Post No. 10,241
Date uploaded in London – 22 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்ரீ ஹரதத்தாசாரிய சுவாமிகளின் சதுர்வேத தாற்பரிய சங்கிரகம்! : ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு!!
ச.நாகராஜன்
கள்ளக்குறிச்சி ஆதிசைவர்கள் நலவாழ்வு மையத்தின் நிறுவனரான சிவஸ்ரீ தில்லை எஸ். கார்த்திகேய சிவம் சிறப்பு மிக்க பழைய நூல்களை வெளியிட்டு சிவப்பணியைச் செய்து வரும் சிவத் தொண்டர் என்பதை இவர் வெளியிடும் பல நூல்களின் மூலமாக நன்கு அறிகிறோம்.
இந்த வரிசையில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஒரு அரும் நூலான ‘சதுர்வேத தாற்பரிய சங்கிரகம் இவரால் 2019ஆம் ஆண்டு மறு பதிப்பைப் பெற்றுள்ளது. ஸ்ரீ ஹரதத்தாசாரிய சுவாமிகள் இயற்றிய இந்த நூலை யாழ்ப்பாணத்து வடகோவைச் சுயம்புநாதபிள்ளை குமாரராகிய வித்துவான் சபாபதி பிள்ளை அவர் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
ஸ்ரீ ஹரதத்தரின் சரிதத்தைச் சுருக்கமாக சிவஸ்ரீ கார்த்திகேய சிவம் தந்துள்ளார்.
காவிரியாற்றின் வடகரையில் உள்ள கஞ்சனூரில் வைணவ மரபில் அவதரித்தவர் சுதர்ஸனன் என்பவர். இவர் விபூதி தரித்து ஸ்ரீ அக்னீஸ்வரரைத் தினமும் வழிபடலானார். இதனால் வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த பெற்றோர் அதிர்ச்சியுற்றனர். தந்தை வாசுதேவர் மிகவும் கோபம் கொண்டு அவரை வீட்டை விட்டு வெளியே துரத்த, ஹரதத்தர் சிவபிரானைச் சரண் புகுந்தார். ஹரன் அவர் முன் காட்சி தந்து ‘உன் உடல் பொருள் ஆவி மூன்றையும் எனக்குத் தத்தம் செய்க” என்று கூற அப்படியே செய்தார் சுதர்ஸனன். ‘மகனே! ஹரனான எனக்கு உடல் பொருள் ஆவியைத் தந்தமையால் உனக்கு ‘ஹரதத்தன்’ என்ற தீக்ஷை நாமம் தந்தோம்’ என்று அருள் பாலிக்கிறார் சிவபிரான். ஊரில் உள்ள வைணவர்கள் வெகுண்டெழுந்து ‘சிவனே பரம்’ என்று பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்து கொண்டு சொல்ல முடியுமா என்று ஹரதத்தரைக் கேட்டனர். அப்படியே செய்து காட்டினார் அவர். அனைவரும் பிரமித்தனர்.
ஸ்ரீ ஹரதத்தரின் சரிதத்தை அழகுற விளக்கும் பதிப்பாசிரியர் தில்லை கார்த்திகேய சிவம், ஹரதத்தர் எழுதிய 5 நூல்களின் விவரங்களையும் தந்துள்ளார்.
அடுத்து, ஸ்ரீ ஹரதத்தர் இயற்றிய சுலோக பஞ்சகம், எளிய தமிழில் 22 முக்கியக் கருத்துகளாகத் தரப்பட்டுள்ளது.
அடுத்த பகுதியில் ஹரதத்தரின் சதுர்வேத தாற்பரிய சங்கிரகம் நூலைத் தமிழில் தந்துள்ள ஸ்ரீ சபாபதி நாவலரின் வரலாற்றைச் சுருக்கமாகத் தந்துள்ளார் தில்லை கார்த்திகேய சிவம்.
வடமொழி தென்மொழியில் வல்லவர் சபாபதி. ஒரு சமயம் அவரை குனம் நோய் பீடிக்க அவர் வருத்தமுற்று நல்லூர் கந்தசுவாமி கோவில் சென்று முருகனை உளமார வழிபட்டு வந்தார். ஒரு நாள் இரவு அவர் கனவில் அர்ச்சகர் பாயசம் கொடுத்து அருள, ஆனந்த பரவசராய் சபாபதி அருள் பாடல்களைப் பாடலானார்.
அவர் இயற்றிய 19 நூல்களின் பட்டியலை இந்தப் பகுதியில் காண முடிகிறது.
அடுத்த பகுதியே முக்கிய நூலான சதுர்வேத தாற்பரிய சங்கிரகம்.
இந்த நூல் சிவனின் பரத்துவத்தை நிர்ணயம் செய்து ஸ்தாபிக்கிறது.
நூலின் சில முக்கிய கருத்துக்களின் திரண்ட சாரம் வருமாறு :-
உலகிற்கு முதலாம் தன்மை சிவபிரானுக்கே பொருந்தும்.
ஆற்று நீர் எல்லாம் கடலைச் சேர்வது போல அனைத்து தேவர்களின் வழிபாடும் சிவனையே சென்று அடைகிறது.
ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் இந்த ஆறும் பகம் எனப்படும். இவை சிவபிரானுக்கே உரியன. ஆதலின் அவர் பகவன் எனப் படுகிறார்.
இதற்கு பிரமாணம் : ஐசுவரியத்திற்கு ஈசுர பதச் சுருதி
வீரியத்திற்கு உக்கிர பதச் சுருதி
புகழுக்கு சிவபதச் சுருதி
திருவுக்கு இருக்கு வேதம்
ஞானத்திற்கு சர்வக்ஞ சுருதி
வைராக்கியத்திற்கு காமரிபுபதச் சுருதி. இவையே பிரமாணமாகும்,
வாய்மை, பொறை, தைரியம், அதிட்டித்தல், ஆன்மபோதம், சிருஷ்டித்தல், ஆசையின்மை, தவம், புத்தி, ஈஸ்வரத்வம் என்னும் 10 குணங்களும் சிவபிரானுக்கே இயைவன.
அதர்வண வேதம் பகவன் நாமத்தை சிவ நாமமாகக் கூறுகிறது.
ஸ்வேதாச்சுவதரோபநிடதம் சிவபிரானையே மகேசன் எனக் கூறுகிறது.
சிவபிரான் விஸ்வாதிகர்.
ஈசான மந்திரம் சிவபிரானை, ‘வித்தை எல்லாவற்றிற்கும் ஈசர்’ என்றும், ‘பூதங்கள் அனைத்திற்கும் பதி’ என்றும் ‘பிரம்மாவுக்கு அதிபதி’, ‘பிராமணருக்கதிபர்’ என்றும் கூறுகிறது.
ஆதித்ய உபநிடதம் சிவபிரானை ‘ஆதித்தியாந்தரியாமி’ சிவபிரான் என்று கூறுகிறது.
காயத்ரி மந்திரத்திற்குரிய பொருள் சிவபிரானே.
‘மேதபதி’, ‘பீமன்’ என இவ்வாறு பல பெயர்கள் சிவனுக்கே உண்டு.
ரிக் வேதம் அழிவில்லாத பல திருமேனிகள் சிவனுக்கு உண்டு எனக் கூறுகிறது.
உடைந்த கப்பல் இன்னொரு கப்பலை கரையை அடையச் செய்விக்க முடியாது. செத்துப் பிறக்கும் தேவர்கள் முக்தியை அளிக்க வல்லவர் அல்லர். என்றும் பிறவா சிவனே முக்தி அளிக்கும் ஒரே இறைவன்.
இப்படி ஏராளமான கருத்துக்களை விளக்கமாக அளிக்கிறது இந்த நூல். முத்தாய்ப்பாக இந்த நூல் சிவபிரானுக்கு ஒரு மாலை என்றும், மக்களுக்கு வேத சிவாகமப் பற்றை விளைத்து பசுநூற் பற்றைக் கெடுத்து, சிவபிரான் திருவடிப் பற்றை வளர்க்கும் என்று கூறி முடிகிறது.
சைவ சமய மேன்மையைக் கூறும் அரிய நூல் இது.
48 பக்கம் கொண்ட இந்த நூல் அழகுற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூபாய் 50.
நூலைப் பாராட்டி, திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடம் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தம்பிரான், மாயவரத்தில் அமைந்துள்ள சிவபுரம் வேத சிவாகம பாடசாலையின் நிறுவனர் சிவஸ்ரீ ஏ. விஸ்வநாத சிவாசாரியார் ஆகியோர் ஆசியுரைகளையும் பாராட்டுரைகளையும் அளித்துள்ளனர்.
பாராட்டுக்குரிய இந்த நூல் சைவர்கள் படிக்க வேண்டிய நூல் மட்டுமல்ல; இறைபக்தி கொண்ட அனைவரும் படிப்பதற்குரிய நூலாக அமைகிறது.
சிவஸ்ரீ தில்லை கார்த்திகேய சிவம் அவர்களைப் பாராட்டுகிறோம்.
***
tags- ஹரதத்தாசாரிய சுவாமிகள், சதுர்வேத தாற்பரிய சங்கிரகம், ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் ,
Kannan B
/ October 22, 2021அன்புடையீர்,ஸ்ரீஹரதத்தாசாரிய சுவாமிகள் பற்றிஉங்களுக்கு ஏற்கனவே தெரிவித்திருந்தேன். இப்போது ஆதிசைவர் நலவாழ்வு மையம் மூலம் அனைவருக்கும் சுவாமிகளைப் பற்றி அறிந்துகொள்ள வைத்துவிட்டீர்கள். நல்ல முயற்சி, பாராட்டுக்கள். சுருக்கமாக நன்றாக இருந்தது. மேலும், தங்களிடம் சதுர்வேத தாற்பரிய ….புத்தகம் இருக்கிறதா?இல்லாவிடில் என்னிடம் பொருள் விளக்கத்துடன்(151பாடல்கள்) புத்தகம் pdf-ல் உள்ளது. அனுப்பி வைக்கட்டுமா?சுவாமிகள் ஆற்றிய மேலும் சில அதிசய சம்பவங்களைச் சொல்லியிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.Well Done.KannanDelhiSent from my Samsung Galaxy smartphone.