Post No. 10,206
Date uploaded in London – 13 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள்!- Part Two
ரிக். 10-22-6 உஷனன்
புலவர்களில் நான் உஷன கவி என்று பகவத் கீதையில் கண்ண பிரான் கூறுவதை நாம் அறிவோம். அவருடைய பெயரே ‘கவி’ என்பதாகும். அவருடைய கோத்திரம் காவ்ய கோத்திரம். தமிழில் மிகவும் பழையகாலக் கவி என்று கருதப்படும் தொல் காப்பியரும் தொன்மையான காப்பியக் குடியைச் சேர்ந்தவரே. இவருடைய பெயர் த்ருண தூமாக்கினி என்பது நச்சினார்க்கினியர் உரையால் அறியப்படும். மற்றொரு புகழ்பெற்ற காவ்ய கோத்ர சங்கப்புலவர் காப்பியாற்றுக் காப்பியனார். அவரைப் பற்றிய அதிசய விஷயங்கள் பதிற்றுப் பத்து என்னும் சங்க நூலில் காணக்கிடக்கிறது.
காவ்ய என்பது தமிழில் காப்பிய என்று மாறும் (ப=வ)
இதில் அதிசயம் என்னவென்றால் ரிக் வேத காலத்திலேயே அவர் (USANA KAVI ) புராண புருஷர் ஆகிவிட்டார். சில கவிதைகள் அவருடைய பெயரில் கிடைத்த போதிலும் அவர் அக்காலத்திலேயே பழைய கவிஞர் என்று அழைக்கப்பட்டார் . அவரை ரிக் வேதத்தின் பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. அவர் இந்திரனின் நெருங்கிய நண்பன், தோழன், துணைவர் என்றும் அவை பேசுகின்றன. ( இந்திரன் என்பது ஒரே ஆள் அல்ல. ஜனாதிபதி, பிரதமர் என்பதுபோல ஒரு பதவி; ஆகையால் எந்த இந்திரன் என்பது ஆராய்ச்சிக்குரியது )
Xxxx
சுசா , சுசி – 10-26-6
இந்த இரண்டு பெயர்களும் ஒரு ஆண் , பெண் ஆகியோரின் பெயர் என்பது லுட்விக் Ludwick என்பவரின் கருத்து .ஆனால் மாபெரும் உரைகாரரான சாயனர் மற்றும் வில்சன் Prof Wilson என்பவர் வேறு கருத்துக்களை உரைப்பர். இவை ஆண் ஆடு , பெண் ஆடு என்கின்றனர். ஏன் சுசா , சுசி என்ற பெயர்கள் என்பதை விளக்கவில்லை .
இதை அடுத்த மந்திரங்களில் ஆட்டு ரோமத்தால் ஆன கம்பளி ஆடைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. பூஷன் என்னும் வேதகால தேவதையை இழுத்துச் செல்லும் ரதம் ‘ஆட்டு ரதம்’ என்பதையும் நாம் அறிவோம். பிற்காலத்தில் அக்கினி பகவானின் வாகனமாக ‘ஆடு’ சித்தரிக்கப்படுவதையும் நாம் அறிவோம். இப்போது இவை ஆடா ? ஆட்களா ? குழப்பம் நீடிக்கிறது
Xxx
சோம மூலிகை பற்றிய அதிசயச் செய்தி
பஞ்சதச சோம 10-27-2
இந்த ‘15 சோமம்’ என்பதற்கு சாயனர் அற்புதமான விளக்கம் தருகிறார். சோமம் என்னும் அபூர்வ மூலிகை சுக்ல பக்ஷ 15 நாட்களில் வளருமாம். கிருஷ்ண பக்ஷ 15 நாட்களில் அதன் இலைகள் வாடுமாம். அதனால் அதற்கு 15 (பஞ்சதச) ஸோம என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கே பல முக்கிய விஷயங்களைக் கவனிக்கவேண்டும். R T H Griffith கிரிப்பித் என்பவர் 125 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட ரிக் வேத மொழி பெயர்ப்பிலேயே , முதல் பக்கத்திலேயே, சோம லதை என்னும் தாவரம் பற்றி தவறான தகவலை வெளியிட்டார். அது போதை மருந்துச் செடி; காளான் வகையினது என்று. ஆனால் நம்மவரான சாயனரோ அது மரம் என்றும் 15 நாளில் வாடக்கூடியது , பின்னர் வளரக் கூடியது என்றும் புதிய தகவலைத் தருகிறார். இதனால்தான் சந்திரனுக்கும் சோமா லதைக்கும் ஒரே பெயர் போலும்.
இங்கே தாவரங்கள் பற்றிய அரிய அறிவியல் செய்தி ஒன்றையும் சொல்ல வேண்டும். இந்துக்கள் மட்டும் தாவரங்கள் வளர்ச்சியையும் சந்திரனையும் தொடர்புபடுத்திப் பேசுகின்றனர். ஆனால் விஞ்ஞானிகளோ சூரியன்- தாவர வளர்ச்சி பற்றி மட்டுமே பேசுகின்றனர். ஒருவேளை, எதிர்காலத்தில் நாம் சொல்வதை அவர்கள் ஆதரிக்கக்கூடும்.
Xxxx
RV 10-30 ; ஊதா /பர்பிள் நிற கழுகு /சுபர்ணன்
பத்தாவது மண்டல 30 ஆவது துதியிலும் பல புரியாத விஷயங்கள் வருகின்றன ; ஊதா /பர்பிள் நிற கழுகு /சுபர்ணன் என்ற வரிக்கு சோம என்று வியாக்கியானக்காரர்கள் உரை எழுதுவர் . இங்கே சோமம் என்பது சந்திரனையும் குறிக்கும்; சோம மூலிகையையும் குறிக்கும். ரிக் வேதம் முழுதும் பருந்து (Falcon or Eagle) கொண்டு வரும் சோம குளிகை பற்றி புலவர்கள் பாடுகின்றனர். எவருமே சரியான விளக்கம் சொல்ல முடியவில்லை. கிளி, குயில், காகம், அன்னம் பற்றிப் பேசும் ரிக் வேதம் ‘பருந்து- சோம லதை’ பற்றியே சொல்லுகின்றன.
RV 10-30-5 சோம ஓஷதி
இதுமட்டுமல்ல. இதே துதியில் ஐந்தாவது மந்திரத்தில் சோம ஓஷதி (மூலிகை) என்பதற்கு தர்ப்பைப் புல் அல்லது குச புல் என்று உரை எழுதுகின்றனர். ஆக சோம என்பது உரிச் (Adjective) சொல்லாகவும் பயன்படுகிறது. நாம் பாயசத்தை சாப்பிட்டுவிட்டு அமிர்தம் !! என்று புகழ்வது போல ‘சோம’ என்பது பயன்படுகிறது. ரிக் வேதம் முழுதும் பசு, குதிரை, இரும்பு, இந்திரன் என்பன பல பொருள்களில் வருகிறது ; வெள்ளைக்கார மொழி பெயர்ப்பாளர்கள் இவைகளை மறைத்து விடுவார்கள் அல்லது மழுப்பி விடுவார்கள்
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். சிந்து சமவெளியில் கோட்டைகள் இருந்ததாகவும் அவைகளை ஆரியர்கள் அழித்ததாகவும் ஆரம்பத்திலேயே தப்பாக எழுதி இதுவரை சிந்து சமவெளி எழுத்துக்களைப் படித்தறியமுடியாதபடி செய்துவிட்டனர். இரும்புக் கோட்டைகளை இந்திரன் அழித்ததாக ரிக் வேதம் இயம்புகிறது. அதை மொழி பெயர்க்கையில் ஆரியர் பற்றி வாய் திறவார். சிந்து சமவெளியில் இரும்பு கிடையாது என்று ஒரு புறம் எழுதிவிட்டு, அதை ஆரியர் அழித்ததாக எழுதிவிட்டு இரும்பு, குதிரை எலும்புகள் எங்கே? என்று கேட்டால் மவுனம் சாதிப்பார்கள். ஆக இங்கு சோம என்பதற்கு சந்திரன், பருந்து, தர்ப்பை என்று பல பொருள்கள் வருகின்றன!!!
Xxxx
இரண்டு தாரைகள்
இதே 10-30 துதியில் இரண்டு தாரைகள் ( நீர் பெருக்கு ) என்பதற்கு ஏகதனா , வசதிவாரி என்று உரை எழுதுவர் ; இவை வேள்வி விஷயமா அல்லது நீர் நிலைகளா என்று விளக்கப்படவில்லை
Xxxx
குரு ஸ்ரவணன் 10-32-9
பத்தாவது மண்டல 32 ஆவது மந்திரத்தில் குரு ஸ்ரவணன் என்ற ‘பெயர்’ அல்லது ‘சொல்’ வருகிறது . ஸ்ரவண என்றால் கேட்பது என்று பொருள்; கேட்பதால் மட்டும் அறியப்படுவதால் வேதத்தை ‘சுருதி’ என்பர்; இதை அற்புதமாக சங்க காலத் தமிழர்கள் ‘கேள்வி’ என்று மொழிபெயர்த்தனர் ; பிராமணர்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் ‘ஆன்ற கேள்வி நான் மறையாளர்’ என்பர். இதே பொருளில் ‘கேட்பவர்’ என்று சாயனர் உரை எழுதினார். வெள்ளைக்காரர்களோ இது ஒரு மன்னன்/ இளவரசன் பெயர் என்பர். இதற்கு அடுத்து வரும் துதியை சான்றாகக் காட்டுவர்.
Xxx
துஹ்சாசு 10-33-1
இதற்கு அப்படியே அகராதியில் பொருள் கண்டால் , பேய் அல்லது கெட்ட தேவதை , துஷ்ட தேவதை என்று வரும். ஆனால் லுட் விக் என்பவர் இதை பகை மன்னனின் பெயர் என்பார். பகைவர்களை நாம் பேய், பேமானி ,பேய்ப்பயல் என்னு திட்டுவது போல அவர் கொள்கிறார். இதன் மூலம் ஒரு பிசாசின் பெயரை நாம் அறிகிறோம்
Xxx
WOLF AND QUAIL- 10-39-13 ஓநாயும் காடையும்
இதற்கு உரை எழுதிய சாயனர், அவருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த யாஸ்கரை மேற்கோள் காட்டுகிறார். ‘இரவு’ என்னும் ஓநாயின் வாயிலிருந்து ‘உஷை’ (Dawn, Early Morning) என்னும் பறவையை மீட்டார்கள் என்று.
சங்கத் தமிழ் அகப்பாடல்களைப் போல இப்படி மறைபொருளில் பாடும் வழக்கம் ரிக் வேதத்தில் முதலில் துவங்கியதை ஒப்புக்கொள்கிறார்கள்
இரண்டாவது இது 1-112-8 துதியிலும் வருகிறது ஆனால் அங்கே அஸ்வினி தேவர்கள் செய்த அற்புதங்கள் பட்டியலில் வருவதால் வேறு பொருளும் இருக்கலாம். ஏனெனில் யாஸ்கர் காலத்துக்குள்ளேயே (கி.மு.850) வேதத்தில் உள்ள 600 சொற்களுக்கு பொருள் தெரியவில்லை என்று அரவிந்தர் தனது வேத அகராதியில் (Vedic Glossary by Sri Aurobindo) சொல்கிறார்.
ஆகவே சாயனர், யாஸ்கர் சொல் வதையும் ஒரு ஊகமாகவே கொள்ள வேண்டும் இதனால்தான் சங்கராசார்யார் போன்றோர் வேதத்தின் பொருள் காண்போரை மெச்சுவதில்லை. அதன் மந்திர ஒலியின் மஹிமையை மட்டுமே அவர்கள் போற்றுவர்.
Xxx
10-47-6 வைகுந்தன் , சப்தகு
இங்கு ஒரு அதிசய விளக்கம் வருகிறது. வைகுண்டம்/ன் என்ற பெயர் நமக்கு விஷ்ணுவின் இருப்பிடம் என்று தெரியும். அது ஒரு ரிஷியின் பெயர் – இந்திர வைகுண்டம்!!
அவரைப்பற்றிய வியப்பான செய்தி. அவர் விகுந்தா என்ற அரக்கியின் மகன்! அவரை இந்திரன் இரண்டாவது தாய் ஆக ஏற்றுக்கொண்டாராம். ஆக வேத காலத்திலேயே தேவர் – அரக்கர் கலப்பு உண்டு. கச்ச தேவயானி- சுக்ராசார்யார் கதை, கிருஷ்ணனின் குடும்பத்தில் அரக்கர் சம்பந்தம் முதலியவற்றிலும் இதை அறிய முடி கின்றது
‘சப்தகு’ என்பதற்கு பெரும் துதி பாடுவோரின் பிரபு என்று பொருள் எழுதினார்கள். ஆனால் இது பிருஹஸ்பதியின் ஒரு பெயர் என்றும் அவருடைய தேரை/ ரதத்தை ‘ஏழு எருதுகள்’ (Drawn by Seven Oxen) இழுப்பதால் இந்தப் பெயர் என்றும் உரை எழுதியுள்ளனர் சிலர்.
வேதம் முழுதும் ரதத்தை இழுக்க, பல பறவைகள் , மிருகங்களின் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன .
கலைமான்கள் இழுக்கும் சாண்டா கிளாஸ் வண்டி Santa Claus Sledge drawn by Reindeer கூட வேதத்தில் உளது. பைபிளுக்குப் புறம்பான இதை கிறிஸ்தவர்களும் நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டார்கள் (முன்னரே இது பற்றி எழுதியுள்ளேன்)
Xxx
10-48-8 பர்ணயன் , கரஞ்சன்
இந்த மந்திரத்தில் இரண்டு பேய்கள் பற்றிய தகவல் வருகிறது. பர்ணயன் , கரஞ்சன் என்ற இரண்டு மரத்தில் வசிக்கும் அரக்கர் பற்றி மந்திரம் எட்டில் (10-48-8) காண்கிறோம். மஹாபாரதத்தில் உள்ள யக்ஷப் பிரஸ்னம் என்ற பேயின் கேள்வி பதில் பகுதியை அறியாதோர் எவருமிலர். சங்க இலக்கியப் பாடல்களில் ‘அணங்குகள்’ பற்றி அறிகிறோம். ஏரி , குளம், மலை, மரம் ஆகிய எல்லாவற்றிலும் அணங்கு இருப்பதாக தமிழர்கள் பாடுவார்கள். அந் +அங்கு என்றால் உடல் இல்லாத (ஆவி) என்று பொருள்.
இந்த மந்திரத்தில் வரும் இரண்டு மரப் பேய்கள் பற்றி 1-53-8 மந்திரத்திலும் வருகிறது அங்கே ‘வாங்ருதா’ என்ற மேலும் ஒரு அரக்கர் பெயரையும் கேட்கிறோம் .
இதே துதியில் ‘கங்குகள்’ என்று ஒரு சொல் வருகிறது இவர்கள் யார் என்று தெரியவில்லை என்று வெள்ளைக்காரர்கள் எழுதிவிட்டனர்
ஒன்பதாவது மந்திரத்தில் ‘சாப்ய நமீ’ என்ற பெயர் வருகிறது – இவரை இந்திரனின் நண்பர் என்று சிலர் செப்புவர். ‘சய்யா’ என்பவரின் மகன் ‘நமி’ ; அவரை ‘சப்பிய நமீ’ என்பர் . பிற்காலத்தில் சமணர் பெயர்களில் ‘நமி’ நிறைய வருகிறது!
To be continued……………………………………………………
tags- பேய்கள், தேவதைகள்