WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,428
Date uploaded in London – – 10 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்வாமிஜி கிருஷ்ணா! (Swamiji Krishna of Achankovil!) – 4
ச.நாகராஜன்
8
சாப்பாடை ரெடி பண்ணி வை!
மதுரையில் ஒரு மிட்டாய் வியாபாரி. ஸ்வாமிஜியின் அணுக்க பக்தர். பெயர் ராஜாராம்.
ஒரு நாள் ஸ்வாமிஜியிடம் பேசிக் கொண்டிருந்த போது அவரது பெயரைச் சொல்லி ‘ “அவர் வந்து கொண்டிருக்கிறார். ஆலமரத்தடியில் படுத்திருக்கிறார். களைப்பாக வருவார். சாப்பாடை ரெடி பண்ணி வை” என்றார் ஸ்வாமிஜி.
ஸ்வாமிஜியின் அணுக்கமான ஒரு பக்த குடும்பம் சீதாராமையர் எனபவரின் குடும்பம். அங்கு அனந்தகிருஷ்ணன், சுப்பாமணி, ராஜு உள்ளிட்டோர் வருபவரை கவனித்துக் கொள்வது வழக்கம்.
களைப்பாக வருவார் என்று ஸ்வாமிஜி சொல்லியதும் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று எங்களுக்குத் தோன்றியது.
ஸ்வாமிஜி வீட்டின் முகப்பில் உட்கார்ந்து ராஜாராம் எப்போது வரப் போகிறார் என்று காத்துக் கொண்டிருந்தோம்.
இரவு எட்டு மணிக்கு மேலாகி விட்டது. தூரத்தில் ஹெட்லைட் வெளிச்சம் தெரிந்தது.
ராஜாராம் வந்தார். வண்டியிலிருந்து இறங்கினார்.
ஒரே களைப்பு அவர் முகத்தில் தெரிந்தது. மிகவும் சோர்வாக இருந்தார்.
அவரைப் பார்த்தவுடன் குதூகலமாக அனைவரும் சிரித்தோம்.
இந்தச் சிரிப்பு அவருக்கு எப்படி பிடிக்கும். மனிதரோ படு டல்லாக வந்திருக்கிறாரே!
“என்ன ஆலமரத்தடியில் படுத்திருந்தீர்களா? ஒரே களைப்பா! சாப்பாடு ரெடி” என்று கூவினோம்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் அவர் களைப்பும் சோர்வும் பறந்தே போனது.
“எப்படித் தெரியும் நான் ஆலமரத்தடியில் படுத்து தூங்கியது. ரொம்ப மோசமாப் போச்சு. கார் டயர் வெடித்து பஞ்சர். நடுக்காட்டில் விட்டது போல இருந்தது. ஆளை அனுப்பி ரிப்பேர் செய்து வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சு””
எங்களுக்கு அப்போது தான் கார் பஞ்சரான விஷயம் புரிந்தது.
அவர் ஆவலுடன் கேட்டார்: “ஸ்வாமிஜி சொல்லிட்டாரா?”
ஆம் என்றோம். அவர் மகிழ்ச்சியுடன் சாப்பிடச் சென்றார். சாப்பிட்டுத் தூங்கி காலையில் ஸ்வாமிஜியை ஹோம சமயத்தில் தரிசனம் செய்யலாம் என்று அவர் எடுத்த முடிவு சரிதான்!
டயர் வெடித்து ஆலமரத்தடியில் படுத்துத் தூங்கிய அனுபவம் இப்போது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்து விட்டது.
அது தான் எது நடந்தாலும் ஸ்வாமிஜி பார்த்துக் கொண்டிருக்கிறாரே! அவர் இருக்க கவலை ஏன்?
9
நமஸ்காரம் செய்யுங்கள்!
மதுரையில் எங்கள் குடும்பத்திற்கு மிக நெருக்கமான குடும்பம் இந்தியன் பேங்க் ஏஜண்ட் சங்கர ஐயருடைய குடும்பம். (அந்தக் காலத்தில் மேனேஜர் என்பது இல்லை; ஏஜண்ட் என்பது தான் உயர் பதவி) அவரது மகன் திரு எம்.எஸ். வெங்கட்ராமன் தினமணியில் உதவி ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஸ்வாமிஜி தான் கணபதி ஹோமம் செய்ய அருள் பாலித்து உபதேசித்திருந்தார்.
ஒரு நாள் அவர் வீட்டில் கணபதி ஹோமம் நடந்து கொண்டிருந்தது. அனைவரும் அங்கு இருந்தோம்.
திடீரென்று ஸ்வாமிஜி மேலே அண்ணாந்து பார்த்தார்.
அனைவரையும் அவசரம் அவசரமாக நமஸ்காரம் செய்யச் சொன்னார்.
அனைவரும் உடனே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தோம்.
விஷயம் என்னவென்று அப்போது தெரியாது.
பின்னால் ஹோமம் முடிந்த பின்னர் தான் முழு விவரமும் தெரிய வந்தது.
ஹோமத்தைப் பார்க்க குழந்தையானந்த ஸ்வாமிகள் வந்திருக்கிறார்.
அவரைப் பார்த்த ஸ்வாமிஜி அனைவரையும் நமஸ்காரம் செய்யச் சொன்னார்.
டபிள் பெனிஃபிட்!
கணபதி ஆசீர்வாதமும் கூடவே குழந்தையானந்தர் ஆசீர்வாதமும் கிடைத்தது.
அத்துடன் சங்கர ஐயர் தனது குடும்ப முன்னோரில் ஒருவர் யதியாக இருந்ததையும் தெரிவித்தார்.
10
அச்சன்கோவிலுக்கு சாலை வேண்டும் : ஸ்வாமிஜியின் சங்கல்பம்!
இடம் தென்காசி.
டிராவலர்ஸ் பங்களா வாரண்டாவில் காலையில் ஒரு கும்பலாக சேர்களில் அமர்ந்து கொண்டிருந்தோம்.
விஷயம் என்னவெனில் தென்காசி ஆலயத்தில் கும்பாபிஷேகம்.
இந்த ஆலயத்தைப் பற்றிய முக்கிய விசேஷம் ஒன்று உண்டு.
இதைக் கட்டிய பராக்ரம பாண்டியன் ஒரு கல்வெட்டில் இப்படிப் பொறித்து வைத்திருந்தான்.
“ஆராயினும் இந்த தென்காசி மேவும் பொன்னாலயத்து
வாராததோர் குற்றம் வந்தாலப்போதங்கு வந்ததனை
நேராகவே யொழித்துப் புரப்பார்களை நீதியுடன்
பாராரறியப் பணிந்தேன் பராக்ரம பாண்டியனே”
என்ன ஒரு பக்தி வினயம் பாருங்கள். பின்னால் ஒரு குற்றம் கோவிலுக்கு வந்து அதை சரி செய்பவர்களுக்கு இப்போதே எனது நமஸ்காரம் என்று பெரும் மன்னனான அவன் கல்வெட்டில் செதுக்கி வைத்திருந்தான்.
அந்தக் கோவில் கோபுரம் தான் விரிசல் கண்டிருந்தது. அதற்குத் தான் அதை புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம்.
நானும் ஒட்டிக் கொண்டு அங்கு சென்றிருந்தேன்.
டிராவலர்ஸ் பங்களாவில் என் முன்னே கம்பீரமாக வீற்றிருந்தவர் மாதவன் நாயர். கேரளாவின் டிரான்ஸ்போர்ட் பிரிவின் மிக உயரிய அதிகாரி.
மனிதர் கடும் ஆசாமி. யாராவது தாடி மீசை வைத்திருந்தால் நம்பக் கூடாது; இழுத்துப் பார்க்க வேண்டும் என்று சொல்பவர் அவர்.
அவரிடம் சும்மா இருக்காமல்,” எப்படி ஸ்வாமிஜியுடனான உங்கள் அறிமுகமும் தொடர்பும் ஏற்பட்டது” என்று கேட்டேன்.
வேறு யாரும் அவருடன் பேசக் கூட பயப்படுவர். அப்படி ஒரு மிடுக்கும் அதிகார தோரணையும் கொண்டவர் அவர்.
தைரியமாகக் கேட்டு வைத்தேன்.
அவர் உற்சாகமாகச் சொல்லத் தொடங்கினார். அது தான் இந்த சம்பவம் :-
மாதவன் நாயரிடம் அச்சன்கோவிலுக்கு சரியான பாதை இல்லை என்றும் கரடுமுரடாக உள்ள மலைப்பாதையை சரி செய்து சாலை அமைத்து பக்தர்கள் செல்வதற்கு உரியதாக ஆக்க வேண்டும் என்பது ஸ்வாமிஜியின் ஆசை. சங்கல்பம்.
சொல்லிச் சொல்லிப் பார்த்தார்.
கடைசியில் ஒரு நாள் மாதவன் நாயர் தானே இன்ஸ்பெக்ட் செய்ய வருகிறேன் என்று வந்தார்.
ஸ்வாமிஜியுடன் அந்த கரடு முரடான சாலையில் சென்றார்.
செல்லும் வழியில் அவருக்கு ஒரு சந்தேகம்.
இந்த தலத்திற்கு ஒரு சாலை அமைப்பது அவசியமா? அப்படி ஒரு சக்தி வாய்ந்த தெய்வம் தானா ஐயப்பன்? ஸ்வாமிஜி சொல்வது சரியா?
அவர் கேட்டார் :”ஸ்வாமிஜி! ஐயப்பன் பெரிய தெய்வம் என்றால் ஒரு புலியை எனக்குக் காண்பிக்க முடியுமா?”
ஸ்வாமிஜி பதில் பேசவில்லை.
மலைப்பாதையின் அடுத்த வளைவில் ஜீப் சடன் ப்ரேக் போட்டு நிறுத்தப்பட்டது
சாலையை மறித்துக் கொண்டு நின்றது ஒரு பெரும் புலி.
மாதவன் நாயர் அரண்டு விட்டார்.
“சரி சரி, புலியை போகச் சொல்லுங்கள். சாலை அமைக்க வேண்டியது தான்” என்று கூவினார் அவர்.
புலி மெதுவாக நகர்ந்து சென்றது.
வண்டி போகத் தொடங்கியது.
மாதவன் நாயருக்கு சந்தேகம்.
“சரி தான்! நான் கேட்டேன்.புலி வந்தது. இது ஒரு கோயின்ஸிடென்ஸ் (தற்செயல் நிகழ்வு) என்று கூடச் சொல்லலாமே!”
தனது எண்ணத்தை வாய் விட்டுச் சொல்லி விட்டார் அவர்.
அடுத்த வளைவு வந்தது.
இன்னொரு புலி. இது இன்னும் பெரியது. சாலையை வழிமறித்தது. உறுமவில்லை. சிரித்தது.
மாதவன் நாயர் அலறி விட்டார்.
“ஆஹா! ஐயப்பனே ஐயப்பன்” என்று ஒப்புக் கொண்டார்.
அற்புதமான சாலை வந்தது. அன்று முதல் அவர் ஸ்வாமிஜியின் அணுக்க பக்தராக ஆகி விட்டார்.
அவருடைய இந்த விவரணத்தைக் கேட்டவுடன் அனைவருக்கும் அளவிலா மகிழ்ச்சி.
தென்காசி கும்பாபிஷேக புண்ணியத்துடன் ஸ்வாமிஜியின் அருமையையும் அறிந்து கொண்டோம்.
அவருக்கு எங்கள் நமஸ்காரத்தையும் நன்றியையும் சொல்லி மகிழ்ந்தோம்.
11
இன்னும் பெரிய பதவி வரும்!
பாரதத்தின் ராஷ்டிரபதியாக பதவி வகித்த வி.வி. கிரி ஸ்வாமிஜியின் பக்தர். அவரது மகள் சாவித்திரி. மருமகன் டாக்டர் ராமாராவ்.
டாக்டர் ராமாராவ் மதுரா கோட்ஸில் மதுரையில் வேலை பார்த்து வந்தார். ஆகவே கிரி அவர்களைப் பற்றிய பல செய்திகள் எங்களுக்குத் தெரிய வரும்.
முதலில் கேரள அரசில் லேபர் மினிஸ்டராக அவர் பதவி வகித்தார்.
ஸ்வாமிஜி, ‘இன்னும் பெரிய பதவி வரும்’ என்றார். யாருக்கும் அப்போது அது என்ன பெரிய பதவி என்று புரியவில்லை.
அவர் கேரள கவர்னரானார்.
ஆஹா! ஸ்வாமிஜி சொன்னது சரியாகப் போய் விட்டது. கவர்னர் பதவி தான் பெரிய பதவி. மினிஸ்டர் எங்கே, கவர்னர் எங்கே என்று சொல்லிக் கொண்டாடினோம்.
ஆனால் ஸ்வாமிஜியோ ‘இன்னும் பெரிய பதவி’ என்றார்.
அவர் பின்னால் பாரத்தத்தின் ராஷ்டிரபதி ஆனார்.
ஆஹா, ஸ்வாமிஜியின் வார்த்தைக்கு உடனடியாகப் பொருள் யாராலாவது கண்டு பிடிக்க முடியுமா?
தேசத்தின் மிக உயர்ந்த பதவியை வகிக்க அவருக்கு அருள் பாலித்த அவரது அருள் உயரத்தை, அகலத்தை, ஆழத்தைத் தான் நிர்ணயிக்க முடியுமா?
ஸ்வாமிஜியே சரணம். சரணம் ஐயப்பா!! மஹா கணபதியே சரணம்!!!
ஸ்வாமிஜி கிருஷ்ணா 4,