ஸ்ரீ நீலகண்ட தக்ஷிதர் – 3 (Post No.10,266)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,266

Date uploaded in London – 28 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ நீலகண்ட தக்ஷிதர் – 3

ஜோதிடர், மருத்துவர், கவிஞர், மனைவியின் பிறந்தக உறவினர் என்று அனைவருமே இவரது பாடல்களுக்குத் தப்பவில்லை.
இன்னும் சில நையாண்டிப் பாடல்கள் இதோ:-
 
आयुस्प्रश्ने दीर्घमायुर्वाच्यं मौहूर्तिकैर्जनैस् ।
जीवन्तो बहुमन्यन्ते मृताः प्रक्ष्यन्ति कं पुनस् ॥ १६ ॥
 

ஜோதிடர் ஒருவரிடம் ஒருவர் தன் வாழ்நாளைப் பற்றி ஜோதிடம் கேட்டால், அவர் நீண்ட நாள் வாழ்வார் என்று சொல்ல வேண்டும். அவர் நீண்ட நாள் வாழ்ந்தால் ஜோதிடரைப் பற்றி உயர்வாக நினைப்பார். அவர் செத்து விட்டாலோ கேள்வி கேட்க அவர் உயிருடன் இருந்தால் தானே! (பாடல் 16)

भैषज्यं तु यथाकामं पथ्यं तु कठिनं वदेत् ।
आरोग्यं वैद्यमाहात्म्यादन्यथात्वमपथ्यतस् ॥ २५ ॥

ஒரு மருத்துவர் தனது இஷ்டம் போல தனது நோயாளிக்கு மருந்து கொடுக்கலாம். ஆனால் உணவை எப்படி உட்கொள்ள வேண்டும் எதையெல்லாம் சாப்பிடலாம், எதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளையும் கூடவே சொல்லி விட வேண்டும். நோயாளி ஒரு வேளை குணமாகி விட்டால் அதற்கான புகழை மருத்துவரின் திறமையே காரணம் என்று சொல்லிப் பெற முடியும். ஒருவேளை நோயாளி குணமடையாவிட்டால் அவர் தான் சொன்னபடி பத்தியமாக இருக்க வில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம்!   (பாடல் 25)

लिप्समानेषु वैद्येषु चिरादासाद्य रोगिणम् ।
दायादाः संप्ररोहन्ति दैवज्ञा मान्त्रिका अपि ॥ २९ ॥
 

ஒரு மருத்துவர் தொடர்ந்து தன்னிடம் சிகிச்சை பெறும் நீடித்த நோயுடைய ஒருவரிடமிருந்து பணம் பெற நினைக்கும் போது அவர் இன்னும் இரண்டு பேரை நோயாளியிடமிருந்து பண வசூல்  செய்வதைப் பார்ப்பார். ஒருவர் ஜோதிடர். இன்னொருவர் மந்திரவாதி!   (பாடல் 29)

स्तुतं स्तुवन्ति कवयो न स्वतो गुणदर्शिनस् ।
कीतः कश्चिदलिर्नाम कियती तत्र वर्णना ॥ ३५ ॥

ஒரு கவிஞர் தனது சொந்த கவித்வம் இல்லாமல், பல விஷயங்களைப் பற்றி தனக்கு முன்னால் இருந்த கவிஞர்களால் வர்ணிக்கப்பட்டவற்றையே வர்ணிப்பார். தேனீ என்ற ஒரு பூச்சி வகை இருக்கிறதல்லவா! அதைப் பற்றித் தான் எவ்வளவு பிரம்மாண்டமான விவரங்களைப் பார்க்க முடிகிறது!   (பாடல் 35)

गृहिणी भगिनी तस्याः श्वशुरौ श्याल इत्यपि ।
प्राणिनां कलिना सृष्टाः पञ्च प्राणा इमेऽपरे ॥ ४१ ॥

      இந்தக் கலியுகத்தில் வாழ்வை நீட்டிக்கும் ஐந்து பிராண சக்திகள் – மனைவி, மனைவியின் சகோதரி, மனைவியின் சகோதரர், அவளது பெற்றோர் ஆவர்     (பாடல் 41)

ज्ञातेयं ज्ञानहीनत्वं पिशुनत्वं दरिद्रता ।
मिलन्ति यदि चत्वारि तद्दिशेऽपि नमो नमस् ॥ ९७ ॥
 
