ரிக் வேதத்தில் மிஸ்டர் கண்ணாயிரம் (Post No.10,184)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,184

Date uploaded in London – 7 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

குறு மாணக்குடி கண்ணாயிரநாதர் , சஹஸ்ர நேத்ர ஈஸ்வரர்

1097       முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம்

பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித்

தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர்

கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே. 1.101.7

—Tevaram, Sambandar

நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ( 1954-1986) வசித்த மதுரை மாநகரில் கண்ணாயிரம் என்ற பணக்காரர் ஒருவர் இருந்தார். அவரை மறக்க முடியாமல் போனதற்கு இந்த நிகழ்ச்சி காரணம். எங்கள் வீட்டில் மாலை நேரத்தில் அரட்டை அடிக்க கூடும் கூட்டம் மிகப்பெரிது. சில நேரங்களில் ஆளுக்கு ஒரு தகர டப்பா , கையில் கிடைத்த குச்சிகளை வைத்து அடித்து சினிமாப் பாட்டுகளைப் பாடுவோம். சிலர் அமைதியாக வேடிக்கை பார்ப்பார்கள். மதுரை வடக்கு மாசி வீதி 20-ம் எண் வாடகை வீட்டில் இது நடக்கும். திடீரென்னு நிறுத்திவிட்டு வேதம் கீதை, சீன கம்யூனிஸ்ட், நேருஜி, காந்திஜி பற்றி விவாதிப்போம். இந்த அறைக்கு ‘பகுத்தறிவுப் பாசறை’ என்று பெயர் வேறு !!

நாலு வீடு தள்ளி வசித்த ரஷ்ய கம்யூனிஸ்ட் (அக்கட்ச்சிக்கு வலது கம்யூனிஸ்ட் என்று பெயர்) டாக்டர் எஸ்.ஆர்.கே வருவார். (கம்பனும் மில்டனும் ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் பெற்றவர் Dr S Ramakrishnan. முற்காலத்தில் கம்யூனிஸ்ட் பிரசாரம் செய்ததற்காக மதுரைக் கல்லூரி பேராசிரியர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்). அவரும் எங்களுடன் வாக்குவாதத்தில் இறங்குவார், திடீரென்று சேதுபதி உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்வி.ஜி.சீனிவாசன் , கி.வா .ஜகந்நாதன் போன்ற தமிழ்ப் பேரறிஞர்களை க் கூட்டிக்கொண்டு உள்ளே நுழைவார். எல்லோரும் ‘கப் சிப்’ என்று அடங்கி நைசாக நழுவி விடுவோம்.

என் தந்தை வந்து அவர்களுடன் பேசுவார் . சிருங்கேரி மஹாஸன்னிதானம் விஜயம் செய்தவீடு. புதுக் கோட்டை  கோபால கிருஷ்ண பாகவதர் பஜனை செய்த வீடு. காஞ்சி  பரமாசார்ய சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரத காலத்தில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தங்கி இருந்ததால், எங்கள் வீட்டின் வழியாக மீனாக்ஷி  கோவிலுக்கு நடந்து செல்லுவார்.

ஓ, இதுதான் சந்தானம் ( V Santanam, Editor in Chief, Dinamani, Madurai) வீடா?  என்று கேட்டுவிட்டு ஒரு சில வினாடிகள்  நின்று ஆசீர்வாதம் செய்துவிட்டுப் போவார். இப்படிப்பட்ட லக்கி lucky  வீட்டின் வாடகை மாதத்துக்கு 60 ரூபாய்தான். அந்த வீட்டுச் சொந்தக்காரரான பைரவ பிள்ளையும் தினமணியில் என் அப்பாவின் கீழ் ‘சப் எடிட்டரராக’ இருந்ததால் வாடகையை உயர்த்த முடியாமல் தவித்தார் . இப்பேற் பட்ட புகழுடைய வீட்டுக்கு நிறைய பேர் ‘ஓஸி’க் காப்பி சாப்பிடவும் வருவார்கள். என் அம்மா போடும் காப்பி அவ்வளவு பிரசித்தம்!!

தினமும் வரக்கூடிய ராவ் என்ற இளைஞருக்கு மாலைக் கண் நோய்; மாலை வந்துவிட்டால்  மெதுவாக ‘நான் போய்ட்டு வரேன்’ என்று கிளம்பிவிடுவார். கண் தெரியாதபோதும் அவருக்கு ஒரு அபூர்வ சக்தி உண்டு. மதுரையில் அந்தக் காலத்தில் கார் வைத்திருப்பவர்கள் மிகவும் குறைவு. ‘அவரிடம் கார்கூட இருக்கிறது’ என்று சொன்னால் அவர் லட்சாதிபதி- குபேரன் – ன்று பொருள். மேலே குறிப்பிட்ட ராவ்ஜி, எந்தக் கார் போனாலும் அதன் owner ஓனர் / சொந்தக்காரர் பெயரைச்  சொல்லி விடுவார். இறைவனின் கருணைதான் என்னே!! ஒரு அங்கத்தின் சக்தியைக் குறைத்தால் மற்றோரு உறுப்பின் சக்தியை அதிகரித்து விடுவார். அந்த ராவ்ஜி சொல்லும் ஒரு காரின் ஓனர் owner பெயர் கண்ணாயிரம். மதுரையில் ஒரு சினிமா கொட்டகையின் சொந்தக்காரர்.

xxxx

மிஸ்டர் கண்ணாயிரம் Mr One Thousand

அவர் சொல்லும் மிஸ்டர் கண்ணாயிரம் பற்றி நான் வியக்கும் விஷயம் கண்ணாயிரம் என்றால் நல்ல பெயர் இல்லையே? இந்திரன் பற்றிய கதையில் அவருக்கு ஆயிரம் கண் கிடைத்த கதை அசிங்கமாக இருக்கிறதே. எப்படி இப்படியெல்லாம் பெயர்கள் வைக்கிறார்கள்? என்று. இப்பொழுது ரிக் வேதத்தில் உள்ள பத்தாயிரம் மந்திரங்களில் 9300 படித்தவுடன் புது அர்த்தம் விளங்குகிறது. அதாவது இந்திரன் பின்னால் மன்னிப்புக் கேட்டு நல்லவர் ஆகிவிட்டார். அவருக்கு நல்ல கண்- ஞானக் கண்- கொடுத்த இறைவனின் பெயரும்- சிவ பெருமானின் பெ யரும் கண்ணாயிரம்தான். இதோ விவரம்

இந்திரன், அஹல்யா என்ற அழகி வீட்டுக்குப் போனான். நடுக்காடு . அவருடைய கணவர் கௌதம ரிஷி ஆற்றில் குளிக்கப் போனார். இந்திரனுக்கு சபலம் தட்டியது. அவள் மீது பாய்ந்தான். அவளும் மறுப்பு தெரிவிக்கவில்லை; கணவர் வரும் நேரத்தை அறிந்து  பூனை போல நைசாக நழுவிச் சென்றான். இதை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை அருகில் ஓவியமாக தீட்டிய செய்தி பரிபாடலில் உள்ளது. ஒரு பட்டிக்காட்டு பெண், கணவனிடம் இது என்ன அய்யர் ஆஸ்ரமத்தில் ஒரு பூனை பயந்து கொண்டே ஓடுகிறது ? என்று கேட்க, பட்டிக்காட்டான் பதில் சொல்கிறான்-  அட மூமே, இந்திரன் -அஹல்யை கதை உனக்குத் தெரியாதா என்று. அவ்வளவுக்கு தமிழர்களுக்கு புராணம் அத்துப்படி! 2000 வருஷங்களுக்கு முன்னரே.

xxx

கவுதம ரிஷி திடீரென்று வீட்டுக்குள் வந்தார். மனைவியின் நிலையைக் கண்டார். விஷயம் புரிந்தது. மனைவியை அதட்டினார். அவளுக்கு சித்தப் பிரமை பிடித்தது; கல் போல உட்கார்ந்தாள். மானஸீகமாக மன்னிப்புக் கேட்டாள் ; கெளதம ரிஷியும் மனம் இரங்கினார் ; மன்னிப்பு கொடுத்தார். ‘உலக மஹா உத்தமன், இந்த இப்பிறவியில் சிந்தையாலும் வேறொரு பெண்ணைத் தொடேன் என்று வீர சபதம் செய்த இராம பிரான் ,காலடி உன் மீது படும்போது உன் மன நோய் அகலும். நீ மீண்டும் அழகி ஆவாய்’ என்கிறார் கவுதம ரிஷி.

இதைக்  கம்பன் ‘உன் கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன்’ என்று பாட அதைக் கண்ணதாசனும் சினிமாப் பாட்டில் நுழைத்த கதையும்  நாம் அறிந்ததே. ‘அதே நேரத்தில் இந்திரன் உடலில் ஆயிரம் பெண் உறுப்புகள் தோன்றுக’ என்றும் முனிவர் சாபம் இட்டார் . அவன் உடம்பில் ஆயிரம் பெண் உறுப்புகள் தோன்றின. பின்னர் பல கோவில்களுக்குச் சென்று மன்னிப்பு கேட்கவே சிவன் , அந்த இந்திரனின் கண்களை சாதாரணக் கண்களாக மாற்றியதாக கதையும் தல வரலாறும் உண்டு.

Xxxx

1000 கண்கள்!!

இந்த இடத்தில் 1000 கண்கள் பற்றி சில சுவையான விஷ்யங்களைக் காண்போம். (ஆயிரம் கண் போதாதடி வண்ணக் கிளியே, குற்றால அழகை நாமும் கண்பதற்கு வண்ணக் கிளியே!என்று  சிவாஜி கணே சன் பாடிய சினிமாப்பாட்டைச் சொல்லவில்லை )

அஹல்யா கல் ஆனாள் என்று சொல்லுவது புராண ஸ்டைல் Purana Style. அதாவது அந்த இன்சிடென்ட் incident  காரணமாக அவள் மன நோயாளி ஆனால் ; ராம பிரான் போன்ற புருஷோத்தமன் பாத துளி பட்டவுடன் புனிதை ஆனாள் . இது போலவே இந்திரன் உடலில் ஆயிரம் பெண் உறுப்புகள் வந்தன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவருக்கு கண்ணாயிரம் என்ற பெயர் இருந்தது உண்மையே. ஏனெனில் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் திருஞான சம்பந்தரும் முதல் திருமுறையில் கண்ணாயிரேஸ்வரர் கோவிலில் பாடி இருக்கிறார்.. ஆயினும் பெண் உறுப்பு போன்ற கதைகளை பிற்காலத்தில் உபன்யாசம் சொல்லும் பவுராணிகர்கள், சுவையை அதிகரிக்க சேர்த்துவிட்டார்கள்.

இதற்கு ஒரு எடுத்துக் காட்டும் தருகிறேன். ரிக் வேதத்தில் அத்ரி முனிவர் சூரியகிரகணப் பாடல் உளது; மஹாபாரதத்தில் அர்ஜுனன், ஜெயத்ரதனை  வீழ்த்திய சம்பவத்தில் கிருஷ்ணன், சாதுர்யமாக சூரிய கிரஹணத்தைப் பயன்படுத்திய சம்பவமும் உள்ளது (விவரங்களுக்கு என் ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் காண்க.)

கிரஹணத்தைத் துல்லியமாக கணக்கிட்டு பஞ்சாங்கத்தில் குறித்தபோதும், ராகு என்னும் பாம்பு சந்திர சூரியர்களை விழுங்குவதாக 2000 ஆண்டு பழமை உடைய  காளிதாசன் காவியத்திலும் சங்க இலக்கியப் பாடல்களிலும் எழுதிவைத்தனர். அதாவது விஞ்ஞான உண்மைகளை பாமரர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்; அதற்காக இப்படி கதை ரூபத்தில் சொல்லி விடுவார்கள். இதே போல இந்திரன் உடம்பில் ஏதேனும் பச்சை குத்தி இருப்பார்கள். எங்கள் லண்டனில் யாரேனும் செக்ஸ் சில்மிஷம் செய்து தண்டிக்கப்பட்டால் அவரை REGISTER OF SEXUAL OFFENDERS செக்ஸுவல் அஃ ப்பண்டர் — செக்ஸ் குற்றவாளிகள் – பட்டியலில் வெளியிடுவார்கள் அதே போல அக்காலத்தில் குற்றவாளிகள் உடலில் செம்புள்ளி- கரும்புள்ளி குத்தி, மொட்டையடித்து , கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் விடுவார்கள். இப்படி இந்திரனுக்கும் உடலில் நிறைய பச்சை குத்தி இருப்பார்கள் போலும்.

இதை நான் சொல்லுவதற்கு ரிக் வேதத்தில் ஆதாரம் உளது. ஆயிரம் போன்ற  எண்களை அவர்கள் ‘நிறைய’ என்ற பொருளில் பயன்படுத்துகின்றனர். வருணனுக்கு 1000 கண்கள் உண்டு. அவன் மறைவாக மனிதர்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டுவிடுவான் என்று ரிக் வேதம் இயம்புகிறது. அக்கினி பகவானுக்கு 1000 கண்கள் உண்டு என்று ரிக் வேத மந்திரம் கூறுகிறது.

எல்லோரும் அறிந்த தினமும் கோவில் களிலும் பிராமணர்  வீடுகளிலும் ஒலிக்கும்

புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரத்தில் (10-90) இறைவன் என்னும் மஹா புருஷனை 1000 கண்கள் உடையவன், 1000 கைகள் உடையவன், 1000 பாதங்கள் உடையவன் என்று ரிஷிகள் பாடுகின்றனர். அதே பத்தாவது மண்டலத்தில் இந்திரனின் வாயில் 1000 ஓநாய்கள் இருப்பதாக ஒரு ரிஷி பாடுகிறா ர் ; ஓநாய் என்பதை 1000 கழுதைப் புலிகள் என்று கிரிப்பித் மொழிபெயர்க்கிறார். அதே மண்டலத்தில் ரிஷிகளுக்கு அக்கினி பகவான் 1000 பசுக்களை அளிப்பதாகச் சொல்கிறார். சுருங்கச் சொல்லின் சஹஸ்ர என்ற 1000 ‘நிறைய’ என்ற பொருளில் வருகிறது. இதை நூற்றுக் கணக்கான ரிக்வேத துதிகளில் காணமுடிகிறது. ஆகவே ‘1000= நிறைய’ என்பதே பொருள். தசரதனுக்கு 60,000 பொண்டாட்டிகள் என்று புராணிகர் உபன்யாசத்தில் சொல்லும்போதும் அவனுக்கு ‘அதிகம்’ பெண்கள் மனைவியாகவும் அந்தப்புர அழகிகளாகவும் இருந்தனர் என்பதைக் குறிப்பதே.

XXX

கண்ணாயிரேஸ்வரர் கோவில்

மாயவரம்- வைத்தீஸ்வரன் கோவில் பாதையில் கண்ணாயிரேஸ்வரர் கோவில் உளது. இங்குதான் இந்திரனுக்கு நார் மல் கண்கள் கிடைத்தன; பெண் உறுப்பு அடையாளங்கள் மறைந்தன என்று தல புராணம் கூறும்; நின்ற சீர் நெடுமாறன் காலத்தில், மஹேந்திர பல்லவன் ஆட்சிக் காலத்தில்  1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருஞான சம்பந்தர் 1000 கண்கள் பற்றிப் பொதுவாகப் பாடுகிறார் :-

குறு மாணக்குடி கண்ணாயிரநாதர் , சஹஸ்ர நேத்ர ஈஸ்வரர்

1097       முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம்

பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித்

தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர்

கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே.    1.101.7

காம வயப்பட்டு அகலிகையை நாட , அதனால் கெளதம முனிவரின் சாபம் பெற்ற இந்திரன், அது தீரும் வண்ணம் பூஜித்து வேண்ட , அந்த சாபத்திரிலிருந்து விடுவித்துக் கண்ணாயிரம் என்ற பெயரையும் ஈ ந்த , ஈசன் வீற்றிருப்பது, கன்னிப் பெண்கள் ஏற்றித் துதிக்கும் கண்ணார் கோயில் ஆகும்

இது போல ஆயிரம் தாமரைகளால் பூஜித்த திருமாலுக்கு ஒரு தாமரை போதாமல் போகவே கண்ண்ணையே  சிவபெருமானனுக்கு திருமால் கொடுத்த  கதைகளும் உண்டு .

திருக்காரவாசல் ; திருக்காறாயில்

இதே போல அஹங்காரத்தினால் சிறிது கா ல த்துக்கு  படைப்புத் தோளிலிருந்து சஸ்பெண்ட் செய்துவைக்கப்பட்ட பிரம்மதேவன் மன்னிப்பு கேட்கவே அவருக்கு ஆயிரம் கண்களுடன் தோன்றி பதவியை மீண்டும் கொடுத்த கதை திருக்கார் வாசல் தல் த்துடன் தொடர்புடையது

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் – கண்ணாயிரநாதர், தேவியார் – கயிலாயநாயகியம்மை.

 இங்கு சிவனுக்கே ஆயிரம் கண்ணன் என்ற பொருளது.

ஆகவே ஆயிரம் என்பதன் பொருளை உணர்ந்து நாம் வணங் குவோமாகுக

–SUBHAM—

 tags – ரிக் வேத,  கண்ணாயிரம்,கண்ணாயிரநாதர், கண்ணாயிரேஸ்வரர்

Leave a comment

2 Comments

  1. S Govindaswamy

     /  October 17, 2021

    Dear Sir
    In Posting 10189 you have wrongly given the caption ‘Rama figting Jtayu’ for one picture;

  2. THANKS; I WILL CHECK AND CORRECT IT.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: