Post No. 10,232
Date uploaded in London – 19 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்- ரிக்வேதம், பாரதி,வள்ளுவர் ஒற்றுமை -1 (10,232)
ரிக் வேதத்தில் உழவு, விவசாயம், வேளாண்மை பற்றிய ஏராளமான குறிப்புகளும் பாடல்களும் உள்ளன ; வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று சொன்ன மாக்ஸ் முல்லர் கும்பலுக்கும் மார்க்சீய கும்பலுக்கும் மிதியடி , செமை அடி , தடியடி கொடுக்கும் பாசுரங்கள் இவை. ரிக்வேதப் புலவன் செப்பியதை பாரதியும் வள்ளுவனும் பிற்காலத்தில் எதிரொலித்தத்தைக் காண்போம்.
ரிக்வேத ஸம்ஸ்க்ருதப் பாடல்கள், அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகிய அனைத்தும் விக்கிபீடியா முதலிய வெப் சைட்டுகளில் அனைவர்க்கும் இலவசமாகக் கிடைக்கும். ஆயினும் புத்தகங்களில் படிக்கும்போதுதான், அவர்கள் எழுதிய அடிக்குறிப்புகள் அவர்களுடைய உள் நோக்கத்தை அம்பலப்படுத்திவிடுகிறது .
வேத கால இந்துக்களுக்கு ‘ஆரியர்கள்’ என்று ஒரு இன முத்திரை குத்தி, ‘தஸ்யூக்கள் தாஸர்’களுக்கு திராவிட அல்லது பூர்வ குடி முத்திரை குத்தி இந்தியாவை பிளவுபடுத்தியது மார்கசீய, மாக்ஸ் முல்லர் கும்பல்கள் . வேத கால இந்துக்களுக்கு விவசாயம் தெரியாது, அவர்கள் ஆடு மாடு மேய்த்த நாடோடிக் கும்பல் என்றும் முத்திரை குத்தி அயோக்கியத்தனம் செய்தது இந்தக் கும்பல்.
இவர்களை எல்லாம் தவிடு பொடி ஆக்க, சொற்தேரின் சாரதியாம் பாரதி, எல்லா இடங்களிலும் பாரத நாட்டை ஆரிய நாடு என்று பாராட்டி, முடிந்த இடங்களில் எல்லாம் ஆரிய என்பதை உண்மைப் பொருளில் பயன்படுத்தினார். ஆரிய என்றால் ‘படித்தவன்’, ‘பண்பாடு மிக்கவன்’, ‘உயர்ந்தவன்’, ‘உன்னதமானவன்’ என்ற பொருளில் பாடல்களில் இயன்ற மட்டும் பயின்றான் பாரதி.
மற்றோரு பாடலில் ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்; வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்’ என்றான். இது ரிக் வேதக் கருத்தாகும் . ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களிலும் பரவிக்கிடக்கிறது உழவு பற்றிய குறிப்புகள். இதனால் எந்த அரை வேக்காடும் இது பிற்கால வேதப் பகுதி என்று பிதற்றும் வாய்ப்பும் தவிடு பொடி !
ரிக்வேதத்தின் மிகப்பழைய பகுதி என்று கருதப்படும் நாலாவது மண்டலத்தில் உள்ள விவசாயப் பாட்டு , அக்காலத்தில் நிலச் சுவான்தார்கள், அவர்களுக்குக் கீழே விவசாயத் தொழிலாளர்கள் இருந்ததையும் காட்டுகிறது என்கிறார் பகவான் சிங். அவர் வேதகால ஹரப்பன்கள் THE VEDIC HARAPPANS BY BHAGAWAN SINGH என்ற விரிவான ஆதாரபூர்வமான நூல் எழுதி சிந்துவெளி நாகரீகம் வேத கால நாகரீகமே என்று நிரூபிக்கிறார். அனைவரும் படிக்க வேண்டிய நூல் அது. அவர் 55 விவசாய சொற்களை ரிக் வேத துதிகளின் எண்களுடன் கொடுத்துள்ளார். அதில் பல தமிழ் சொற்கள் !
XXX
ஒன்பதாவது மண்டலத்தில் (RV.9-112-3)ஒரு புலவர்,
“நான் ஒரு புலவன்; என் அப்பா ஒரு டாக்டர்; என் அம்மா ஒரு மாவாட்டி” என்கிறார். அந்தப் பெண்மணி சோள மாவு அரைக்கிறார். ஆக ஒரே குடும்பத்தில் பல தொழில் புரிவோர் இருந்தனர்.
வேதம் முழுதும் ‘ஹவிஸ்’ என்னும் சோற்று உருண்டை நெய்யுடன் தீயில் ஆகுதி கொடுக்கப்பட்டது. இது நெல் விளைச்சல் பற்றியது. ‘யவ’ என்பது வேதம் முழுதும் வருகிறது. இது பார்லியை மட்டும் குறிப்பதல்ல. எல்லா தானியத்துக்கும் பொதுவானது என்று வெள்ளைக்காரப்பயலே ஒப்புக் கொண்டுள்ளான். இன்று நாம் பயன்படுத்தும் ‘தானியம்’ , ‘களம்’ முதலியன அப்படியே ரிக் வேதத்தில் உள்ளது!
சிலப்பதிகாரத்திலும், கம்ப ராமாயணத்திலும் வரும் ‘உழவர் ஓதை’ (FARMERS SONGS) என்பது ரிக் வேதத்தில் உள்ளது. மாணிக்க வாசகர் முதலிய அடியார்கள் தானியத்தைக் குத்தும்போது பாடும் ‘உலக்கைப் பாட்டு’ முதலியவற்றை நமக்கு அளிக்கின்றனர். முக்கூடற்பள்ளு போன்ற பாடல்களில் நாம் நெல் வகைகள் மற்றும் உழவர் பாட்டுக்களைப் பாடுகிறோம். பல்லவியுடன் அமைந்த பாடல்களும் உழவர் பாடல்களாக ரிக் வேதத்தில் உள்ளன. உலக மஹா ஜீனியஸ், பேரறிஞன் வியாசர் தொகுத்ததில் நமக்குக் கிடைத்த பாடல்களிலேயே இவ்வளவு விஷயங்கள்; கிடைக்காமற் போன வேத ‘சாகை’களோ ஆயிரம் !
சீதா தேவி
சீதா என்று நாம் வணங்கும் சீதா தேவியே ‘வரப்பு’ தெய்வம். அவளை ஜனக மஹா மன்னன் பீஹார் மாநிலத்தில் வயல் வரப்பில் கண்டு எடுத்ததால் அவள் பெயர் சீதா. அவள் மட்டுமின்றி நான் இன்று பிரஸ்தாபிக்கப்போகும் அற்புதமான விவசாயப் பாடலில் சு’னா’, ‘சீரா’ என்ற தேவிமார்களும் வருகின்றனர். இவர்கள் எல்லாம் விவசாய சொற்களை கடவுள் ஆக்கிய உருவகம்(PERSONIFICATION) என்பர் வெளிநாட்டார். ஆனால் உலகில் விவசாயப் பாட்டே வேறு எந்த பழைய நாகரீகத்திலும் கிடையாது.
நமக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த கிரேக்க மொழியில் பல விவசாய, தாவர தேவதைகள் உள்ளன. கிரேக்க மொழிக்குப் பின்னர் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த திருக்குறளில் பத்து குறள்கள் விவசாயம் பற்றி உள்ளது.
ருது என்ற பருவம் ஆறு வகை என்ற குறிப்பும் ரிக் வேதத்தில் காணக்கிடக்கிறது. இதைத் தமிழர்கள் அப்படியே எடுத்துக்கொண்டு பருவங்களை ஆறு என்று வகுத்தனர். ரிக் வேத இந்துக்கள் பருவங்களை ஆறாகப் பிரித்து அவை பற்றியும் மழை பற்றியும் விரிவாகப் பாடுவது அந்த சமுதாயத்தின் பிரதானத் தொழில் விவசாயம் என்பதைக் காட்டுகிறது.
கட்டுரையின் இரண்டாவது பகுதியில் இரண்டு ரிக் வேத விவசாயப் பாடல்களை ( RV.4-57 & RV 10-101) திருக்குறளின் உளவு பற்றிய பாடல்களுடன் ஒப்பிட்டு ஆராய்வோம்.
TO BE CONTINUED……………………….
tags– உழவுக்கும் தொழிலுக்கும், , ரிக்வேதம், பாரதி,வள்ளுவர், விவசாயம், உழவு