Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 10,196
Date uploaded in London – 10 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை அக்டோபர் பத்தாம் தேதி 2021
ஆம் ஆண்டு
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது LONDON SWAMINATHAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXXX
ஒவ்வொருவரின் வாழ்விலும் நலமும், வளமும் வரட்டும்; பிரதமர் மோடி நவராத்திரி வாழ்த்து
நவராத்திரி திருவிழா அக்டோபர் 07 ந்தேதி தொடங்கி வருகிற 15- ந்தேதி வரை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு துர்க்கை வழிபாடு மற்றும் விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி திருவிழா வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒவ்வொருவருக்கும் நவராத்திரி திருவிழா வாழ்த்துகள்.
வருகிற நாட்களில், ஜனனி மாதாவை பக்தியுடன் நாம் வழிபட வேண்டிய நாட்கள் வர இருக்கின்றன.
இந்த நவராத்திரி திருவிழா ஒவ்வொருவரின் வாழ்விலும் வலிமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் வளம் ஆகியவற்றை கொண்டு வரட்டும் என வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று, துர்க்கை கடவுளை வழிபடுவது போன்ற புகைப்படம் ஒன்றையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
XXX
கடவுள் பெயரில் நன்கொடை வசூல் கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
‘கடவுள் பெயரில், தனியார் அறக்கட்டளை,
தனிநபர்கள் நன்கொடை வசூலிக்கக் கூடாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்த, வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா, இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. ‘எதிர்காலங்களில் உற்சவங்களை நடத்த, ஜீயர்கள், ஸ்தலத்தார்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்’ என, கூறியிருந்தார்.
இம்மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில், விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், சவுரிராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நவ., 10 முதல், 19ம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ‘கொரோனா காரணமாக பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை; இதில், கோவில் நிர்வாக அதிகாரி தலையீடு எதுவும் இல்லை; நிகழ்ச்சிக்காக, பல சபாக்கள் சார்பில், பணம் வசூலிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ‘கடவுள் பெயரில், தனி நபர்கள், தனியார் அறக்கட்டளைகள் நன்கொடை வசூலிக்கக் கூடாது’ என, நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர். உடனே, தொலைவில் இருந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, நன்கொடை வசூலிப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ‘பாரம்பரியமாக உள்ள நடைமுறையில் குறுக்கீடு செய்ய மாட்டோம். சட்டவிரோத அம்சங்கள் ஏதேனும் சுட்டிக் காட்டப்பட்டால், நீதிமன்றம் தலையிடும்’ என தெரிவித்தனர்.
XXXX
தசரா விழா துவக்கம்: மின் விளக்கில் ஜொலித்த மைசூரு அரண்மனை
உலக பிரசித்தி பெற்ற 412-வது மைசூரு தசரா விழாவை சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி, கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா வும் தற்போதைய முதலமைச்சர் பொம்மையும் துவக்கி வைத்தனர்.
கர்நாடகாவில் மன்னர் ஆட்சி காலத்திலிருந்து மைசூரில் வெகு விமரிசையாக தசரா விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் விழா அக்.07 கோலாகலமாக துவங்கியது. கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெள்ளி பல்லக்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி தசரா விழாவை துவக்கி வைத்தார்.
கிருஷ்ணாவுக்கு, சந்தனத்தால் செதுக்கப்பட்ட யானை பரிசாக வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு இரவில் மின் விளக்கில் மைசூரு அரண்மனை தங்கம் போன்று ஜொலித்தது. மேலும் நகரின் பல பகுதிகளில் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
XXXX
திருமலையில் மூன்றாம் நாள் பிரமோற்சவம்: சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி
திருப்பதி–திருமலை பாலாஜி வெங்கடாசலபதி கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை,
சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.
மலையப்ப சுவாமி, மூன்றாம் நாள் காலை, சிம்ம வாகனத்தில் வலம் வந்தார். மாலையில், முத்துபந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் எழுந்தருளினார். வாகனச் சேவையின்போது மங்கல வாத்தியங்கள், வேத கோஷம், நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
XXX
வள்ளலார் பிறந்த நாள், தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5-ந் தேதி, தனிப்பெருங்கருணை நாளாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் என்று tamil nadu முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 5.10.1823 அன்று பிறந்தார்.
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்தார். அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார். வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினார்.
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடைகளை எழுதினார். இவர் பாடிய பாடல்களின் திரட்டு, ‘திருவருட்பா’ என்று அழைக்கப்படுகிறது. இது 6 திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது.
பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார். ‘அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி’ என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது.
அவர் பிறந்தநாளான அக்டோபர் 5-ந் தேதி, இனி ஆண்டுதோறும் ‘தனிப்பெருங்கருணை நாள்’ என கடைபிடிக்கப்படும் — இவ்வாறு அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
XXXX
புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்கு பின் கொலு பொம்மை விற்பனைக்கு அரசு அனுமதி
நவராத்திரி திருவிழா வருகிற 15ந்தேதி வரை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு துர்க்கை வழிபாடு மற்றும் விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக வீட்டில் கொலு பொம்மைகளை (களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள்) வைப்பது வழக்கம். புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் கட்டுப்பாடுகளால், கொலு பொம்மை விற்பனைகளும் முடங்கின.
2 ஆண்டுகளுக்கு பின்பு கொலு பொம்மை விற்பனைக்கு இப்போது புதுச்சேரி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், கொலு பொம்மை உற்பத்தியாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
XXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் LONDON SWAMINATHAN
நன்றி, வணக்கம்
tags– உலக, இந்து சமய ,செய்தி மடல் 10102021,