WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,175
Date uploaded in London – 5 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 4-10-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.
ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.
பாரத பூமி இசை பூமி; சங்கீத பூமி: நமது வேதங்களிலேயே இசை பற்றிய விவரங்கள் ஏராளம் உண்டு. சாம வேதம் கூறும் நுட்பங்களை நாம் நன்கு அறிவோம். இந்த இசையை ஓங்கி வளரச் செய்ய மூன்று மூர்த்திகள் பாரதத்தில் சமீப காலத்தில அவதரித்தனர். சங்கீத மும்மூர்த்திகள் என்று உலகம் கொண்டாடும் அவர்கள் தியாகராஜ ஸ்வாமிகள், முத்துசாமி தீக்ஷிதர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் ஆவர்.
இவர்களுள் ராகத்திற்கு தியாகராஜ ஸ்வாமிகளையும் பாவத்திற்கு முத்துசாமி தீக்ஷிதரையும் தாளத்திற்கு சியாமா சாஸ்திரிகளையும் கூறி சங்கீத உலகம் புகழ்ந்து கொண்டாடும்.
தீக்ஷிதர் அவதரித்த குடும்பம் இசை ஞானத்தில் மேன்மையான ஒரு குடும்பமாகும்.
ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர் வீணை வாசிப்பதில் வல்லுநர். தீக்ஷிதர் உபயோகப்படுத்திய வீணை இன்றும் சென்னையில் மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு வீட்டில் அழகுறப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல கீர்த்தனைகளில் அவருக்கு விசேஷமாகப் பிடிக்கும் வீணையும் இடம் பெறுவதில் வியப்பில்லை.
இந்தச் சிறிய வீணை மீது சம்ஸ்கிருதத்தில் ராம என்ற எழுத்துக்கள் உள்ளன. இந்த வீணை அவருக்குக் கிடைத்தது பற்றிய ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. அதை இந்த உரையின் பின்னால் காண்போம்.
அவர் ஸ்ரீபுரம் என்றும் ஹ்ருத் கமலாபுரம் என்றும் சிறப்புற அழைக்கப்படும் திருவாரூரில் 1775ஆம் ஆண்டு மன்மத வருடம் பங்குனி மாதம் 24ஆம் நாள் கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறந்தார். அன்று திருவாரூர் தியாகராஜாவின் வஸந்தோத்ஸவ தினம்! கர்நாடக சங்கீதத்திற்கான க்ஷேத்திரம் என திருவாரூரை சிறப்பித்துக் கூறுவர்.
வடக்கே முகலாயர் ஆட்சி சொல்லொணாத் துன்பத்தை மக்களுக்கு ஏற்படுத்தவே ஏராளமான குடும்பங்கள் புலம் பெயர்ந்து தெற்கு நோக்கி வந்தன. அப்படிப்பட குடும்பங்களில் ஒன்று காஞ்சிபுரத்திற்கு அடுத்த விரிஞ்சிபுரத்திற்கு வந்தது. அங்கிருந்து அது திருவாரூருக்குக் குடியேறியது. அந்தக் குடும்பத்தில் ராமசாமி தீக்ஷிதர் என்ற பெயருடன் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்தக் காலத்தில் முத்து வேங்கடமகி என்பவர் சங்கீதத்தில் மேன்மை பெற்றிருந்தார். அவரிடம் ராமசாமி தீக்ஷிதர் நன்கு பயின்று நல்ல வித்வான் ஆனார். இவரே ஹம்ஸ்த்வனி என்று அனைவராலும் அறியப்படும் ராகத்தை உருவாக்கியவர் ஆவார். வேங்கடகிருஷ்ண என்ற முத்திரையை வைத்து 44 ராகங்களில் அன்னை மீனாட்சியம்மன் பேரில் ஒரு ராகமாலிகை கீர்த்தனையையும் இவர் செய்துள்ளார்.
ராமஸ்வாமி தீக்ஷிதருக்கு குழந்தை பிறக்கவில்லை என்ற மனக்குறை இருந்தது. அவர் வைத்தீஸ்வரன் கோவில் சென்று அங்கு வாலாம்பிகா, வைத்தீஸ்வரன், முத்துக்குமரன் ஆகிய மும்மூர்த்திகளின் சந்நிதியில் நாற்பது நாள் உபவாசமிருந்து வந்தார். உபவாசம் முடிந்த நாளன்று வாலாம்பிகா அவரது கனவில் தோன்றி முத்துமாலை ஒன்றைக் கொடுத்து விட்டு மறைந்தாள். முத்து முத்தாக முத்துமாலையாய் கீர்த்தனங்கள் தொடுக்கப் போகும் ஒரு குழந்தையை அவருக்குத் தந்து அருள் பாலிப்பதாக அம்பிகை அந்த முத்து மாலை மூலம் தனது சூசகக் குறிப்பைச் சொன்னாள் போலும்! அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு முத்துஸ்வாமி என்ற பெயரைச் சூட்டினார். அதற்குப் பிறகு அவருக்கு சின்னஸ்வாமி, பாலுஸ்வாமி என்று இருவர் அவருக்குப் பிறந்தனர்.
மணலியிலிருந்து முத்து கிருஷ்ண முதலியார் என்று ஒருவர் ஒருசமயம் திருவாரூருக்குத் தரிசனத்திற்காக வந்தார். அவர் திரும்பும் போது தன்னுடன் ராமஸ்வாமி தீக்ஷிதரின் குடும்பத்தை மணலிக்கு அழைத்துச் சென்றார். அங்கு வேங்கட கிருஷ்ண முதலியாராலும் அவரது தம்பி சின்னையா முதலியாராலும் ராமஸ்வாமி குடும்பத்தினர் நன்கு ஆதரிக்கப்பட்டு வந்தனர். சின்னையா முதலியார் மீது தனது நூற்றெட்டு ராகதாள மாலிகையைப் பாடி ராமஸ்வாமி தீக்ஷிதர் கனகாபிஷேகம் பெற்றார் என்ற ஒரு செய்தியும் உண்டு.
#
ஒரு சமயம் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் தம்பியான சின்னஸ்வாமிக்கு கண் பார்வை மங்கிப் போக ராமஸ்வாமி தீக்ஷிதர் திருப்பதி சென்று வேங்கடாஜலபதி முன்பு நின்று வேகவாஹினி ராகத்தில் ஆரம்பித்து நாற்பத்தெட்டு ராகங்கள் பாடி சின்னஸ்வாமிக்குப் பார்வையை மீண்டும் பெற்றார். இப்படிப்பட்ட பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் தீக்ஷிதர் வளர்ந்து வரும் போது ஒரு நாள் சிதம்பரநாத யோகி என்பவர் தீக்ஷிதரைப் பார்த்து அவரைத் தன்னுடன் காசிக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அவரை குருவாகக் கொண்டார் முத்துஸ்வாமி தீக்ஷிதர்.
சிதம்பரநாத யோகியுடன் வாரணாசிக்குச் சென்ற முத்துஸ்வாமி தீக்ஷிதர் அவரிடமிருந்து ஸ்ரீ வித்யா உபதேசம் பெற்றார். அத்துடன் யோகா, வேதாந்த சூத்ரங்கள், இசை நுட்பங்கள் ஆகியவற்றையும் சிதம்பரநாத யோகி அவருக்குப் போதித்து வந்தார். ஒரு நாள் அவர் தீக்ஷிதரை கங்கையில் குளிக்குமாறு கூற தீக்ஷிதரும் கங்கையில் மூழ்கினார். அவர் வெளியே வந்த போது கங்கையிலிருந்து அவர் எடுத்து வந்த அழகிய வீணை ஒன்று அவர் கையில் இருந்தது. அதில் இருந்த ராம என்ற அக்ஷரங்களைப் பார்த்த குரு மனம் மிக மகிழ்ந்தார். தீக்ஷிதரை அவர் ஆசீர்வாதம் செய்தார். பின்னர் அவர் கங்கையில் மூழ்கினார். வெளியே வரவில்லை. கங்கையில் அடித்துச் செல்லப்பட்டு கங்கையுடனேயே கலந்தார் அவர்.
– தொடரும்
tags – முத்துசாமி தீக்ஷிதர்