ஸ்வாமி தயானந்த சரஸ்வதி! – 3 (Post No.10,346)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,346

Date uploaded in London – –   17 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்வாமி தயானந்த சரஸ்வதி! – 3

ச.நாகராஜன்

ஆர்ய சமாஜத்தைப் பற்றி ஒவ்வொரு ஹிந்துவும் அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாதது. பத்து அழகிய கொள்கைகளின் அடிப்படையில் அது அமைந்தது. அதை மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.

  1. மெய்யறிவு மற்றும் இயற்பியல் அறிவு அனைத்திற்கும் இறைவனே மூல ஆதாரம்.
  2. இறைவனே எப்போதும் இருப்பவன். அவனே பிரக்ஞ்ஞை. அழகுக்கு அழகு. உருவமற்றவன். மேலானவன். நீதிமான், கருணையுள்ளவன். ஆதி அந்தமில்லாதவன். மாறுபாடில்லாதன். ஒப்பற்றவன். எங்கும் பரவியவன். எதிலும் இருப்பவன். அழியாதவன். பயமற்றவன். சத் சித் ஆனந்தமானவன். அவனை மட்டுமே தொழ வேண்டும்.
  3. வேதங்களே உண்மை அறிவின் நூல். அதைப் படிப்பது, மற்றவருக்குக் கற்பிப்பது, அதைக் கேட்பது, மற்றவருக்கு ஓதுவது உள்ளிட்டவை ஆர்யர்களுக்கான கடமையாகும்.
  4. அனைவரும் சத்தியத்தை ஏற்கவும் பொய்யைத் துறக்கவும் தயாராக இருத்தல் வேண்டும்.
  5. தர்மத்தை அனுசரித்தே அனைத்துச் செயல்களும் செய்யப்பட வேண்டும்.
  6. ஆர்ய சமாஜத்தின்  முதல் குறிக்கோள் அனைத்து உலகத்திற்கும் நன்மை செய்வதே ஆகும்.
  7. தர்மங்கள் கூறும் அன்பு, நீதி ஆகியவற்றின் அடிப்படையிலேயே உங்களது செயல்பாடுகள் அமைய வேண்டும்.
  8. அவித்யா அகற்றப்பட வேண்டும். வித்யா பரப்பப்பட வேண்டும்.
  9. தனது முன்னேற்றத்தில் மட்டும் ஒருவன் திருப்தி அடையக் கூடாது. சமூகத்தில் உள்ள அனைவரது முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும். மற்றவர்கள் மேம்படுவதில் தான் தனது முன்னேற்றம் இருக்கிறது என்பதை உணர்தல் வேண்டும்.
  10. சமூக நன்மைக்காகவும் மற்றவர்கள் நலத்திற்காகவும் அனைவரும் சுயநலத்தைத் துறந்து தம்மை அர்ப்பணிக்க வேண்டும். தனிநபர் தனது நலத்திற்காக உள்ள சுதந்திரத்தை அனுபவிக்கலாம்.

ஸ்வராஜ்ய கோஷத்தை முதலில் தயானந்தர் எழுப்பவே அதை பாலகங்காதர திலக் மேற்கொண்டார். அவர் வழியில் மேடம் காமா, பண்டிட் லேக் ராம், ஸ்வாமி ஸ்ரத்தானந்த், ஸ்வாமி கிருஷ்ண வர்மா, விநாயக் தாமோதர சவர்கார், லாலா ஹர்தயாள், மதன் லால் திங்க்ரா, லாலா லஜ்பத்ராய், மஹாதேவ் கோவிந்த ரானடே பலரும் நடந்தனர்; அவரைப் போற்றினர்.

சம்ஸ்கிருதத்திலும் ஹிந்தியிலும் அவர் நூல்களைப் படைத்தார். பொது பாஷையாக இருப்பதற்காக, ஹிந்தியை அவர் ஆதரித்தார்.

பல மன்னர்கள் அவரது சீடர்களாக ஆனார்கள். 25 ஆண்டுகள் பல்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்து தனது கொள்கைகளைப் பரப்பினார். ஹர்பிலாஸ் சர்தா அவரைப் பற்றி எழுதியுள்ள சரித்திரம் ஆதாரபூர்வமான ஒன்றாகும்.

அவரது மறைவு சோகமான ஒன்று.

அவரது கொள்கைகளை ஏற்காத பலரும் அவருக்கு விரோதிகளாக இருந்தனர். ஆஜ்மீரில் அவர் இருந்த போது, பணத்தின் மீது கொண்ட பேராசை காரணமாக சமையல்காரன் ஒருவன் அவரது உணவில் விஷம் கலந்து தர அவர் அதை உண்ண நோய்வாய்ப்பட்டார். தன் தவறை உணர்ந்த அவன் அவரிடம் மன்னிப்புக் கேட்க அவனை மன்னித்ததோடு அவன் தப்பிச் செல்ல பண உதவியும் செய்தார் அவர். ஒரு மாதம் ஒரு நாள் விஷ உணவைச் சகித்து இருந்த ஸ்வாமி தயானந்தர் 1883ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி தீபாவளி தினத்தன்று படுக்கையில் உட்கார்ந்து வேத மந்திரங்களையும் ஹிந்தியில் துதிகளையும் கூறியவாறே தைரியமாக மரணதேவனை எதிர்கொண்டு இறைவனுடன் கலந்தார்.

இந்திய அரசு அவரது நினைவைப் போற்றும் வகையில் தபால் தலையை வெளியிட்டு அவரைக் கௌரவித்துள்ளது. இந்தியாவெங்கும் அமைந்துள்ள ஆர்ய சமாஜ கிளைகளும் ஆர்ய சமாஜ் நடத்தும் பள்ளிகளும் இன்று வரை ஆற்றி வரும் பணி பெரிதும் போற்றத் தகுந்த ஒன்றாகும்.

மஹரிஷி தயானந்த சரஸ்வதியைப் போற்றுவோம்; வேதங்கள் வாழி என்றே துதிப்போம்!

நன்றி, வணக்கம்!

                     ***                முற்றும்

tags –

தயானந்த சரஸ்வதி! – 3
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: