மஹாகவி காளிதாஸ்! – 2 (Post No.10,397)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,397

Date uploaded in London – –   1 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாகவி காளிதாஸ்! – 2

போஜ மஹாராஜனுக்கு ஒரு ஆசை வந்தது. தான் இறந்து விட்டால் அதற்கு சரம கவியை எப்படி காளிதாஸன் பாடுவான் என்று அவனுக்குத் தோன்ற தனக்கு ஒரு சரம கவியைப் பாடுமாறு போஜன் காளிதாஸனை வேண்டினான். ‘ஐயோ, இப்படிக் கேட்கலாமா என்று கண்ணீர் சிந்திய காளிதாஸன் மன்னனை விட்டு உடனே அகன்றான். சில நாட்கள் கழித்து போஜனே மாறு வேடம் பூண்டு காளிதாஸன் சென்ற இடத்தைக் கண்டு பிடித்து அவனைச் சந்தித்தான். ‘எங்கிருந்து வருகிறீர்? என்று மாறுவேடம் பூண்ட மன்னனைப் பார்த்து சகஜமாக காளிதாஸன் கேட்கவே, உடனே போஜன் ‘தாரா நகரிலிருந்து வருகிறேன் என்றான். மன்னரின் நினைவாகவே இருந்த காளிதாஸன் ‘மன்னர் போஜன் சௌக்கியமா என்று ஆவலுடன் கேட்டான். “ஐயோ, அந்த விஷயம் உங்களுக்குத் தெரியாதா? மன்னர் போஜன் இறந்து விட்டார் என்று ஒரு பொய்யைச் சொன்னான் போஜன்.

இதனைக் கேட்ட காளிதாஸன் தாங்க முடியாத துக்கத்தால் ஆவென்று அலறினான். அவன் வாயிலிருந்து துக்கம் தாளாமல் சரம கவி ஒன்று வந்தது இப்படி:                                                                      

அத்ய தாரா நிராதாரா நிராலம்பா சரஸ்வதி |                       

 பண்டிதா: கண்டிதா: சர்வே போஜராஜே திவம் கதே||                                        

अद्य धारा निराधारा निरालम्बा सरस्वती।
पंडिताः खंडिताः सर्वे भोजराजे दिवंगते।।                                                                                                           

 “தாரா நகரம் நிராதரவாய் ஆகி விட்டது! கலைத் தெய்வமான சரஸ்வதி ஆதரவற்றவளானாள். போஜராஜன் ஸ்வர்க்கம் அடைந்து விட்டான் என்பதால் எல்லா பண்டிதர்களும் துக்கத்தால் துடிக்கின்றனர்.”

காளிதாஸன் வாக்கு சரஸ்வதி வாக்கு என்பதால் இதை மகிழ்ச்சியுடன் கேட்ட போஜ  மன்னன் உடனே கீழே விழுந்து இறந்து போனான். அனைத்து மக்களும் அங்கு கூடி, நடந்ததை உணர்ந்து காளிதாஸனிடம் கூற உடனே தான் பாடிய கவிதையைச் சற்று மாற்றிப் பாடினான் காளிதாஸன் இப்படி:                                                                          

அத்ய தாரா சதாதார் சதாலம்பா சரஸ்வதி|                           

பண்டிதா: மண்டிதா: சர்வே போஜராஜ்யே புவம் கதே ||                                                                                                                                                                       

अद्य धारा सदाधारा सदालम्बा सरस्वती।
पंडिताः मंडिताः सर्वे भोजराजे भुवंगते।।                                              

தாரா நகரம் ஆதரவுள்ளதாக ஆகி விட்டது. சரஸ்வதி தேவி ஆதரவுள்ளவளாகி விட்டாள். பண்டிதர்கள் போஜராஜன் பூமிக்கு வந்து விட்டதால் அவனைப் போற்றிப் புகழ்கின்றனர். இப்படிப் பாடியவுடனே போஜராஜன் உயிர் பெற்று எழ அனைவரும் மகிழ்ந்தனர்.

போஜன் என்னவெல்லாம் மனதில் நினைத்தானோ அதையெல்லாம் கண்டு பிடித்துக் கவிதையாக்கும் வல்லமை காளிதாஸன் ஒருவனுக்கே உண்டு. இதற்கு ஏராளமான சம்பவங்கள் உரிய கவிதையுடன்.சொல்லப்படுகின்றன –  எடுத்துக் காட்டாக ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் காணலாம்.

ஒரு முறை போஜனுடைய நாட்டில் காட்டு மிருகங்கள் பயிர்களை அழிக்க, குடி மக்கள் மன்னனிடம் வந்து முறையிட்டனர். உடனே போஜன் காடு நோக்கிச் சென்று கொடிய மிருகங்களை வேட்டையாடத் தொடங்கினான். நெடுநேரம் ஆன பின்னர் தாகம் அவனை வருத்த அவன் ஒரு சோலைக்குச் சென்று நீர் அருந்தி களைப்பு நீங்கப் பெற்றான். அப்போது குரங்கு ஒன்று நாவல் மரம் ஒன்றின் மீது ஏறி கொம்புகளை அசைத்து சேஷ்டை செய்தது.கிளைகள் ஆடவே, பழுத்திருந்த சில நாவல் பழங்கள் அங்கிருந்த தடாகத்திலே விழுந்தன. அதனால் ‘குளுகுக் குளுகுக் குளு என்ற சப்தம் எழுந்தது. இந்த விந்தையான ஒலிக்குறிப்பை மனதில் கொண்ட போஜன் மறு நாள் அரசவை கூடியதும் ‘குளுகுக் குளுகுக் குளு என்ற ஒரு பாதத்தைச் சொல்லி மீதி கவிதையை முடிக்குமாறு கவிஞர்களிடம் கூறினான். அனைத்துக் கவிஞர்களும் இதென்ன ‘குளுகுக் குளுக்கு என்று நகைத்தனர். காளிதாஸன் மட்டும் உடனே ஒரு ஸ்லோகத்தை இயற்றினான்:

“ஜம்பூ பலானி பத்க்வாநி பதம்தி விமலே ஜலே                                          

கபி கம்பித சாகாப்யோ குளுகுக் குளுகுக் குளு”

என்று சொல்லி நாவல் மரக் கிளையை குரங்கு அசைக்க கொம்பில் பழுத்திருந்த நாவல் பழங்கள் தடாகத்தில் விழுந்த போது எழுந்த சப்தம் குளுகுக் குளுகுக் குளு என்றான். போஜன் ஆனந்தக் கண்ணீர் பொழிந்தான். அனைத்துக் கவிஞர்களும் மக்களும் காளிதாஸரின் கவிதா சாமர்த்தியத்தை முற்றிலுமாக உணர்ந்தனர்.

உலகினர் காளிதாஸருக்கு அளித்த மரியாதையைக் கண்டு தண்டி முதலான பெரும் கவிஞர்கள் பொறாமை கொண்டனர். ஒரு முறை யார் பெரிய கவிஞர் என்ற பெரும் போட்டி ஏற்பட்டது. முடிவு எட்டாத நிலையில் அனைவரும் சரஸ்வதி தேவியின் முன் கூடினர். சரஸ்வதி தேவியை நடுவராகக் கொண்டு விவாதத்திற்கு முடிவு கட்ட அனைவரும் முனைந்தனர். சரஸ்வதியை வணங்கி யார் பெரிய கவிஞர் என்று கேட்க அசரீரி ஒன்று எழுந்தது. ‘கவிர் தண்டி கவிர் தண்டி! “தண்டியே கவிஞன் தண்டியே கவிஞன் – இந்த முடிவைக் கேட்ட அனைவரும்  ஆஹா ஆஹா என்று கூவினர். தண்டிக்கோ மிகுந்த சந்தோஷம். காளிதாஸர் திகைத்தார். “அப்போது நான்? என்று மிகுந்த வருத்தத்துடன் அவர் சரஸ்வதியைப் பார்த்துக் கேட்க அசரீரி ஒலி மீண்டும் எழுந்தது. ‘அஹம் த்வமேவ, அஹம் த்வமேவ் நானே நீ நானே நீஎன்ற இந்த ஒலியைக் கேட்டதும் தண்டி உட்பட்டோர் காளிதாஸரின் பாதங்களில் விழுந்து வணங்கினர். அப்படி சரஸ்வதியின் அருள் கடாக்ஷம் பெற்ற சரஸ்வதி தேவியின் அவதாரம் அவர் என்பது இந்தச் சம்பவத்தால் நிரூபிக்கப்பட்டது.

மஹாகவி காளிதாஸனைப் புகழ்வோர் அனைவரும் ‘உபமா காளிதாஸஸ்ய என்று உவமைக்கு ஒரு கவி காளிதாஸன் என்று கூறுகின்றனர். உதாரணத்திற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டை இங்கு பார்க்கலாம். ரகுவம்சத்தில் சுயம்வரத்தில் இந்துமதி தன் மணாளனை வரிப்பதற்காக வரிசையாக நின்றிருந்த ராஜகுமாரர்கள் அருகிலே செல்லும் போது ‘அவள் ஒளிச்சுடர் போல சென்றாள் (சஞ்சாரிணி தீப ஷிகேன ராத்ரௌ 6 -67) என்கிறார்.

சுடர் அருகே வந்தவுடன் நம்பிக்கையுடன் பிரகாசமாகும் மன்னர்களின் முகம் அவள் நகர்ந்தவுடன் இருண்டதாம்! அற்புதமான இந்த உவமையைப் பல வித அர்த்தங்களுடன் கூறி உலகம் கொண்டாடுகிறத்!                            ரகுவம்சத்தின் ஆரம்ப ஸ்லோகமே உலகைக் கவரும் ஒரு ஸ்லோகமாகும்.

வாகர்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்த ப்ரதிபத்யதே|                      

 ஜகத: பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ!

ஜகத்தைப் பரிபாலிக்கும் பார்வதியும் பரமேஸ்வரனும் ‘சொல்லும் பொருளும் போல’ என்று இங்கு காளிதாஸர் குறிப்பிடுகிறார். இதை பிற்காலக் கவிஞர்கள் ஏராளமானோர் அப்படியே எடுத்தாள்வதைக் காணலாம். எடுத்துக் காட்டாக அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் 28ஆம் பாடலில் ‘சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே’ என்று கூறுவதைச் சொல்லலாம்.

**

to be continued…………..

tags மஹாகவி, காளிதாஸ்! – 2

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: