மனமும் உலக அனுபவங்களும் மலரும் அதன் மணமும் போல! (Post.10,244)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,244

Date uploaded in London – 23 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மனமும் உலக அனுபவங்களும் மலரும் அதன் மணமும் போல!

ச.நாகராஜன்

யோக வாசிஷ்டத்தில் மஹரிஷி வசிஷ்டர் ராமருக்கு பல இரகசியங்களை விளக்கி வருகிறார். அதில் ஒன்று மனம் பற்றியதாகும்!

மஹரிஷி வசிஷ்டர் ராமருக்கு மனதின் தன்மையை ஒரு மலருக்கு ஒப்பிட்டு விளக்குகிறார் இப்படி:-

“உலகம் என்பது மனதினால் உருவாக்கப்பட்ட ஒன்றே! ஒரு மலரை எடுத்துக் கொள்வோம். அதன் அற்புதமான வாசனை மலரிலேயே இருக்கிறது. ஆனால் அது எங்கும் பரவி மலரிலிருந்து தனித்து இருப்பது போலத் தோன்றுகிறது. எப்படி மலரும் அதன் மணமும் ஒன்றாகவே இருக்கிறதோ அது போலவே  உலக அனுபவமும் மனமும் ஒன்றாகவே தான் உள்ளது.  மனம் எப்போது இல்லாமல் போகிறதோ அப்போது உலக அனுபவங்களும் இல்லாமல் போகின்றன.

இப்படிக் கூறி விட்டு வசிஷ்டர் இதை விளக்க சுக்ரனின் கதையைக் கூறலானார்.

கதை இது தான்:-

மஹரிஷி பிருகுவும் அவரது மகனான சுக்ரனும் ஒரு முறை ஆழ்ந்த தியானத்தில் இருந்தனர். மகனான சுக்ரன் தியானத்திலிருந்து விடுபட்டு ஆகாயத்தைப் பார்த்தார். அப்போது அங்கு அழகிய அப்ஸரஸ் ஒருத்தி சென்று கொண்டிருந்தாள். அற்புதமான அவளது அழகிலே ஈடுபட்டார் சுக்ரன். அவளுடன் சேர்ந்திருக்க அவர் விரும்பினார். ஆகவே உடனே தன் பௌதிக உடலை விட்டு விட்டு சூக்ஷ்ம சரீரத்தில் மேலே சென்றார். அங்கு அந்த அப்ஸரஸை சந்தித்தார். அவளுடனேயே இருக்க ஆரம்பித்தார். காலம் சென்றது. அவரது புண்ய பலன் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து முற்றிலும் இல்லாமல் போனவுடன் அவர் ஒரு மழைத்துளி வழியாக பூமியில் வந்து விழுந்தார். அந்த மழைத்துளி ஒரு நெற் பயிராக  வளர சுக்ரன் இப்போது அந்தப் பயிரில் இருந்தார். அந்த நெல்லிலிருந்து வந்த அரிசியை ஒரு பிராமணன் உண்டார். சுக்ரன் அந்த பிராமணருக்குப் பிள்ளையாகப் பிறந்தார். இப்படி பல ஜென்ம மரணங்களுக்குப் பின்னர் ஒரு தபஸ்விக்கு அவர் பிள்ளையாகப் பிறந்தார். அவரும் தவம் செய்ய ஆரம்பித்தார்.

சுக்ரனின் பௌதிக உடலோவெனில் அவரது தந்தையான பிருகு மஹரிஷியின் அருகிலேயே இருந்தது. தியானம் கலைந்து எழுந்த பிருகு மஹரிஷி தன் மகனைக் காணாது திகைத்தார். மகனது உடல் மட்டுமே இருந்தது.  ஆகவே யமனே சுக்ரனது உயிரை எடுத்துச் சென்று விட்டான் என்று அவர் நினைத்தார். அவருக்கு யமன் மீது அளவற்ற கோபம் வந்தது. இதனால் யமன் பயந்து போனான். எங்கே அவர் தன்னைச் சபித்து விடுவாரோ என்று எண்ணிய யமன் அவர் முன்னே தோன்றி, தான் தனது கடமையை மட்டுமே செய்வதாகப் பணிவுடன் கூறினான்.  அத்துடன் மட்டுமின்றி சுக்ரனுக்கு நடந்த அனைத்தையும் பிருகுவிடம் விவரித்தான். பிருகுவைத் தன்னுடன் அழைத்துச் சென்று சுக்ரன் இருக்கும் இடத்தைக் காண்பிப்பதாகவும் அவரே அதை சரி பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறினான்.

பிருகு முனிவர், யமனுடன் சுக்ரன் இருக்கும் இடம் சென்றார். தனது மகன் ஒரு புதிய உடலில் தபஸ்வியாக இருந்து தவம் செய்ததைத் தன் கண்களால் பார்த்தார். யமனிடம் உடனே மன்னிப்புக் கோரினார். கோபத்தால் தனது அருமை மகனை இழந்து விட்டதாக தான் தவறாக எண்ணி வருத்தப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.

யமன், ‘மனமே அனைத்துப் பொருள்களையும் உருவாக்குகிறது என்றும் பல்வேறு நிலைகளை உண்டாக்குகிறது’ என்றும் தெரிவித்தான்.  உண்மையான ஆத்மாவானது,   மனம் இல்லை என்று எப்போது அறியப்படுகிறதோ அப்போது சாந்தியே நிலவும் என்று கூறி முடித்தான் யமன்.

சுக்ரன் தனது தவத்திலிருந்து விடுபட்டு எதிரில் இருக்கும் பிருகுவையும் யமனையும் பார்த்தார். பௌதிக உடலிலிருந்து விடுபட்டு சூக்ஷ்ம சரீரம் எடுத்தது முதல் தான் கொண்ட தனது எல்லா அனுபவங்களையும் அவர் நினைத்துப் பார்த்தார்.

இறுதியில் அனைத்தும் சுபமாக முடிந்தது!

கதையைக் கேட்ட ராமருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.

வசிஷ்டரை நோக்கி அவர், “ சுக்ரர் தனது ஆசைகளை நினைத்துப் பார்த்தது போல இதர மனிதர்களால் ஏன் முடியவில்லை?” என்று கேட்டார்.

அதற்கு வசிஷ்டர், அதற்கு இரு நிபந்தனைகள் உண்டு. அவை பூர்த்தியானால் அனைவருமே சுக்ரன் போல தனது நிலையை அறிந்து கொள்ள முடியும் என்றார்.

அந்த இரண்டு நிபந்தனைகளையும் அவர் விளக்கினார்.

முதலாவது – சித்த சுத்தி வேண்டும் இரண்டாவது – சரியான சம்ஸ்காரங்கள் வேண்டும்.(அதாவது சரியான கருத்துக்களும் மனப்பதிவுகளும் வேண்டும்)

சுக்ரனின் கதை எதை விளக்குகிறது?

மனதில் எழும் ஆசையின் சக்தியையும்  மனதில் எழும் கற்பனையின் வலிமையையும் எப்படி மனமும் கற்பனையும் ஒருவனின் வாழ்க்கைப் பாதையை உருவாக்கி நல்ல விதமாகவோ அல்லது கெட்ட விதமாகவோ அமைக்க முடியும் என்பதையும் சுக்ரனின் கதை விளக்குகிறது. அது காலத்தின் ஒப்புவமையையும் காட்டுகிறது (It also shoes the Relativity of Time).

அது மட்டுமல்ல, எப்படி ஒரு ரிஷி கூட தன் மகனின் மீதுள்ள பாசத்தினால் கோபத்திற்கு ஆட்பட முடியும் என்பதையும் இது விளக்குகிறது.

ராமருக்கு இந்தக் கதை சரியான விளக்கத்தைத் தரவே அவர் மனம் மிக மகிழ்ந்தார்.

இந்தக் கதை யோக வாசிஷ்டத்தில் உலகத்தைப் பற்றி விளக்கும் ஸ்திதி ப்ரகரணத்தில் இடம் பெறுகிறது!

***

tags -மஹரிஷி பிருகு , சுக்ரன் , யோகவாசிஷ்டம் கதை , மலரும் மணமும்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: