WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 10,339
Date uploaded in London – – 15 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 14-11-2021 அன்று ஒளிபரப்பான உரை!
திருநின்றவூர்
பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப் பொய்ந்நூலை மெய்ந்நூலென்றும் ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின், எந்தை என் வணங்கப்படுவானை கணங்களேத்தும்
நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான் தன்னை நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார் சோலை,
காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டது நான் கடல்மல்லைத் தல சயனத்தே
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகத் திகழ்வதும் பூசலார் நாயனாரின் பக்தியை விளக்கும் ஹ்ருதயாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ள தலமுமான திருநின்றவூர் திருத்தலம் ஆகும்.
திண்ணனூர் என்று இப்போது அறியப்படும் இத்தலம் சென்னையிலிருந்து வடமேற்கில் 32 கிலோமீட்டார் தூரத்தில் உள்ளது. இங்குள்ள பக்தவத்ஸல பெருமாள் கோவிலில் அருள் பாலிக்கும் மூலவர் திரு நாமம் :
ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள்
தாயார் : என்னைப் பெற்ற தாயார்
விமானம் : ஸ்ரீநிவாஸ (உத்பல விமானம்)
தீர்த்தம் : வருண புஷ்கரணி விருத்த க்ஷீர நதி
இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு பிரசித்தி பெற்ற ஒன்று. ஒருமுறை சமுத்திர ராஜனாகிய வருண பகவானுக்கும் லக்ஷ்மி தேவிக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டது. சண்டையில் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற லக்ஷ்மி தேவி இந்த ஊரின் அழகைப் பார்த்து இங்கேயே நின்றாள். சமுத்திரராஜன் அவளைச் சமாதானப் படுத்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. விஷ்ணு பகவானிடம் சென்று வேண்டவே அவர் பக்த வத்ஸலனாக லக்ஷ்மி தேவியிடம் வந்து சமுத்திர ராஜனுக்கு அருள் பாலிக்குமாறு கூறினார்.கடைசியாக ‘என்னைப் பெற்ற தாயே, அருள்வாயாக’ என்று சமுத்திரராஜன் வேண்டவே, மனமிரங்கிய தாயார் அருள் பாலித்தாள். ஆகவே இங்குள்ள தாயாரின் பெயர் ‘என்னைப் பெற்ற தாயார்’ ஆனது. லக்க்ஷ்மி நின்ற ஊர் என்பதால் இத்திருத்தலம் திரு நின்ற ஊர் என்ற பெயரைப் பெற்றது. இந்தக் கோவிலில் உள்ள
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதி மிகவும் விசேஷம் வாய்ந்தது. ஆண்டாள், ஆதிசேஷன், விஸ்வக்சேனர், ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கும் சந்நிதிகள் இந்த ஆலயத்தில் உண்டு.
இந்த ஊருக்கு வந்த திருமங்கையாழ்வார் தாயாரைப் பற்றிப் பாடவில்லை. நம்மைப் பற்றிப் பாடவில்லையே என்று தாயார் பெருமாளிடம் குறைப்பட்டுக் கொண்டு, அவரைப் பாடல் பெற்று வருமாறு அனுப்பினார். அதற்குள் ஆழ்வார் திருவிடந்தைத் தலத்தைத் தாண்டி திருக் கடல் மல்லையை அடைந்து விட்டார். பெருமாளுக்காக அவர் ஒரு பாடலைப் பாடினார். அதைக் கேட்ட தாயார் மற்ற தலங்களுக்குப் பல பாடல்கள் இருக்க, நமக்கோ ஒரு பாடல் மட்டும் தானோ என்று எண்ணி, ‘ஒரு பாடல் தான் பாடினாரா’ என்று கேட்டாள். அதற்குள் ஆழ்வார் திருக்கண்ணமங்கையை அடைந்து விட்டார். பெருமாள் திரும்பி வந்ததை ஓரக் கண்ணால் ஆழ்வார் கண்டு, அங்கிருந்தே இன்னொரு பாடலைப் பாடி பெருமாளையும் தாயாரையும் துதித்து மங்களாசாஸனம் செய்வித்தார்.
இந்தத் தலத்தில் அமைந்துள்ள பெரிய சிவாலயம் ஹ்ருதயாலீஸ்வரர் திருக்கோவில் ஆகும். இது பற்றிய அழகிய சரித்திர வரலாறு ஒன்று உண்டு.
பூசலார் நாயனார் பெரிய சிவபக்தர். இங்குள்ள சிவலிங்கம் மேற்கூரையின்றி வெயிலிலும் மழையிலும் இருப்பதைக் கண்ட அவர் மனம் நொந்தார். தன் உள்ளத்திலேயே இறைவனை நிறுவிக் கோவில் கட்டலானார் அவர். கும்பாபிஷேகத்திற்கு நாளையும் அவர் குறித்தார். அதே சமயம் தொண்டை நாட்டு மன்னனான ராஜசிம்ம பல்லவன் பெரிய சிவாலயம் ஒன்றைக் காஞ்சிபுரத்தில் கட்டிக் கும்பாபிஷேகத்திற்கென அதே நாளைக் குறித்தான். அவன் கனவில் தோன்றிய இறைவன் பூசலார் நடத்தும் கும்பாபிஷேகத்திற்குத் தான் செல்லப்போவதாகக் கூறினார். அதைக் கேட்டு வியந்த அரசன் அப்படிப்பட்ட கோவில் எது, எங்குள்ளது என்று அனைவரையும் விசாரிக்க அவன் பூசலார் நாயனார் பற்றி அறிந்தான். அவர் தனது உள்ளத்தில் கட்டிய அரும் கோவிலைப் பற்றி அறிந்து அவரது பக்தியைக் கண்டு பிரமித்து அவரை வணங்கினான். அவரது வேண்டுகோளுக்கு இணங்க அந்த இடத்தில் அரும் பெரும் கோவிலைக் கட்டினான். அதுவே ஹிருதயாலீஸ்வரர் கோவில் ஆகும். பூசலார் தனது இதயத்தில் கோவில் கட்டி அதன் மூலம் அனைவருக்கும் அருள் பாலிக்க இந்தக் கோவில் எழுந்ததால் அவர் பெயர் ஹிருதயாலீஸ்வரர் ஆனது.
இறைவன் கிழக்கு நோக்கி இருந்து அருள் பாலிக்கிறார்.
அம்மன் மரகதவல்லி தனி சந்நிதியில் தெற்கு நோக்கி இருந்து அருள் பாலிக்கிறார்.
இங்குள்ள விமானம் கஜபிருஷ்ட விமானம் என்ற அமைப்பில் தூங்கானை மாட வடிவில் அமைந்துள்ள ஒன்றாகும்.தக்ஷிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா ஆகியோரை தரிசிப்பதோடு, பிரதான வாயிலின் இருபுறங்களிலும் சூரிய சந்திரரைத் தரிசிக்கலாம். வெளி பிரகாரத்தில் விநாயகர் மேற்கு வாயிலப் பார்த்தபடி இருந்து அருள் பாலிக்கிறார். இங்கு சுப்ரமண்யர் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளித்து அருள் பாலிக்கிறார். நவகிரக சந்நிதியின் அருகே பல்லவ மன்னனான ராஜசிம்ம பல்லவனின் சிலையையும் காணலாம்.
இதய நோய் உள்ளவர்கள் இங்கு வந்து தரிசித்துத் தங்கள் நோய் தீரப் பெறுகின்றனர்.
18 பாடல்களில் பூசலார் நாயனார் புராணத்தை பெரிய புராணத்தில் அழகுற விவரிக்கும் சேக்கிழார் பிரான் இந்த வரலாற்றை,
நின்ற ஊர்ப் பூசல் அன்பன் நெடிது நாள் நினைந்து செய்த
நன்று நீடாலயத்து நாளை நாம் புகுவோம், நீ இங்(கு)
ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொளவாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில் கொண்டருளப் போந்தார்
என்று சொல்கிறார்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பக்தவத்ஸலப்பெருமாளும் என்னைப் பெற்ற தாயாரும், ஹ்ருதயாலீஸ்வரரும், மரகதவல்லி தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
திருமங்கையாழ்வாரின் அருள் வாக்கு இது:
ஏற்றினையிமயத்துளெம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை அண்டத்தப்புறத் துய்த்திடும் ஐயனைக் கையிலழியொன்றேந்திய
கூற்றினை, குருமாமணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே!
நன்றி, வணக்கம்! ***