மதியூகி பொன்னம்பலம் பிள்ளை (Post No.10,298)

WRITTEN BY B. KANNAN, DELHI

Post No. 10,298

Date uploaded in London – –   4 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புலவர் நயம்                                         மதியூகி பொன்னம்பலம் பிள்ளை

எழுதியவர் :  B.Kannan, Delhi

அன்புள்ளத் தமிழ் நெஞ்சங்களுக்கு தில்லியிலிருந்து கண்ணன் நமஸ்காரம். வணக்கம் பல.

சமீபத்தில் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்களின் பழைய கட்டுரைத் தொகுப்புக்களைப் படிக்க நேர்ந்தது. அதில் ஒன்று அரசனும் அவனது தலைமை ஆலோசகரும் புலவருமான இருவருக்கும் இடையே மிளிர்ந்த நட்பின் மேன்மை,கருத்தொற்றுமைப் பற்றி விளக்குவதாக அமைந் திருந்தது. கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையாருடையது நேர்முகத் தொடர் பில்லாத மானசீக நட்பு. இறுதியில் இருவரும் ஒன்றுகூடி,வடக்கிருந்து உயிர் பிரிந்தனர். ஆனால் நாம் பார்க்கப் போகும் நிகழ்வில் ஒரு திருப்பம் உண்டு. உங்கள் பார்வைக்கு இதோ……….

பழையகாலத்தில் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் சிறந்த நிலையில் இருந்த ஜமீன்களுள் சொக்கம்பட்டியென்பது ஒன்று. வடகரையாதிக்க மென்றும் அந்த ஜமீன் வழங்கப்படும். தென்காசி பகுதியைச் சடையவர்மன்  பராக்கிரமபாண்டியன் ஆட்சி செய்த காலத்தில்,மிழலைநாடு (சோழ நாட்டுப் பகுதி), ஆப்பநாடு (இராமநாதபுரம் பகுதி), கிழுவை (கீழக்கரைப் பகுதி) நாட்டிலிருந்து வந்த மன்னரின் தளகர்த்தர்களான மறவர்குலத் தலைவர்களுக்குச் சில பிரதேசங்களைக் கொடுத்து ஆட்சியில் அமர்த்தினார். அவர்களுள் ஜமீன் சிவத்தபாண்டியன், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த ஒரு புலியைத் தன் கைத்தடியால் அடித்துக் கொன்றதால் “செம்புலி” எனப் பட்டம் கொண்டு, அவரது சந்ததி யினரும் பாண்டியனின் திருநாமமான “சிவனனைந்தான்” எனும் பெயரையும் இணைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டனர். அந்த வீரச் செயலை ஒரு புலவர் இப்படிப் புகழ்கிறார்………

“தம்புலியான மடப்புலியே ! தடிக்கம்பால் அடிபட்டாயே ! எங்கள் முப்புலி துரைப்புலி வீரப்புலி கொண்ட புலி கருணாலய வலங்கைப்புலியால் கைக்கம்பால் அடிபட்டு இறந்தாயே!”

அந்தப் பரம்பரையில் வந்த ஜமீன்தாரர்களுள் ஒன்பதாவதாக பெரிய பட்டம் பெரியசாமித்தேவர். சின்னப்பட்டம் சிவராம சின்னணைஞ்சாத்தேவர் (18-ம் பொ.ஆ. முற்பகுதி) என்பவர் புலவர் பாடும் புகழுடையவர்களாக வாழ்ந்து வந்தனர். திருக்குற்றாலம், பாபநாசம், திருமலை முதலியக் கோவில்களுக்குப் பல வகையான மானியங்களை அளித்துள்ளனர். தண்டமிழ் வாணர்களை மிக்க அன்புடன் ஆதரித்துப் பெரும்புகழ்ப் பெற்றனர். மேலகரம் திரிகூடராசப்ப கவிராயர், செங்கோட்டைக் கவிராச பண்டாரம், கிருஷ்ணாபுரம் கவிராயர் முதலியவர்கள் அவர்களின் ஆதரவு பெற்றவர்கள்.

அக்காலத்தில் பெரியபட்டம் பெரியசாமித் தேவரின் ஆட்சியை எல்லாரும் போற்றினர். ஸ்தானாதிபதி பொன்னம்பலம் பிள்ளையின் அறிவாற்றலால் ஒரு பெரிய அரசாங்கத்துக்கு உதாரணமாகச் சொல்லக்கூடிய நிலையில் அவருடைய சமஸ்தானம் விளங்கியது. பொன்னம்பலம் பிள்ளை சிறந்த தமிழ்ப் புலமை வாய்ந்தவர்; வாசுதேவநல்லூர்ப் புராணத்தையும் வேறுபல தனிப் பாடல்களையும் இயற்றியுள்ளார். அவர் வாசுதேவ நல்லூரில் வேளாளர்  குலத்தில் பிறந்தவர். பேராற்றலும் அரசியலைச் சீரானமுறையில் நடத்தும் மதியூகமும் கொண்டவர். அவருடைய நல்லறிவும் ஆட்சிமுறையும் குடிக ளுக்கும் சமஸ்தானாதிபதிக்கும் ஒருங்கே இன்பத்தை உண்டாக்கின. பொன்னம்பலம் பிள்ளையின் அறிவாற்றலில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சமஸ்தானாதிபதி சின்னணைஞ்சாத் தேவர் தம் அமைச்சரின் ஆலோச னைப்படியே நடந்து வந்தார். அமைச்சருடைய சாதுரியமான மொழிகளும் தமிழ்ப் புலமையும் அரசியல் யோசனைகளும் யாவரையும் கவர்ந்தன. வேறு சமஸ்தானத் தலைவர்களெல்லாம், “இத்தகைய அமைச்சர் ஒருவர் நமக்கு இல்லையே!” என ஏங்கினர்.

அக்காலத்தில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் பொன்னம்பலம் பிள்ளையை ஒரு சமயம் வரவழைத்து அவருடையப் பெருமையை உணர்ந்துப் போற்றினார். அவரோடு பேசுவதில் சேதுபதிக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. அடிக்கடி அவருடைய பழக்கம் இருக்க வேண்டுமென்பது அவ்வரசர் விருப்பம். ஆயினும் தம்முடைய ஜமீன்தாரிடத்தில் அன்பும் அந்தச் சமஸ்தான நிர்வாகத்தில் முக்கி யத்துவம் காட்டியப் பொன்னம்பலம் பிள்ளையால் அப்படி இருப்பது சாத்திய மாகுமா? பலமுறை சேதுபதி விரும்பினால் ஒருமுறை சென்று சிலநாள் இருந்து வருவார். அப்பொழுது சேதுபதி மன்னர் அவரை இராமநாதபுரத்திலேயே இருத்திவிடுதற்குரியத் தந்திரங்கள் பல செய்தும் அவையெல்லாம் கைகூட வில்லை.

ஒருமுறை சேதுபதியரசரிடம் பொன்னம்பலம் பிள்ளை வந்திருந்தபோது அவர் தம் ஜமீன்தாருடைய சிறந்த குணங்களைப் பற்றியும் தன்மீது அவருக்குள்ள அன்பைப்பற்றியும் எடுத்துக் கூறினார். இருவருக்கும் இடையே நடந்தக் கருத்துப் பரிமாற்றம் இதோ…..

“உங்களுடைய அபிப்பிராயம் இல்லாமல் சமஸ்தானத்தில் ஒரு காரியமும் நடைபெறாதாமே?” என்று ஏதும் தெரியாதவர் போல் கேட்டார் சேதுபதி.

“ஆம். ஆனால் அப்படி இருப்பது அதிகாரத்தினால் அன்று; அன்பினாலேதான். எங்கள் எஜமானுக்கு நான் செய்வதில் குறையிராது என்ற நம்பிக்கையுண்டு. நாடும் குடிகளும் நன்மை அடைய வேண்டுமென்பதே அவர்களுடைய நோக்கம்; தாமே நேரில் அதிகாரம் செலுத்தவேண்டுமென்ற விருப்பம் அவர்களுக்கு இல்லை. யாருடைய அதிகாரமாக இருந்தால் என்ன? எல்லாம் அவர்களுடைய பெயராலேயே நடைபெறுகின்றன,அல்லவா?.”

” அப்படியானால் உங்கள் ஜமீன்தார் உங்கள் யோசனையைக் கேட்டுத்தான் எல்லாக் காரியங்களையும் செய்வாரோ?”

” கூடிய வரையில் அப்படித்தான் செய்வது வழக்கம். அவர்களிடம் நான் வெறும் சம்பளம் வாங்கும் மந்திரியாகமட்டும் நடந்து கொள்ளவில்லை. அவர்கள் என்னை ஆருயிர் நண்பனாகவே கருதியிருக்கிறார்கள்.

ஒரு சமஸ்தானாதிபதி, ஒரு காரணமும் இல்லாமல் சாமானியனான என்னி டத்தில் இவ்வளவு அன்பு வைக்கும்போது, என்னுடைய நன்மையைக் காட்டிலும் அவர்களுடைய நன்மையையே சிறந்ததாக நினைப்பது என் கடமையல்லவா?”

“அவ்வளவு குணசீலரான உங்களுடைய சமஸ்தானாதிபதியை ஒருமுறை பார்க்க விரும்புகிறேன்.”

” நன்றாகப் பார்க்கலாம். பரிவாரங்களுடன் கூடிய சீக்கிரம் சொக்கம்பட்டிக்கு விஜயம் செய்யுங்கள். மகாராஜாவை வரவேற்பதைக் காட்டிலும் சந்தோஷந் தரும் செயல் வேறொன்றும் இல்லை.”

” நான் அங்கே வருவதைக் காட்டிலும், உங்கள் சமஸ்தானாதிபதி இங்கே வந்தால் நலமாய் இருக்குமே?”

” அப்படியும் செய்யலாம். ஆனால் அதற்கு இது தக்க சமயமன்று. மகாராஜா அவர்களுக்கு முறையாகத் திருமுகம் அனுப்பி மரியாதையோடு அழைக்க வேண்டும். அப்படிச் செய்தாலும் நான் அங்கே சென்று அவர்களை வரச் சொன்னால் தான் அவர்கள் விஜயம் செய்வார்கள். என்னுடைய விருப்பம் இல்லாமல் வரமாட்டார்கள்.”

” அப்படியானால் நீங்கள்  இங்கிருந்தே அவரை வரும்படி திருமுகம் எழுதியனுப்பலாமே?”

” அவ்வளவு உரிமையை நான்  எடுத்துக் கொள்ளலாமா? எங்கள் தலைவர் கருணை மிகுதியினால் எனக்குச் சில அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறார்கள்; அவற்றை நான் தவறாகச் செலுத்தலாமா? எனக்கு இணங்கி  அவர்கள் நடந்தாலும் அவர்களோ ஒரு சமஸ்தானாதிபதி; நான்ஓர் ஊழியன். நான் என்னுடைய வரம்புகடந்து நடக்கக்கூடாது. இங்கே வரும்படி நான் எழுதுவது முறையன்று.”

” அப்படியானால், நானே ஒரு கடிதம் அனுப்பி வரவழைக்கிறேன்.”

” மகாராஜாவின் திருமுகத்தைக் கண்டவுடன் அவர்கள் புறப்படமாட்டார்கள். இவ்விஷயமாக என் அபிப்பிராயத்தை அறிந்து கொண்டுதான் வருவார்கள்”

” உங்களுக்குத் தெரியாமலே நான் அவரை இங்கு வரவைத்து விடுகிறேன்” என்றார் சேதுபதி மன்னர்.

இருவருக்கும் அப்போது வாக்கு வாதம் நடைபெற்றது. சேதுபதியோ சொக்கம்பட்டி ஜமீன்தாரை வருவித்துவிடுவதாக வீரம் பேசினார். அது முடியாதென்று பொன்னம்பலம்பிள்ளை கூறினார்.

மறுநாள் சேதுபதி வேந்தர் பொன்னம்பலம் பிள்ளை அறியாதபடி அவர் எழுதியது போல ஒரு கடிதம் எழுதி ஆள்மூலம் சொக்கம்பட்டி ஜமீன்தாருக்கு அனுப்பினார். ‘உடனே புறப்பட்டு இவ்விடத்திற்கு விஜயம் செய்யவேண்டும்’ என்று பொன்னம்பலம் பிள்ளை எழுதினதாக அக்கடிதம் அமைந்திருந்தது.

அதுகண்ட சின்னணைஞ்சாத்தேவர் அதுவரை சேதுபதியை நேரிடையாகச் சந்தித்தது இல்லை என்பதால் சிறிது மயங்கினார். அக்காலத்தில் சேதுபதியைப் போன்ற கௌரவம் சின்னணைஞ்சாத் தேவருக்கும் இருந்தது.

‘இம்மாதிரி நம் அமைச்சர் எழுதுவதற்குக் காரணம் தெரியவில்லை. ஆயினும் அவர் நம் நன்மையைக் கருதியே ஒவ்வொரு காரியத்தையும் செய்வார். இப்படி அவர் முன்பு எப்போதும் செய்தது இல்லை. எதற்கும் நாம் அங்கே அதிக ஆடம்பர மின்றிச் செல்வோம்’ என்றெண்ணிச் சில சேவகர்களை மட்டும் அழைத்துக் கொண்டுப் புறப்பட்டார்.

சொக்கம்பட்டியிலிருந்து ஜமீன்தாருடைய பல்லக்கு வருமென்றும், உடனே தமக்குத் தெரிவித்து, விருந்தினருக்கு இடம் கொடுத்து உபசரிக்க வேண்டு மென்றும் சேதுபதி தம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதிகாரிகளும் சின்னணைஞ்சாத் தேவரை எதிர்பார்த்திருந்தனர். தேவரும் தமக்கென அமைத்திருந்த விடுதியில் வந்துத் தங்கினார். சேதுபதி வேந்தரைத் தாமே சென்று பார்ப்பது தம் கௌரவத்திற்குக் குறைவாதலாலும்,

தாம் தம் அமைச்சருடைய விருப்பத்தின்படி வந்திருப்பதாலும் அவர் அங்கேயே தங்கித் தம் அமைச்சரது வரவை எதிர்பார்த்திருந்தார். விருந்தாளியை விருந்தோம்பல் செய்பவர் தானே சென்றழைப்பது முறை?

அவர் வந்திருப்பது பொன்னம்பலம் பிள்ளைக்குத் தெரியாது. பிள்ளையை வியப்படையச் செய்யவேண்டுமென்றுக் கருதிய சேதுபதி அவரையும் அழைத்துக்கொண்டு சின்னணைஞ்சாத் தேவர் தங்கியிருந்த விடுதிக்கு

வந்தார். அருகில் வரும்போதே தம்முடைய தலைவரைக் கண்டுகொண்ட பொன்னம்பலம் பிள்ளை ஏதோ சூழ்ச்சி நடந்திருக்கலாமென்றுப் புரிந்து கொண்டார். ஜமீன் பரிவாரங்களைக் காணோம். தேவரின் சாதுரியச் செயல்

ஒருவாறு புரியலாயிற்று. உட்புகுந்து சின்னணைஞ்சாத் தேவரருகில் செல்லும்போது அவர் திடுக்கிட்டுப்போவாரென்று சேதுபதி நினைத்தார். பிள்ளை அவர்களோ எவ்விதச் சலனமுமின்றி அங்கேச் சென்றவுடன், ” ஏனடா

சின்னணைஞ்சா! தேசத்தில் சமூகத்தில் எல்லாரும் சௌக்கியமா?” என்று கேட்டார். சமூகம் என்பது சமஸ்தானாதிபதியைக் குறிப்பது. சின்னணைஞன் என்பதும் ஒரு ஜமீன் அதிகாரியின் பெயராய் இருக்கக் கூடும் என்று

எண்ணிவிட்டார் சேதுபதியும்!

தாமே சமூகமாக இருக்கத் தம்மை இப்படி ஒருமையில் அழைத்துக் கேட்பதுபற்றி ஜமீன்தார் கோபம் அடையவில்லை. தாம் முன்னரே சந்தேகித்தபடி ஏதோ சூழ்ச்சியினால் சேதுபதி தம்மை வரவைத்திருக்கிறார் என்றும், தம் அமைச்சர் தக்க காரணமில்லாமல் அப்படிப் பேசமாட்டாரென்றும் அவர் ஒருநொடியில் ஊகித்துக் கொண்டார். தானும் சமஸ்தானத்தின் ஒரு ஊழியனாகவே நடிக்கலானார்.

” எஜமான்! சமூகத்தில் சௌக்கியமே. உங்களைப் பிரிந்திருப்பதுதான் கஷ்டமாக இருக்கிறதாம்” என்று பணிவுடன் அவர் விடையளித்தார்.

” அப்படியா! விரைவிலேயே புறப்பட வேண்டியதுதான்” என்று சொல்லிவிட்டுப் பொன்னம்பலம் பிள்ளை மேலே நடந்தார்.

சேதுபதி மன்னருக்கு ஒன்றும் விளங்கவில்லை; அவர் அதற்குமுன் சின்ன ணைஞ்சாத் தேவரைப் பார்த்ததில்லை; ஆதலின் அங்கே வந்தவரே ஜமீன்தார் என்று அறிந்து கொள்ளவும் முடியவில்லை. ‘ இவர் ஜமீன்தாராக இருந்தால், நமது முன்னிலையில் இந்த அமைச்சர் இப்படிப் பேசுவாரா? நாம் நினைத்தது சரிதான். இவர் சமஸ்தானத்தைச் சேர்ந்த அதிகாரியாக இருக்கலாம். அமைச் சரை ஏமாற்ற எண்ணிய நாமே ஏமாந்து போனோமே. ஜமீன்தார் இவரைக் காட்டிலும் அறிவாளியென்றுத் தெரிகிறது. தாம் வராமல் தம் பெயருள்ள ஓர் அதிகாரியை அனுப்பிவிட்டார். இல்லாவிட்டால் இவ்வளவு சிறந்தவராகிய பொன்னம்பலம் பிள்ளைக்கு அவரிடத்தில் அன்பு இருப்பதற்கு நியாயம் இல்லையே’ என்று எண்ணினார். இருவரும் சிறிது நேரம் ஜமீந்தாருடன் (!) அளவளாவி விட்டு அரண்மனைக்குத் திரும்பினார்கள்.

பொன்னம்பலம் பிள்ளை தனியே வந்து தம் சமஸ்தானாதிபதிக் கண்டு பொய்க் கடிதம் வந்ததும் பிறவும் தெரிந்து கொண்டார்; ” நான் செய்த அபசாரத்தை மன்னிக்க வேண்டும். சமூகத்தின் கௌரவத்திற்கு இங்கெல்லாம் இவ்வளவு சுலபமாக வருதல் ஏற்றதன்று. அதனால், நான் இந்தத் தந்திரம் செய்தேன். சமுகத்திற்கு அகௌரவம் ஏற்பட்டாலும் நம் இருவருக்கு மட்டுந்தானே அது தெரியும்? உரிமைப் பற்றியும், வேறு வழியில்லாமையாலும் இவ்வாறு செய்தேன்.க்ஷமித்தருள வேண்டும்” என்று வேண்டினார்; தம்முடைய அருமைத் தலைவரை அவ்வாறு பேச நேர்ந்ததே என்பதை நினைத்து நினைத்து உருகினார்.

சின்னணைஞ்சாத் தேவரோ சிறிதும் மனம் வருந்தாமல்,” நீர் நம்முடைய மானத்தைக் காப்பாற்றினீர். நாம் தெரியாமல் செய்த பிழையை உம்முடைய சாதுரியத்தால் மாற்றி விட்டீர். நீர் உள்ள வரையில் நமக்கு என்ன குறை!” என்று கூறித் தம் அமைச்சரைத் தேற்றினார்.

பின்னர், பொன்னம்பலம் பிள்ளை சேதுபதியிடம் தம் அரசர் தம்மை வரும்படி யாகச் சொல்லியனுப்பி யுள்ளாரென்று கூறி விடைபெற்றுக்கொண்டு, சமஸ்தான அதிகாரியாக நடித்த ஜமீந்தார் சின்னணைஞ்சாத் தேவருடன்

சொக்கம்பட்டி போய்ச் சேர்ந்தார். இறுதியில் சூழ்ச்சி புறமுதுகு காட்டி ஓடியது, மதியூகமே வெற்றிவாகைச் சூடியது! சேதுபதிக்கு உண்மை தெரிய வந்ததோ என்னவோ, யார் அறிவார்?!

அதிகாரம்,பதவி ஆகியவற்றைத் தாண்டி நிலவிய அத்தோழர்களின் சங்கிலி இணைப்பை இரக்கமற்றக் காலதேவன் துண்டித்து, பெரியசாமித் தேவரின் இன்னுயிரை 1721 ஆண்டுக்கு முன் பறித்துக் கொண்டான். அவருடையப் பிரிவைப் பிள்ளையவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, துக்கம் கரை கடந்து நின்றது. அதன் முழு இயல்பையும் அவர் பாடிய இரங்கல் பாட்டு புலப்படுத்தும்

    வானா டரசாளப் போன மகராஜன்

    தானா பதியெனவுஞ் சற்றுமதித் தானிலையே

    சேனா பதிப்பெருமான் சின்னணைஞ்சான் போனவழி

    போனா லொழியமனப் புண்பாடு தீராதே.

 (அந்த மகராஜன் வானுலகை அரசாளப் போய்விட்டான். இந்த ஸ்தானாதி பதியைச் சிறிதும் கவனம் கொள்ளாமல் தனியே சென்று விட்டான்.

அந்தச் சேனாபதிப் பெருமான் சின்னணைஞ்சானைப் பிரிந்து என் உள்ளம் புண்பட்டுத் தவிக்கிறது. அவன் போனவழி போனாலொழிய அப்புண்

ஆராது) என நைந்து புலம்புகிறார்.

அவரது அந்திமக் காலம் மிகவும் வேதனைக்கு உரியதாக அமைந்து விட்டது. சின்னப்பட்டம் குமாரர் சிவராமச் சின்னணைஞ்சாத் தேவர் ஜமீந்தார் பொறுப்பேற்றதும்,பிள்ளையை உதாசீனம் செய்யவே          மனம் வெறுத்துப் போனார்.

அவர் 1762-ஆம் ஆண்டு* மாசிமாதம் 7-ஆம் தேதி சிவபதமடைந்தார் எனத் தெரிகிறது. தன் உற்ற நண்பர் இயற்கை எய்தி 41 ஆண்டுகள் கழித்து, அன்னாரது நினைவுகளை நெஞ்சில் இருத்தி, மேலுலகம் சென்றடைந்தார். மரணம் இருவரை இணைத்தது என்றால், இங்கோ இயற்கை இவர்களைப் பிரித்து ஒருவரை வாடவைத்து விட்டது!

“மதியூகியும் தமிழ்ப்புலவரும் சிவபக்திச் செல்வருமாகிய பொன்னம்பலம் பிள்ளையின் செயல் ஒவ்வொன்றும், ‘அவர் சாதாரண மனிதர்களோடு சேர்த்து எண்ணுதற்கு உரியவரல்லர்; மனிதவர்க்கத்தில் தமக்கென்று தனிச்சிறப் புடை யப் பதவிக்கு உரியவர்’ என்றே நினைக்கச் செய்யும்” என்று ‘தமிழ்த் தாத்தா’ அவர்கள் தன் கருத்தைக் கூறியுள்ளார்.

ஆழ்ந்த நட்புக்கு ஓர் இலக்கணமாகத் திகழ்கிறது இந்தப் புலவர்–புரவலர் தோழமை என்றால் அது மிகை அல்ல.

குறிப்பு: இவ்வரலாற்றை, திருவாவடுதுறை ஆதீன வித்துவான் ஶ்ரீமத் சங்கரலிங்கத் தம்பிரான் அவர்கள் திரு உ.வே.சாமிநாதையரிடம் தெரிவித்துள்ளார். அதைத் தமிழ்த் தாத்தா தன் கட்டுரை வாயிலாகப்

 பிரசுரித்துள்ளார். நல்லுரைக் கோவை தொகுப்பில் இதைப் படிக்கலாம்.

  பொன்னம்பலம் பிள்ளையின் இரங்கற்பா,–நினைவு மஞ்சரி-பாகம்1

  ஶ்ரீஉ,வே.சா கட்டுரைத் தொகுப்பு (Project Madurai)

         ——————————————————————————————————-

 tags- மதியூகி பொன்னம்பலம் பிள்ளை

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: