ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்! – 3 (Post No.10,183)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,183

Date uploaded in London – 7 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்! – 3

  •  

தனது வயதான காலத்தில் அவர் எட்டயபுரம் வந்தார். அப்போது எட்டயபுரம்  மழையின்றி மரங்கள் காய்ந்து போய் நிலம் வெடித்து பஞ்ச நிலையில் இருந்தது. மக்கள் தவி தவித்தனர். இந்த நிலையைக் கண்டு மனமிரங்கிய அவர், அம்ருதவர்ஷிணி ராகத்தில் வர்ஷய வர்ஷய வர்ஷய – மழை பொழியட்டும், மழை பொழியட்டும், மழை பொழியட்டும் என்ற கீர்த்தனையைப் பாட ஆரம்பித்தார். உடனே இடியும் மின்னலும் தோன்ற மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. ஜனங்கள் ஆச்சரியப்பட எட்டயபுர மஹராஜா அவரை ஓடோடி வந்து வழியிலேயே சந்தித்து கௌரவித்தார். தனது ஆஸ்தானத்திற்கு அழைத்துக் கொண்டு சென்று அவரது இறுதி காலம் வரை அவரை போஷித்து வந்தார்.

தனது ஒரு கீர்த்தனையில் கூட அவர் மானுடனைப் பாடவில்லை. இறைவனையே பாடினார். ஒருவர் தஞ்சையில் சென்றால் பணம் கிடைக்கும் என்று அவரிடம் கூற, ‘பணம் வேண்டுமெனில் லக்ஷ்மியை அல்லவோ துதிக்க வேண்டும்,  மனிதனை ஏன் பாட வேண்டும் ‘ என்று கேட்டு விட்டு, ‘ஹிரண்மயீம் லக்ஷ்மீம் பஜாமி என்று ஆனந்தமாகப் பாடினார். திருவாரூரில் அவர் இருந்த போது குழிக்கரையில் மிராசுதாரராக இருந்த வைத்யலிங்க முதலியார் தீக்ஷிதரிடம் தன்னைப் பற்றிப் பாட வேண்டுமென்று வேண்டினார். தீக்ஷிதரோ, ‘உமக்கு விஸ்வநாதர் அருள் புரியட்டும் என்று பாடுகிறேன் என்று கூறி  பதினான்கு ராகங்களில் விஸ்வநாதர் மேல் கீர்த்தனை பாடினார்.

அவ்வப்பொழுது பணமின்றி தீக்ஷிதர் வறுமையை எதிர்கொண்டதும் உண்டு. அப்படி ஒரு சமயத்தில் அவரது சிஷ்ய  கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரான தாசி கமலம் என்பவர் தன் நகைகளை அடகு வைத்துப் பணம் தருவதாகக் கூறினார். அதை மறுத்தார் தீக்ஷிதர். தியாகராஜம் பஜரே என்ற கீர்த்தனையைப் பாடினார்.  மறுநாள் தஞ்சை அரசாங்கத்திலிருந்து ஓர் உயர் அதிகாரி வரப்போகிறார் என ஏராளமான சாமான்கள் வாங்கிக் குவிக்கப்பட்டன. ஆனால் திடீரென்று அவர் பயணம் ரத்தானது. அவர் வரவில்லை என்ற செய்தி வந்தது. அதனால் வாங்கிய சாமான்களை என்ன செய்வது என்று யோசித்த சத்திரத்தின் அதிகாரி அதற்கு பாத்திரமானவர் தீக்ஷிதரே என்று நிர்ணயித்து அனைத்துப் பொருள்களையும் அவரிடம் சமர்ப்பித்தார். அனைவரும் இறைவனது அருளையும் தீக்ஷிதரது மஹிமையையும் எண்ணி அதிசயித்தனர்.

ஒரு சமயம் கீவளூருக்குச் சென்றார் தீக்ஷிதர். அக்ஷய லிங்க ஸ்வாமியை தரிசித்து ஒரு பாடல் பாட வேண்டும் என்று சங்கல்பம் கொண்டிருந்தார் அவர். ஆனால் குருக்களோ தரிசன நேரம் முடிந்து விட்டது என்று கதவை மூடித் தாழ்ப்பாளிட்டார். தீக்ஷிதர் எவ்வளவோ வேண்டிக் கொண்டு பார்த்தார். நாளை வந்து தரிசனம் செய்யலாமே என்றார் குருக்கள். குருக்கள் அங்கிருந்து அகன்றதும் தீக்ஷிதர் அக்ஷய லிங்க விபோ என்ற கீர்த்தனையைப் பாட ஆரம்பித்தார். உடனே கதவு படீரென்று திறந்தது. அனைவரும் மெய்மறந்து இந்த அதிசயத்தைப் பார்த்து சிலிர்த்தனர்.

இப்படி ஏராளமான அபூர்வமான சம்பவங்கள் அவர் வாழ்வு முழுவதும் நடந்து கொண்டே இருந்தன. அவருக்கு ஏராளமான சிஷ்யர்கள் உருவாயினர். தீக்ஷிதருக்கு மகப்பேறு வாய்க்கவில்லை. ஆகவே தனது சகோதரரின் பெண்ணின் பிள்ளையை ஸ்வீகாரம் செய்து கொண்டார். அவர் தான் சுப்பராம தீக்ஷிதர். சுப்பராம தீக்ஷிதரைப் பற்றி மகாகவி பாரதியார், ‘கன்னனொடு கொடை போயிற்று, உயர்கம்பநாடனுடன் கவிதை போயிற்று, உன்னரிய புகழ்ப் பார்த்தனொடு வீரம் அகன்றதென உரைப்பார் ஆன்றோர்; என்னக நின்றகலாதோன் அருட் சுப்பராமனெனும் இணையிலா விற்பன்னனொடு சுவை மிகுந்த பண்வளனும் அகன்றதெனப் பகரலாமே என்று பாடி இரங்கினார். சுப்பராம தீக்ஷிதரின் க்ருதிகள் தீக்ஷிதரின் க்ருதிகளை விட அழகானவை என்ற அளவு பெயரைப் பெற்றவர் சுப்பராம தீக்ஷிதர்.

     முத்துசாமி தீக்ஷிதரைப் பற்றிக் கூறுகையில் மஹாகவி பாரதியார், “தீக்ஷிதரின் கீர்த்தனைகள் பச்சை சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை. இவை கம்பீரமான கங்கா நதியைப் போல நடை உடையவை என்கிறார்.

எட்டயபுரத்தில் தனது அந்திம காலத்தில் ஆறேழு வருடங்களை அவர் கழித்தார். ஒரு நாள் அவர் தன் சிஷ்யர்கள் பாட அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் மீனாக்ஷி என்ற கமகக்ரியை  கீர்த்தனத்தைப் பாடிக் கொண்டிருந்தனர். அதில் மீன லோசனி பாசமோசனி என்ற இடம் வந்தது. அப்போது தீக்ஷிதர் தனது பாசங்கள் அனைத்தையும் தேவி போக்குவது போல உணர்ந்தார். உடனே பாசம் நீங்கிற்று, தீக்ஷிதர் அம்பிகையுடன் கலந்தார். அந்த நாள் தீபாவளி தினம். ஆண்டு 1835. அக்டோபர் 21ஆம் நாள்.

அப்போது ஒரு அதிசய நிகழ்ச்சி நடைபெற்றது. எட்டயபுரம் அரண்மனையில் இருந்த காங்கேயன் என்ற யானையை யானைப் பாகன் தீபாவளி தினத்திற்காக, குளிப்பதற்காக தெப்பக்குளத்துப் படித்துறைக்குக் கொண்டு வந்தான். எப்போதும் அமைதியாகக் குளிக்கும் யானை அன்று குளிக்க மறுத்தது. வீதிகளில் ஓட ஆரம்பித்தது. அது நேராக மயானத்தில் சென்று படுத்துக் கொண்டது. சோகத்துடன் இருந்த யானை பின்னர் மெதுவாக தன் இருப்பிடம் மீண்டது. உடனே ஓடோடி வந்து இது பற்றிக் கேட்ட எட்டயபுரம் மன்னருக்கு, “நீங்களும் மக்களும் க்ஷேமமாக இருப்பீர்கள், பயப்பட வேண்டாம் என்றார் தீக்ஷிதர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் இறைவனுடன் கலந்ததை அறிந்த மன்னர், ‘எங்களைப் பற்றிக் கூறினீர்களே, உங்களைப் பற்றிச் சொல்லவில்லையே, நானும் கேட்கவில்லையே என்று அழுது புலம்பினார். தீக்ஷிதரின் பூதவுடல் வைதிக முறைப்படி எரியூட்டப்பட்டது.

தீக்ஷிதரின் அஸ்தி அட்டக்குளம் கரையில் ஒரு இடத்தில் வைக்கப்பட்டு சமாதி எழுப்பப்பட்டது. அது எட்டயபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே இருக்கிறது. தீக்ஷிதரின் நினைவைப் போற்றி மரியாதை செய்ய விழைவோர் அனைவரும் அங்கு செல்வர். ஆயின் மிக பிரம்மாண்டமான  மஹா மேதையான அவருக்கான மரியாதை இன்னும் சிறப்புறச் செய்யப்பட வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. அதற்கு அம்பாள் அருள் பாலிப்பாளாக.

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரின் சரிதத்தை கவியோகி சுத்தானந்த பாரதியார் அழகுற எழுதியுள்ளார். அதில் தியாகராஜரை சங்கீதத் தென்றல் என்றும் சியாமா சாஸ்திரிகளை இசைச் சூறாவளி என்றும் ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரை சங்கீதக் கடல் என்றும் கூறி வர்ணிக்கிறார். ‘கடலுக்கு உவமை கடலே என்று வால்மீகி முதல் 1935இல் வெளி வந்த ரத்னாவளி சினிமா பாடல் வரை நாம் கேட்டிருக்கிறோம்; சங்கீதக் கடலான ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதருக்கு உவமை ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரே தான்!

நன்றி வணக்கம்.

xxx subham xxxxxx

tags-  முத்துசாமி தீக்ஷிதர்! – 3

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: