WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,296
Date uploaded in London – – 4 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்வாமி ராமதீர்த்தர்! – 3
அமெரிக்காவிற்குக் கப்பலில் கிளம்பினார் ஸ்வாமி ராமதீர்த்தர். ஆனந்த அலையில் அவர் மிதந்தார். பரந்து விரிந்திருந்த பசிபிக் மாகடல் போல அவரது அன்பும் பரந்து விரிந்திருந்தது. கப்பல் சான்பிரான்ஸிஸ்கோவை அடைந்த போது ராமதீர்த்தர் மேல் தளத்தில் சந்தோஷத்தால் உருண்டு புரண்டார். இதைப் பார்த்த அமெரிக்கர் ஒருவர் வியந்தார். இந்த மனிதர் ஏன் எல்லோரையும் போல அவசரம் அவசரமாக பரபரப்புடன் இறங்கவில்லை?
இந்த எண்ணம் அவர் மனதில் மேலிட.”சார், உங்கள் பயணப்பெட்டி எங்கே?” என்று கேட்டார்.
“நான் எந்த லக்கேஜையும் கொண்டு செல்வதில்லை. நான் மட்டும் தான்”
‘உங்கள் பணத்தை எங்கே வைப்பீர்கள்?”
“நான் பணத்தை வைத்துக் கொள்வதே இல்லை”
“அப்படியென்றால் எப்படி நீங்கள் வாழ்கிறீர்கள்?”
“எல்லோரிடமும் அன்பு செலுத்தி நான் வாழ்ந்து வருகிறேன். எனக்கு தாகமென்றால் எப்போதும் ஒருவர் எனக்கு ஒரு கப் தண்ணீர் கொடுக்கத் தயாராக இருக்கிறார். எனக்குப் பசி என்றால் எப்போதுமே ஒருவர் ரொட்டி கொடுக்கத் தயாராக இருக்கிறார்.”
“உங்களுக்கு அமெரிக்காவில் யாராவது நண்பர்கள் இருக்கிறார்களா?”
“ஓ, இருக்கிறாரே, ஒருவர் இருக்கிறார், அது நீங்கள் தான்!” என்று அவர் தோளைத் தொட்டவாறே ஸ்வாமி ராமதீர்த்தர் கூறினார்.
அவ்வளவு தான், அந்த அமெரிக்கர் அவரது அத்யந்த பக்தரானார்.
அமெரிக்காவில் அவர் காலடி வைத்த முதல் நாளிலிருந்தே அமெரிக்கர்களும், பத்திரிகைகளும் எல்லையற்ற அன்பை அவர் மீது பொழிய ஆரம்பித்தன.
திருமதி பி.விட்மேன் (Mrs. P. Whitman) என்ற பெண்மணி ஸ்வாமியின் அத்யந்த பக்தை. அவர் ஸ்வாமியின் உரைகளை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே ஷார்ட்- ஹாண்டில் எடுக்க ஏற்பாடு செய்தார். அமெரிக்காவில் அவர் ஆற்றிய உரைகள் அனைத்தும் Rama Tirtha Publication League நிறுவனத்தால் பிரசுரிக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 400 பக்கங்கள் கொண்ட எட்டுத் தொகுதிகளாக அவை ‘In Woods of God-realisation’ என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டன.
இவை இன்றும் புதிய பதிப்பில் படிக்கக் கிடைக்கின்றன.
ஸ்வாமி ராமாவிற்கு ஒரு அறைக்குள் உட்கார்ந்திருப்பது என்பது பிடிக்கவே பிடிக்காது. “ராமாவிற்கு அறை என்றாலே பிடிக்காது. ஏனெனில் அது கல்லறை போல இருக்கிறது” என்பார் அவர்.
சூரிய வெளிச்சம் உள்ள மாடியில் தான் அவர் அமர்வார்!
அமெரிக்காவில் இருந்த போது சாஸ்தா நீரூற்றில் (Shasta Springs) என்ற இடத்தில் அவர் தங்கி இருந்த போது அவர் தான் தங்கி இருந்த வீட்டாருக்கு ஒரு சுமையாக இருக்க விரும்பவில்லை. தனது பங்கிற்குச் சிறிது உழைப்பையும் தர வேண்டும் என்று எண்ணினார். ஆகவே மலையிலிருந்து விறகுகளை வெட்டிக் கொண்டு வந்து வீட்டிற்குத் தருவார். அவர் தங்கி இருந்த இடம் டாக்டர் ஹில்லர், திருமதி ஹில்லர் (Dr Hiller and Mrs Hiller) ஆகியோருக்குச் சொந்தமான வீடு. அவர்கள் ராமதீர்த்தரைத் தங்களுடனேயே அமெரிக்காவிலேயே வசித்து விடுமாறு வேண்டினர்.
ஸ்வாமி ராமதீர்த்தர் எப்போதுமே தனிமையையே விரும்பினார்.
சாஸ்தா நதிக்கரையோரம் அவருக்கென ஒரு சிறிய தொங்கு படுக்கை (Hammock) அமைக்கப்பட்டது. பெரும்பாலும் அங்கு அமர்ந்து அவர் தவம் புரிந்து கொண்டிருந்தார். வேதாந்த பிரசாரம் என்றால் மட்டும் உற்சாகமாக அதிலிருந்து வெளியே கிளம்பி கூட்டங்களுக்குச் சென்று உரையாற்றுவார். பொங்கி வரும் சாஸ்தா நதிக்கரையோரம் அமைந்த தொங்குபடுக்கையில் இருந்ததைப் பற்றி அவர் கூறினார் இப்படி :- ‘அமெரிக்க ஜனாதிபதியை விட பறவைகளுடன் இருந்த அவருக்கு அதிக சந்தோஷம் இருந்ததாம்’
ஒரு முறை சில அமெரிக்கர்கள் சாஸ்தா மலை சிகரத்தில் யார் முதலில் ஏறுவது என்ற போட்டியை அமைத்து அவரையும் பங்கு கொள்ள அழைத்தனர். சாஸ்தா மலை கடல் மட்டத்திலிருந்து 14,444 அடி உயரம் கொண்டது. உற்சாகமாக அதில் கலந்துகொண்ட ஸ்வாமி முதல் பரிசை வென்றார். என்றாலும் கூட பரிசைப் பெற அவர் மறுத்து விட்டார். இதைப் பற்றி எழுதிய பத்திரிகளைகள் பெரும் விற்பனைக்குள்ளாயின. அந்தப் பத்திரிகைகள் அவர் முதல் பரிசை வென்றும் கூட அதை வாங்க மறுத்ததை விவரமாக எழுதி வெளியிட்டன.
இன்னொரு சமயம் 30 மைல் தூரம் ஓடும் மாரதான் ரேஸ் (30 mile Marathon race) ஒன்று நடந்தது. அந்த ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட ராமதீர்த்தர் முதலாவதாக வந்தார். அனைவரும் அதிசயித்தனர்!
கங்கா தந்த செல்வத்தை ஏற்கவில்லை
அமெரிக்க பெண்மணி ஒருவருக்கு ஸ்வாமி ராமதீர்த்தர் கங்கா என்று பெயர் சூட்டியிருந்தார். அந்த கங்கா என்ற பெண்மணி ஸ்வாமி ராமதீர்த்தரிடம் வந்து தனது வீடு, செல்வம், பெயர், புகழ் அனைத்தையும் அர்ப்பணித்ததோடு தன்னையும் அர்ப்பணித்தார். சந்யாசம் மேற்கொள்வதாகச் சொன்னார்.
ஆனால் ஸ்வாமியோ அவரது பரந்த உள்ளத்தைப் பாராட்டி விட்டு அதை ஏற்கவில்லை.
வேதாந்தா காலனியை இந்தியாவிலேயே அமைக்க விரும்புவதாகவும் அமெரிக்காவில் அல்ல அவர் தெரிவித்தார்.
பாரதத்தை தன்னிலே கண்டு தன்னையே பாரதமாக உருவகப் படுத்தி இவர் எழுதிய கட்டுரை ஒவ்வொரு பாரதீயனும் படிக்க வேண்டிய ஒன்று! குர் ஆனில் ஓம் உள்ளது என்ற இவரது சொற்பொழிவு முஸ்லீம்கள் வியந்து போற்றிய ஒன்று.
- தொடரும்
TAGS- ராமதீர்த்தர்! – 3