ஸ்வாமிஜி கிருஷ்ணா! (Swamiji Krishna of Achankovil!) – 2 (Post.10,407)

picture of  my father V Santanam and Swamiji Krishna (His assistant Subbamani standing next to him;, his disciple with beard Saitji  also in the picture.)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,407

Date uploaded in London – –   4 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்வாமிஜி கிருஷ்ணா! (Swamiji Krishna of Achankovil!) – 2

ச.நாகராஜன்

3

எந்த சைக்கிளிலே போறே?

பெரும் மகான்களால் விதியை மாற்ற முடியுமா? நிச்சயம் முடியும், ஆனால் பெரும்பாலும் செய்வதில்லை. அப்படி மகான்கள் மாற்ற முயன்றிருந்தால்…….

பரமஹம்ஸர் தொண்டைப் புற்று நோயால் அவஸ்தைப் பட்டிருக்க வேண்டாம். ரமணருக்கு கையில் கட்டி வந்து அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டாம். விவேகானந்தர் இன்னும் கொஞ்சம் கூட காலம் இருந்திருக்கலாம். நான் நாற்பது வயதைப் பார்க்க மாட்டேன் என்று சொல்லி இருக்க வேண்டாம்.

இப்படி பல சம்பவங்களைக் கூறிக் கொண்டே போகலாம்.

ஸ்வாமிஜி கிருஷ்ணாவும் நிச்சயம் இந்த பெரும் மகான்களின் வரிசையில் சேர்ந்தவர் தான். ஏனெனில் தனக்கு வந்த வியாதியைப் போக்கிக் கொள்ளாமல் மதுரை ஜெனரல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி உடல் நோவைத் தாங்கிக் கொண்டாரே!

இருந்தாலும் கூட பக்தர்களுக்கு வரும் இடர்களை அவர் நன்கு அறிவார். பேரிடர் என்றால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்று செய்து விடுவார்.

எங்கள் வீட்டில் ஸ்வாமிஜியின் ஒரு வருகை சுபமாக முடிந்து அவர் வெளியில் கிளம்பிக் கொண்டிருந்த சமயம்.

அந்தக் காலத்தில் எல்லாம் சைக்கிள் மயம் தான்! ஸ்கூட்டர் கூட அரிது தான்!

எனது வீட்டில் கூடத்திற்கு அடுத்தாற் போல ஒரு குறுகலான ரேழி. அதைத் தாண்டி வாசலின் முன்புறம். பழைய கால திண்ணை டைப். ஆனால் அதன் ஓரமாக மாடிக்குச் செல்லும் படிகள் இருக்கும்.

அந்த ரேழியில் இரு சைக்கிள்கள். ஒன்று மலேயா ராலே சைக்கிள். அந்தக் காலத்தில் மலேயா ராலே சைக்கிள் கிடைப்பது மிகவும் அபூர்வம். எனது தந்தையாரின் பியூன் பெயர் பஞ்சநதம். அவருக்கு ஒரு அண்ணன். அவர் சைக்கிள் கடை ஓனர். அவர் பார்த்து ஒரு மலேயா ராலே சைக்கிளைப் பிடித்து வாங்கித் தந்தார்.

அடுத்து நான் பாலிடெக்னிக்கில் சேர்ந்ததால் இன்னொரு சைக்கிள் அவசியம் தேவையாக இருந்தது. ஆகவே புத்தம் புதிதாக ஒரு சைக்கிள் வாங்கப்பட்டது.

இந்த இரண்டு சைக்கிள்களும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக ரேழியில் நிறுத்தப்பட்டிருக்கும். ஏற்கனவே மூன்றடி அகலம் தான் ரேழி. அதில் சைக்கிள் வேறு. ஒரு ஆள் மட்டும் போகலாம்.

அதன் வழியே சென்ற ஸ்வாமிஜி திடீரென்று சைக்கிளின் அருகே நின்றார்.

என்னிடம் “எந்த சைக்கிளிலே போறே?” என்று கேட்டார்.