உறவினர்கள், ஞானஹீனர்கள், வம்பு பேசுபவர்கள், தரித்திர நிலையில் உள்ளவர்கள், ஆகிய இந்த நால்வரின் கூட்டு இருக்கும் திசைக்கே நமஸ்காரம் நமஸ்காரம். (பாடல் 97)
அடுத்து நவரஸங்களையும் கொண்ட மஹாகாவியம் சிவலீலார்ணவத்திலிருந்து ஓரிரு துளிகளைப் பார்ப்போம். 
சிவபிரானின் அருள் திரு விளையாடல்களைக் கூற வந்த இவருக்கு ஸ்காந்த புராணத்தில் வரும் ஹாலாஸ்ய மாஹாத்மியம் ஆதாரமாக உள்ளது. 22 காண்டங்கள் கொண்டது இந்த நூல். முதல் 11 காண்டங்களில் 999 செய்யுள்களையும் அடுத்த 11 காண்டங்களில் இன்னொரு 999 செய்யுள்களையும் ஆக இரண்டாயிரத்திற்கு இரண்டு செய்யுள்கள் குறைவாக 1998 அரும் செய்யுள்களைக் கொண்டுள்ளது இந்த அற்புத காவியம்.
முக்கியமாக சாந்த ரஸத்தையே பிரதானமாகக் கொண்டுள்ள இந்த நூலில் சப்தாலங்காரம், அனுப்ராஸம், உவமை, யமகம், ரூபகம், சிலேடை உள்ளிட்ட ஏராளமான யாப்பிலக்கணச் சிறப்புக்கள் உள்ளன.
 
 
தக்ஷிண ஜாஹ்னவீ - தென் கங்கை - எனக் கூறப்படும் தாமிரவர்ணியின் சிறப்பைக் கூறும் போது எப்படி கங்கையில் நீராடுபவர்கள் முக்தா என்ற வீடு பேற்று நிலையை அடைகிறார்களோ அதே போல தாம்ரவர்ணியை அடைந்தவர்களும் முக்தா - முத்துக்களாகி- விடுவதால் இதுவும்  முக்தாவைத் தருகிறது என்கிறார்.
 
 
கடகம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு நண்டு என்ற பொருளும் நகர் என்ற பொருளும் உண்டு. பஞ்சத்தில் இருந்த ராஜேந்திர பாண்டியனின் நகரை சூரியன் கடகராசியில் புகுந்த போது, சோழ மன்னன் முற்றுகையிட்டான் என்கிறார். கடகம் என்ற சொல்லை கடக ராசி என்றும் பாண்டியனது நகர் என்றும் இரு பொருள் படக் கூறுகிறார். இப்படி ஏராளமான நயங்கள் இவரது காவியத்தில் உள்ளன. 
 
 
இவரது நூல்களைப் படிப்போர்க்கு இவர் சகுன சாஸ்திரம், ஜோதிடம், வானவியல், வாஸ்து சாஸ்திரம், ஆயுர்வேதம், நடனம், இசை உள்ளிட்ட அனைத்துக் கலைகள், ரத்ன சாஸ்திரம், நீரியல் (Hydrology), யுத்தக் கலை, அரசியல் ராஜதந்திரம் சமையல் கலை எனப்படும் பாக சாஸ்திரம், வேத, புராண, இதிஹாஸ ஞானம் உள்ளிட்டவற்றில் இவர் பெரும் வல்லுநர் என்பது உடனே புரிந்து விடும். 
 
 
நீலகண்ட தீக்ஷிதரின் நூல்கள் பெருமளவில் பாரத மக்களைச் சென்றடையவில்லை என்றே கூற வேண்டும். இவற்றின் சிறப்புக்களை வெகுஜன அளவில் கொண்டு சேர்ப்பதை ஒவ்வொருவரும் தனது கடமையாகக் கொண்டால் இவரது ஆழ்ந்த ஞானத்தால் நமது தேசம் இன்னும் மேலே உயரும் என்பதில் ஐயமில்லை.
  வாழ்க நீலகண்டதீக்ஷிதர் திரு நாமம்.
தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவக்கும் இறைவா போற்றி.
நன்றி வணக்கம்!
*** 


முற்றும் 
TAGS- நீலகண்ட  தீட்சிதர், விஜய சம்பு , கங்காவதரணம்
 
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: