Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 10,309
Date uploaded in London – – 7 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை நவம்பர் 7 -ம் தேதி 2021
ஆம் ஆண்டு
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXX
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் -கோவில்களில் சிறப்பு வழிபாடு
நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்ததை நினைவுபடுத்தும் வகையில், வடமாநிலங்களில் நரகாசுன் உருவ பொம்மைகளை எரித்து தீபாவளி கொண்டாடுகின்றனர். கோவா மாநில தலைநகர் பனாஜியில் நரகாசுரன் உருவ பொம்மைகளுக்கு தீவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். வட நாட்டில் தீபாவளி பண்டிகையை 5 நாட்களுக்குக் கொண்டாடுவார்கள் .
XXXXX
அமெரிக்கா, பிரிட்டனில் தீபாவளி விழாக்கள்
இதேபோல் உலகம் முழுவதிலும் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
அமெரிக்காவில் முதல் தடவையாக தீபாவளி பட்டாசு வாண வேடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் அவரது மனைவியும் தீப படத்துடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர். இதே போல துணை ஜனாதிபதி திருமதி கம லா ஹாரிஸும் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
பிரிட்டனில் பார்லிமெண்ட் தீபாவளி விழா ஆன் லைனில் நடந்தது. பிரதமர் பாரிஸ் ஜான்சன் வீடியோ பதிவில் வாழ்த்து அனுப்பினார். உட்துறை அமைச்சர் திருமதி ப்ரீதி படேல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்
பார்லிமென்டின் இந்து மதகே குழுவின் தலைவரும் இந்தியாவில் உயரிய விரு து பெற்றவருமான பாப் ப்ளாக்க்மன் பாப் பிளாக்மான் இந்த ஆண்டு தீபாவளி நாட்களில் 24 மணி நேரத்துக்குள் 12 கோவில்களுக்கு விஜயம் செய்து தரிசிப்பேன் என்றார் . அவரை அடுத்து பேசிய உட்துறை அமைச்சர் ப்ரீதி படேல் தன்னால் பாப் பிளாக்மானுடன் போட்டி போட இயலாது என்றும் தான் வழக்கமாகப் போகும் சின்னக் கோவிலுக்கு அப்பா அம்மாவுடன் போகப் போவதாகவும் தெரிவிதார்
பார்லிமென்ட் தீபாவளி விழாவை பிரிட்டிஷ் இந்துப் பேரவை ஆண்டுதோறும் நடத்துகிறது
XXX
பிரிட்டனில் காந்திஜி, மஹா லெட்சுமி உருவத்துடன் நாணயங்கள் வெளியீடு
பிரிட்டனின் நிதியமைச்சரான ரிஷி சுனக், ஒரு புதிய தீபாவளிப் பரிசை அறிவித்தார்.தீபாவளியைக் கொண்டாடும் முகத்தான், 5 பவுண்ட் மதிப்புள்ள மஹாத்மா காந்தி உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிடப்படுமென்றார்.
பொதுவாக, இது நாணயம் சேகரிப்போருக்காக வெளியிடப்படும். சாதாரண 5 பவுண்ட் நாணயத்தோடு வெள்ளி தங்கத்திலும் நாணயங்கள் வெளியிடப்படும் .
இவை தவிர செல்வ தேவதையான லட்சுமி உருவம் பொறித்த தங்க பிஸ்கட்டுகளும் தங்கப் பாளங்களும் வெளியிடப்படும் என்று நிதி அமைச்சர் ரிஷி அறிவித்தார் .
இது இந்தியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. பிரிட்டனில் மிக முக்கிய அமைச்சர் பொறுப்புகள் இந்திய வம்சாவளியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது
.
XXX
திருமலை பாலாஜி வெங்கடேஸ்வரர் காணிக்கை ரூ.4.16 கோடி
திருமலை பாலாஜி வெங்கடேஸ்வரரை தரிசிக்க வரும் பக்தர்கள், தரிசனம் செய்த பின் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை தேவஸ்தானம் சில்லரை, ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு கரன்சிகள் என பிரித்து கணக்கிடுகிறது.
அவ்வாறு பக்தர்கள், தீபாவளிக்கு முந்தைய நாள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் 4.16 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. ‘இது கடந்த சில மாதங்களில் வசூலான, உண்டியல் வருவாய்களில் அதிகபட்சமானது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
XXX
கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு; ஆதி சங்கரர் சிலை திறப்பு
உத்தரகண்டின் கேதார்நாத் கோவில் அருகே 12 அடி உயர ஆதி சங்கராச்சாரியார் சிலையை திறந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டார்.
உத்தரகண்டில் 2013ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது கேதார்நாத் கோவில் சேதம் அடைந்தது. கோவில் அருகே இருந்த ஆதி சங்கராச்சாரியார் சமாதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கோவில் மற்றும் சமாதியை புனரமைக்கும் பணியை 500 கோடி ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன.
கேதார்நாத் கோவில் அருகே 12 அடி உயரமும், 35 டன் எடையும் உடைய ஆதி சங்கரரின் கற்சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை கர்நாடகாவின் மைசூருவை சேர்ந்த சிற்பி யோகிராஜ் செதுக்கி உள்ளார்.
இந்த சிலை உருவாக்கத்திற்காக 120 டன் கல் கொண்டுவரப்பட்டு, 2020 செப்டம்பரில் சிலை செதுக்கும் பணி துவங்கியது. ஆதி சங்கரரின் அமர்ந்த நிலையிலான இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி நவ.,05-ம் தேதி திறந்து வைத்தார். முன்னதாக அங்குள்ள தேவ மந்திரங்கள் முழங்கிட சிவன் மற்றும் நந்தி சிலைகளுக்கு பிரதமர் மோடி ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.
XXXX
9 லட்சம் தீபங்களுடன் அயோத்தியில் தீப உற்சவம் – புதிய உலக சாதனை
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீப உற்சவம் நடைபெற்று வருகிறது.
தீப உற்சவ நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக அயோத்தி நகரின் சரயு நதி கரையோரத்தில் ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடினர். இதனால் அயோத்தி முழுவதும் தீப ஒளி வெள்ளத்தில் ஜொலித்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளராக சுற்றுலாத்துறை இணை மந்திரி கிஷண் ரெட்டி பங்கேற்றார். மாநில கவர்னர் ஆனந்திபென் படேல், மாநில அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது சுமார் 6 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றியது கின்னஸ் சாதனை படைத்த நிலையில், இந்த ஆண்டு ஒன்பது லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது புதிய கின்னஸ் சாதனை ஆனது.
XXXX
சபரிமலை நடை திறப்பு: மண்டல பூஜைக்காக முன்னேற்பாடுகள் தீவிரம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜை விமரிசையாக நடைபெறும். இதில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கோயிலுக்கு வருவர். இந்த ஆண்டு மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.
கோயிலில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் விரிவான ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் 24 மணி நேரத்துக்குள் பரிசோதனை செய்து கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றார்.
பக்தர்களின் வசதிக்காக, பம்பா மற்றும் நிலக்கல் பகுதியில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்படும் என்றும் அவர் கூறினார்.
ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே இந்த ஆண்டு சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
XXXX
தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
சூரசம் ஹாரம் 9-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மதியம் விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.
7-ம் திருவிழாவான 10-ந்தேதி இரவு திருக் கல்யாண வைபவம் நடக்கிறது. கொரோனா தடுப்ப நடவடிக்கையாக சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடைபெறும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. மற்ற நாட்களில் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
Xxxxx
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீப விழா: தேரோட்டம், கிரிவலம் ரத்து
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகாவிழா உலக பிரசித்திப் பெற்றது. இந்த திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்குகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபமும் மற்றும் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகாதீபவிழா நாட்களில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாட வீதியில் நடைபெறும் மகா தேரோட்டம், இந்தாண்டும் நடைபெறாது. அதற்கு மாற்றாக, கோவில் வளாகத்தில் உள்ள 5ம் பிரகாரத்தில் சாமிகளின் உலா நடைபெறும். கிரிவலம் நடைபெறாது
ஆண்டுதோறும் நடைபெறும் குதிரை சந்தை மற்றும் மாட்டு சந்தைக்கும் அனுமதி இல்லை.
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND
நன்றி, வணக்கம்
tags–tamilhindunews,7112021