நான் புது சைக்கிளில் பயணம் தொடங்கி இருந்தாலும் கூட, பழைய மலேயா ராலே சைக்கிளை- அதிலேயே சென்று வந்ததால் –  சுட்டிக் காண்பித்தேன்.

அந்த சைக்கிளின் ஹாண்டில் பாரை ஒரு நிமிடம் தொட்டு விட்டு அவர் சென்றார்.

இது ஒரு பெரிய விஷயமாக அப்போது யாருக்கும் தெரியவில்லை.

மறுநாள் காலை புதிய சைக்கிளில் ஏறிச் சென்றேன். மாலை சைக்கிளைக் காணோம்! எவனோ பூட்டி இருந்த சைக்கிளை ஸ்டாண்டிலிருந்து திருடிக் கொண்டு போய் விட்டான். எவ்வளவோ முயற்சிகள் செய்தும் கிடைக்கவில்லை.

அப்போது தான் ஸ்வாமிஜி, “எந்த சைக்கிளிலே போறே?” என்று கேட்டதன் ஆழ்ந்த அர்த்தம் புரிந்தது.

அவர் ஹாண்டில் பாரைத் தொட்டு ஒரு நிமிடம் நின்றாரே, அந்த மலேயா ராலே சைக்கிள் வெகு காலம் வரை நன்றாக உழைத்தது.

இதிலிருந்து ஆழ்ந்த பாடம் ஒன்றை நான் கற்றுக் கொண்டேன். வருவதை யாராலும் தடுக்க முடியாது.

மகான்களின் கருணை மழை நம் மீது பொழிந்து கொண்டே இருக்கும் போது அவர் நம்முடன் இருக்கிறார் என்ற உணர்வே நமக்கு தெம்பையும் தைரியத்தையும் கொடுக்கும்.

புதிய சைக்கிள் திருடு போனது அவர் ‘எந்த சைக்கிளிலே போறே’ என்று கேட்ட ஒரு கேள்வியால் அல்பமாகி விட்டது. அவருக்குத் தான் தெரிந்திருக்கிறதே, சைக்கிள் போகப் போகிறதென்று.

மலேயா ராலேக்கு நல்ல அதிர்ஷ்டம் போலும்!

மகான்களின் ஒவ்வொரு சிறிய செய்கையிலும் பெரிய அர்த்தம் இருக்கும்!

4

இதோ, கடல் இங்க வந்துடும்!

ஸ்வாமிஜியின் வீட்டில் கூடத்தில் சாவகாசமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அற்புதமான தினம்.

என் தந்தையார் அவர் முன் அமர்ந்திருக்க, காலம் ரொம்ப மோசமாக இருப்பதைப் பற்றி பேச்சு வந்தது.

திடிரேன்று ஸ்வாமிஜி எனது தந்தையாரிடம், “இன்னும் மோசமாகப் போகப் போகிறது?” என்றார்.

எங்களில் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

எனது தந்தையார் “மோசம்’னா? எப்படி மோசம்?” என்றார்,

உடனே ஸ்வாமிஜி தனது கையை வலது பக்கம் காட்டி, “இதோ கடல் இங்க வந்துடும்” என்றார்.

இதன் அர்த்தம் புரிய எங்களுக்கு ஒரு நிமிடம் ஆனது. அரண்டுபோய் விட்டோம்!

கடலா! இங்கேயா? ஐயோ!

ஸ்வாமிஜி உடனே ஆறுதலாக, “பயப்பட வேண்டாம். நீங்கள் எல்லோரும் பயப்பட வேண்டாம்” என்றார்.

ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.

வீடு திரும்பியவுடன் இது பற்றித் தான் பேச்சு.

கடல் எப்படி இங்க வரும்? புரியவில்லை.

வந்தது பாருங்கள், ஒரு பெரும் புயல். ராமேஸ்வரம் அல்லாடிப் போனது. தனுஷ்கோடி மூழ்கியது.

விவரம் அறிந்தவுடன் ஒரு காரில் எனது தந்தையார் ராமேஸ்வரம் நோக்கிச் செல்லலானார். காரில் நானும் ஒட்டிக் கொண்டேன். மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பாதையில் எங்கள் கார் செல்ல ஆரம்பிக்க, ஏராளமான அரசாங்க ஜீப்புகள் முன்னே சென்று கொண்டிருந்தன. அப்போது பொதுப்பணித் துறை அமைச்சர் ராமையா  அதில் ஒரு ஜீப்பில் சென்று கொண்டிருந்தார், நிலைமையை நேரில் ஆராய!

எல்லாம் ஜீப், நாங்கள் மட்டும் காரில்.

மானாமதுரைக்கு முன்னால் சாலையே தெரியவில்லை. கடல் வெள்ளம் இரு புறமும் சூழ, சாலை அமுங்கிப் போனது. வளைவான சாலை. டிரைவருக்கு தெரிவதெல்லாம் கடல் தான். நேராகப் போனால் வயலில் மூழ்கி அனைவரும் இறக்க வேண்டியது தான்.

ஜீப்புகள் நிறுத்தப்பட்டன. அரசு அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.

டிரைவரைத் தவிர அனைவரும் இறங்கி காலால் தடவியவாறே சாலையின் இரு புற ஒரங்களிலும் ஒவ்வொரு 30 அடி தூரத்திலும் நின்று சாலையின் நடுவில் கார் மற்றும் ஜீப் செல்லுமாறு செய்தனர்.

இப்படியாக ஒரு வழியாக மானாமதுரையை அடைந்தோம். அதற்கு மேல் போகக் கூடாது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. சிலர் மட்டும் படகில் ராமேஸ்வரம் செல்ல அரசு முடிவெடுத்தது.

நாங்கள் பார்த்த சேதத்தையெல்லாம் கண்டு மலைத்து பயந்து போய் வீடு திரும்பினோம்.

தினமணியின் ராமநாதபுர நிருபரின் பெயர் ஆதிநாராயணன். அருமையான மனிதர். காஞ்சி மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர். ஒல்லியானவர். உயரமானவர். மிருதுவாகப் பேசக் கூடியவர்.

அவர் ஒருவர் தான், தன் உயிரையும் பொருட்படுத்தாது ஒரு படகில் ராமேஸ்வரம் சென்று நடந்ததை எல்லாம் நேரடியாக அறிந்து திரும்பி ராமநாதபுரம் வந்து போன் மூலமாக கோரமான நிலைமையைப் பற்றிச் சொன்னார். வெளி உலகிற்கு முதல் தகவல் அவரிடமிருந்தே வந்தது. அதை தினமணி பிரசுரித்தது.

ராமேஸ்வரத்தில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன.

இரவு ஓடிக் கொண்டிருந்த ரோட்டரி பேப்பர் மெஷினை நிறுத்தி

எனது தந்தையார் நேரில் பார்த்ததையும் ராமநாதபுரம் ஆதிநாராயணன் கூறியதையும் எழுதித் தர அது அச்சாகியது. தினமணி மூலம் மக்களுக்கு  மறு நாள் காலை தனுஷ்கோடி நிலவரம் தெரிய வந்தது.

திருப்பித் திருப்பி எங்கள் வீட்டிலும் ஸ்வாமிஜியின் பக்தர்களும் கூறிய ஒரே வரி : “இதோ, கடல் இங்க வந்துடும்!”

ஸ்வாமிஜிக்கு நடக்கப்போவது அனைத்தும் துல்லியமாகத் தெரியும். ஆனால் மஹாசக்தியின் செயல்களில் மகான்கள் அனாவசியமாகத் தலையிடவே மாட்டார்கள்!

முக்காலமும் உணர்ந்த பெரிய மகான் அவர் என்பதை உணர்த்திய பல சம்பவங்களுள் இதுவும் ஒன்று.

அடுத்து இன்னும் சில சம்பவங்களைப் பார்ப்போம்!

***

tags – ஸ்வாமிஜி கிருஷ்ணா-2

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: