Post No. 10,146
Date uploaded in London – 28 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 62 (பகுதி 2)
புதுவையில் மகாகவி பாரதி : முனைவர் R.கோபாலன் சாஸ்திரி
இந்த நூலில் உள்ள ஐந்தாம் அத்தியாயம் சு’வை புதிது, பொருள் புதிது, வளம் புதிது’.
நூலாசிரியர் கோபாலன் சாஸ்திரி ஏராளமான எடுத்துக்காட்டுகளை அடுக்கடுக்காக முன் வைத்து பாரதியாரின் கவிதைகளில் உள்ள சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது என்பதை நன்கு நிரூபிக்கிறார். பாரத மாதாவிற்குத் திருப்பள்ளி எழுச்சி பாடிய புதிய கவியாக பாரதியார் மிளிர்கிறார். பத்து உறுப்புக்களைக் கொண்ட தசாங்கம் பாட்டியல் நூல்களில் தனியதோர் இடங்கொண்டது என்பதை விளக்கும் ஆசிரியர், தசாங்கத்தையும் பாரதியார் பாரதமாதாவிற்கே சாற்றுகின்றதை நன்கு விளக்குகிறார். நாமம், நாடு, நகர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி ஆகிய பத்தையும் அட்டவணை போட்டு விளக்கி அதற்கான ராகத்தையும் தந்திருக்கிறார். விநாயகரை பாரதியார் பல்லுயிரும் இன்புற்று வாழப் பிரார்த்திக்கிறார். அரவிந்தரும் தனது சாவித்திரி காப்பியத்தில் சாவித்திரி இறைவனை உலகில் உள்ள அனைத்துமே மகிழ்ச்சி அடைதல் வேண்டும் என்று வேண்டுகிறாள். இதை நூலாசிரியர் அழகுற விளக்குகிறார். இந்த அத்தியாயத்தில் பாரதி தன் வாழ்க்கையில் கண்ட மூன்று தெய்வ தரிசனங்களை விளக்குகிறார். 1) பிள்ளைப் பருவத்தில் வாணியின் தரிசனம் 2) 1905இல் சகோதரி நிவேதிதா காட்டிய பாரத மாதாவின் தரிசனம் 3) புதுவையில் குள்ளச்சாமி பாரதிக்கு காட்டிய ஞான தரிசனம். அங்கேயே கோவிந்தசாமி என்ற ஞானி பாரதியாருக்கு அவரது தந்தையையும் தாயையும் காட்டி அருளினார். பாரதி சித்தர்களைப் பற்றி ஆங்கிலத்திலும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதைப் பற்றிய ஆய்வையும் காண முடிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக “சாவுக்குச் சாவு வந்து விடும்” என்பது பற்றிய கருத்து அழகுற விளக்கப்படுகிறது.
ஆறாவது அத்தியாயம் ‘நீச பாரதம்’ போய் ‘மகா பாரதம்’ பிறக்க – என்ற அத்தியாயமாக அமைகிறது.
பெண்களுக்கான சமநீதியை பாரதியார் எப்படி விரும்பினார், பெண்களை அவர் எப்படிப் போற்றினார் என்பதை இந்த அத்தியாயம் விரிவாக விளக்குகிறது. ‘பக்தியினால் இந்தப் பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடி’ என்ற பாடலை பாரதியார் ஆவேசத்தோடு பாடுவார். நம்பிக்கை உள்ளோர் எந்த இடர்ப்பாடுகளையும் எதிர் கொண்டு வெல்வர் என்பது பாரதியின் சித்தாந்தம்.
அடுத்த ஏழாம் அத்தியாயம் – ‘தத்துவமும் உரைநடைத் திறனும்’
பாரதியாரின் கவிதைகளைப் பெரிதும் பாராட்டுவோர் கூட அவரது தத்துவத்தையும் உரைநடைத் திறனையும் முழு அளவில் கவனிப்பதில்லை. அந்தக் குறையைப் போக்குகிறது இந்த அத்தியாயம். பாரதியாரின் எழுத்துக்கள் சிணுங்கல் மழையல்ல; அது பெருமழை. பெருமழையாக அனைத்தையும் விரைவில் சொல்லி விட வேண்டும் என்பது பாரதியாரின் கோட்பாடு. அதற்கு அவர் தந்த பெயர் ‘கபஞ்ச சீக்கிரம்’. பாரதி யோக சூத்திரத்தை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். (முதல் பகுதியான சமாதி பாகத்தை அவர் மொழியாக்கம் செய்துள்ளார்) கீதையைச் சொன்னவர் ஒரு அரசர்; கேட்டவரும் ஒரு அரசரே. போர்க்களமே ஞான உபதேசக் களமாக மாறுகிறது. இதை பாரதியார் ‘ஓர் அற்புத நாடகத் தொடக்கம்’ என்கிறார். பகவத் கீதையில் பாரதியாரின் முன்னுரை அனைவரையும் கவர்கிறது. ‘கீதை சாகாக் கலையைக் கற்றுக் கொடுக்கும் நூல்’ – இப்படிப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் இந்த அத்தியாயத்தில் நூலாசிரியர் அழகுறத் தருகிறார்.
மற்றும் ஞானரதம், பாரதியின் தலையங்கங்கள் பற்றிய பல தகவல்களையும் இந்த அத்தியாயத்தில் காண்கிறோம்.
கடைசி அத்தியாயமான எட்டாம் அத்தியாயம் – ‘பாரதியில் முருகுணர்ச்சி’ என்பதாகும்.
பாரதியின் பாக்களில் அழகுணர்ச்சியை எப்படி எல்லாம், எங்கெல்லாம் கண்டு ரசிக்கலாம் என்பதை விளக்குகிறது இந்த அத்தியாயம். பாரதி என்ற கடலில் மூழ்கி முத்துக் குளிக்கும் அரிய சாதனையை கோபாலன் சாஸ்திரி செய்திருக்கிறார் இங்கு. சொல் ஒன்று வேண்டும் என்ற கவிஞன் விண்ணையும் மண்ணையும் இணைத்து அண்டப் பெருவெளிக் காட்சியைக் காணும் பாங்கு வியத்தற்குரியது. கவி என்பவன் சத்தியத்தின் குரலைக் கேட்பவனே. ‘கவயஹ ஸத்ய ச்ருதயஹ’! அடுத்து பாரதியார் அழகுத் தெய்வத்திடம் ஏழு கேள்விகளைக் கேட்பதும் அதற்கான பதில்கள் பெறப்பட்டதும் அலசி ஆராயப்படுகிறது. இதை விளக்கும் விதம் அருமை அருமை என்று சொல்லலாம். விட்மன், ஹோ கூஷின், பைரன் ஆகியோர் பற்றிய விவரங்களையும் முது மொழிகளை பாரதியார் கையாண்ட விதத்தையும் இந்த அத்தியாயம் தந்து நம்மைக் களிப்புறச் செய்கிறது. ‘சிங்கம் நாய் தரக் கொளுமோ’, ‘கோயிற் பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போல்’ உள்ளிட்ட பல அழகிய புதுமொழிகளைப் படைத்தவரும் பாரதியாரே. வசன கவிதையில் பாரதியார் கையாளும் அங்கதம் பற்றியும் ஆண்டாள் பற்றி பாரதியார் எழுதிய ஆங்கிலக் கட்டுரை உள்ளிட்ட பல புதிய விவரங்களையும் படிக்கும் அன்பர்கள் பாரதியாரில் நாம் காண வேண்டியவை ஏராளம் உள்ளன என்பதை உணர்வர்.
மொத்தத்தில் இந்த நூல் பாரதி அன்பர்கள் சுவைக்க வேண்டிய ஒரு தெள்ளமுதம்.
நூல் வெளியீட்டாளரின் சென்னை போன் நம்பர் :9940682929 (எல்கேஎம் பப்ளிகேஷன், தி.நகர்)
***
tags- பாரதியார் நூல்கள் – 62 (பகுதி 2)