WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,404
Date uploaded in London – – 3 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்வாமிஜி கிருஷ்ணா கார்த்திகை மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி அன்று மஹாகணபதியுடன் இரண்டறக் கலந்தார். அவரது நினைவு தினத்தை ஒட்டி இந்தக் கட்டுரை மூலம் ஒரு சிறு அஞ்சலி!
ஸ்வாமிஜி கிருஷ்ணா! (Swamiji Krishna of Achankovil!) – 1
ச.நாகராஜன்
1
மகானுடனான அறிமுகம்!
ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளின் பிற்பகுதி, ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளின் ஆரம்ப காலம்! எங்களது அதிர்ஷ்டம் ஆரம்பமானது!
ஸ்வாமிஜி கிருஷ்ணா பெரும் மகான். அவருடைய ஆசீர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு கிடைத்தது பூர்வ ஜென்ம புண்ணிய பயனே!
மதுரையில் பெரும் வக்கீலாகத் திகழ்ந்த ராமாராவ் ஸ்வாமிஜியின் நெடுநாளைய பக்தர்.
ஸ்வாமிஜி தினமும் காலையில் கணபதி ஹோமம் செய்வது வழக்கம். அவரது இளம் பருவத்திலிருந்தே இது ஆரம்பமானது. மஹா கணபதியின் பரிபூரண அனுக்ரஹம் பெற்றதால் அவரை அனைவரும் மஹா கணபதியாகவே பாவித்தோம்.
எனது தந்தையார் தினமணி திரு வெ.சந்தானம் தினமணி நாளிதழில் ஆன்மீகச் செய்திகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து பத்திரிகைத் துறையில் ஒரு புதிய வழியைக் காண்பித்தார்.
ஸ்வாமிஜியின் கணபதி ஹோமம் பற்றிய செய்திகளும் அச்சன்கோவில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் தினமணியில் தவறாமல் இடம் பெறவே அட்வகேட் ராமாராவ் அவரது இல்லத்தில் நடக்கும் கணபதி ஹோமத்திற்கு அழைப்பு விடுத்தார்.
ஸ்வாமிஜியின் அருளாசி கிடைக்க ஆரம்பித்தது.ஏராளமான அற்புதங்கள் நிகழலாயின. சில சொல்லக் கூடியவை; சில தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்க விஷயங்கள்!
ஸ்வாமிஜி வசித்து வந்த ஊர் தென்காசியை அடுத்துள்ள ஆயக்குடி.
லக்ஷக்கணக்கான பக்தர்கள் அச்சன்கோவில் அரசே, சரணம் ஐயப்பா என்று கோஷம் போடுகிறார்களே இன்று, அந்த அச்சன் கோவிலை ஸ்தாபித்தவரே அவர் தான்.
பரசுராமர் ஸ்தாபித்து அச்சன்கோவில் மலைப் பகுதியில் ஆழப் புதைந்து கிடந்த ஐயப்பனை எடுத்து அதை ஸ்தாபித்து கோவிலை அமைத்து புஷ்பாஞ்சலி வழிபாட்டையும் அவரே தொடங்கி வைத்தார்.
ஐயப்பன் அவரைக் கனவில் வந்து தன்னை பிரதிஷ்டை செய்யுமாறு அவருக்கு அருள் பாலிக்க அவரும் பலருடன் தான் கனவில் கண்ட இடத்திற்குச் சென்று அங்கு ஓரிடத்தைக் காட்டித் தோண்டச் சொல்ல அங்கே கிடைத்தார் பரசுராமர் ஸ்தாபித்த விக்ரஹமான ஐயப்பன்.
2
நீ லக்ஷம் பேருக்குப் பேசுவடா!
தென்காசி பாஸஞ்சரில் ஏறி நயினாரகரத்தில் இறங்குவது எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குப் பழக்கமானது; வாடிக்கையானது.
அங்கு நயினாரகரம் ஸ்டேஷனில் குதிரை வண்டி தயாராக இருக்கும். வண்டியில் ஏறி ஸ்வாமிஜி வீடு என்று சொன்னால் போதும் உற்சாகமாக குதிரை வண்டியை ஓட்டுபவர் எங்களை ஸ்வாமிஜியின் இல்லத்திற்குக் கொண்டு சேர்த்து விடுவார்.
ஸ்வாமிஜி மதுரை ஜெனரல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்- சிகிச்சைக்காக.
ஆஸ்பத்திரிக்கு சாப்பாடு இரு வீடுகளிலிருந்து மட்டுமே அவருக்குக் கொண்டு செல்ல அவர் அருளாசி தந்தார். ஒன்று எங்கள் அம்மா தயாரித்தது. இன்னொன்று சம்பந்தமூர்த்தி தெருவில் (கல்லறை சந்து என்று சொன்னால் தான் அனைவருக்கும் புரியும்) இருந்த ஒரு மத்தியதர பிராமண குடும்பம் தங்கள் இல்லத்தில் தயாரித்த உணவு.
ஒரு நாள் ஆஸ்பத்திரியில் என்னைப் பார்த்த ஸ்வாமிஜி திடீரென்று “நீ லக்ஷம் பேருக்குப் பேசுவடா!” என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏனெனில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் தெற்காடி வீதியில் உள்ள தெய்வநெறிக்கழகத்தில் வாராவாரம் நடக்கும் ஸ்டடி சர்க்கிளுக்கு அதிக பட்சம் வருவது 50 முதல் 100 பேர்தான்.
அங்கு ஸ்வாமி விவேகானந்தரைப் பற்றிப் பேசுவேன்.
அடுத்துப் பின்னாளில் ஆர்.எஸ்.எஸ். ஷாகாவிலும் ஷாங்கிக்கிலும் பேசலானேன். இன்னும் கொஞ்சம் கூட்டம்!
அடுத்து சத்ய சாயி சேவாதள்ளில் நகருக்கான கன்வீனரானேன். அங்கு கூட்டங்களில் பேசும் போது இன்னும் கொஞ்சம் கூட்டம்.
இப்போது கூட்டத்தினரை எண்ணுவது எனக்கு வழக்கமானது. ஒரு தோராய மதிப்பீடு தான். விழுப்புரத்தில் ஒரு சத்யசாயி சேவாதள் மகாநாடு. அங்கு நான் பேசினேன். நல்ல கூட்டம். தோராயமாக மதிப்பிட்டால் இரண்டாயிரம் பேர் பங்கு கொண்டனர்.
ஆனால் ஸ்வாமிஜி சொன்னது என்ன? “ நீ லக்ஷம் பேருக்கு பேசுவடா”
காலம் உருண்டோடியது. சுமார் நாற்பது வருடங்கள் கடந்து விட்டன.
ஜெயா டிவி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள ஆரம்பித்தேன். பேட்டி, பேச்சு என்று ஏக கோலாகலம். திருப்பாவையை அறிவியல் ரீதியாக 30 நாளும் சொன்னேன்.
ஒரு நாள் என்னை காலை மலர் நிகழ்ச்சியில் பேட்டி கொடுக்க அழைப்பு வந்தது. நான் பேட்டி எடுத்து, பேசுவது போய் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என்னைப் பேட்டி எடுக்கப் போகிறார்களா, அதுவும் காலை மலர் நிகழ்ச்சியிலா!
ஸ்டுயோவிற்குச் சென்றேன். பிரம்மாண்டமான ஸ்டேஜ். எதிரில் நான்கு கேமராக்கள். தொழில் நுட்ப நிபுணர்கள், டைரக்ட் செய்பவர், என்னைப் பேட்டி எடுக்க ஒரு அற்புதமான பேட்டியாளர், அவருக்கு உதவியாக ஒரு இளம் மங்கை.
பேட்டி துவங்க இருக்கும் தருணம்.
விளக்குகள் அணைக்கப்பட்டன. எங்களை நோக்கி லைட் ஆன் செய்யப்பட்டது.
“சார் நிகழ்ச்சி துவங்கப் போகிறது. உங்களை 96 லக்ஷம் பேர் பார்க்கிறார்கள். 96 லக்ஷம் பேருக்கு நீங்கள் பேசப் போகிறீர்கள். ஆன் லைன் எடிட்டிங் சார்.
தயாரா, ஆன் என்று சொன்னவுடன் ஆரம்பிக்கலாம்”
இந்த வார்த்தைகளை எதிரில் சூழ்ந்திருந்த இருட்டிலிருந்து வந்த அசரீரி போலக் கேட்ட நான் சிரித்தேன்.
“என்ன சார், சிரிக்கிறீர்கள்?”
“ஒன்றுமில்லை, நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம்”
நிகழ்ச்சி படு அருமையாகச் சென்றது. ஏராளம் பேர் என்னைத் தொடர்பு கொண்டு பாராட்டுத் தெரிவித்தனர்.
நான் ஏன் சிரித்தேன்?
மூவாயிரம் பேர் வரை எண்ணிய நான் அப்புறம் எண்ணுவதையே விட்டு விட்டேன். இன்றோ , 96 லக்ஷம் பேருக்குப் பேசப் போகிறீர்கள் என்ற குரல்.
“நீ லக்ஷம் பேருக்குப் பேசுவடா” – ஸ்வாமிஜி கூறியது நினைவுக்கு வந்தது!
டி.வி. என்றால் என்ன என்றே தெரியாத காலத்தில் அவர் சொன்னது அது!!
இந்தியாவிற்குப் பரவலாக டிவி நிகழ்ச்சிகள் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளின் பிற்பகுதியில் தான் வந்தது.
ஆனால் வெகு காலம் முன்பே திவ்ய திருஷ்டி மூலம் என்னைக் கண்டு ஆசீர்வதித்தாரே, ஸ்வாமிஜி, அவர் காலம் கடந்த மகான் தானே!
‘எட்டும் இரண்டும் அறியாத இந்தக் குட்டிப் பயலை பட்டி மன்றம் ஏற்றி வைத்தது’ யார்? ஸ்வாமிஜியே தான்! அவரை நினைத்து வணங்காத நாளே இல்லை!
இப்படிப் பல நிகழ்ச்சிகள் … தொடர்வோமா?
***
tags- ஸ்வாமிஜி கிருஷ்ணா-1