Post No. 10,315
Date uploaded in London – – 9 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 8-11-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூ பகுதிகளாகத் தரப்படுகிறது.
சேக்கிழார்! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்!

தமிழ்க் கவிஞர்களுள் தனிப் பெருமை வாய்ந்த மாபெரும் கவிஞராகத் திகழ்பவர் சேக்கிழார் பெருமான். பல கவிஞர்களும் இறைவனைப் பாடித் தொழுது பக்தி இலக்கியத்தை வளர்த்த நாளில் அடியார்க்கு அடியானாக தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்பதை உணர்ந்து 63 நாயன்மார்களின் வரலாறை அற்புதமாகச் செந்தமிழில் திருத்தொண்டர் புராணம் என்ற நூலைச் சுவை படப் பாடிப் படைத்துள்ளார் சேக்கிழார். திருத்தொண்டர் புராணம் என்று பெயரைக் கொண்டிருந்த போதும் பல்வேறு பெருமைகளைக் கொண்டதால் இது வழக்கில் பெரிய புராணம் என்றே வழங்கப்படலாயிற்று. அத்துணை பெருமை கொண்ட நூல் இது.
சான்றோருடைத்த தொண்டை நாட்டில் 12ஆம் நூற்றாண்டில் புலியூர்க் கோட்டம் பகுதியில் குன்றத்தூர் என்ற ஊரில் சைவ மரபில் தழைத்தூறிய வேளாண் பெருமக்கள் வாழ்ந்து வந்தனர். அத்தகைய ஒரு உயரிய குடும்பத்தில் வெள்ளியங்கிரி-அழகாம்பிகை தம்பதியினருக்கு மகனாய் அவதரித்தார் சேக்கிழார். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் அருண்மொழித்தேவர். ஆனால் குடிப்பெயரான சேக்கிழார் என்ற பெயரையே உலகம் போற்றி வழங்கலாயிற்று. இவருக்கு ஒரு தம்பி உண்டு. பெயர் பாலறாவாயர். குன்றத்தூர் சென்னையை அடுத்து உள்ளது.
கல்வி கேள்விகளில் இளம் வயதிலேயே சிறந்து விளங்கிய இவரின் பெருமை உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாயிற்று. இவரது தந்தையார் தொண்டை நாட்டு மன்னனிடம் பணி புரிந்து வந்தார்.
அந்நாளில் சோழ நாட்டை ஆண்டு வந்த மன்னன் மிகவும் புகழ் பெற்ற அநபாயன் என்பவன்.
ஒரு நாள் சோழ மன்னனான அநபாயன் என்னும் இரண்டாம் குலோத்துங்கனிடமிருந்து தொண்டை நாட்டு மன்னனுக்கு ஒரு ஓலை வந்தது. “கல்வி கேள்விகளில் மிக்கார் தொண்டைமண்டலத்தில் உள்ளோர் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். பூமியை விட, மலையை விட, கடலை விடப் பெரியது எது? விடை அறிய ஆவலாய் உள்ளோம்” என்ற அந்த ஓலையைப் பார்த்த மன்னன் தன் அவையில் உள்ள அறிவில் மிக்காரும், புலவர் பெருமக்களுமான அனைவர் முன்னிலையும் இதைப் படிக்கச் செய்தான். தக்க விடையை உடனே தருமாறு ஆணையிட்டான். கல்வி கேள்விகளில் சிறந்த சேக்கிழாரின் தந்தையார் மன்னனின் ஆணையை சிரமேற் கொண்டார். ஆனால் தக்க பதில் தான் அவருக்குத் தெரியவில்லை. வீடு சென்ற அவர் கவலையில் ஆழ்ந்தார். உண்ணவும் பிடிக்கவில்லை. இதைக் கண்ட அவரது புதல்வர் அருள்மொழித்தேவர் காரணத்தை வினவ மன்னனுக்கு வந்த ஓலை பற்றி அறிந்தார்.
“பூ, இவ்வளவு தானா! இதற்கு விடைகள் இதோ, என்று ஒலை நறுக்கில் பதிலை எழுதிக் கொடுத்தார்.”
அதைக் கண்ட தந்தையார் மனம் மிக மகிழ்ந்து அடுத்த நாள் அரசனிடம் அதைத் தந்தார். பதில் இது தான்:
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது (குறள் எண் 102)
பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது (குறள் எண் 103 )
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது (குறள் எண் 124)
உதவி செய்யப்பட்ட காலத்தை நினைத்துப் பார்த்தால், தப்பாமல் செய்யப்பட்ட அந்த உதவி சிறிது தான் எனினும் அது பூவுலகை விட மிகப் பெரியதாகும்.
எந்த விதப் பயனையும் எதிர்பார்க்காமல் ஒருவரால் செய்யப்பட்ட உதவியின் பெருமையினை சீர்தூக்கிப் பார்த்தால் அதன் நன்மை கடலை விட பெரியதாகும்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் கூட தன் நிலை மாறுபடாது அடங்கி இருப்பவனின் உயர்வானது மலையின் உயர்ச்சியை விடப் பெரியதாகும்.
தொண்டை மண்டல அரசன் இதை சோழனுக்கு அனுப்ப, இந்த விடையைக் கண்ணுற்ற அநபாய சோழன் பெரிதும் மகிழ்ச்சியுற்று இதைக் கூறிய பெருமகனை கௌரவிக்க பல்லக்கு வரிசையை அனுப்பினான்.
அருள் மொழித்தேவர் சோழனிடம் சென்றார். அவரது கல்வி கேள்வி மேன்மையைக் கண்ட சோழன் அவரைத் தனது அமைச்சராக நியமித்தான். சேக்கிழார் என்ற பெருமைக்குரிய பெயரால் சிறப்பிக்கப்பட்டு அப்படியே அவர் அழைக்கப்பட்டார். (சே- காளை; கிழார் – காளையை வாகனமாகக்கொண்ட சிவனின் பக்தர் – சேக்கிழார் என்பது குடிப்பெயரும் கூட). அவருக்கு உத்தம சோழப் பல்லவராயன் என்ற பட்டத்தை அநபாயன் அளித்து கௌரவித்தான்.
சோழ நாட்டில் அமைந்திருக்கும் திருநாகேஸ்வரம் தலத்தின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் சேக்கிழார். சிவபிரான் மீது காதலாகிக் கசிந்து க்ண்ணீர் மல்கும் பக்தியும் சிவனடியார் மீது அடங்கா ஆர்வமும் மதிப்பும் மரியாதையும் பக்தியும் கொண்டவர் அவர்.
ஒரு நாள் சமண சமய நூலான சீவக சிந்தாமணியை அரசவையில் விளக்கும்படி சோழன் ஆணையிட அந்த உரை ஆரம்பித்தது. அநபாயன் அதில் ஆழ்ந்து ஈடுபட்டு அதை ரசிக்கத் தொடங்கினான். சமண மதக் கொள்கையை விளக்கி சமணரால் செய்யப்பட்ட சிந்தாமணியை அருள்மொழிவர்மர் ரசிக்கவில்லை. அந்த நூல் படிக்க ஆரம்பித்தவுடன் அவர் எழுந்து செல்லலானார். இதைக் கண்ணுற்ற மன்னன் காரணத்தை வினவ இதை விட பெருமை மிக்க அடியார்கள் வாழ்ந்த பூமி இது என்று பதில் கூறினார் சேக்கிழார். அப்படியானால் அந்த அடியார்கள் சரித்திரத்தைக் கூறுங்கள் என்று மன்னன் கேட்க சேக்கிழாரும் அவர் தம் பெருமையை விளக்கிக் கூறினார். இதனால் வியப்புற்ற மன்னன் உலக மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் அதை நூலாக்குமாறு வேண்டினான்.
* தொடரும்
tags – சேக்கிழார்! – 1