ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் – 2 (Post No.10,263)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,263

Date uploaded in London – 27 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ நீலகண்ட தக்ஷிதர் – 2

தீக்ஷிதர் கண்களை இழந்த நிலையில் தேவியை அற்புத ஸ்லோகங்களால் துதி செய்ய ஆரம்பித்தார். “தேவியே! உனது கருணையால் உனது பாதாரவிந்தங்களைக் காண்பித்தாலும் அதை எந்தக் கண்களால் பார்ப்பேன்” என்று பாடி உருகினார். எல்லையற்ற கருணை கொண்ட தேவி உடனே அவருக்குப் பார்வையைத் தர உலகமே இந்த அற்புதத்தால் வியந்தது. மன்னரும் அவரது தவ வலிமையை முற்றிலுமாக உணர்ந்து கொண்டார்.

அவர் பாடிய இந்த அற்புத நூலே ஆனந்தஸாகரஸ்தவம் என்னும் நூலாகும். இதில் அனைத்தையும் விட்டு விட்டு தன்னை தேவியிடம் ஒப்படைத்து விட்டு சரணாகதி அடைகிறார் அவர்.

மன்னர் சேவை போதும் என்ற முடிவுக்கு வந்த அவர் திருநெல்வேலியிலிருந்து வடகிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவில்  தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள பாலாமடை என்ற ஊருக்கு வந்து அங்கேயே தங்கலானார். மன்னர் திருமலை நாயக்கர் இந்த கிராமத்தையும் சுற்றியுள்ள நிலங்களையும அவருக்கு மானியமாக அளித்தார். அரசு ஆவணங்களில் இந்த ஊருக்கு நீலகண்ட சமுத்திரம் என்ற பெயர் இருக்கிறது.(See Archaelogical Survey of India Annual Report 1976-77 Epigraphy Sl.No. 243 to 244).

இந்த கிராமத்தில் தனது இறுதிக்காலத்தைக் கழித்த போது சந்நியாச ஆஸ்ரமத்தை மேற்கொண்ட அவர் ஒரு மார்கழி மாத சுக்ல அஷ்டமியில் ஜீவ சமாதி அடைந்தார். இவரது சமாதியின் மேல் தீக்ஷிதரே காசியில் இருந்து எடுத்து வந்த ஸ்ரீ காசி விஸ்வநாதரும் காசி விசாலாட்சியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகர பாரதீ மஹா ஸ்வாமிகள் திருநெல்வேலிப் பக்கம் விஜயம் செய்யும் போது பாலாமடை சமாதிக்கு வருகை புரிவதை ஒரு நியதியாகக் கொண்டிருந்தார்.

ஸ்ரீ தீக்ஷிதரின் நினைவைப் போற்றும் வகையில் ஸ்ரீ  நீலகண்ட தீக்ஷிதர் அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் சார்பில் ஜென்ம தினம், நினைவு தினம் கொண்டாடப்படல், அவரது நூல்களை வெளியிடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு நித்ய பூஜையும் நடைபெற்று வருகிறது.

இவரது பாடல்களில் சொல் நயம், பொருள் நயம், கற்பனை நயம், நையாண்டி, அறிவியல் நோக்கில் விளக்கம், ஆழ்ந்த தெய்வ பக்தி, தனது சொந்த அனுபவங்களின் தொகுப்பு, மகான்களின் பெருமை உள்ளிட்ட ஏராளமானவற்றை உணர்ந்து ரஸிக்கலாம். நீலகண்ட தீக்ஷிதர் இயற்றியதாக 18 நூல்கள் உள்ளன. மஹாகாவியம் என்ற வகையில் சிவலீலார்ணவா, கங்காவதரணம், முகுந்தவிலாஸம் ஆகிய மூன்று நூல்களும், நாடகம் என்ற துறையில் நளசரித்ரமும் சம்பு நூல் வரிசையில் நீலகண்ட விஜய சம்பு என்ற நூலும், கவிதை நூல்களில் அன்யாபதேச சதகம், கலிவிடம்பனம், சபாரஞ்ஜன சதகம், சிவோக்தகர்ஷ மஞ்சரி,  சிவதத்வ ரஹஸ்யம், ஆனந்தஸாகரஸ்தவம், சண்டிரஹஸ்யம், ரகுவீரஸ்தவம், குருதத்வமாலிகா, வைராக்ய சதகம், சாந்தி விலாஸம் ஆகிய பத்து நூல்களும், சமய சம்பந்தமான நூல்களுள் சௌபாக்ய சந்த்ராதபா என்ற நூலும் பாஷ்ய நூல்களுள் கையடரின் மஹாபாஷ்யப்ரதீபத்திற்கான ப்ரகாஸா என்ற நூலும் ஆக இப்படி 18 நூல்கள் அவரால் இயற்றப்பட்டவையாகும். இவரது நூல்களின் பெருமையை ஒரு சிறு உரைக்குள் அடக்கி விட முடியாது. எனினும் ஓரிரு துளிகளை மட்டும் இங்கு பார்த்து ரஸிப்போம்.

பாடல்களில் நையாண்டிப் பாடல்கள் தனி ரகம். அதைப் பாட தனித் திறமை வேண்டும். கூடவே தைரியமும் வேண்டும்.
ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் அபரிமிதமாக இருக்கும் போது இப்படிப்பட்ட பாடல்களை இயற்றுவது சுலபமான விஷயம்.
ஆனால் பழைய கால மன்னர் ஆட்சியில் நீலகண்ட தீக்ஷிதர் இப்படிப்பட்ட கவிதைகளைக் கொண்ட அற்புதமான கலி விடம்பனா என்ற நூலை இயற்றியுள்ளார். நூறு பாடல்களைக் கொண்ட இதில் நையாண்டிக்குப் பஞ்சமே இல்லை. கலியுகத்தில் நடக்கும் கூத்துக்களை நையாண்டி செய்யும் அவரது பாக்கள் இன்றைய நிலைக்கு அப்படியே பொருந்துவது மிகவும் வியப்பூட்டும் ஒரு உண்மை! இதில் நூறு பாக்கள் உள்ளன.
  கலிவிடம்பனாவில் 76வது பாடலாக அமைந்துள்ள பாடல் இது.

   பணக்கார பிரபுவிடம் ஒரு ஏழை பிச்சைக்காரன் யாசகத்திற்கு வருகிறான். அவன் முகத்தைப் பார்க்கிறார் கவிஞர். அவன் முகத்தில் ஒரே கவலை தெரிகிறது. அவன் கவலை அவருக்குப் புரிகிறது. யாசகம் கேட்கிறோமே, பிரபு என்ன தருவான், எவ்வளவு தருவான், தருவானா என்றெல்லாம் அவனுக்குக் கவலை. அது புரிகிறது கவிஞருக்கு. 

 ஆனால் பணக்காரனைப் பார்த்தால் அவன் முகத்திலும் கவலை. அவனுக்கு என்ன கவலை? கவிஞர் வியக்கிறார். பின்னர் புரிந்து கொள்கிறார். கலியுகத்தின் அவலத்தை நினைத்து ஒரு பாடலைப் பாடுகிறார். பாடல் இது தான்:-

கிம் வக்ஷ்யதீதி தனிகோ யாவதுத்விஜதே மன: |

கிம் ப்ரக்ஷ்யதீதி லுப்தோ(அ)பி தாவதுத்விஜதே தத: ||

(தனிகன் – பணக்காரன்)                                                                                                                                                பிச்சை கேட்க வந்தவன் என்ன கேட்கப் போகிறானோ என்று பணக்காரனுக்குக் கவலை; அவன் என்ன சொல்லப் போகிறானோ என்று கேட்க வந்தவனுக்கும் கவலை!

ஆக இருவருக்கும் கவலை! இது தானோ கலியுகம் என்பது?!

                       *                  தொடரும்

tags- நீலகண்ட தீக்ஷிதர் – 2

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: