ஸ்வாமி தயானந்த சரஸ்வதி! -1 (Post No.10,338)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,338

Date uploaded in London – –   15 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 14-11-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஸ்வாமி தயானந்த சரஸ்வதி! -1

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.

ஹிந்து வேதங்களின் மாண்பை மிக உயரிய விதத்தில் விளக்கிய மகான் ஸ்வாமி தயானந்த சரஸ்வதி. ‘இந்தியா இந்தியருக்கே’ என்ற ஸ்வராஜ்ய கோஷத்தை 1876ஆம் ஆண்டு முதலில் இந்தியருக்குத் தந்து உத்வேகம் ஊட்டியவர் அவர். பெரிய சீர்திருத்தவாதி. பெண்களின் உரிமைகளை வற்புறுத்தியவர்.  1824ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி ராஜ்கோட்டில், கத்தியவார் மாவட்டத்தில் டங்கரா என்ற கிராமத்தில், பிராமண குலத்தில், கர்ஸன் ஜி திவாரி என்ற அரசு ரெவின்யூ அதிகாரிக்கும் யசோதாபாயி என்ற அம்மையாருக்கும் அவர் மகனாகப் பிறந்தார். தந்தையார் அவருக்கு மூல சங்கர் என்ற பெயரைச் சூட்டினார். இளமையிலேயே வேதங்களின் பால் அளவற்ற ஈடுபாடு கொண்ட மூல சங்கர் யஜூர் வேதம் முழுவதையும் ஓதி தனது அபாரமான நினைவாற்றலைக் காட்டி, ஆசிரியர்களையும் சக நண்பர்களையும் வியக்க வைத்தார்.

அவரது பதிமூன்றாம் வயதில் நடந்த ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையையே மாற்றியது. சிவன் கோவிலுக்குத் தந்தையுடன் இரவு நேரத்தில் சென்ற மூல சங்கர் சிவலிங்கத்திற்குப் படைக்கப்பட்ட நிவேதனப் பொருள்களை எலி ஒன்று சாப்பிடுவதையும் அருகில் இன்னும் பல எலிகள் ஊர்வதையும் கண்டு மனம் நொந்தார். உருவ வழிபாட்டை அன்றிலிருந்து ஒதுக்கி வைத்த அவர் வேதங்கள் கூறும் இறைவனைப் பற்றி அறிய அடங்காத தாகம் கொண்டார். தவத்தை மேற்கொண்டார். பல மகான்களை அவர் சந்திக்க ஆரம்பித்தார். 22ஆம் வயதில் அவருக்கு மணம் முடிக்க நடந்த முயற்சியை அவர் ஒதுக்கி ஒவ்வொரு ஊராகச் செல்லலானார். வேத வித்தான ஸ்வாமி விர்ஜானந்தரிடம் அவர் சீடராகச் சேர்ந்தார். அவருக்கு சந்யாச ஆஸ்ரமம் தரப்பட்டு தயானந்த சரஸ்வதி என்ற பெயரும்  சூட்டப்பட்டது. வேதத்தில் வல்லவரான அவர் வேத பாஷ்யம், சத்யார்த்த ப்ரகாஷ், ரிக்வேத பாஷ்ய பூமிகா, ஸம்ஸ்கார் விதி உள்ளிட்ட அற்புதமான பல நூல்களைப் படைத்தார். வேத கோஷத்தை நாடெங்கும் முழங்கியவாறு ஊர் ஊராகச் சென்று வேத பிரசாரத்தை உரிய முறையில அவர் செய்யலானார். உறங்கிக் கிடந்த மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது.

1875ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் தேதியன்று அவர்  மும்பையில் உள்ள கிர்கானில் (Girgaon, Mumbai) ஆர்ய சமாஜத்தை நிறுவினார். ஆனால் ஜனநாயக வழியை பெரிதும் மதித்த அவர் ஆங்காங்கு உள்ளவர்களே ஆரிய சமாஜ நிர்வாகப் பொறுப்பை ஏற்க வலியுறுத்தினார். தான் நிறுவிய சமாஜத்தின் தலமைப் பொறுப்பையும் அவர் ஏற்கவில்லை. எந்த விதத்திலும் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அவர் தன் சீடர்களுக்கு அறிவுறுத்தினார். இந்தக் கருத்தை வலியுறுத்தி இரு  முறை அதை தனது உயிலில் அவர் எழுதியுள்ளார். மீரட்டில் முதல் தடவையும் இரண்டாவதாக உதய்பூரில் 1883ஆம் ஆண்டிலும் இதை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதை மதிக்காத சிலரால் ஆர்ய சமாஜ இயக்கம் பல சங்கடங்களுக்கு உள்ளானது. உத்தரபிரதேச்ம மொரொதாபாத்தில் முன்ஷி இந்த்ராமணி என்பவர் முஸ்லீம்களின் அட்டகாசத் தாக்குதலை எதிர்த்து பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதினார். அதனால் கோர்ட் படி ஏறி நிற்க வேண்டியதாயிற்று.

அவருக்கு ஆதரவாக தயானந்தர் நிற்கவே இந்த்ராமணிக்கு உதவிகள் கிடைக்கலாயின. அப்பீலில் அவர் ஜெயித்தார்.

அவரது பிரம்மசரியம் வியத்தற்குரிய ஒன்றாக இருந்தது.

பிரம்மசர்யத்தை அவர் வெகுவாக வலியுறுத்தினார். அதன் சக்தியைத் தன் வாழ்வில் அவர் பல முறைகள் நிரூபித்தார். அவர் வாழ்க்கை முழுவதும் பிரமிப்பை ஊட்டும் பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன.

அவர் பிரம்மசர்யத்தின் சக்தியை நிரூபித்த ஒரு சம்பவத்தை இங்குப் பார்ப்போம்.

குருதாஸ்பூருக்கு ஸ்வாமி தயானந்த சரஸ்வதி விஜயம் செய்தார். அங்கு சர்தார் விஜய் சிங் (Sardar Vijaya Singh) என்பவர் ஸ்வாமிஜியிடம் பிரம்மசர்யம் பற்றிய ஒரு சம்பாஷணையைத் தொடங்கினார்.

விஜய் சிங் : ஸ்வாமிஜி! நீங்கள் பிரம்மசர்யத்தைப் பற்றி மிகவும் சிலாகித்துப் பேசுகிறீர்கள். ஆனால் அதன் சக்தியை நாங்கள் கண்ணால் பார்த்தால் தான் நம்ப முடியும், இல்லையா!

ஸ்வாமிஜி : சர்தார்! இங்கே பாருங்கள்! சாஸ்திரங்கள் பிரம்மசர்யத்தை வெகுவாகப் புகழ்கின்றன. அவை சொல்பவை அனைத்தும் சரியே என்று நான் சொல்கிறேன்.

விஜய் சிங் : ஸ்வாமிஜி! நீங்கள் ஒரு பால பிரம்மச்சாரி. (குழந்தையிலிருந்தே பிரம்மசர்யத்தை அனுஷ்டித்து வருபவர்)

ஆனால் உங்களிடம் நான் எந்த ஒரு வீரியத்தையும் காணவில்லையே!

ஸ்வாமிஜி: சமயம் நேரும் போது அதை நீங்கள் பார்ப்பீர்கள்!

 சம்பாஷணை முடிந்த பின் சற்று நேரம் கழித்து சர்தார் விடை பெற்றுச் சென்றார். குதிரைகள் பூட்டிய தனது கோச் வண்டியில் (Coach) ஏறினார். கோச் வண்டியை ஓட்டியவர் தன் சவுக்கை எடுத்து குதிரைகள் கிளம்ப ஒரு வீசு வீசினார். சாதாரணமாக இந்த சமிக்ஞையினால் உடனே வெகு வேகமாக ஓடும் குதிரைகள், அப்போது நகரவில்லை. கோச் அசையவே இல்லை. தனது சவுக்கை இன்னும் பலமாக வீசினார் கோச்சை ஓட்டும் சாரதி. ஊஹூம், வண்டி நகரவே இல்லை. சர்தாருக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. ஏன் குதிரைகள் நகரவில்லை?!    

  அவர் திரும்பிப் பார்த்தார் என்ன நடக்கிறதென்று!

அடடா! அவர் பார்த்தது அவரை பிரமிக்க வைத்தது. பிரம்மச்சாரி தயானந்தர் கோச்சைப் பிடித்துக் கொண்டிருந்தார். எவ்வளவு சக்தியைக் குதிரைகள் பிரயோகித்தாலும் வண்டி நகரவில்லை!

ஸ்வாமிஜி விஜய் சிங்கைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்.

“விஜய் சிங்! பிரம்மசர்யத்தின் சக்தி எப்படிப்பட்டது என்பதை இப்போது பார்க்கிறீர்களா? உணர்கிறீர்களா?

விஜய் சிங் மட்டுமல்ல; அனைவரும் இந்த சம்பவத்தால் பிரம்மசர்யத்தின் வீரியத்தையும் தயானந்தரின் சக்தியையும் உணர்ந்தனர்; அவரைப் போற்றினர்.

*

tags – தயானந்த சரஸ்வதி!

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: