WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,454
Date uploaded in London – – 17 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இலக்கிய இன்பம்
இலக்கியப் படகில் ஒரு இனிய பயணம்!
ச.நாகராஜன்
நல்ல நூல்களைப் படிப்பது என்பது அற்புதமாக அமைந்து விட்ட ஒரு விமானப் பயணம் போல அல்லது ஒரு ஆனந்தமான ரயில் பயணம் போல அல்லது அருமையான இயற்கை காட்சிகளின் ஊடே ஒரு படகில் பயணம் செய்வது போல!
தேக்கடியில் படகு சவாரி – கோடைக்கானலில் படகில் பயணம் – அடடா, என்ன ஒரு ஆனந்தம்!
அதே அனுபவத்தை, இலக்கியத்தில் பொருத்த மட்டில், சமகால எழுத்தாளர்களிடம் பெறுவது ஒரு அபூர்வமான விஷயம் தான்!
அப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது, திருலோக சீதாராம் அவர்களின் இலக்கியப் படகு என்னும் நூல்.
சின்னச் சின்னக் கட்டுரைகள்! சுவையான அனுபவங்கள்! அவை தரும் ஏராளமான பாடங்கள்! அதைப் பெறுவதில் ஏக ஆனந்தம் தான்.
திருலோக சீதாராம் யார் என்று கேட்டால், அவர் அருமை அறிந்து காலத்தால், பெரிதாகக் கொண்டாடப்பட வேண்டியவர் என்று ஒரு வரியில் சொல்லி விடலாம்.
ஆனால் வழக்கமாகத் தமிழர்களின் பழக்க வழக்கம் போல தமிழர்கள் தங்கள் கடமையில் இவரைப் பொருத்த மட்டில் தவறி விட்டார்கள் என்பது நிச்சயம்.
திருச்சி மாவட்டம் பெரம்பலூருக்கு அருகில் உள்ள தொண்டைமான்துறை என்ற ஊரில் திருவையாறு லோகநாத ஐயருக்கும் மீனாட்சி சுந்தரம்மாளுக்கும் 1917ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியன்று திருலோக சீதாராம் பிறந்தார்.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழுக்கே தன்னை தாரை வார்த்துக் கொடுத்து விட்டார்.
மூன்று வயது என்ற மிக இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். மாமா வீட்டிற்கு இடம் பெயர்ந்து தாயின் அரவணைப்பில் வளர ஆரம்பித்தார். லலிதா என்று ஒரு தங்கை. பஞ்சாபகேசன் என்று ஒரு தம்பி.
1936ஆம் ஆண்டு தனது 19ஆம் வயதில் அந்தக் கால வழக்கப்படி மிக சிறு பருவத்தில் இருந்த 10 வயதான ராஜாமணியைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகளும் நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. பெண்கள் – மதுரம், வஸந்தா, இந்திரா. ஆண்கள் பசுபதி, சுப்பிரமணியன், முரளிதரன், ராமகிருஷ்ணன்.
இயல்பாகவே தமிழின் பால் அபார ஈடுபாடு கொண்ட திருலோக சீதாராம் கவிதைகளை ரசிக்க ஆரம்பித்தார். தானே அற்புதமாக கவிதைகளையும் இயற்றலானார். உரை நடையில் தனிப் பாணியில் தன் நடையை அமைத்துக் கொண்டு உரை நடை மன்னனாகத் திகழ்ந்தார்.
தமிழ் ஆர்வம் இவரை உந்தியது. ஆகவே 18ஆம் வயதிலேயே ‘இந்திய வாலிபன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார் 1934ஆம் ஆண்டு சிவாஜி என்ற சொந்தப் பத்திரிகையைத் தொடங்கினார். அதன் மூலம் தமிழ் உலகம் முழுவதுடனும் தொடர்பு கொண்டார்.
இவரது கட்டுரைகளின் தொகுப்பாக இலக்கியப் படகு அமைந்துள்ளது. மொத்தம் 60 கட்டுரைகள். சில கட்டுரைகள் தங்கம். சில வெள்ளி. சில வைரம். சில மாணிக்கம். சில முத்து. சில கோமேதகம்.
ஆமாம், விலையே சொல்ல முடியாத அபூர்வ உயர் ரத்தினங்களையும் தங்கம் வெள்ளி உள்ளிட்டவற்றையும் தன் தமிழ்க் கட்டுரைகள் மூலமாக இவர் தமிழ் மக்களுக்குப் பரிசாக அளித்து விட்டார்.
ராஜம் ஐயர் விழா பற்றி ஒரு கட்டுரை. 26 வயதே வாழ்ந்த தத்துவ, இலக்கிய மன்னனைப் பற்றி அறிகிறோம். புட்டபர்த்தி சத்யசாயி பாபா பற்றி ஒரு கட்டுரை. வானத்துத் தாரகை வந்த விவரத்தை அறிகிறோம். சின்மயானந்தரின் ஆங்கிலம் பற்றி ஒரு கட்டுரை. அற்புதமான ஆங்கிலத்தில் கடினமான தத்துவங்களை எளிதாகத் தந்த அவரின் பெருமையைக் காண்கிறோம்.
15-5-1961 அன்று எழுதிய கட்டுரை : தேடும் பொருள். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கும்பகோணத்தில் ஒரு கடையில் தாம்பூலத்தை வாங்குகிறார் கவிஞர். வீட்டிற்கு வந்து பார்த்தால் ஒரு ஐந்து ரூபாயைக் காணோம். உடனே அதே கடைக்குச் செல்கிறார், பார்க்கிறார், ஊஹூம், அதைக் காணோம். சரி, போகட்டும் என்று விட்டுவிடவில்லை. இருபது ஆண்டுகளாக அங்கு போகும் போதெல்லாம் அந்தக் கடைக்குப் போகாமல் இருப்பதில்லை. தனது ஐந்து ரூபாய் “ஒருவேளை, அங்கு இருக்குமோ” என்று பார்க்கத் தவறியதுமில்லை.
“அட, அது அங்கு இன்னும் இருக்குமா?” புத்திக்கு இது தெரியாதா?
மனதின் மர்மத்தை யாரால் அறிய முடியும்?
இதில் தனது அறிவையும் கவனத்தையும் யாதொன்றும் தப்பிச் செல்லகூடாது என்ற மமகாரத்தை இனம் காண்கிறார் கவிஞர். இப்படி ஆரம்பிக்கும் கட்டுரை மனித வரம்பின் பல பரிமாணங்களைக் காண்பித்து வினோபா, காந்தியடிகளைச் சுட்டிக் காட்டி பாரதசக்தி புதிய செய்தியை விளக்கப் போவதைச் சொல்லி முடிகிறது.
வாழ்க்கையும் இலக்கியமும் என்னிடம் இப்போதைக்கு இருக்கின்றன என்று கூறும் கவிஞர் தனது இலக்கியப் படகு பற்றி அற்புதமாக விவரிக்கிறார்.
“இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு எங்கெங்கும் எல்லாக் காலத்தும் இயங்கத்தானே இலக்கியப் படகு! அமர லோகத்துக்குப் போய் அடுப்பு மூட்ட வேண்டிய அவசியமென்ன?”
கேள்வி, சரியான கேள்வி தான்!
அவருடன் அவர் படகில் “நைஸாக” ஒட்டிக் கொண்டு பயணம் போவது என்பது எவ்வளவு சுகமான ஒரு அனுபவம்!
“படகு அசையும் போதெல்லாம் ஒவ்வோர் அசைவும் ஓர் இன்ப அனுபவம். எத்துணைத் தோழர்களைப் பார்க்கிறேன். எத்துணைப் படகுகள்! எத்துணை எத்துணை வியப்புகள்! சற்றே படகு செலுத்தி விளையாட உடன் வருவோர் உண்டு. எனது படகில் கூட வருவோருடன் இருக்கலாம்.”
ஆஹா, கவிஞரே இப்படி அனுமதி தந்து விட்டார் இல்லையா? பிறகு என்ன தயக்கம்!
எல்லா அன்பர்களும் உல்லாசமாக கவிஞரின் இலக்கியப் படகில் ஒரு இனிய பயணத்தை ஆரம்பிக்கலாமே!
பாரதியாருடனான இவரது ஆத்மார்த்தமான ஆன்மீகத் தொடர்பு பவித்திரமானது. அதைப் பற்றித் தனியே தான் ஒரு கட்டுரை எழுத வேண்டும்.
அவ்வளவு பெரிய விஷயம் அது.
பெரிய சாதனைகளை விளம்பரம் இல்லாமல் செய்த திருலோக சீதாராம் தனது ஐம்பத்தி ஆறாம் வயதில் 23-8-1973 அன்று மறைந்தார். என்றபோதிலும் அவர் பூதவுடல் மறைந்தாலும் புகழ் உடம்பு மறையாது. அவர் நினைவை என்றும் போற்றுவோம்!
**
இலக்கியப் படகு 198 பக்கங்கள் கொண்ட அருமையான நூல்.
விலை ரூபாய் 200/ உயர்ந்த தாளில் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டுள்ளது.
நூலைப் பெற, ஜி.ஆர். பிரகாஷ் 9488185920/9940985920 அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
வெளியிட்டோர் : பவித்ரா பதிப்பகம், 24-5, சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர், (Post), கோவை – 38, தமிழ்நாடு, இந்தியா
tags- திருலோக சீதாராம், இலக்கியப் படகு