WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,390
Date uploaded in London – – 29 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்) 11-11-2021 அன்று தொடங்கி 20-11-21 அன்று முடிய ஒலிபரப்பாகி வந்தது.
19-11-2021 காலை ஒலிபரப்பான ஒன்பதாவது உரை கீழே தரப்படுகிறது.
ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை!
ச.நாகராஜன்
மனிதர்கள் மட்டுமே பசியினாலும் தாகத்தினாலும் இறக்கக்கூடும் என்ற உண்மையை அறிந்திருப்போருக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை இருக்கிறது. மரங்களும் கூடப் பசியினாலும் தாகத்தினாலும் இறக்கக் கூடும், அப்படிப்பட்ட நிலை பல இடங்களில் ஏற்படுவதால் அற்புதமான இயற்கைச் செல்வமான மரங்கள் அழிந்து வருகின்றன என்பதே அந்த அதிர்ச்சியூட்டும் உண்மையாகும்.
இது ஓரிடத்தில் மட்டும் ஏற்பட்டிருக்கிறது என்பதில்லை. கனடா, ரஷியா, கிரீஸ், வட ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா உள்ளிட்ட நாடுகளில், பல பகுதிகளிலும் மரங்கள் இறந்து படுவதை விஞ்ஞானிகள் அதிர்ச்சியுடன் கவனித்து வருகின்றனர்.
இப்படி பல மரங்கள் அழிந்து படுவதற்கான காரணத்தை உடனே அவர்களால் கண்டு பிடிக்க முடியாத நிலையில் இதற்கென ஒரு (Intensive Care unit) தீவிர கவனிப்புப் பிரிவைப் போன்ற ஒரு பிரிவை தனது சோதனைச் சாலையில் அமைத்து மரங்களைக் கவனிக்கலானார் நேட் மக்டவல் (Nate Mcdowell) என்னும் நியூ மெக்ஸிகோவைச் சேர்ந்த விஞ்ஞானி. ஆய்வின் முடிவில் தாகத்தினாலும் பசியினாலும் அவை இறப்பதை அவர் கண்டுபிடித்து உறுதி செய்தார். அதிகமான வெப்பம் உருவாகி நீரின் அளவு குறையும் போது “ஹைட்ராலிக் ஃபெயில்யூர்” (Hudraulic Failure) எனப்படும் நீர் குறைவுபடும் அல்லது நீர் இல்லாத சமயம், தாவரங்கள் சுருங்கி, ‘வாழ முடியாத நிலையை’ எய்துகின்றன. தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைக்காத நிலையில் அவை பரிதாபமாக இறக்கின்றன.
உலகெங்கும் 81 பகுதிகளில் 226 அரிய வகை தாவர இனங்கள் இப்படிப்பட்ட அபாயத்திற்கு உள்ளாகி வருகின்றன. நுண்மையான சென்ஸார்களை வைத்து செய்யப்பட்ட இந்த ஆய்வு புவி வெப்பமயமாதலால் மரங்கள் அழிந்து படும் என்பதை உறுதி செய்கிறது. அத்துடன் மழைக் காடுகள் அழிக்கப்படாமல் பராமரிக்கப்பட வேண்டும் என்ற உண்மையையும் வலுப்படுத்துகிறது. இந்த மரங்களைக் காக்கும் பணி உலகெங்கும் உள்ள மக்களால் ஒவ்வொருவர் வீட்டிலுமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படையான உண்மை.
ஒவ்வொரு பேப்பரையும் உபயோகிக்கும் போது இது அவசியமா, இதைத் தவிர்த்தால் ஒரு மரம் சற்று நீடித்து வாழுமே என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் உருவாக வேண்டும். நீரை அளவுக்கும், தேவைக்கும் அதிகமாக அனாவசியமாகப் பயன்படுத்தும் போது நாம் ஒரு மரத்தின் ஜீவனைப் பறிக்க உதவி செய்கிறோம் என்பதை உணர்தல் வேண்டும். ஆங்காங்கே நல்ல மழை வளத்துடனும் மண் வளத்துடனும் காடுகள் அழிக்கப்படாமல் – மரங்கள் வெட்டப்படாமல் – இருப்பின் பூமியின் மழை வளம் கூடும். நமது வாழ்வாதாரமான நீரும் நமக்குத் தடங்கலின்றிக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
மரங்களை நாம் பாதுகாத்தால் அவை நம்மைப் பாதுகாக்கும் என்பது ஒரு அபூர்வமான, அதிசயமான உண்மை. இதை அனைவருக்கும் எடுத்துச் சொல்வோம். மரங்களைக் காப்போமாக!
****
tags-அரிய வகை, தாவர இனங்கள்,