத்திரிகைக்கு அவர் சட்டபூர்வமான ஆசிரியர் இல்லை. பின்னர் நண்பர்களுடன் ஆலோசனை செய்த பின் புதுவைக்குக் கிளம்புகிறார். புதுவையில் பெருமாள் கோயில் தெருவில் உள்ள சிட்டி குப்புசாமி ஐயங்கார் வீட்டிற்கு காலை நேரத்தில் சென்று சேர்கிறார் பாரதியார். இரண்டு நாட்களில் போலீஸ் அவர் இருப்பிடத்தை கண்டு பிடித்து விட்டது. அப்போது தான் குவளை கிருஷ்ணமாசாரியார் பாரதியாரைச் சந்திக்கிறார். அவரை சுந்தரேசய்யர் என்ற இந்தியா பத்திரிகை படிக்கும் வாசகரின் வீட்டிற்குக் கூட்டிச் செல்கிறார். இந்தியா பத்திரிகையின் அச்சகம் புதுவைக்கு இரகசியமாகக் கொண்டு வரப்பட அங்கு இந்தியா பத்திரிகை மலர்கிறது. 1908, அக்டோபர் 20ஆம் தேதி முதல் பத்திரிகை வெளியாகத் தொடங்குகிறது, புதுவையில்! 1909 ஆகஸ்ட் 21 தேதியிட்ட இதழில் காந்திஜியைப் பற்றி அவர் செய்தி வெளியிடுகிறார். லாகூரில் நடக்க இருக்கும் மாநாட்டிற்கு அவருக்கே தலைமைப் பதவி தர வேண்டுமென்ற வேண்டுகோளையும் வைக்கிறார். விஜயா பத்திரிகையும் வெளி வரத் துவங்குகிறது. பல சுவையான செய்திகளை இந்த அத்தியாயம் தருகிறது.
மூன்றாம் அத்தியாயம் – ‘திடங்கொண்டு தேம்பலின்றி’
புதுவைக்கு வ.வே.சு ஐயர், அரவிந்தர் ஆகியோர் வந்து சேரவே பாரதியாரின் வாழ்க்கை விறுவிறுப்பான வாழ்க்கையாக ஆகிறது. வ.ரா. அங்கு நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி எல்லாம் தொகுத்துத் தந்திருக்கிறார். பாரதியாரின் ஏழ்மை நிலை பற்றிக் காண்கிறோம். அரிசி இல்லை என்பதைக் கூட வெளிப்படையாகச் சொல்ல கூடாது என்பது பாரதியாரின் மன நிலை.அகரம் இகரம் என்று தான் சொல்ல வேண்டும் என்று செல்லம்மாவிடம் சொல்கிறார்.
அகரம் – அரிசி இகரம் – இல்லை!
பாரதியாருடன் நெருங்கிப் பழகிய அமுதன், பொன்னு முருகேசம் பிள்ளை, வ.வே.சு ஐயர் உள்ளிட்டவர்கள் பற்றிய பல சம்பவங்களை இந்த அத்தியாயம் சுவைபடச் சொல்கிறது. அரவிந்தர் புதுவை வந்து சேர்ந்து விடவே அவரை பார்தியார் அன்றாடம் சந்தித்து அளவளாவுவது பழக்கமானது.
அம்மாகண்ணு பற்றிய விவரங்கள், பாரதியாரின் வாள் பயிற்சி, கனகலிங்கத்திற்குப் பூணூல் போட்டது, எலிக்குஞ்சு செட்டியாருக்கு அப்படிப் பெயர் வைத்தது, சின்னச் சங்கரன் கதை எழுதியது, குள்ளச்சாமியின் வருகை, நவம்பர் 22, 1916இல் புதுவையில் அடித்த புயல், அன்று தான் பாரதியார் புது வீட்டிற்கு குடி போனது உள்ளிட்ட ஏராளமான சம்பவங்களை இந்த அத்தியாயத்தில் காண்கிறோம்.
மூன்றாவது அத்தியாயம் : ‘சுதேசிகள்’
ஜூன் 17, 1911. ஆஷ் துரையை மணியாச்சியில் வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற நாள். இந்தக் கொலை பற்றிய ஒரு பாரதியாரின் கவிதையையும் பாரதியார் அந்தக் கொலையை ஆதரிக்கவில்லை என்பதற்கான ஒரு கட்டுரையையும் இந்த அத்தியாயம் நன்கு விளக்குகிறது. இந்தக் கொலை புதுவை வாழ்க்கையை அவருக்கு மோசமாக்கி விட்டது. உளவுப் போலீசாரின் தொல்லை அதிகமானது. இதைப் பற்றிய நிறைய சம்பவங்களை இந்த அத்தியாயம் விளக்குகிறது. மூளைக் கோளாறு கொண்ட ஒரு சிறுவனை பாரதியார் குணப்படுத்திய விஷயத்தையும் காண்கிறோம்.
நான்காம் அத்தியாயம் ; சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது.
பாரதியார் பாடிய திருப்பள்ளியெழுச்சி, தசாங்கம் பற்றிய விவரங்களை இந்த நான்காம் அத்தியாயத்தில் காண்கிறோம். பாரதி கண்ட தெய்வ தரிசனங்களைப் படித்து மகிழலாம். ஒரு நயவஞ்சகன் பாரதியாரிடம் பிரிட்டிஷ் வாரண்ட் எடுக்கப்பட்டு விட்டது என்று கூறி அவரை தன்னுடன் அழைத்துச் சென்றதையும் அவரை வக்கீல் நண்பர் நடு வழியில் சந்தித்து அவரை மீட்டு வந்த சம்பவத்தையும் விவரமாகக் காண முடிகிறது.
நுணுக்கமான விவரணம் என்பது இந்த நூலின் தனிச் சிறப்பாகும்
*
(அடுத்த கட்டுரையுடன் முடியும்)
tags-பாரதியார் நூல்கள் – 62