WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,260
Date uploaded in London – 26 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 25-10-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.
ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.
மாபெரும் தீக்ஷிதர் பரம்பரையில் வந்துதித்த ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்த்தவரும் சிறந்த சிவ பக்தரும் அற்புதமான பல நூல்களை இயற்றியவரும், திருமலை நாயகரின் அமைச்சராக இருந்து சிறப்புற அவருக்கு ஆலோசனை தந்தவருமான பெரும் மகான் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆவார். இவர் அப்பைய தீக்ஷிதரின் தம்பியான ஆச்சான் தீக்ஷிதரின் பேரனாவார். இவரது தந்தையார் மிக பிரசித்தி பெற்ற அறிஞரும் கவிஞருமான நாராயணத்வாரி ஆவார். நாராயணத்வாரிக்கு ஐந்து மகன்கள்; அவர்களில் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் நீலகண்ட தீக்ஷிதர். இளவயதிலேயே பெற்றோரையும் பாட்டனாரையும் இழந்த காரணத்தால் இவரை அப்பைய தீக்ஷிதரே வளர்த்து வந்தார். 1582ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் நீலகண்ட தீக்ஷிதர் அவதரித்தார். திருமலை நாயக்க மன்னர் திருச்சியிலிருந்து மதுரையைத் தன் தலைநகரமாக அமைத்துக் கொண்டது 1640இலிருந்து 1644க்குள் என்று நிர்ணயிக்கப்படுவதால் 1644க்குப் பின்னரே நீலகண்ட தீக்ஷிதர் மறைந்திருக்கக் கூடும் என்பது தெளிவு. ஆகவே, அவர் 62 வயதுக்கு மேல் வாழ்ந்தவர் என்பது பெறப்படுகிறது. அவரது இறுதிக் காலம் பற்றிய தகவல்கள் எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
அப்பைய தீக்ஷிதர் தனது கடைசி காலத்தில் சிதம்பரம் சென்று வசித்தார். அப்போது குடும்பத்தில் சொத்து சம்பந்தமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட போது நீலகண்ட தீக்ஷிதர் தனக்கு எதுவும் வேண்டாம் என்றும் அப்பைய தீக்ஷிதரின் அன்பும் ஆசியும் வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். 12 வயதான நீலகண்டரின் இந்த உரையைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த அப்பைய தீக்ஷிதர் அவருக்கு தான் பூஜை செய்து வந்த பஞ்சலிங்கங்களையும் தந்ததோடு தன்னிடம் இருந்த தேவி மாஹாத்மியத்தையும் ரகுவம்ச நூலையும் தந்து ஆசீர்வதித்தார்.
கல்வி கேள்விகளில் வல்லவரான நீலகண்டர் அப்பைய தீக்ஷிதரின் மறைவுக்குப் பின்னர் தஞ்சை சென்றார். அங்கு ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதரின் மகனான ஸ்ரீ வேங்கடேஸ்வரமகீ என்னும் மகானிடம் சீடனாகச் சேர்ந்தார். பின்னர், கீர்வாணேந்திரர் என்பவரிட்ம ஸ்ரீ வித்யா உபதெசம் பெற்றார்.
இவரது புத்திகூர்மையை அறிந்த மன்னர் திருமலை நாயக்க மன்னர் இவரைத் தனது அமைச்சராக்கிக் கொண்டு அவ்வப்பொழுது ஆலோசனைகள் பெற்றுத் திறம்பட மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு அரசாண்டு வந்தார். ஏராளமான அறப்பணிகளை மேற்கொண்டவர் திருமலை நாயக்க மன்னர். அவர் மண்டபம் ஒன்றை நிர்மாணிக்க எண்ணம் கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கிழக்கு கோபுரத்திற்கு எதிர்த்தாற் போல அந்த மண்டபத்திற்கான வேலையை ஆரம்பித்தார். 1626ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மணபம் புது மண்டபம் என்று இன்றளவும் அழைக்கப்பட்டு வரும் அற்புதமான மண்டபம். இது 1633ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. இத்துடன் இணைந்து மீனாக்ஷி அம்மன் கோவில் திருப்பணியும் சேர்ந்து நடைபெற்றது. இந்த மண்டபத்தை அழகுற அமைத்தவர் சுமந்திர மூர்த்தி ஆசாரி என்னும் சிறந்த சிற்பி ஆவார். இவர் ஏகபாத மூர்த்தியின் சிலை ஒன்றைச் செதுக்கிய கல்தூணை முடித்து அதை நிறுவ ஒரு நல்ல நாளையும் பார்த்து வைத்தார். இந்த சிலை நிறுவுவதற்கு நீலகண்ட தீக்ஷிதர் பெரிதளவும் ஆலோசனை தந்திருந்தார். ஆனால் இந்த சிலை பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனிடமிருந்து உண்டாயினர் என்பதைச் சித்தரிக்கும் மூர்த்தி என்பதால் இந்தத் தூண் நிறுவப்படுவதை வைஷ்ணவர்கள் விரும்பவில்லை. அவர்கள் திருமலை நாயக்கரை அணுகி இது நிறுவப்படக்கூடாதென்று தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தனர். மன்னரோ எப்போதும் நடுநிலை வகிப்பவர். ஆகவே இது பற்றி விசாரிக்க ஆணை ஒன்றைப் பிறப்பித்தார். இரு தரப்பினரும் விவாதத்திற்குத் தயாராயினர். ஆறுமாத காலம் இந்த விவாதம் நீடித்தது. சைவர்களுக்கு நீலகண்ட தீக்ஷிதரும் வைணவ்ர்களுக்கு அப்பா தீக்ஷிதர் என்பவரும் தலைமை வகித்து வாதத்தை நடத்தினர். விவாதத்தின் முடிவில் சிவனின் மேன்மை நிறுவப்பட்டது. ஏகபாதமூர்த்தியின் ஸ்தம்பமும் ஸ்தாபிக்கப்பட்டது, இன்றைக்கும் ஏகபாதமூர்த்தியை புதுமண்டபத்தின் வாயிலில் நாம் பார்க்கலாம்.
அந்த மண்டபத்தின் நடு வரிசைத் தூண்களில் மதுரை நாயக்கர்களின் சிலைகள் அமைக்கப்படலாயின. திருமலை நாயக்கருக்கு ஏழு பத்தினிகள். சிற்பி பட்டத்து மகிஷியின் சிலையை வடிக்கும் போது இடது தொடையில் ஒரு சில்லு பெயர்ந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிற்பி என்ன செய்வதென்று தெரியாது திகைத்து நிற்க, அப்போது அங்கு சிற்ப வேலையை மேற்பார்வை இட வந்த நீலகண்ட தீக்ஷிதர் நடந்ததை அறிந்தார். தனது தவ வலிமையால் உண்மையை உணர்ந்த அவர், சிற்பியிடம், “வேறு ஒரு சிலையைச் செய்ய வேண்டாம். எத்தனை முறை செய்தாலும் இது வந்தே தீரும். மஹாராணி உத்தம ஸ்திரீ. ஆகவே அந்த சாமுத்திரிகா லக்ஷண தர்மத்திற்கு ஏற்ப அவருக்கு இடது தொடையில் அந்த இடத்தில் ஒரு மச்சம் இருக்க வேண்டும். அதை உனது சிலை ஈசன் அருளால் பிரதிபலிக்கிறது” என்றார். தூண்களின் வேலையைப் பார்க்க வந்த திருமலை நாயக்கருக்கு ராணியின் சிலையில் உள்ள பின்ன விவரமும் சிற்பியிடம் தீக்ஷிதர் அதை அப்படியே விடுமாறும் கூறியதும் தெரிய வந்தது. இதனால் வருத்தமும் கோபமும் உற்ற மன்னர் மறுநாள் காலை தீக்ஷிதரை உடனே அழைத்து வருமாறு உத்தரவிட்டார். தீக்ஷிதர் பூஜை செய்து கொண்டிருந்த சமயம் படை வீரர்கள் வந்தனர். அவர் தனது தவ வலிமையால் நடந்ததை ஒரு கணத்தில் உணர்ந்தார். அரசன் தன் மீது சந்தேகப்படுவதை அறிந்த அவர் கற்பூர ஆரத்திக் காட்டும் சமயத்தில் அதை தன் கண்களில் வைத்து கண்களின் பார்வையை இழக்கச் செய்தார். வீரர்களிடம் “அரசர் கொடுக்க நினைத்திருந்த தண்டனையைத் தானே தீக்ஷிதர் நிறைவேற்றிக் கொண்டார்” என்று சொல்லுங்கள் என்றார். திகைத்துப் போன வீர்ர்கள் அரசரிடம் நடந்ததைச் சொல்ல திருமலை நாயக்கர் தனது தவறையும் தீக்ஷிதரின் மேன்மையையும் உணர்ந்து அவரைச் சந்திக்க ஓடோடி வந்தார். அவர் கால்களில் விழுந்து மன்னிப்பைக் கேட்டார்.
* தொடரும்
tags– நீலகண்ட தீக்ஷிதர் – 1, ஏகபாதமூர்த்தி, , திருமலை நாயக்கர்,