சைவ சமய வேத நிரூபணம்! (Post No.10,279)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,279

Date uploaded in London – 31 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சைவ சமய வேதநிரூபணம்! : ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு!!

ச.நாகராஜன்

‘சைவசமய வேதநிரூபணம்’ என்ற சுவையான நூலை 28-8-2020 அன்று கள்ளக்குறிச்சி, ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியிட்டுத் தமிழுக்கும் சைவத்திற்கும், இந்திய நாட்டிற்கும் அரும் சேவையைச் செய்துள்ளது.

‘கலியின் வலி மிக்க’ இந்தக் காலத்திலே நிஜமான சைவ நூல்களைப் பழிப்பதும், திரிப்பதும், மாற்றுவதும், திருக்குறள் உள்ளிட்ட நூல்களில் காழ்ப்புணர்ச்சி கொண்ட வஞ்சக மனத்துடன் எழுத்துக்களை மாற்றுதலும் கண்டு சைவப் பெரியோர்கள் மனம் வருந்தி ‘அரவின் குட்டி சிறிதாயினும் பெருங்கோல் கொண்டு அடித்தல் வேண்டும்’ என்னும் பழமொழிப்படி அந்தப் பொய்களைக் களைய எண்ணம் கொண்டனர். அதன் விளைவாக அற்புதமான இந்த நூல் எழுந்தது.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் சைவ சமயத்தில் வேதம் பற்றிய ஒரு கலகமானது, வடமொழி, பிராமண வெறுப்பு  காரணமாக ஏற்படுத்தப்பட்டது. அதன் விளைவை, இந்த 2021 ஆம் ஆண்டிலும் கூட, அது விசுவரூபம் எடுத்து ஏராளமான சேதத்தை விளைவித்து பாரத தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கே ஊறு விளைவிக்கும் போக்கைக் கண்டு திகைத்து நிற்கிறோம். ஆக இப்படிப்பட்ட நிலை இந்த வஞ்சக உள்ளங்களால் ஏற்படப் போகிறது என்பதை தம் உண்மை அறிவினால் உணர்ந்த, காழ்ப்புணர்ச்சி அற்ற சைவப் பெரியோர்களில் ஒருவரான மா.சாம்பசிவம் பிள்ளை 1926ஆம் ஆண்டு ‘திருநான்மறை விளக்க ஆராய்ச்சி’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். அவர் எழுதிய நூலுக்கு 27 சைவப் பெரியோர்கள் வித்வத் அபிப்ராயம் தர அது முகவுரையாக வெளியிடப்பட்டது. அவற்றில் ஒன்றான யாழ்ப்பாணம் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத பண்டிதர் அவர்கள் வழங்கிய முன்னுரையானது அற்புதமான ஒன்று.

     அந்த முன்னுரை காலவெள்ளத்தால் அழிந்து போகாமல் இருக்கவும், அந்த அற்புதமான நூலில் இருக்கும் உண்மைகள் தமிழக மக்கள் அனைவரின் உள்ளத்திலும் இடம் பெற வேண்டும் என்றும் எண்ணிய ஆதிசைவர்கள் நலவாழ்வு மையத்தின் நிறுவனர் சிவஸ்ரீ எஸ்.கார்த்திகேய தத்புருஷ சிவம் அதன் மறுபதிப்பைப் பெருமுயற்சி செய்து வெளியிட்டுள்ளார்.

திருக்குறளை எடுத்துக் கொண்டால், சென்னை சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகமானது ‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் என்பதை வேண்டுமென்றே ‘ஆபயன் குன்றும் அறிதொழிலோர் நூல் மறப்பர் என்று வழுவுறத் திருத்தி அச்சிட்டனர். இது எவ்வளவு பெரிய அநியாயம்?! இப்படி மனம் போன மாதிரி திருத்தியது தப்பு என்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்த நூல்.

இன்னொரு உதாரணம், ‘தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப் பிழையாக இருக்க வேண்டும்என்று கருதி தன் மூக்கை அரிந்து கொண்டது போல ஔவையார் திரு நான்மறை என்று கூறியதில் நான்மறை என்பது வேதம் அல்ல என்று கூறியதைச் சொல்லலாம்.

