ஸ்ரீ அப்பைய தீட்சிதர்  – 2 (Post No.10,233)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,233

Date uploaded in London – 20 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ அப்பைய தீட்சிதர்  – 2

    தீட்சிதரைக் கொலை செய்ய அரண்மனையிலேயே ஒரு முறை சதி ஒன்று அரங்கேறியது. மன்னரின் சேனாதிபதி அவரை மன்னர் அழைத்தார் என்று கூறி நடுநிசியில் வரவழைத்தார். வழியில் அவரைக் கொல்ல வாள்களுடன் பல வீரர்களையும் அவரே அனுப்பி வைத்தார். சதியை ஒரு க்ஷணத்தில் புரிந்து கொண்ட தீக்ஷிதர் மார்க்கசகாயனான சிவபிரானைப் பிரார்த்தித்த வண்ணம் நடக்கலானார். உடனே வீரர்கள் செயலற்றுக் கற்சிலை போல அப்படியே நின்றனர். காலையில் நடந்ததை அனைவரும் உணர்ந்து அவரது மஹிமையை இன்னும் அதிகம் உணர்ந்தனர்.

     ஆனாலும் அரசவை பண்டிதரான தாதாசாரியாரின் வன்மம் தீரவில்லை. கடைசி முயற்சியாக அவர் காட்டு வழியில் தீக்ஷிதர் பல்லக்கில் சென்று கொண்டிருக்கும் போது தன் ஆட்களை ஏவி தீக்ஷிதரைத் தாக்கினார். நிலைமையை உணர்ந்த தீக்ஷிதர் எட்டு ஸ்லோகங்கள் அடங்கிய நிக்ரஹாஷ்டகம் என்ற துதியைப் பாட, தாக்க வந்த முரடர்கள் மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்தனர். கருணை உள்ளம் கொண்ட தீக்ஷிதர் அவர்களை மயக்கம் தெளிவித்து எழுப்பச் செய்தார். அவர்களுள் தாதாசாரியாரும் இருந்தார். அவர் மனம் மாறி மன்னிப்புக் கேட்க தீக்ஷிதரும் அவரை உடனே மன்னித்தார்.

   பயணத்தின் போது பயணம் சுகமாக நடந்தேற அவர் இயற்றிய  மார்கபந்து ஸ்தோத்திரத்தை அனைவரும் சொல்லிக் கொண்டே பயணத்தைச் செய்வது இன்றும் உள்ள ஒரு பழக்கமாகும்.

   சென்னையில் அவர் வந்து சில காலம் தங்கி இருந்தார். அவர் தங்கி இருந்த இடம் வேத ஸ்ரேணி. இப்போது அது பெயர் மருவி வேளச்சேரி ஆகி விட்டது. அங்கு கருணாம்பிகை சமேத தண்டீஸ்வரர் ஆலயத்தின் அருகே ஒரு குளத்தை வெட்டினார். அங்கு அம்மனின் காலடியில் ஸ்ரீசக்ரத்தையும் ஸ்தாபித்தார். அவர் அமைத்த குளம் அப்ளாங்குளம் என்று பெயர் மருவி இன்று ஐ ஐ டி காம்ப்ளெக்ஸில் உள்ளது. திருவான்மியூர் சென்று ஈஸ்வரனை அவர் தரிசிக்கச் சென்ற போது அவருக்காக ஈஸ்வரன் மேற்காகத் திரும்பினார் என்ற ஒரு வரலாறும் உண்டு.

    ஒரு முறை அவர் வயிற்றுவலியால் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அப்போது மன்னர் அவரிடம் பேச வந்தார். அவரது நிலையைக் கண்ட மன்னர் செய்வதறியாது திகைத்த போது அருகிலிருந்த துண்டில் தன் வலியை அவர் ஏற்றினார். துண்டு மேலும் கீழுமாகத் துடிதுடிக்க ஆரம்பித்தது. வியப்புடன் இதைக் கவனித்த அரசர் அப்பைய தீக்ஷிதர் தனது வலியிலான துடிதுடிப்பைத் துண்டின் மீது ஏற்றி இருப்பதை அறிந்து கொண்டார். பேச்சு முடிந்தவுடன் துண்டிலிருந்த வலியைத் தன் உடலில் ஏற்றுக் கொண்டு வலியினால் துடிதுடிக்க ஆரம்பித்தார் அவர்.

இதைக் கண்ணுற்று வியப்படைந்த அரசர், ‘இவ்வளவு வல்லமை கொண்ட நீங்கள் இந்த வலியை அறவே அகற்றி விடலாமே’ என்றார்.

“அப்படியில்லை, கர்மாவை ஒருவர் அனுபவித்தே ஆக வேண்டும்’ என்று கூறி கர்ம பலன்களைக் கழிக்க வேண்டிய அவசியத்தை அரசருக்கு உணர்த்தினார் அவர்.

   கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் ஆகிய மூன்று யோகங்களிலும் தேர்ந்த அவர் அதை அனுஷ்டானத்திலும் காட்டி வந்தார். அதே போல அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் ஆகிய மூன்று நெறிகளும் உண்மையே என்று கூறியதுடன் சிறிது கூட த்வேஷம் இன்றி அனைவரையும் சமமாகப் பாவித்து வாழ்ந்து வந்தார் அவர்.

    சிவபிரானை அல்லும் பகலும் அனவரதமும் துதித்து வந்த அவருக்குத் தன் பக்தி உண்மையில் சரியாக இருக்கிறதா என்ற சந்தேகம் ஒரு முறை தோன்றியது. ‘சாகும் காலத்தில் உண்டாகும் வேதனைகளால் அறிவு கலங்கி விடும். அப்போது என் சிந்தனையாகிய வண்டு, சிவனடி தியானத் தேனில் நிலைக்குமோ? நோய், கவலை, கலக்கம் முதலியவற்றால் இளைக்குமோ?’ என்று அவருக்கு இப்படி சந்தேகம் வரவே தனது சிஷ்யர்களை அழைத்தார்.


   ‘நான் ஊமத்தங்காயைத் தின்னப் போகிறேன். அதனால் அறிவு கலங்கிப் பிதற்றுவேன். அது தெளிவும் வரையில் நான் சொல்பவை, செய்பவை எல்லாவற்றையும் அப்படியே எழுதி வையுங்கள்’ என்று கூறி விட்டு ஊமத்தங்காயைத் தின்றார். பித்தம் உண்டாகி பிதற்ற ஆரம்பித்தார். நேரம் சென்றது. மாற்று மருந்தால் தெளிவு பெற்றார். தனது சீடர்களான மாணவர்கள் எழுதி வைத்த தனது பிதற்றல்களை வாங்கிப் பார்த்தார். அத்தனையும் ஆத்மார்ப்பண ஸ்துதி ஸ்லோகங்களாகவே அமைந்திருந்தன. இதுவே உன்மத்த பிரலாபம் என்ற அற்புதமான நூலாகும். இதில் ஐம்பது ஸ்லோகங்கள் உள்ளன.

    மிகச் சிறந்த பண்டிதரான அவர் 104 அபூர்வமான நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன.

    அவர் மஹாவிஷ்ணுவிடம் தனக்குள்ள பக்தியைக் காண்பிக்கும் வண்ணம் வரதராஜ ஸ்தவம் என்ற நூலை இயற்றினார். அவரது அபீதகுசாம்பாள் ஸ்தோத்திரம் அவருக்கு தேவியிடம் உள்ள பக்தியைக் காண்பிக்கிறது. சூரியனிடம் உள்ள பக்தியினால் ஆதித்ய ஸ்தோத்ர ரத்தினத்தை அவர் இயற்றினார்.

    ஆதிசங்கர பகவத்பாதாளின் பிரம்மசூத்ர பாஷ்யத்திற்கு வாசஸ்பதி மிஸ்ரர் என்பவர் இயற்றிய பாமதி என்ற உரை மிகவும் போற்றப்படும் ஒரு உரையாகும். அதற்கு அமலானந்தர் என்பவர் கல்பதரு என்ற சற்று கடினமான ஒரு உரையை எழுதியுள்ளார். இந்த கல்பதருவை அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் எளிதாக்கி அப்பைய தீக்ஷிதர் பரிமளம் என்ற ஒரு உரையை எழுதினார். இது மிகவும் பிரசித்தி பெற்ற நூலாகும்.

to be continued………………………………………………..

tags- அப்பைய தீட்சிதர் – 2

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: