Post No. 10,289
Date uploaded in London – – 2 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 1-11-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை YOU TUBE யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை நான்கு பகுதிகளாகத் தரப்படுகிறது.
ஸ்வாமி ராமதீர்த்தர்! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.
பாரத தேசம் கண்ட மகான்களில் சமீப காலத்தில் வாழ்ந்து நடைமுறை வேதாந்தம் பற்றிய சிந்தனைகளை புது விதத்தில் பரப்பியவர் ஸ்வாமி ராமதீர்த்தர்.பிரிட்டிஷ் இந்தியாவில் பஞ்சாபில் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் முரளிவாலா என்னும் இடத்தில் 1873ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி புதன்கிழமை தீபாவளி தினத்தன்று பண்டிட் ஹீரானந்த கோஸ்வாமி என்ற பண்டிதருக்கு மகனாகப் பிறந்தார் ஸ்வாமி ராமதீர்த்தர். அவருக்கு தீர்த்த ராமர் என்று பெயரிடப்பட்டது. அவரது தாயார் அவர் பிறந்த ஒரு வருடத்தில் மறைந்தார். அவரது தமக்கை தீர்த்த தேவியும் அவரது அத்தை தர்மா கௌரும் அவரை வளர்த்தனர். கணிதத்தில் இயல்பாகவே அபார வல்லமையை அவர் பெற்றிருந்தார். லாகூரில் கவர்ன்மெண்ட் காலேஜில் கணிதத்தில் மாஸ்டர் டிகிரி வாங்கிப் பின்னர் அதே லாகூரிலேயே ஃபொர்மன் கிறிஸ்டியன் காலேஜில் (Forman Christina College, Lahore) கணிதப் பேராசிரியராகப் பணியாற்றலானார்.
1897ஆம் ஆண்டில் ஸ்வாமி விவேகானந்தர் லாகூருக்கு விஜயம் செய்தார். அமெரிக்காவில் அவர் ஆற்றிய அரும் பணியால் உலகம் முழுவதும் அவர் பெயர் புகழுடன் விளங்கிய நிலையில் அவரது லாகூர் விஜயம் ஸ்வாமி ராமதீர்த்தரை வெகுவாக அவர் பால் ஈர்த்தது. அவர் சந்யாசியாகத் தீர்மானித்தார். தனது இளம் மனைவியையும் மகனையும் துறந்து அவர் சந்யாச ஆஸ்ரமத்தை 1899ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று மேற்கொண்டார்.
சந்யாசி ஆனதால் அவர் ஒரு பொழுதும் காசைக் கையால் தொட்டதே இல்லை. அது மட்டுமல்ல, சந்யாச தர்மத்திற்கு உரிய வகையில் தனக்கென்று பெட்டி, படுக்கை, பொருள்கள் என எதையும் ஒரு போதும் அவர் கையில் கூட எடுத்துக் கொண்டு சென்றதே இல்லை.
அவரது அபாரமான சொற்பொழிவுகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. தேஹ்ரியை ஆண்ட மஹராஜா கீர்த்திஷா பஹாதூர் அவரைத் தன் செலவில் 1902ஆம் ஆண்டு ஜப்பானுக்கு அனுப்பினார். ஜப்பானில் தனது சொற்பொழிவுகளால் அனைவரையும் கவர்ந்த அவர், பின்னர் அமெரிக்கா நோக்கிப் பயணமானார். இரு வருடங்கள் கழித்த பின்னர் 1904ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். அவருக்கு பெருத்த வரவேற்பு காத்திருந்தது. ஏராளமான இடங்களில் அவரைச் சொற்பொழிவாற்ற அனைவரும் அனைத்தனர். சிஷ்யர்களும் பெருகலாயினர். 1906ஆம் ஆண்டில் நகர்ப்புறத்தில் வாழ்வதைக் குறைத்துக் கொண்ட ஸ்வாமி ராமதீர்த்தர் இமயமலைக் காட்டினுக்குள் சென்றார். அங்கேயே தங்கலானார். நடைமுறை வேதாந்தம் பற்றிய ஒரு அதிகாரபூர்வமான புத்தகத்தை எழுத வேண்டுமென முனைந்தார். ஆனால் அது முடியவில்லை.
கங்கையில் 17-10-1906ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று கங்கையில் குளிக்கச் சென்ற போது சுழல் இவரை இழுக்க, “அம்மா! உன் விருப்பம் அதுவானால் அது சரிதான்!” என்று சொல்லி ஜல சமாதி எய்தினார்.
அவர் பிறந்ததும் தீபாவளி தினத்தன்று; அவர் சந்யாச தர்மம் ஏற்றதும் தீபாவளி தினத்தன்று; ஜல சமாதி எய்தியதும் ஒரு தீபாவளி தினத்தன்று! இது ஒரு அதிசயம் அல்லவா?! முப்பத்திமூன்று வயது ஆவதற்கு ஐந்து நாட்கள் முன்னதாகவே அவர் தன் உடலைத் தானே உகுத்து விட்டார். ஜல சமாதிக்கு முன்னர் அவர் உருது மொழியில் எழுதியிருந்த ஒரு கட்டுரையில் கடைசி பாராவில் அவர் எழுதியிருந்தார் இப்படி:-இந்திரா! ருத்ரா! மருதா! விஷ்ணு! சிவா! கங்கா! பாரத்!
ஓ மரணமே! நிச்சயமாக இந்த உடலை வெடித்துச் சிதறச் செய்! என்னிடம் பயன்படுத்துவதற்கு ஏராளமான உடல்கள் இருக்கின்றன. நான் இந்த தெய்வீக வெள்ளி இழைகளை, சந்திர ஒளிக்கற்றைகளை அணிந்து வாழ்வேன். குன்றில் பாயும் ஓடைகளாக, மலையில் ஓடும் சிற்றோடைகளாக தோற்றம் கொண்டு ஒரு தெய்வீக பாணனாக உலவுவேன். கடலில், அலைகளில் நான் ஆடுவேன். நானே உலவும் தென்றல் காற்று! நானே போதை கொண்ட காற்று! இந்த எனது அனைத்து வடிவங்களும் மாறுகின்ற எனது சஞ்சார வடிவங்கள். நான் அதோ அந்த அங்கிருந்த மலைகளிலிருந்து இறங்கி வந்தேன். இறந்தவர்களை உயிர்ப்பித்தேன். உறங்கியவர்களை விழித்தெழச் செய்தேன்……… இதோ இங்கே போகிறேன். அதோ அங்கே போகிறேன். யாராலும் என்னைக் கண்டுபிடிக்க முடியாது.”
மரணத்திற்கே இப்படி ஒரு செய்தி கொடுத்து அதையே மனித குலத்திற்கான தனது இறுதிச் செய்தியாக மாற்றினார் ராமதீர்த்தர்.
அவர் தனது கருத்துக்களைச் சொற்பொழிவுகள் மூலமும் கவிதைகள் கட்டுரைகள் வாயிலாகவும் கூறினார்; அவர் உவமைக் கதைகளைக் கூறியுள்ளார்; சுவாரசியமான சம்பவங்களையும், புதிர்களையும் விவரித்துள்ளார். தனது கருத்துக்களை பல நோட்புத்தகங்களில் – குறிப்பேடுகளில் – பதிவிட்டுள்ளார். உருது மொழியிலும் அவர் அபார திறமை கொண்டவர். ஆக உருது, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என பன்மொழி வல்லுநராக அவர் திகழ்ந்ததால் அவரது கருத்துக் களஞ்சியம் ஒரு ஆன்மீகச் சுரங்கம் என்றே கூறலாம்.
அவரது வாழ்வில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு. என்றாலும் கூட நேரத்தைக் கருதி அவற்றில் சிலவற்றை மட்டும் இப்போது பார்க்கலாம்.
tags– ஸ்வாமி, ராமதீர்த்தர்,