WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,394
Date uploaded in London – – 30 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 29-11-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.
மஹாகவி காளிதாஸ்! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே! சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.
மஹாகவி காளிதாஸ் என்றவுடனேயே இந்தியர்களுக்கு உடம்பெல்லாம் புல்லரிக்கும். அப்படிப்பட்ட மாமேதை. உலகப் பெரும் கவி அவர். அவர் பிறப்பு பற்றிய பல்வேறு மாறுபட்ட வரலாறுகள் உள்ளன. அவருடைய தந்தையாரின் பெயர் சதாசிவம் என்றும் உஜ்ஜயினி நகருக்கு அருகில், சரஸ்வதி நதிக் கரையில் உள்ள ஒரு கிராமத்தில் பிராமண குலத்தில் அவர் பிறந்தார் என்றும் ஒரு குறிப்பு கூறுகிறது. இளம் வயதிலேயே அவரது பெற்றோர் இறக்க, அவரை ஒரு மாட்டிடையன் வளர்த்து வரலானான். காளிதாஸன் ஒன்றுமே அறியாத முழு மூடனாக வளர்ந்து வந்தார். அந்தக் காலத்தில் காசி நகரை பீம சுல்கா என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு வசந்தி என்ற அற்புத அழகுடைய புத்திசாலியான பெண் ஒருத்தி இருந்தாள். சிலர் அவள் பெயரை பிரியகுண மஞ்சரி என்றும் கூறுவர்.
அனைத்தையும் கற்று விட்டோம் என்று மமதை கொண்ட ராஜகுமாரியின் ஆணவத்தை அடக்க அரசவையில் இருந்த பண்டிதர்கள் ஒரு பெரும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் ஒரு நாள் மரத்தின் நுனியில் உட்கார்ந்தவாறே அடி மரத்தை வெட்ட முனையும் முழு மூடனான காளிதாஸைப் பார்த்து தமது சூழ்ச்சியை நிறைவேற்றுவதற்கான சரியான நபர் அவனே என்று தீர்மானித்து அவனிடம் “எதுவும் பேச வேண்டாம்; அரசகுமாரியின் முன்னர் சைகைகளாலேயே எதையும் சொல்; பொன்னும் பொருளும் மிக்க வாழ்க்கை உண்டு” என்று கூறி அவனை அழைத்துச் சென்றனர். அரசகுமாரி கேள்விகளை சைகை மூலம் கேட்க நினைத்து ஒரு விரலைக் காட்டினாள். ஒன்றும் புரியாத காளிதாஸன் இரண்டு விரல்களைக் காட்டினான். ‘பிரபஞ்சத்திற்கு, ஒரு காரணம் தானே’ என்று ராஜ குமாரி கேட்க உடனே அரசவை பண்டிதர்கள் காளிதாஸன் இரண்டு விரல்களைக் காண்பித்தது பிரபஞ்சத்திற்கு இரு வித காரணங்கள் உண்டு என்று அற்புதமான வியாக்யானம் தந்தனர். இது இன்னொரு விதமாகவும் சொல்லப்படுகிறது. ராஜகுமாரி சக்தி ஒன்றே என்பதைக் குறிக்க ஒரு விரலைக் காட்ட காளிதாஸன் இரு விரலைக் காட்ட அதற்கு சக்தியானவள் சிவமாகவும் சக்தியாகவும் இரு விதமாக இருப்பதாக பண்டிதர்கள் வியாக்யானம் கூறினர். பின்னர் ராஜகுமாரி தனது உள்ளங்கையை விரல்கள் நீட்டி இருக்கும் படி காடட காளிதாஸன் அவளைக் குத்துவது போல முஷ்டியைக் காட்டினான். இதற்கு பண்டிதர்கள் பூதங்கள் ஐந்து என்பதைச் சுட்டிக் காட்டியதாக ராஜகுமாரி கூறியதற்கு ‘ஆமாம் அந்த ஐந்து பூதங்களே உடலை உருவாக்குகின்றன என்று தன் முஷ்டியைக் காண்பித்தான்’ என்று கூறி வியாக்யானம் செய்தனர். வியந்து போன ராஜகுமாரி காளிதாஸனை மணம் செய்து கொண்டாள், ஆனால் முதல் இரவிலேயே காளிதாஸனின் ‘புலமை’ அவளுக்குத் தெரிந்தது! தான் எப்படிப்பட்ட சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டோம் என்பதும் அவளுக்குப் புரிந்தது. காளிதாஸனிடம் அவள் காசி நகரில் உள்ள காளி கோவிலுக்குச் சென்று வணங்குமாறு கூறினாள். மனம் நொந்த காளிதாஸன் காளியின் முன் சென்று தன் தலையை அர்ப்பணிக்க முற்பட்ட போது அவள் பிரசன்னமாகி அனுக்ரஹிக்க, காளிதாஸர் கவி மழை பொழிய ஆரம்பித்தார். அது பாரதமெங்கும் பொழிந்து உலகெங்கும் விரிந்தது.
இந்தச் சம்பவத்தையே வெவ்வேறு விதமாக பல நூல்கள் சித்தரிக்கின்றன. காளி தேவி அனுக்ரஹத்தைப் பெற்ற காளிதாஸன் மீண்டும் ராஜகுமாரியைச் சந்திக்க, அவள், ‘அஸ்தி கஸ்சித் வாக்’ என்று கேட்டாள். அதாவது “இப்போது நீங்கள் வாக்வன்மையில் நிபுணரா” என்று கேட்டாள். அவளை காளிதாஸன் வணங்கினான். ஆகவே, தான் தாரம் என்ற நிலையிலிருந்து தாயாக உயர்ந்துவிட்டதாக ராஜகுமாரி கூறி அவனை அனுப்பினாள். ராஜகுமாரி சொன்ன மூன்று வார்த்தைகளை முதலாகக் கொண்டு மூன்று காவியங்களைக் காளிதாஸன் அற்புதமாக இயற்றினான். அஸ்தி என்ற வார்த்தையைக் கொண்டு ‘அஸ்தி உத்தரஸ்யாம் திஷி’ என குமார சம்பவத்தையும் ‘கஸ்சித்’ என்ற வார்த்தையைக் கொண்டு ‘கஸ்சித் காந்தா’ என்று மேக தூதத்தையும் ‘வாக்’ என்ற வார்த்தையைக் கொண்டு ‘வாகர்த்தாவிவ’ என்று ரகு வம்சத்தையும் தொடங்கினான். இன்னொரு பரம்பரைச் செய்தியின் படி காளிதாஸர் மனம் நொந்து ஒரு ஆற்றங்கரை படித்துறைக்குச் சென்ற போது அங்கு துணி துவைக்கும் கற்களைப் பார்த்தார். அடித்துத் துவைக்கப்படும் கற்கள் மழுமழுவென்று மழுமழுப்பாகவும் உருண்டையாகவும் இருக்க அருகே உள்ள ஏனைய கற்கள் சொரசொரப்பாகவும் எந்த வித அழகான வடிவமும் இன்றி இருப்பதையும் பார்த்தார். அவருக்கு பொறி தட்டியது போல ஞானம் ஏற்பட்டது, தன் அறிவை மழமழப்பான கற்கள் போல ஆக்க புத்திகூர்மையைத் தீட்டினால் போதும் என்று படிக்க ஆரம்பித்தார்; பெரிய மேதையானார்.
காளிதாஸனின் காலத்தைப் பற்றி ஏராளமான விவாதங்களை சரித்திர ஆராய்ச்சியாளர்களும் பண்டிதர்களும் இன்றளவும் நடத்தி வருகின்றனர். ஐந்தாம் நூற்றாண்டு ஆறாம் நூற்றாண்டு என்று பலரும் சொல்ல சிலர் கிறிஸ்துவுக்கு முன்பே அவரது காலம் என்கின்றனர். அத்துடன் காளிதாஸன் என்ற பெயரில் மூன்று கவிகள் இருப்பதையும் பலர் உறுதிப்படுத்துகின்றனர். காளிதாஸன் விக்ரமாதித்தன் சபையில் ஆஸ்தான கவியாக இருந்ததைப் பல நூல்கள் கூறுகின்றன.
தனது நகரத்திலிருந்து யாத்திரையாகச் சென்ற காளிதாஸன் தாரா நகரத்தை அடைந்தான். தாரா நகரத்தை அப்போது ஆண்டு வந்த போஜ மஹாராஜனுக்கும் காளிதாஸனுக்கும் இடையே ஆழ்ந்த நட்பு உருவானது; அது ஆத்மார்த்தமானது.
கச்சதஸ் திஷ்டதோ வாபி ஜாக்ரத: ஸ்வப்னோவாபி வா | மா பூன்மத: கதாசித் மே த்வயா விரஹிதம் கவே ||
“ஓ! கவிஞரே! இருக்கும் போதும் நடக்கும் போதும் தூங்கும் போதும் விழித்திருக்கும் போதும் என்னுடைய மனம் உம்மை விட்டு அகலுவதே இல்லை” என்று இப்படி போஜன் காளிதாஸரை நினைத்து உருகி ‘எப்போதும் உம்முடைய நினைவாகவே நான் இருக்கிறேன்’ என்கிறான்!
**
tags– மஹாகவி ,காளிதாஸ்,