WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,237
Date uploaded in London – 21 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்ரீ அப்பைய தீட்சிதர் – 3
பிரம்மசூத்திரத்தின் நான்கு வித தத்துவ உரைகளை எடுத்துக் காட்டும் வண்ணம் உள்ள சதுர்மத சாரம் அவரது பரந்த மனப்பான்மையைக் காட்டும் ஒரு அற்புத நூல். அதில் நயமஞ்சரி என்பது அத்வைதத்தையும், நயமணிமாலை என்பது கண்டமதத்தையும் நய-மயூக மாலிகா ராமானுஜ சித்தாந்தத்தையும் நய முக்தாவளி என்பது மத்வருடைய சித்தாந்தந்த்தையும் நயம்பட விரித்துரைக்கிறது. இதில் சிறப்பு என்னவெனில் அந்தந்த சித்தாந்தத்தைக் கொண்டவர்கள் இவரது அந்தந்த நூலைத் தங்களுக்கு உரியதென ஏற்றுக் கொண்டதோடு அதை சீடர்களுக்கும் சொல்லித் தருவது தான்!
அவரது சித்தாந்தலேச சங்கிரகம் மிகவும் பிரபலமான ஒரு நூல். அத்வைதம் பற்றிய அனைத்தையும் சொல்லும் நூல் இது. ஏக-ஜீவ- வாதம், நாநாஜீவ வாதம், பிம்பப் பிரதிபிம்பவாதம், ஸாக்ஷித்வ வாதம் உள்ளிட்ட எதையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் அலசி ஆராய்ந்து அவற்றிற்கான எதிர் வாதங்களையும் வைத்து, அனைத்தும் சம்மதமே என்ற தனது பரந்த நோக்கை முத்திரையாகப் பதிக்கிறார் தீக்ஷிதர்.
ஆனந்த லஹரி சந்திரிகா என்ற அவரது நூல் பற்பல வித்தியாசமான தத்துவங்களை விளக்குகிறது. கடைசியில் அனைத்தும் சுத்தாத்வைதத்தை அணுகுகிறது என்று நூலை முடிக்கிறார் அவர்.
இப்படி அவரது ஒவ்வொரு நூலும் ஒரு மகத்தான சிறப்பைக் கொண்டுள்ளது. அவை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டிய நூல்களாகும்.
ஏராளமான சீடர்களைத் தன் வாழ்நாளில் கொண்ட அப்பைய தீக்ஷிதர் சிவ மஹிமையை உலகெங்கும் பரப்பினார்.
வயதான காலத்தில் ஒரு நாள் அவர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்கச் சென்று பஞ்சாக்ஷரத்தை ஜபித்தவாறே படியேறியதை கோவில் தீக்ஷிதர்கள் பார்த்தனர். அன்று சைத்ர பூர்ணிமை. காலை முதல் முகூர்த்தம். நடராஜரின் கற்பூர நீராஜன சமயம். அப்போது அவர் சந்நிதியில் அப்படியே நடராஜரோடு ஐக்கியமானதை அவர்கள் கண்டனர்.
அப்போது அவர் கூறிய ஸ்லோகம் :- ஆபாதி ஹாடகஸபா நடபாத பத்ம
ஜ்யோதிர்மயோ மனஸிமே தருணாருனோஓ(அ)யம்
இதன் பொருள் :- வானில் பொன் ஒளியோடு சூரியன் திகழ்வதைப் போல நடராஜரின் திவ்ய பொற்றாமரையின் அழகு என் கண்ணைப் பறிக்கிறது….” இப்படி பாதி ஸ்லோகம் சொல்லும் போதே அவர் நடராஜருடன் கலந்தார். இதன் மீதி பாதியை அவரது சகோதரரின் பேரனான நீலகண்ட தீக்ஷிதர் பின்னால் நிறைவு செய்தார்.
அப்பைய தீக்ஷிதர் 1593ஆம் ஆண்டு 73ஆம் வயதில் நடராஜருடன் கலந்தார்.
அவரது மறைவைப் பற்றிய அபூர்வமான ரகசிய செய்தி ஒன்றையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
சிதம்பரம் அண்ட் நடராஜா (Chidambaram and Nataraja – B.G.LSwami) என்ற ஒரு அருமையான ஆய்வு நூலை பி.ஜி.எல்.ஸ்வாமி என்பவர் எழுதியுள்ளார். அதில் எட்டாம் அத்தியாயத்தில் நந்தனார், மாணிக்கவாசகர், அப்பைய தீக்ஷிதர் ஆகியோர் சித்-அம்பரத்தில் நுழைந்து திரும்பி வரவில்லை என்ற செய்தி பதிவு செய்யப்படுகிறது.
Nanda, Manickavasaka and even the historically known Appayya Diksita are said to have entered the chit-ambarm never to return. The basis of such legends could obviously be that there was a ‘secret’ chamber with the ‘tilla’ where yogis entered into eternal Samadhi.
There appears to have been an unmistakable association of a yogic type of Sadhana known by the name of Dahara Vidya or Daharopasana with Nataraja Cult.
சிதம்பரம் நடராஜருக்குப் பக்கத்தில் இப்போது ஒரு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அங்கு ஒரு ரகசிய அறை இருக்கிறது. நடராஜர் வழிபாட்டுடன் இணைந்துள்ள தஹர வித்யா அல்லது தஹரோபாசனா மூலம் அவர்கள் இறைவனுடன் ஒன்றி விட்டனர். இதன் விளக்கம், அறை எங்குள்ளது என்பன போன்ற விவரங்கள் அந்தப் புத்தகத்தில் உள்ளது.
அப்பைய தீக்ஷிதரின் பெருமை எல்லையற்றது. அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். அவரது நூல்களின் பெருமையோ சொல்லுக்கு அப்பாற்பட்டது. அவர் வாழ்வில் அவர் பலருக்கு உபதேசித்தார்.
பட்டோஜி தீக்ஷிதர் என்பவர் சிறந்த ஒரு வியாகரண பண்டிதர். ஸித்தாந்த கௌமுதி என்ற சிறந்த நூலை இயற்றியவர் அவர். தீக்ஷிதரின் பெருமையைக் கேள்விப்பட்ட அவர் அவரிடம் வேதாந்தம் உள்ளிட்டவற்றைக் கற்பதற்காக அவர் இருந்த சிதம்பரத்திற்கு வந்தார். அவரிடம் கற்க வேண்டிய அனைத்தையும் கற்றார். தனது நோக்கத்தைப் பூர்த்தி செய்து கொண்டு அவர் காசியை அடைந்த பின்னர் அங்கு தீக்ஷிதரின் பெருமையை அனைவரிடமும் கூறினார்.
அவர் தீக்ஷிதரைப் போற்றிப் புகழ்ந்து கூறிய ஸ்லோகம் இது:-
அப்பய்ய தீக்ஷிதேந்த்ரான் அசேஷ வித்யாகுரூன் அஹம் வந்தே!
யத்கிருதி போதாபோதௌ வித்வதவித்வத்விபாஜ கோபாதீ||
இதில் தீக்ஷிதரின் பெருமையை அழகுற அவர் கூறியுள்ளார். ஒருவரை சிறந்த பண்டிதரா இல்லையா என்று நிர்ணயிக்க வேண்டுமென்றால் அவர் அப்பைய தீக்ஷிதரின் நூல்களை நன்கு அறிந்தவரா என்று பார்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளதிலிருந்து அப்பைய தீக்ஷிதரின் பெருமையை நன்கு அறியலாம்!
அப்பைய தீக்ஷிதரின் தாள் பணிந்து வணங்குவோம்! சிதம்பரம் நடராஜரைத் துதித்து அவன் அருள் பெறுவோமாக! நன்றி வணக்கம்!
முற்றும்.
tags — அப்பைய தீட்சிதர் – 3