மகேந்திர மலை என்பது கைலாய மலை அல்ல என்பது இன்னொரு பொய்க் கூற்று.

இப்படிப்பட்ட ஏராளமான பொய்யுரைகளை எல்லாம் ஆதாரங்களுடன் மறுத்து தக்க விளக்கம் தந்து சைவசமயம் போற்றும் வேதத்தின் பெருமையை நிலை நாட்டுகிறது இந்த நூல். சுமார் 47 அரும் தமிழ் நூல்களிலிருந்து ‘போதும், போதும் என்று சொல்லும் அளவு மேற்கொள் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. நான்மறை என்ற ஒரு சொல்லுக்கு மட்டும், சிலப்பதிகாரம்,சீவகசிந்தாமணி, மணிமேகலை, புறநானூறு, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை உள்ளிட்ட பல நூல்களிலிருந்து மறுக்க முடியாத ஆதாரங்களுடன் விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

சில அந்தணர் மீது கொண்ட கோபமானது வடமொழி மீது வெறுப்பாக மாறியது; தேவார முதலிய தெய்வ நூல்களைத் திரிக்கவும் அவற்றிற்குத் திரிவுப் பொருள் தரவும் முற்பட்டது.

இதைச் சுட்டிக் காட்டி அப்படிச் செய்வது தவறு என்பதை நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.

இதில் ஆச்சரியம் என்னவெனில் ‘மேன்மை கொள் சைவ நீதிபற்றி நன்கு அறிந்த அறிஞர்தவறாக எழுதியவர் முன்னிலையில் சபையில் தைரியமாக அதைக் கண்டிக்கும் போது அதை சிரம் தாழ்த்தி தவறாக எழுதியவர் உள்ளிட்ட அவையினர் அதை ஏற்றுக் கொண்ட செய்தி தான்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றைய கால கட்டத்தில் அன்று இடப்பட்ட துவேஷம் என்னும் விதை இன்று விஷ விருக்ஷமாக வளர்ந்து மக்களை வேறு படுத்தி அனைவரின் மனதிலும் நஞ்சைப் புகுத்தியுள்ளது.

முதலில் இந்த நிலையைத் தமிழக மக்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டும் என்ற சரியான முனைப்புடன் சிவத்தொண்டில் சிறந்து விளங்கும் துடிதுடிப்பு மிக்க அன்பர் – கள்ளக்குறிச்சி, ஆதிசைவர்கள் நலவாழ்வு சங்கத்தின் நிறுவனர் – தில்லை சிவஸ்ரீ எஸ்.கார்த்திகேய தத்புருஷ சிவம். 94 ஆண்டுகளுக்குப் பின்னர் அதை மறு பதிப்பு செய்ய பெரு முயற்சி எடுத்து இதை வெளியிட்டுள்ளார்.

இந்த நூலுக்கு தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடம் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துகுமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், சிவபுரம் வேத சிவாகம் பாடசாலை நிறுவனரும் முதல்வருமான மயிலாடுதுறை  ஸ்ரீ ஏ.வி. சுவாமிநாத சிவாசாரியார் ஆகியோர் ஆசியுரையும் அருளுரையும் பாராட்டுரையும் தந்து ஸ்ரீ எஸ்.கார்த்திகேய தத்புருஷ சிவம் அவர்களைப் பாராட்டியுள்ளனர்.

    இப்படிப்பட்ட அரிய நூல்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கும் திரு கார்த்திகேய சிவம் அவர்களைப் பாராட்டுகிறோம்.

தமிழ் உலகம் வரவேற்க வேண்டிய காலத்திற்கேற்ற நூல் இது.

நூலின் மொத்தப் பக்கங்கள் 92. அச்சுப் பதிப்பு வழக்கம் போல சிறப்புற அமைந்துள்ளது. வடிவமைப்பு சிறப்புற இருக்க, நூல் தரம் வாய்ந்த தாளில் அச்சிடப்பட்டுள்ளது. நூலின் விலை ரூபாய் ஐம்பது மட்டுமே.

நூல் கிடைக்குமிடம் : ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம், 27,             ஸ்ரீராமச்சந்திரா நகர், கள்ளக்குறிச்சி, 606202.

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: