ஸ்ரீ குமரகுருபரர்! – 1 (Post No.10,151)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,151

Date uploaded in London – 29 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 27-9-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஸ்ரீ குமரகுருபரர்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

சைவ நெறியும் தமிழ் மொழியும் செழிக்க பதினேழாம் நூற்றாண்டில் அவதரித்த பெரும் மகான் குமரகுருபரர் ஆவார்.

இவரது அவதாரப் பெருமையை கொண்ட நாட்டை மகா வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் வெகுவாகப் புகழ்கிறார்.

“செந்தமிழுஞ் சந்தனமுந் திசையெல்லாம் பரிமளிக்க

மந்தவளி யுமிழ் மலய வளர் குடுமி நின்றிழிந்து

கொந்தவிழு மலர்வீசிக் குளிர்கெழுமுத் தெடுத்திறைந்து

முந்தவெழு புனற்பொருனை முழுவளத்த தந்நாடு”

என்ற பெரும் பெருமையை உடைத்த பாண்டிய நாட்டிலே தாமிரபரணி நதி தீரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அவதரித்தார் குமரகுருபரர். ஸ்ரீவைகுண்டம் திருநெல்வேலிக்கு 18 மைல் கிழக்கே தாம்பிரவர்ணிக் கரையில் உள்ளது. அதற்கு மூன்று மைல் கிழக்கே ஆழ்வார் திருநகரி இருக்கிறது. திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 18 மைல் தூரத்தில் கடற்கரையில் அமைந்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தின் வடபாகத்தில் கைலாயநாதர் ஆலயம் உள்ளது.  இந்த ஊரில் சைவ வேளாளர் குலத்தில் சண்முக சிகாமணிக் கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் அவர். குழந்தைக்கு ஐந்து வயது வரையில் பேச்சு வரவில்லை. இதனால் மன வருத்தமுற்ற பெற்றோர் குழந்தையை திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று முருகப் பிரானைத் தொழுது இலை விபூதி பிரசாதத்தைப் பெற்று முருகனிடம் குழந்தையை அடைக்கலமாகத் தந்தனர். முருகப் பெருமானின் அருளால் குழந்தை பேசத் தொடங்கியது. முருகன் அவரது கண் முன் தோன்றி ‘நீ யார்’ என்று கேட்க குமரகுருபரர் ‘அடியேன்’ என்றார். இறைவன் ஒரு கணத்தில் சைவ சித்தாந்த நல் உணர்வை அவருக்கு நல்கி ‘குருபரன்’ என்ற பெயரை இட்டு மறைந்தார். அன்றிலிருந்து அவர் குமரகுருபரன் என்று அறியப்படலானார்.

முருகனின் திருவருளால் அவர் தூய தவ வாழ்க்கையை வாழத் தொடங்கினார். முதலில் கந்தர் கலி வெண்பாவை இயற்றினார். பின்னர் தனது ஊருக்கு வந்து கயிலைக் கலம்பகம் என்ற நூலை இயற்றினார்.

தல யாத்திரை ஒன்றை மேற்கொண்ட அவர், திருநெல்வேலி, குற்றாலம், திருக்கானப்பேர், திருவாடானை உள்ளிட்ட பல தலங்களுக்குச் சென்று வழிபட்டு, பின்னர் மதுரையை அடைந்தார்.

அப்போது மதுரையை திருமலை நாயக்க மன்னர் சிறப்புற ஆண்டு வந்தார்.

திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் 1623முதல் 1659 முடிய என நிர்ணயித்துள்ளனர். ஆகவே குமரகுருபரர் வாழ்ந்த காலம் இது என கொள்ளலாம்.

மன்னர் திருமலை நாயக்கரது கனவிலே தோன்றிய மீனாட்சியம்மன், “என் புதல்வன் எம் அருள் பெற்றுப் பாடிய நூலை நான் கேட்க விரும்புகின்றேன்” என்று கூறி அருளினார்.

காலையில் திருமலை நாயக்கர் தமது அவையினரிடம் ‘இந்த ஊருக்கு யாரேனும் பெரியவர் வந்திருக்கிறாரா என்று வினவினார்.

“மன்னரே! ஆமாம். ஐந்து வயது வரை பேசாமல் இருந்து முருகன் அருளால் பேசத் துவங்கிப் பேரருளாளராக விளங்கும் குமரகுருபரர் மதுரைக்கு வருகை புரிந்துள்ளார். அவர் ஒரு பிள்ளைக் கவி பிரபந்தத்தை இயற்றியுள்ளார் என்று  அவர்கள் பதில் கூறினர்.

இதைக் கேட்ட திருமலை நாயக்கர் மனம் மிக மகிழ்ந்து அவர் தங்கியிருந்த திருமடத்திற்குச் சென்று அவரை வணங்கி அவரது நூலை அரங்கேற்றுமாறு வேண்டினார்.

பேரவை ஒன்று கூட, அரங்கேற்றம் ஆரம்பமானது. அப்போது வருகைப் பருவம் படிக்க ஆரம்பித்த நாளில் அங்கயற்கண்ணிக்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகரின் குழந்தை வடிவினளாய் ஆனாள் அம்மன். குழந்தை ஓடி வந்து மன்னரின் மடி மீது அமர்ந்தது. ‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல்” என்ற பாடலை, குமரகுருபரர் பாட ஆரம்பிக்க அரசர் கழுத்திலிருந்த முத்தாரத்தை எடுத்த குழந்தை குமரகுருபரரின் கழுத்திலே அணிவித்தது.  பின்னர் மறைந்தது. இதனால் குமரகுருபரரின் பெருமை அனைவருக்கும் நன்கு விளங்கியது. திருமலை நாயக்கர் அவரை பொன்னால் ஆன சிம்மாசனத்தில் அமரச் செய்து அவருக்கு உயரிய மரியாதையை அளித்தார். அங்கு ‘மீனாட்சி அம்மை குறம்’, ‘மீனாட்சி இரட்டை மணி மாலை’ ஆகிய நூல்களை குமரகுருபரர் இயற்றினார்.

ஒரு நாள் மன்னர் உணவு உட்கொள்ளக் காலதாமதமானது. உடனே குமரகுருபரர் “வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது” என்ற திருக்குறளைக் கூறினார். இதைக் கேட்ட மன்னர் ‘இது எங்குள்ளது’ என்று வினவ குமரகுருபரர் திருக்குறள் பற்றிய விளக்கத்தை அளித்தார். அது போன்ற நீதி நூல் ஒன்று இயற்றுமாறு அவர் வேண்ட குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் என்ற ஒரு அற்புதமான நூலை இயற்றினார். இதனால் மகிழ்ந்த மன்னர் திருமலை நாயக்கர் இருபதினாயிரம் பொன் வருவாயை உடைய அரியநாயகி புரம் என்ற ஊரை அவருக்கு ஈந்தார். அவர் மதுரைக் கலம்பகம் என்ற நூலையும் இயற்றிப் பாடினார். (தொடரும்)

TAGS – குமரகுருபரர் 1 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: