Post No. 10,389
Date uploaded in London – – 28 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை நவம்பர் 28 -ம் தேதி 2021
ஆம் ஆண்டு
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
Xxxx
சபரிமலையில் தரிசனம் செய்ய தினமும் 45 ஆயிரம் பேருக்கு அனுமதி
சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அங்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் ON LINE ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஐயப்ப பக்தர்களின் அடிப்படை வசதி தொடர்பாக கேரள தேவஸ்தான துறை மந்திரி ராதாகிருஷ்ணன் எருமேலி, நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
தொடர்ந்து பம்பை நுணங்கார் தற்காலிக பாலம் கட்டும் பணிகளை செய்த பிறகு அவர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-
சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் உடனடி முன்பதிவு மூலமாக தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தால் அதில் குளிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு பம்பையில் தங்கி ஓய்வு எடுக்க வசதியாக அங்குள்ள அறைகளை ஒழுங்கு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 300 வாடகை அறைகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. இந்தநிலையில் மேலும் 200 அறைகள் தயாராகி வருகிறது. விரைவில் சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.
அதே போல் பக்தர்கள் ஆங்காங்கே தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கவும் அனுமதி அளிக்கப்படும். தற்போது பம்பையில் இருந்து ஒரு வழிப்பாதையில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகிறார்கள். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் நீலிமலை வழியாகவும் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நவம்பர் 13 ஆம் தேதி இதே அமைச்சர் சபரிமலை கோவிலில் கொடுக்கப்பட்ட தீர்த்தப் பிரசாதத்தை கீழே சிந்தியும் கையில் துடைத்தும் இந்து மதத்தை அவமதித்தது ஐயப்ப பக்தர்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியது அவர் கடவுள நம்பிக்கையற்ற மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்.
XXXX
சபரிமலையில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, லட்சார்ச்சனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் படி பூஜைக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.75 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதே போல் உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.40 ஆயிரம், சகஸ்ரகலச பூஜைக்கு ரூ.40 ஆயிரம், லட்சார்ச்சனைக்கு ரூ.10 ஆயிரம், புஷ்பாபிஷேகத்திற்கு ரூ.10 ஆயிரம், அஷ்டாபிஷேகத்திற்கு ரூ.5 ஆயிரம், திருவிழா நாட்களில் நடத்தப்படும் உத்தவ பலிக்கு ரூ.30 ஆயிரம் என பல்வேறு கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு பக்தர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக உதயாஸ்தமன பூஜைக்கு 2026-ம் ஆண்டு வரையிலும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
XXXX
மலைக்கோவில்களுக்கு ரோப் கார்; சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு – ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
மலைக்கோவில்களுக்கு ROPE CAR ரோப் கார் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை மற்றும் திருக்கழுங்குன்றம் மலைக்கோவில்களுக்கு ரோப் கார் வசதி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கோயில்களில் ஆய்வு முடித்த பின், உலகத்தரத்தில் நவீன வசதியுடன் ரோப்கார் அமைக்க டெண்டர் கோரப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “சோளிங்கா் நரசிம்ம சுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணி கோயில்களில் ரோப் காா் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, திட்டம் நிலுவையில் இருக்கிறது. 33 மலைக்கோயில்களில் கேபிள் ரோப் காா் வசதி ஏற்படுத்துவது, இயக்குவதற்கான நிதி நிலைத்தன்மை, பாதுகாப்பு தணிக்கை அறிக்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, தொழில்நுட்ப சாத்தியக்கூறு தொடா்பாக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து தாக்கல் செய்ய, இந்து சமய அறநிலையத் துறை, பொதுப் பணித்துறை, வருவாய் துறை, உள்துறை உள்ளிட்ட அரசுத் துறை செயலாளா்களுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “பழனியில் ஒரு இடத்தில் தற்போது கேபிள் ரோப் காா் இயக்கப்பட்டு வருகிறது. சோளிங்கர், அய்யர்மலை கோயில்களில் கேபிள் ரோப் காா் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீா்மலை, திருக்கழுகுன்றம் ஆகிய ஐந்து இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு கேபிள் ரோப் காா் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றாா்.
இதையடுத்து மற்ற கோவில்களுக்கு ரோப் கார் வசதி அமைப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ள நீதிமன்றம், மனுதாரர் நேரடியாக அரசுக்கு இந்த விஷயங்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவித்தது
XXX
கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள்; சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி
‘கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள் உள்ளனர்; அவர்களுக்கு எதிரான அதிகாரிகளின் நடவடிக்கையில் முழு திருப்தியில்லை’ என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கோவையில் உள்ள மாகாளி அம்மன் கோவில் சொத்தில், ஸ்ரீதரன் என்பவர் குத்தகைதாரராக உள்ளார். வாடகை பாக்கி தொகை 1.44 லட்சம் ரூபாய் செலுத்தும்படி, அவருக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது.
இதையடுத்து, வாடகை உயர்த்தப்பட்டதற்கான உத்தரவை வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: வாடகை பாக்கியை செலுத்தாமல், கோவில் சொத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். 1960ம் ஆண்டில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை, இந்த நீதிமன்றம் கவனித்துள்ளது. கோவில் சொத்துக்களை அதிகாரிகள் முறையாக பராமரிக்க வேண்டும். வாடகை வசூல், குத்தகை, நியாயமான வாடகை நிர்ணயம் விஷயங்களில், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் சொத்துக்களில் சட்டவிரோதமாக ஏராளமானோர் உள்ளனர்.
எந்த அனுமதியும் பெறாமல், குத்தகைதாரர்கள் வசம் கோவில் சொத்துக்கள் உள்ளன. இது குறித்து அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கையில் முழு திருப்தி இல்லை. துஷ்பிரயோகம் தனி நபர்களுடன், அதிகாரிகள் சிலர் கைகோர்த்து செயல்படுகின்றனர். கோவில் சொத்துக்களில் அறங்காவலர்கள் அல்லது அதிகாரிகளின் துாண்டுதலில் ஊழல் நடக்கிறது.
கோவிலில் உள்ள தெய்வங்களின் உரிமைகள் மீறப்படுவதை, நீதிமன்றம் வேடிக்கை பார்க்க முடியாது.
இந்த வழக்கை பொறுத்தவரை, தற்போதைய நிலையில், மனுதாரர் குத்தகைதாரர் அல்ல. எனவே, மூன்று மாதங்களுக்குள் சட்டப்படி அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரருக்கு உரிமை உள்ளது என்றால், அதிகாரிகளிடம் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
XXXXX
சிறுவாச்சூரில் தொடர்ந்து 4-வது முறையாக உடைக்கப்பட்ட சாமி சிலைகள்
நான்காவது முறையாகப் பெரம்பலூரில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டக்களமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் பிரசித்திபெற்ற மதுர காளியம்மன் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலின் துணைக் கோயில்களான பெரியசாமி, செங்கமலையார் கோயில்கள் மலையில் அமைந்திருக்கின்றன. இங்கு சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட சாமி பரிவார தெய்வங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த மாதம் 5-ம் தேதி பெரியசாமி கோயிலில் ஐந்துக்கும் மேற்பட்ட சுடுமண் சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டன.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலை தொடர்ந்து, இரு முறை சிறுவாச்சூர் மலை பகுதிக்கு சென்று, உடைபட்ட கோவிலையும், சிலைகளையும் தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு செயலர் அஸ்வத்தாமன் பார்த்துள்ளார்.
அவர் கூறியதாவது: சிறுவாச்சூர் மலை பகுதியில் மர்மமான முறையில், ஏதோ நடப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்தனர். அதே நேரம், தமிழக அரசும், காவல் துறையும், சாமி சிலைகளை சேதப்படுத்தும் கும்பலை கண்டறிந்து, முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி ஆதங்கப்பட்டனர். இதையடுத்து, இந்த விஷயத்தில் தி.மு.க., அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., தரப்பில் வலியுறுத்தினோம்; நடவடிக்கை இல்லை.
செப்., 26ல் மீண்டும், அடுத்து நவ., 8ம் தேதி இரவும், நான்காவது முறையாகப் அதே கோவிலில் மிச்சம் இருந்த சாமி சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பாதி உடைக்கப்பட்ட நிலையில் இருந்த சாமி சிலைகள், முழுமையாக உடைக்கப்பட்டுள்ளன.
சிறுவாச்சூர் சம்பவம் போலவே, ஆந்திராவில் 19 மாதங்களில், 128 கோவில்கள் இடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திராவைச் சேர்ந்த, பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., நரசிம்மராவ், 128 கோவில்களில் சிலைகள் தாக்கப்பட்டது குறித்து, பார்லிமென்டில் பேசினார். அதன்பின், ஆந்திர அரசு தீவிர கவனம் செலுத்தி விசாரித்தது. விசாரணையின் முடிவில், மதமாற்ற அடிப்படைவாத சக்திகள், சாமி சிலை உடைப்பு மற்றும் ஹிந்து கோவில்கள் தாக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பதை கண்டறிந்தனர்.
. ஆந்திராவில் கோவில்களை தாக்கிய அதே கும்பலே கூட இதை செய்திருக்கக்கூடும். அதனால், இதை தமிழக அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் போலீஸ் மற்றும் ஹிந்து அறநிலையத் துறை அலட்சியமாக உள்ளன.. அடுத்த கட்டம் குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் போராட்டம் அறிவிக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.
XXX
டெல்லி அரசின் இலவச யாத்திரை திட்டம்
டெல்லியின் மூத்த குடிமக்களுக்கான இலவச யாத்திரை திட்டத்தின் கீழ், ஸ்ரீ ராம் லல்லாவை தரிசனம் செய்ய 1000 யாத்ரீகர்கள் அயோத்திக்கு அனுப்பப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைநகர் டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ‘முக்யமந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா’ என்கிற இலவச யாத்திரை திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அன்று டெல்லி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. மூத்த குடிமக்களுக்கான இந்த இலவச யாத்திரை திட்டத்தின் மூலம் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்.
முக்யமந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா’ திட்டத்தின் கீழ், பூரி, ராமேஸ்வரம், ஷீரடி, மதுரா, ஹரித்வார் மற்றும் திருப்பதி உட்பட 13 தலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் பயணிக்கும் மூத்த குடிமக்களின் புனித யாத்திரையின் முழுச் செலவையும் டெல்லி அரசு ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்ட புனித யாத்திரை பட்டியலில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியை சேர்க்க கடந்த மாதம் டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் வயதான 1,000 யாத்ரீகர்களை ஏற்றிச் செல்லும் முதல் ரயில் டிசம்பர் 3-ம் தேதி அயோத்திக்கு புறப்படும் என்று டெல்லி அரசின் தீர்த்த யாத்திரை விகாஸ் சமிதியின் தலைவர் கமல் பன்சால் தெரிவித்தார்.
XXXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND
நன்றி, வணக்கம்
tags – Tamil Hindu, Newround up, 28112021